/

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: பித்தநீர் அதிகம் சுரப்பதை தடுக்க ...

என் வயது 41. ஈரல் பித்த நீர் சுரப்பு இருக்க வேண்டிய அளவைவிட சற்று அதிகம் சுரப்பதாகத் தெரியவந்துள்ளது. இதனால் எனக்கு என்ன வகையான உபாதை ஏற்படலாம்.

News image
Updated On :30 அக்டோபர் 2022, 12:30 am

என் வயது 41. ஈரல் பித்த நீர் சுரப்பு இருக்க வேண்டிய அளவைவிட சற்று அதிகம் சுரப்பதாகத் தெரியவந்துள்ளது. இதனால் எனக்கு என்ன வகையான உபாதை ஏற்படலாம். இந்தப் பித்தநீர் நம் உடலில் என்ன செய்கிறது? எப்படி சமநிலைக்குக் கொண்டு வர முடியும்?

- சுதாகரன், திருவொற்றியூர்,
சென்னை.

ஈரலிலிருந்து ஜீரணகோசத்திற்கு வரும் பித்த நீரை "பைல்' என்று நவீன மருத்துவம் குறிப்பிடுகிறது. உணவிலுள்ள கொழுப்புச் சத்துக்களைச் செரிக்கச் செய்து, அதிலுள்ள சாராம்சம் உடல் வளர்ச்சிக்காக ஏற்கப்படுவதையும், வேண்டாதவை மலமாக வெளிப்படுத்துவதையும் இந்தப் பித்தநீர் உறுதிபடச் செய்கிறது. அதோடு மட்டுமல்லாமல், ரத்தத்திலுள்ள சிவப்பு ஜீவாணுக்களை உண்டாக்கி போஷிக்கவும் இந்த பித்தநீர் பெரிதும் உதவுபுரிகிறது.

இந்த சிவப்பு ஜீவாணுக்களில் சிறிதளவு இரும்பு சத்து இருக்கிறது. அதன் வழியாகத்தான் வெளிக்காற்றிலுள்ள பிராண வாயுவை தன்னுள் இழுத்து அதை உடல் முழுவதும் கொண்டு செல்வதற்கு இந்த ஜீவாணுக்களுக்குச் சாத்தியமாகிறது. 

நாம் உயிர் வாழ்வதற்கே ஆதாரமான பிராண வாயுவை எடுத்துச் செல்லஉதவும் இந்த இன்றியமையாத இரும்புச் சத்தைத் தயாரிப்பதற்கும் ஈரலிலிருந்து சுரக்கும் பித்தம்தான் காரணம்.

எனவே இப்பித்தநீரையும் அதைச் சுரக்கும் ஈரலையும் எவ்வளவு முக்கியமானதென்று அறியலாம்.

உங்களுக்கு அதிகம் சுரக்கும் பித்தநீர் எங்கேனும் தடைபட்டால், வேறு வழிகளில் உடல் முழுவதும் பரவிவிட வாய்ப்புகள் உள்ளன. அப்போது,  மலம் வெளுத்தும், எள்ளு புண்ணாக்கைப் போல கறுத்தும் திரித்திரியாகவும் வெளியேறும். கண், சிறுநீர், தோல் மஞ்சள் நிறமாகிவிடும். சில நேரங்களில் சிறுநீரில் ரத்தத்தின் சிவந்த ஜீவாணுக்களும் கலந்திருக்கும்.

அதிக பித்தநீரின் ஒரு பகுதி ஜீரண கோசத்தில் கலந்து, மற்றொரு பகுதி மட்டும் உடலில் பரவியிருந்தால் , முன்குறிப்பிட்ட மஞ்சள் நிறம் அவ்வளவாக உடலில் தெரியாது. இது காமாலையின் மற்றொரு வகை. அதனால் உங்களுக்குப் பித்தநீர் சுரப்பை மட்டுப்படுத்தி, சமநிலைப்படுத்த, இனிப்பும் வெப்பத்தன்மையற்றதுமான மருந்துகளால் நன்றாக பேதியாகும்படி செய்ய வேண்டிய அவசியமிருக்கிறது.

மலத்திலுள்ள மஞ்சள் அல்லது வெண்மை நிறம் மாறும் வரை, சிறிது, சிறிதுதாக பேதியாக்கி, பித்தநீர் சமநிலைப்படும்படி செய்ய வேண்டும்.

அதற்குமுன் பித்தநீர்த் தடையை அகற்ற, நார்த்தங்காய் சாறில் சிறிது சுக்கு, மிளகு, திப்பிலி சூரணத்தைக் கலந்த, முதல் நாள்களுக்கு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட, அதிலுள்ள சூட்டினால் தடை நீங்கி, பித்தநீரின் வரவானது மலப்பகுதியில் வந்து சேர்ந்தவுடன் வெளுத்த மலம், மஞ்சள் நிறமாக மாறிவிடும்.

அதன்பிறகு, திராட்சைப் பழ (உலர்) கஷாயத்தில், சிவதை வேர் மேல் தோல் சூரணத்தை அரை முதல் ஒரு ஸ்பூன் வரை சேர்த்துக் குடித்தால் பேதியாகும். வெப்பம் அதிகரிக்காது.

இதே அளவு சிவதை  வேர்ப்பட்டை சூரணத்தை, இளஞ்சூடான நூறு மில்லி லிட்டர் பாலுடன் கலந்தும் குடித்து பேதியாக்கிவிடலாம்.

பாலும் சோறும் மட்டுமே இந்த நாட்களில் உணவாகச் சாப்பிட வேண்டும். பித்தநீர் சுரப்பை மட்டுபடுத்தி, சமநிலைப்படுத்தும் கீழாநெல்லியை வெண்ணெய் úôல் மைய அரைத்து அதில் கழற்சிக்காய் அளவு எடுத்து சிறிது பாலுடன் (காய்ச்சி ஆறிய) சாப்பிட்டு, பாலுடன் சோறுமாக 3-4 நாட்கள் இருக்கவும்.

மஞ்சள் கரிசலாங்கண்ணி இலை, கல்யாணப் பூசணிக்காயின் உள்பகுதி, மணத்தக்காளிக் கீரை போன்றவை உணவில் அதில் சேர்க்கப்பட வேண்டியவை. நெரிஞ்சில் முள்ளை இடித்துக் காய்ச்சிய கஷாயத்தையும் பயன்படுத்தலாம்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.