பேல்பூரி

உங்கள் பயணச் செலவில் எங்கள் வாழ்க்கைப் பயணம்.
பேல்பூரி


கண்டது


(நாகர்கோவில் கோட்டாறில் உள்ள ஆட்டோ ஒன்றில் எழுதியிருந்த வாசகம்)

"உங்கள் பயணச் செலவில் எங்கள் வாழ்க்கைப் பயணம்'

- கே.ஆர்.ஜெயக்கண்ணன், 
கவற்குளம்தேரிவிளை.

(திருவாரூர் மாவட்டத்தில் ஓர் ஊரின் பெயர்)

வீரன்வயல்

-கனக.கந்தசாமி, முத்துப்பேட்டை.

(சங்கரன்கோவில், திருவேங்கடம் சாலையில் ஓர் டீக்கடையின் பெயர்)

அண்ணன்- தம்பி டீக்கடை

-ம.சிவகாமி, திருநெல்வேலி.

கேட்டது


(மணலூர் கடைத் தெருவில் இருவர்)

வரவர இங்கே வயல்வெளியெல்லாம் நெல்லுக்கு பதில் மாடிவீடாக காய்க்குமோ?

ஆமாம்! வயலும் எவ்வளவு காலம்தான் தண்ணீரில் வாழும்!

-க.பன்னீர்செல்வம்,
மயிலாடுதுறை.

(சிதம்பரம் வடக்கு ரத வீதியில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் கண்ட வாசகம்)

அளவுக்கு மிஞ்சி செலவு செய்வான் பணக்காரன் இல்லை, ஏழைதான்!

-அ.ப.ஜெயபால், சிதம்பரம்.


(கீழக்கரை கடைவீதியில் நண்பர்கள் இருவர்)

""என்னோட மனைவியை பணம், நகை வாங்கிட்டு வரச் சொல்லி அவளோட அம்மா வீட்டுக்கு  அனுப்பிடுவேன். நீ எப்படி?''
""என்னாலே.. அப்படி  எல்லாம் செய்ய  முடியாது மாப்ளே! நான் இருக்கறதே 
மாமியார் வீட்டுலதான்!''

-மு.நாகூர், கீழக்கரை.

யோசிக்கிறாங்கப்பா!

உறவிலும் வெறுப்பிருக்கும்! 
நட்பிலும் நடிப்பிருக்கும்!

-மு.பெரியசாமி, 
விட்டுக்கட்டி.

மைக்ரோ கதை

நகரின் எல்லையில் கட்டியிருந்த,  புது வீட்டுக்கு விவேக் குடும்பம் குடியேறி ஒரு வாரம் ஆகிறது.

எல்லாப் பொருள்களையும்  ஒழுங்குப்படுத்தி,  அடுக்கிமுடித்தவுடன் நட்புக்கும், உறவுக்கும் தெரிவிக்கும் நல்லெண்ணத்தில் புது முகவரியை இருபது போஸ்ட் கார்டுகளில் எழுதி,எடுத்துக் கொண்டு, மெயின் ரோடு பக்கம் வந்தார் விவேக்.

அங்கே டீக்கடையருகில் நின்றிருந்த இளைஞனிடம், ""தம்பி. நான் இந்த ஏரியாவுக்குப் புதுசு. என் முகவரியை போஸ்ட்கார்டில் எழுதியிருக்கேன். தபாலில் சேர்க்கணும்.இங்கே "போஸ்ட்பாக்ஸ்' எங்கேயிருக்கு?'' என விசாரித்தார். 

""சார். நீங்க எந்த உலகத்திலே இருக்கீங்க? இது மொபைல்காலம்..! வாட்ஸ் அப்பிலேயோ மெயிலிலேயோ மெùஸஞ்சரிலேயோ அனுப்பிடலாமே? இப்போ, போஸ்ட் ஆபிஸ்,போஸ்ட்கார்டுன்னாலே யாருக்கும் தெரிய வாய்ப்பு குறைவு சார்'' என அலட்சியமாகக் கூறி சிரித்தார்.

