அம்மாவின் தேநீர்க் கோப்பை
அம்மாவின் படத்துக்குப் பூ வைத்தேன். புத்தாண்டு சமீபத்தில் இருந்தது. அம்மாதான் அருகில் இல்லை.


அம்மாவின் படத்துக்குப் பூ வைத்தேன். புத்தாண்டு சமீபத்தில் இருந்தது. அம்மாதான் அருகில் இல்லை.
டிசம்பர் முதல் தேதி அம்மா மரித்துப் போனார். அம்மா எங்களுக்கு நிழல் கொடுத்த ஆலமரம். ஆலமரம் விழுந்துவிட்டால் யார்தான் தாங்கிக் கொள்ள முடியும்? அவ்வப்போது அம்மாவின் நினைவு வந்து கண்கள் குளமாகும். எங்கள் அம்மாவுக்கு மூன்றே குழந்தைகள்.
மூத்தவனான நான் ஆண் மகன். என் பெயர் சரவணன். அடுத்து காவேரி, கனகா என்று இரு பெண் குழந்தைகள். காவேரி மூத்தவள், கனகா கடைசித் தங்கை.
எல்லோரிடத்திலும் அம்மா வஞ்சனை இல்லாமல் அன்பு செலுத்தினார். ஆனால், கடைக்குட்டி என்பதால் கனகா மீது தனிப்பாசம். இரண்டு பெண்களுமே கல்யாணமாகி, புகுந்த வீடு செல்லும்போது அம்மா பிரிவுத் துயர் தாங்க முடியாமல் அழுது தீர்த்தாள்.
காவேரி, பட்டப்படிப்பை முடித்துவிட்டு ஆசிரியை பயிற்சிக்கும் பி.எட். முடித்து ஒரு ஆரம்பப் பள்ளிக்கு ஆசிரியை ஆனாள். மணந்தால் ஒரு டாக்டரைத்தான் மணப்பேன் என்று உறுதியாக இருந்து - முயற்சி செய்து ஒரு டாக்டரையே மணந்தாள். அவர்கள் வரதட்சிணை எதுவும் கேட்கவில்லை!
""உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள். இது வேண்டும். அது வேண்டும் என்று நாங்கள் கேட்க மாட்டோம்'' என்றார் சம்பந்தி. டாக்டர் மாப்பிள்ளை என்றால் பலர் பெண் வீட்டாரிடம் கறாராகப் பேசி கறந்துவிடுவார்கள். டாக்டர் சிவா ஒரு நல்ல மனிதர். டாக்டரின் அப்பா தட்சிணாமூர்த்தியும் ஒரு பண்பாளர்.
""கல்யாணத்தைக் கூட கோயிலிலேயே வைத்து சிம்பிளாக நடத்தி விடலாம்!'' என்றார் சம்பந்தி. அம்மா அசந்து போனார்.
""கல்யாணத்தை கொஞ்சம் விமரிசையாகவே நடத்தலாம். எங்களுக்குக் கணிசமான வீட்டு வாடகை வருகிறது'' என்று அம்மாதான் வற்புறுத்தி, கல்யாணத்தை விமரிசையாக நடத்திவைத்தாள். இதற்கு சம்பந்தி அரை மனதாகத்தான் சம்மதித்தார். அழைப்பிதழில்கூட மொய் விலக்கப்பட்டது என்று அச்சடிக்கச் சொன்னார் டாக்டரின் அப்பா தட்சிணாமூர்த்தி.
என் மைத்துனர் டாக்டர் சிவாவும் தான் உயரிய பண்பாளர் என்பதைப் பல சந்தர்ப்பங்களில் நிரூபித்தார். கல்யாணம் முடிந்த பிறகு, டீச்சர் வேலைக்குப் போக வேண்டாம் என்று என் தங்கை காவேரியை டாக்டர் தடுத்துவிட்டார்.
