பேல்பூரி
By | Published On : 27th February 2022 06:00 AM | Last Updated : 26th February 2022 10:29 PM | அ+அ அ- |

கண்டது
(சென்னை - அம்பத்தூர் சாலையில் இரு சக்கர வாகனத்தின் பின்புறத்தில்)
வாழ்க்கை நேர்மையாக உள்ளவனை
அழ வைக்கிறது.
நேரத்திற்கு ஏற்ப மாற்றி பேசுபவனை
வாழ வைக்கிறது.
ஜெ. திருவேங்கடம்
சென்னை-99.
(நாகர்கோவில் செட்டிகுளம் ஜங்ஷனில் ஒரு தேநீர்க் கடையின் பெயர்)
தேநீர் கலசம்
கே.பிரபாவதி,
மேலகிருஷ்ணன்புதூர்.
(குடவாசல் - வலங்கைமான் சாலையில் உள்ள ஓர் ஊரின் பெயர்)
மனப்பறவை
வரதன், திருவாரூர்.
(பட்டுக்கோட்டை வடச்சேரி ரோட்டில் உள்ள ஒரு நகைக்கடையின் பெயர்)
அணிமணி பொற்சாலை
தா.ஜெசிமாபர்வின், கரம்பயம்.
கேட்டது
(அழகேசன் நகர் வீட்டின் முன் வராண்டாவில் இருவர்)
""ஏன்டா உங்க வீட்ல இவ்வளவு கொசு இருக்குதே... கொஞ்சமாவது மருந்து அடிக்கக் கூடாதா?''
""என்னுடைய ரத்தம்... டா...
அடிக்க மனசு வரல''
க.அருச்சுனன்,
செங்கல்பட்டு.
(திருவண்ணாமலையிலிருந்து வேலூர் செல்லும் பஸ்ஸில்)
கண்டக்டர்: எந்த ஊருக்கும்மா போறே?
பெண் பயணி: .....
கண்டக்டர்: ஏம்மா எவ்வளவு நேரமா கேட்கறேன். எங்கே போறேம்மா?
பெண் பயணி: ....
கண்டக்டர்: நீ செல்லுல பேசுறியா, இல்ல என்கிட்ட பேசிறியான்னு புரிய மாட்டேங்குது... செல்லை ஆஃப் பண்ணிட்டு என்கிட்ட பேசுமா''
- சாய் செந்தில்,
சங்கராபுரம்.
(சேத்தியாத்தோப்பில் உள்ள ஓர் உணவகத்தில் )
""மாஸ்டர் அதென்ன "மலேசியா புரோட்டா'ன்னு
இன்னிக்கு புதுசா ஏதோ எழுதி போட்டு இருக்கீங்க?''
""கொஞ்சம் கவனிக்காம விட்டுட்டேன் ஒரு இருபது
ரொட்டி கருகிப் போச்சு... அது மேல கொஞ்சம்
மசாலாவைத் தடவி ஒரு புது வெரைட்டியாக குடுத்தா மக்கள் வாய மூடிட்டு சாப்பிட்டு போவாங்க சார்''
""ஓகே... புது வெரைட்டின்னா கொஞ்சம் உஷாரா தான் இருக்கணும் போல.''
பொ.பாலாஜிகணேஷ்,
கோவிலாம்பூண்டி.
எஸ்எம்எஸ்
சுட்டுவிடும் எனத் தெரிந்தும்
சூடாக இருக்கும் டீயைக் குடிப்பதில்
காட்டும் நிதானம்தான்,
எப்படி வாழ வேண்டும்
என்பதற்கான வழிமுறை.
பத்மாசாரதி,
தஞ்சாவூர்.
மைக்ரோ கதை
ரவிக்கு காலையில் எழுந்து கொள்ளவே பிடிக்கவில்லை. பள்ளிக்கூடத்திற்குச் செல்ல வேண்டும் என்று நினத்தாலே வெறுப்பாக இருந்தது. ரவிக்கு ஆசிரியர்கள், மாணவர்கள் ஒருவரையும் பிடிக்கவில்லை. யாரும் சரியில்லை என்று தோன்றியது. உடம்பு சரியில்லை என்று பள்ளிக்குப் போகாமல் இருந்து விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டான் ரவி. கஷ்டப்பட்டு இருமலை வரவழைத்துக் கொண்டு இருமினான்.
அசரீரி குரல் கேட்டது.
""உடம்பு சரியில்லை என்ற டிராமா போட வேண்டாம். கண்டிப்பாக பள்ளிக்கூடத்திற்கு போகத்தான் வேண்டும். நினைவில் இருக்கட்டும். நீங்கள் தான் பள்ளிக்கூடத்தின் ஹெட்மாஸ்டர்'' என்றாள் மனைவி.
கே.என்.சுவாமிநாதன்,
சென்னை- 41.
யோசிக்கிறாங்கப்பா!
வாழ வேண்டும் என்ற
மனநிலையில் உள்ளவரை...
வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற
மனநிலைக்குத் தள்ளுவது
சுற்றத்தாரின் அணுகுமுறை!
பா.சக்திவேல்,
கோயம்புத்தூர்.
அப்படீங்களா!
நம்முடைய உடல் நலம் எப்படி இருக்கிறது என்பதை கண்காணிக்கும் பணியை இப்போது மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள்தாம் செய்ய வேண்டும் என்பதில்லை. உடல்நலம் குறித்த தகவல்களை நீங்கள் வீட்டில் இருந்தபடியே தெரிந்து கொள்ள முடியும். இதற்கு "செங்க்லெட் ஸ்மார்ட் ஹெல்த் மானிட்டரிங் லைட்' என்ற பல்ப் உதவுகிறது.
உடல் நலம் குறித்த தகவலை இது தெரிவிக்கிறது. இதற்கு அது "ஃப்ரிகுவன்ஸி மாடுலேட்டடு கன்டினியஸ் வேவ் (ஃஎப்எம் சிடபிள்யூ) ரேடார்' என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது.
இந்த பல்ப், அது மாட்டப்பட்டுள்ள பகுதியில் உள்ள ஒருவரின் இதயத் துடிப்பு, உடல் வெப்பநிலை, தூக்கத்தின் தரம், மூச்சுவிடுதலின் தன்மை போன்ற உடல் நலம் சார்ந்த தகவல்களை ரேடார் சென்சார்கள் மூலம் கண்டறிகிறது. அதுமட்டுமல்ல, அறையில் உள்ள மனிதர்களின் நடமாட்டத்தையும் கண்காணிக்கிறது. பிறகு அது தொடர்பான தகவல்களைத் தெரியப்படுத்துகிறது. உதாரணமாக அறையில் உள்ள ஒருவர் கீழே விழுந்துவிட்டார் என்றால் அந்தத் தகவலை அவருடைய நெருங்கிய உறவினர் அல்லது நண்பருக்கு உடனே இந்த பல்ப் தெரிவித்துவிடும். அதற்கு வைஃபை இணைப்பிருந்தால் போதும்.
ஒரு வீட்டில் இந்த செங்க்லெட் ஸ்மார்ட் ஹெல்த் மானிட்டரிங் லைட் பல்புகள் பலவற்றை பொருத்தி அவற்றை புளூடூத் வழியாக தொடர்புபடுத்தினால், அப்போது அவை கண்டறியும் உடல்நிலை தொடர்பான தகவல்கள் அனைத்தும் மிகவும் துல்லியமாக இருக்கின்றன. இந்த ஆண்டின் கடைசியில் இந்த கண்காணிக்கும் பல்ப் விற்பனைக்கு வரக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
என்.ஜே.,
சென்னை-58.