""என்ன தம்பி. இப்படி சொல்றே?  உதாரணத்துக்கு ஒரு விஷயம் சொல்றேன். நீ ஒரேயொரு போஸ்ட்கார்டை மட்டும் எழுதி, தில்லிஅட்ரஸ்சுக்கு தபாலில் போடறேன்னு வை. அன்றே  மாலை நேரத்துக்குள் தபால் ஊழியர் அதை தபால் பெட்டியிலிருந்து எடுத்துப் போய் போஸ்ட்மாஸ்டரின் அனுமதியோடு "சீல்' வச்சி,  தபால் கட்டில் சேர்க்கிறார். பிறகு அது  தபால் வாகனத்தில் சென்னைக்குப் பயணிக்கிறது.  அடுத்து அதிகாலை ஃப்ளைட்டில் "லக்கேஜா'க- தில்லிக்குப் பறக்கிறது.  அதை தில்லி வாகனம் போஸ்ட்ஆபிசுக்கு சுமந்து போகிறது. அங்கே சில ஊழியர்கள் "சார்ட்அவுட்' செய்து போஸ்ட்மேனிடம் கொடுக்கிறார்கள். அப்புறம் அவர் சைக்கிளிலோ, இரு சக்கர ஊர்தியிலோ சென்று உரிய முகவரியில் ஒப்படைக்கிறார். நினைத்துப் பார்!  தொடக்கம் முதல் இறுதி வரை ஏறக்குறைய பத்து பேரின் ஈடுபாடு. பயணம்-இத்தனைக்கும் ஆகிற மொத்தச் செலவு என கிட்டத்தட்ட சில ஆயிரம் ரூபாய்! ஐம்பது காசு போஸ்ட்கார்டை அனுப்பறதுக்கே இவ்வளவு பெரிய பிரயத்தனம்! இதுபோல அதிக எடையும் விலையும் கொண்ட பதிவுத் தபால்,பார்சல் போன்றவற்றைப் பட்டுவாடா செய்ய அரசாங்கத்துக்கு இன்னும் கூடுதலாக செலவு ஆகும்.அந்தப் புனிதமான சேவையை நீ சாதாரணமாகச் சொல்லிச் சிரிக்கிறே?''  என விரிவாக எடுத்துரைத்தார்.

இளைஞன் இப்போது வியந்து அதிசயித்து தெளிவடைந்து  கரம் குலுக்கி விடைபெற்றார்.

- மாலா உத்தண்டராமன்.

எஸ்எம்எஸ்


நாம் ஜெயிப்பதை மற்றவர்கள் பார்க்கும்போது, 
கிடைக்கும் சந்தோஷத்துக்கு சமமானது. 
மற்றவர்களை ஜெயிக்க வைத்து நாம் பார்ப்பது.

-மதிராஜா திலகர்,
சின்னபுங்கனேரி.

அப்படீங்களா!


மெட்ரோ ரயில்களைத் தொடர்ந்து, கார்களில் தானியங்கி சேவை 2020-இல் அறிமுகமானது. பெரும் சொகுசு கார்களில் ஓட்டுநர் அமர்ந்து இருந்தாலும், நெடுஞ்சாலைகளில் இந்தத் தானியங்கி சேவையை தேர்வு செய்துவிட்டு வாகனத்தை அதன் கட்டுப்பாட்டிலேயே விட்டு விடலாம். இந்தத் தானியங்கி டாக்ஸி சேவையை சீனா செயல்படுத்தியது. 

தற்போது முதல் முறையாக தானியங்கி பேருந்து சேவையை பிரிட்டன் தொடங்கி உள்ளது. ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பர்க் - பைஃப் இடையேயான 22 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த பேருந்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. முழு பேருந்து இயக்கமும் தானியங்கி முறையில் தொடங்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும்.

எனினும், பயணிகளின் அச்சத்தைத் தவிர்க்க தற்போது பேருந்து ஓட்டுநரும் பயணம் செய்வார் என்று அரசு அறிவித்துள்ளது. 2019-இலேயே தொடங்கப்பட வேண்டிய இந்த பேருந்து சேவை கரோனா எதிரொலியால் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

36 பயணிகள் பயணம் செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த பேருந்தை சுற்றியும் சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் வழக்கமான ஓட்டுநரின் கவனத்தைத் தாண்டியும் இந்த நவீன சென்சார்கள் பாதுகாப்பாக பேருந்தை இயக்கும் என்று இந்த பேருந்தை வடிவமைத்தவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

மனிதத் தவறுகளால்தான் 90 சதவீத சாலை விபத்துகள் நடப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதை இந்த தானியங்கி பேருந்துகள் மாற்றுமா அல்லது மாற்றம் காணுமா என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

- அ. சர்ப்ராஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com