நாங்கள் சென்னைவாசிகள். தஞ்சையைச் சேர்ந்த டாக்டர் சிவா சென்னைவாசியாகிவிட்டது அம்மாவுக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. வெளியூரில் பெண் வாழ்க்கைப்பட்டால், அடிக்கடி சந்திக்க முடியாது. உள்ளூர் என்றால் பரஸ்பரம் வந்து போக முடியும் அல்லவா?
கடைக்குட்டி கனகா ஓவியத் திறமை உள்ளவள். கவின் கலைக் கல்லூரியில் ஓவியம் பயின்று பட்டம் பெற்றாள். தன்னுடன் ஓவியம் பயின்ற மாணவரையே காதலித்துக் கல்யாணம் செய்துகொண்டாள். பின்னாளில் இளைய மைத்துனர் சபேசன் ஓவியக் கல்லூரிலேயே ஆசிரியப் பணியில் சேர்த்துவிட்டார்.
சபேசனும் சென்னைவாசிதான். புரசைவாக்கத்தில் இருந்தார். நாங்கள் திருவல்லிக்கேணியில் இருந்தோம். டாக்டர் சிவாவும், மூத்த தங்கை காவேரியும் மயிலையில் இருந்தனர்.
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் எங்கள் திருவல்லிக்கேணி வீட்டில் நாங்கள் ஒன்றாகக் கூடுவோம். அம்மாவும்- பெண்களும் வரிந்து கட்டிக் கொண்டு சமையல் அறையில் வேலை செய்வார்கள். ஞாயிறு முழுக்க விசேஷமான விருந்து சாப்பாடுதான்.
நான் மட்டும் கல்யாணத்தைத் தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தேன்.
""உங்களுக்கு முப்பத்து இரண்டு வயதாகிவிட்டதே! எங்கள் தஞ்சாவூர்ப் பெண் ஒருத்தி இருக்கிறாள். அழகான பெண். வசதியானவர்கள். ஆனால், கல்யாணப் பெண்ணுக்கு வரதட்சிணை தரக் கூடாது என்ற கொள்கை உடையவர் பெண்ணின் அப்பா! உங்களுக்குச் சம்மதம் என்றால் பெண்ணைப் போய்ப் பார்க்கலாம்!'' என்றார் மூத்த மைத்துனர் டாக்டர் சிவா.
நான் சமூகவியல் இளங்கலை படித்துவிட்டு- வேலை வெட்டிக்குப் போகாமல் எழுத்தாளனாகிறேன் பேர்வழி என்று ஏதோ கதை பண்ணிக்கிட்டு இருந்தேன். தமிழ் இலக்கியம் படிப்பது, தமிழ் இலக்கியக் கூட்டங்கள் செல்வது என்று பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தேன். ஆனால், ஒரு நல்ல சம்பவம். மல்லிகை என்றொரு பதிப்பகம் மாத நாவல்களை வெளியிட்டுக் கொண்டிருந்தனர். அவர்கள் எனது ஒரு குறுநாவலை மாத நாவலாக வெளியிட்டு இருந்தனர். மற்ற பிரபல இதழ்களில் எனது இருபது சிறு கதைகள் வெளியாகி இருந்தன.
""வரதட்சிணையே கொடுக்க மாட்டாங்களா? அங்கே எப்படிப் பெண் எடுக்கறது?''- என்று அம்மா மரகதம் முதலில் தயங்கினார். டாக்டர் சிவா வற்புறுத்தி சம்மதிக்க வைத்தார்.
கடைக்குட்டி கனகா காதல் திருமணம் செய்துகொள்ள முனைந்தபோதும், அம்மா முட்டுக்கட்டை போட்டார். டாக்டர் சிவாதான் மிகுந்த முயற்சி எடுத்து, இந்தக் காதல் கல்யாணத்தை நடத்தி வைத்தார்.
