பேல்பூரி

இந்த அழகான உலகை சுற்றிப் பார்க்க வந்த சுற்றுலா பயணிகள் நாம்,ஒரு நாள் திரும்பி செல்லத்தான் போகிறோம்...தேதிகள் மட்டும் ரகசியம்.
பேல்பூரி

கண்டது


(திருவண்ணாமலையில்ஓர் ஆட்டோவில்)

3 ஜி, 4 ஜி, 5ஜின்னு எத்தனை ஜி வந்தாலும் நமக்கு கஞ்ஜி ஊத்தப் போறது விவசாயம் மட்டும்தான்.

ஆர். பிரசன்னா,
ஸ்ரீரங்கம்.

(சென்னை வடபழனி சாலையில் உள்ள சிக்னலில் நிற்கும் காரின் பின்புறம் உள்ள வாசகம்)

இந்த அழகான உலகை சுற்றிப் பார்க்க வந்த சுற்றுலா பயணிகள் நாம்,
ஒரு நாள் திரும்பி செல்லத்தான் போகிறோம்...
தேதிகள் மட்டும் ரகசியம்.

ஜெ. திருவேங்கடம்
சென்னை99

(கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளகண்ணன்புதூரில் ஒரு பைக்கின் முன்புறத்தில்)

மரம் விழுந்து,
மலை சாய்வதில்லை.

ஆ.சந்தனம்பிள்ளை,
கண்ணன்புதூர்.

கேட்டது


(திருவாரூர் மாவட்டம் கூத்தனூர் கடைவீதியில் இருவர்)

""நான் கையிலே கட்டியிருக்கிற வாட்ச் என்னா விலை தெரியுமா?''
""மாப்ளே... அதிக விலை கொடுத்து மோட்டார் பைக் வாங்கினாலாவது வேகமா ஓடும். இது அது மாதிரி ஓடவா போறது?''

மு.தாஜுதீன்,
தஞ்சாவூர்.

(சிதம்பரம் தேரடி பிள்ளையார்கோயில்தெருவில் உள்ள வீட்டில் 2ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியும் அவளுடைய தாயும்)

""வாய் எதுக்கும்மா இருக்கு?''
""பேசுறதுக்குடா தங்கம்''
""வாம்மா... வந்து எங்க மிஸ்கிட்ட நல்லா சொல்லும்மா... எப்பப் பாரு கிளாஸ்ல பேசாதே பேசாதேன்னு திட்டுறாங்க''

அ.ப.ஜெயபால்,
சிதம்பரம்.

யோசிக்கிறாங்கப்பா!


விவரம் தெரிந்த பிறகு தான் தெரிகிறது,
விவரம் தெரியாத காலம்தான் சொர்க்கம் என்று.

சு. நாகராஜன்,
பறக்கை.

மைக்ரோ கதை


""வீடு வாடகைக்கு இருக்கிறது. கீழ்தளமும், மேல் தளமும் இருக்கு. உங்களுக்கு எந்த தளம் வேண்டும்?'' வீட்டுக்குச் சொந்தக்
காரர் கேட்டதும் சற்று யோசித்தார் நாகராஜன். சிறிது நேரம் கழித்து, ""சரிங்க! இரண்டு தளமும் வாடகைக்கு எடுத்துக்கிறேன்'' என்றார்.
வீட்டுக்காரருக்கு ஆச்சரியம்!
""உங்க வீட்டுலே உங்க மகளும், நீங்கள் இருவரும் ஆக மூவர் தானே! அதற்கு எதற்காக இரண்டு தளம் வாடகையைக் கொடுக்க வேண்டும்! ஒரு தளம் போதாதா?'' சற்று ஆதரவாகப் பேசினார் வீட்டுக்குச் சொந்தக்காரர்.
""இல்லேங்க! இரண்டு தளமும் வேணும். வாடகை தந்து விடுகிறேன். இந்தாங்க, நீங்க கேட்ட அட்வான்ஸ்!'' அட்வான்ஸ் பணத்தை கொடுத்து விட்டு சாவிகளை வாங்கிக்கொண்டார் நாகராஜன்.
வீட்டுக்குச் சொந்தக்காரர் புரியாமல் பார்த்தார்.
வீட்டுக்கு வந்தததும் மனைவியிடம் நாகராஜன் சொன்னார்:
""நாம சொந்தவீடு கட்டி குடி போகுற வரைக்கும் இனிமே வேற வாடகை வீடு பார்க்கவேண்டிய தேவையே இருக்காது''
""என்னங்க சொல்றீங்க?'' மனைவிஆச்சரியத்துடன் கேட்டாள்.
""தனி வீடு... பக்கத்துல வேற குடித்தனக்காரர் யாரும் இல்லை. ரெண்டு தளத்துக்கும் அட்வான்ஸ் கொடுத்துட்டேன். இனிமே பக்கத்துல குடியிருக்கிறவங்க கிட்டே நீ சண்டை போட்டு, அதனால வேற வீடு பார்க்க வேண்டியிருக்காதுல்ல?'' என்றார் நாகராஜன்.

கு. அருணாசலம்,
தென்காசி.

எஸ்எம்எஸ்

நேற்றிலிருந்து கற்றுக் கொள்;
இன்றைக்காக வாழ்;
நாளை மீது நம்பிக்கை வை;
வாழ்க்கை இனிக்கும்.

மா.பழனி,
தருமபுரி.

அப்படீங்களா!

நிலத்தை உழுதல், விதைத்தல், நாற்று நடுதல், உரமிடுதல், அறுவடை செய்தல் என ஏராளமான விவசாயப் பணிகள் உள்ளன. இப்போதைய தலைமுறையினர் கடுமையான உடல் உழைப்பை விரும்புவதில்லை. கணினிமயமான உலகில் அவர்களுக்கு விவசாயம் தவிர, பல்வேறு வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. எனவே விவசாயப் பணிகளுக்கு பணியாளர்கள் கிடைப்பது சிரமமாக இருக்கிறது.
இந்த நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் டீரி என்ற நிறுவனம் ஒரு தானியங்கி டிராக்டரைத் தயாரித்து இருக்கிறது. ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் இந்த டிராக்டர், விவசாயம் தொடர்பான எல்லாப் பணிகளையும் நேரம், காலம் பார்க்காமல் செய்யும். இந்த தானியங்கி டிராக்டரைக் கட்டுப்படுத்த ஒரு செல்லிட பேசி செயலி ஒன்று உள்ளது. அந்த செயலியைப் பயன்படுத்தி, தூரத்தில் இருந்தவாறே இந்த டிராக்டரை இயக்கலாம்.
இந்த தானியங்கி டிராக்டரை முதலில் அது வேலை செய்ய வேண்டிய வயல்வெளிக்குக் கொண்டு செல்ல வேண்டும். எந்தப் பகுதியில் டிராக்டர் வேலை செய்ய வேண்டுமோ, அந்தப் பகுதி முழுக்க முதலில் ஒருமுறை அதை ஓட்டிச் செல்ல வேண்டும். அதன் பிறகு டிராக்டரை செல்பேசி செயலியின் மூலம் இயக்கலாம்.
நிலத்தை உழும்போது ஏதாவது பாறை எதிர்ப்பட்டால், டிராக்டரில் உள்ள சென்சார்கள் அதைத் தெரிந்து கொண்டு பாதையை மாற்றிக் கொள்ளும். டிராக்டரில் உள்ள எரிபொருள் தீர்ந்துவிட்டாலோ அல்லது வேறு ஏதேனும் பழுது ஏற்பட்டாலோ உடனே இந்த தானியங்கி டிராக்டர், செல்லிட பேசி செயலியின் மூலம் அது தொடர்பான தகவலை அனுப்பி வைத்துவிடும்.
அதற்குப் பிறகு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு தானியங்கி டிராக்டரை தொடர்ந்து இயங்கச் செய்யலாம்.

என்.ஜே.,
சென்னை58.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com