""சீர்த்திருத்த முறைப்படி கல்யாணம் செய்பவர்கள் தஞ்சை பார்ட்டி. நம்ம குமாருக்கு அச்சகம் வைத்துக் கொடுக்கச் சொல்றேன். எழுத்தாளரான அவர் தன் நாவல்களைத் தானே அச்சிடலாம்!'' என்று டாக்டர் சிவா நம்பிக்கையோடு சொன்னதும், அந்த இடத்தில் பெண் எடுக்க அம்மாவும் சம்மதித்தார்.
என் தஞ்சாவூர் மனைவி நல்ல குணவதி. என் கல்யாணம் முடிந்ததும் புகுந்த வீடு வந்த மனைவி கல்யாணி எல்லோரிடமும் சகஜமாகப் பழகி நல்ல பெயர் எடுத்துக் கொண்டாள். அவள் சமையல் நளபாகம்தான்!
என் அம்மாவுக்கும் தேநீர் என்றால் ஒரு ஆசை. காலையில் பதினொன்றரை மணிக்கு ஒரு கோப்பைத் தேநீரும்- மாலை ஐந்து மணிக்கு ஒரு கோப்பையும் குடிப்பார்கள். அம்மா ஒரு தேநீர் எக்ஸ்பர்ட். என் கல்யாணி அம்மாவையும் மிஞ்சிவிட்டாள்.
ஞாயிற்றுக்கிழமை பெண்டுகள் இருவரும்தத்தம் கணவன்மார்களோடு தாய்வீட்டில் ஒன்றுகூடுவார்கள் இல்லையா? அந்த சுப வேளைகளில் மாலையில் சிற்றுண்டியோடு கல்யாணி போடும் தேநீர் அவசியம் இருக்கும். ஆசிரியர் மட்டும் காபி பிரியர். அழருக்கு என் கல்யாணி ஒரு ஸ்பெஷல் காபி போட்டுக் கொடுப்பாள்.
""உங்கள் மனைவி போடுற காபி போல என் வீட்டுல கூடப் போடுவது இல்லை! காபி ஏன்?'' என்று கனகாவின் கணவர் புகழ்ந்து சொல்வார்.
அம்மாவுக்கு என்று ஒரு தேநீர்க் கோப்பை இருந்தது. அம்மா மரகதம் அதில்தான் டீ குடிப்பார். கல்யாணியின் கை மணத்தை அம்மா மிகவும் சிலாகிப்பார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை! அம்மா படத்துக்குப் பூ வைத்த நான் கல்யாணி கலந்த தேநீரில் கொஞ்சம் அம்மா பயன்படுத்தி வந்த தேநீரில் கொஞ்சம் அம்மா பயன்படுத்தி வந்த கோப்பையில் ஊற்றி, அம்மா படத்தின் முன்வைத்தேன். கல்யாணி செய்த பஜ்ஜியும் சமர்ப்பித்தேன்.
இன்றைக்கு டிசம்பர் இருபத்தைந்தான் தேதி. அம்மா தவறி இருபத்து நான்கு நாள்கள் கடந்துஇருந்தது.
""அம்மாவுக்குப் படைத்த தேநீரை யாருக்குக் கொடுப்பது'' என்று கேட்டேன். எல்லோரும் ஏகமனதாக, "" டாக்டர் சிவாவுக்குக் கொடுக்கலாம்'' என்றனர்.
டாக்டர் சிவாவிடம் அம்மாவுக்குத் தனிப்பிரியம். அம்மாவை பாரிச வாயு தாக்கியபோது டாக்டர் சிவாதான் வைத்தியம் செய்து மீட்டெடுத்தார். மாத மாதம் இரண்டு குப்பிகளில் மாத்திரைகளை அனுப்பிவிடுவார். ஒரு டாக்டரே மூத்த மாப்பிள்ளை என்பதால், எங்களுக்கு மருத்துவச் செலவு எவ்வளவோ
மிச்சமானது.
பாரிச வாயு தாக்குதலில் இருந்து மீண்டு எழுந்தவுடன் மாப்பிள்ளையின் கைகளைப் பற்றிக் கொண்டு, அம்மா மரகதம் ஆனந்தக் கண்ணீரை வடித்தார்.
""மாப்பிள்ளை! இந்த உயிர் நீங்க கொடுத்தது!''
""கடவுள்தாம்மா உங்களைக் காப்பாற்றியது. நாங்க மருந்துதான் கொடுக்க முடியும்! உயிரை மீட்டு எடுக்கறது அவர்தான்!''- என்று டாக்டர் சிவா அடக்கமாகச் சொன்னார்.
""வைத்தியம் செய்தது மட்டும் இல்லாமல் மருந்து மாத்திரையும் இலவசமாகத் தர்றீங்களே! நான் கண்ணால பார்க்கற தெய்வம் நீங்கதான்!'' என்று அம்மா நெகிழ்ந்தாள்.
அம்மாவுக்கு இறைவன் நீண்ட ஆயுளைக் கொடுத்திருந்தார். மரிக்கும்போது அம்மா வயது தொன்னூறு. அப்பா ராமலிங்கம் நாற்பத்தைந்து வயதிலேயே மாரடைப்பு வந்து இறந்த பிறகு- குடும்ப நிர்வாகம் செய்தவர் அம்மாதான். என் கல்யாணம், காவேரி, கனகாவின் கல்யாணம் எல்லாவற்றையும் உரிய காலத்தில் பொருளைச் சேர்த்து நடத்திவைத்தது அம்மாதான். குடும்பப் பொறுப்பை அம்மா ஏற்று கொண்டதால்தான் நான் சுதந்திர எழுத்தாளனாய் வலம் வர முடிந்தது.
அம்மா கோப்பையில் தேநீர் அருந்தி முடித்த பிறகு டாக்டர் சிவா பேசினார்.
""அம்மா அன்பே உருவானவர். அவர் அன்பினால்தான் நாம் எல்லாம் தழைத்தோம். அவர் நம்மிடம் காட்டிய அன்பை நான் இந்த சக மனிதர்களுக்கே திருப்பித் தர வேண்டும்!''
""சரியாகச் சொன்னீங்க டாக்டர்! இன்னும் சில நாள்களில் புத்தாண்டு பிறக்கப் போகுது. நான் ஒரு புத்தாண்டு உறுதிமொழி எடுத்துக்குவேன்! என்ன அதுன்னு சொல்லுங்க பார்ப்போம்?'' என்று ஒரு கேள்வி கேட்டேன்.
""நீங்களே சொல்லுங்க குமார்'' என்றார் டாக்டர்.
""அம்மா தேநீரை விரும்பிக் குடிப்பாங்க. என்னால முடிந்த மட்டும் ஏழை பாழைகளுக்கு குடிக்கத் தேநீர் கொடுப்பேன். இதுதான் புத்தாண்டு உறுதிமொழி.''
""நல்ல விஷயம்'' என்று டாக்டர் சிலாகித்தார். என் தங்கைகளும் சம்மதித்தனர்.
காலை மலர்ந்தது. இன்று புத்தாண்டு. என் ஸ்கூட்டரை கிளப்பினேன். பில்லியனில் என் மனைவி கல்யாணி அமர்ந்துகொண்டாள். அவள் கையில் ஒரு பெரிய தர்மாப்ளாஸ்க் இருந்தது. என் வசம் ஒரு பிளாஸ்டிக் பையில் காகிதக் கோப்பைகள் இருந்தன.
பக்கத்து வீதி நடைபாதையில் பிச்சைக்காரக் கிழவி படுத்திருந்தார். எழுப்பி ஒரு காகிதக் கோப்பை டீ கொடுத்தேன்.
""சாமி! உங்களுக்குப் புண்ணியமாய் போச்சு'' என்றாள். என் அம்மா அருந்திய மகிழ்ச்சி எனக்குஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...