இயற்கையுடன் நட்பு!

சுற்றுப்புறச் சூழலைப் பாதிக்காமல் பொருள்களை  உருவாக்கி   விற்பனை செய்யும் நிறுவனங்கள் தற்போது நிறைய உள்ளன.
இயற்கையுடன் நட்பு!

சுற்றுப்புறச் சூழலைப் பாதிக்காமல் பொருள்களை உருவாக்கி விற்பனை செய்யும் நிறுவனங்கள் தற்போது நிறைய உள்ளன. இந்தப் பசுமை முயற்சிகளிலிருந்து வித்தியாசமாக வேப்ப மரங்களில் உருவாக்கப்படும் உணவுத் தட்டுகள், சமையல் கரண்டிகள் உள்ளிட்ட பல்வேறு பொருள்களைத் தயாரித்து சந்தையை உருவாக்கி சாதனையை நிகழ்த்தி யிருக்கிறார் திருவண்ணாமலையைச் சேர்ந்த தட்சணாமூர்த்தி.
கட்டடப் பொறியியல் படிக்கும்போதே ஓவியம் வரையும் திறன் கொண்ட தட்சணாமூர்த்தி, தான் வரைந்த ஓவியங்களை விற்று படித்தார். கல்லூரி விழாக்களுக்கான பேனர்களை வரைந்து கொடுத்து கட்டணமும் பெற்றிருக்கிறார்.
தனது உழைப்புக்கு கிடைத்த ஆதரவு தந்த உற்சாகத்தில் பயன்படுத்தாமல் இருக்கும் இயற்கை பொருள்களிலிருந்து பல்வேறு பொருள்களைத் தயாரித்து விற்பனை செய்தார். எதிர்பார்த்த
அளவுக்கு வெற்றி பெறாவிட்டாலும், விடாமுயற்சியில் சாதனை புரிந்த அவரிடம் பேசியபோது:


'பிளாஸ்டிக் கடந்த நூற்றாண்டின் அற்புதமான கண்டுபிடிப்பு. பல பொருள்கள் பிளாஸ்டிக்கில் வந்துவிட்டன. ஆனால் பிளாஸ்டிக்கை தவறாகப் பயன்படுத்துவதால், சுற்றுப்புறச் சூழலுக்கு பயமுறுத்தலாக மாறியிருக்கிறது. பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்வதும் முனைப்பாக நடக்கவில்லை. கரோனா காலத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து
விட்டது.
பெட்ரோல் தயாரிக்கப்படும்போது டீசல், மண்ணெண்ணெய் போன்ற பல துணைப் பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. ஆனால், பிளாஸ்டிக்கின் பரிமாணம் 'மைக்ரோ' நிலையிலிருந்து 'நானோ' பரிமாணத்துக்குச் சென்றுவிட்டது.
பிளாஸ்டிக் மைக்ரோ துகளை மைக்ரோஸ்கோப் மூலமாவது பார்க்கலாம். ஆனால் பிளாஸ்டிக்கின் நானோ துகளை மைக்ரோஸ்கோப் உதவியால்கூட கண்டுபிடிக்க முடியாது. பிளாஸ்டிக்கை தீயிட்டு எரிக்கும்போது புறப்படும் புகையில் 'நானோ' துகள்களாக காற்றில் கலக்கிறது. மூச்சு இழுக்கும்போது உடலுக்குள் சென்று புற்றுநோய் உருவாக காரணமாக அமைகிறது. அதனால்தான் பிளாஸ்டிக் குப்பைகளை எரிக்கக் கூடாது என்கிறார்கள்.
இப்படி உடலை பாதிக்கும் பிளாஸ்டிக் நச்சு பொருள்களிலிருந்து உடலையும் உயிரையும் காப்பாற்ற வேப்ப மரத்தில் உணவுத் தட்டுகள், கரண்டிகள், கிண்ணங்கள், பேனாக்கள், பென்சில்களை உருவாக்கி விற்றுவருகிறேன்.
தமிழ்நாடு, ஆந்திரம் உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து கிடைக்கும் வேப்ப மரங்களில் உணவுத் தட்டுகள், கரண்டிகள், கிண்ணங்கள், பேனாக்கள், பென்சில்களை தயாரித்து தேவையானவர்களுக்கு விற்றுவருகிறேன்.
நல்ல கனம் இருப்பதால், உணவுத் தட்டுகள் செய்ய பருமனான வேப்ப மரம் தேவைப்படும். ஒரு தட்டு ரூ.1,500 வரையில் விற்பனையாகும். வேப்பந் தட்டுகள், கிண்ணங்களை தேய்த்து மினுமினுப்பாக்க ரசாயனப் பொருள்களைச் சேர்ப்பதில்லை. இவற்றில் உணவு உண்டால் உடலுக்குத் தேவைப்படும் கசப்புச் சுவை உணவுடன் கலந்து இயற்கையாக உணவு மூலமாகச் சேரும்.
பிளாஸ்டிக் ஸ்ட்ராக்களினால் சுற்றுப்புறச் சூழல் பெரிதும் பாதிக்கப்படுகிறது. மூங்கில் குச்சிகளிலிருந்து ஸ்ட்ரா எனப்படும் உறிஞ்சு குழாய் தயாரிக்கிறோம். மூங்கில் ஸ்ட்ராவை எத்தனை முறை வேண்டுமானாலும் கழுகி பயன்படுத்தலாம். ஒரு மூங்கில் ஸ்ட்ராவின் விலை பத்து ரூபாய் மட்டும்தான்.
மிக உயர்ந்த தரமான பிளாஸ்டிக்கில் செய்யப்பட்டாலும் பிளாஸ்டிக் பாட்டிலைப் பயன்படுத்துவது ஆபத்துதான்.
தேனை பிளாஸ்டிக் பாட்டிலில் வைத்தால் தேனின் தன்மையை பிளாஸ்டிக் மாற்றும். ஆனால் கண்ணாடி பாட்டிலில் தேன் அப்படியே மருத்துவக் குணத்துடன் மாறாமல் எத்தனை காலம் வேண்டுமானாலும் இருக்கும். அதனால் வீட்டில் மளிகைச் சாமான்கள் வைக்க கண்ணாடி பாட்டில்களைப் பயன்படுத்த, புதிய வடிவங்களில் பாட்டில்களைத் தயாரித்து விற்கிறோம்.
பசுமைப் பொருள்களை விற்கும் தொழிலைச் செய்பவர்கள், 'வியாபாரம் எப்படி நடக்கிறது' என்ற கேள்வியை தவிர்க்க முடியாது. எதையும் வேண்டா வெறுப்பாக 'செய்ய வேண்டியதிருக்கிறதே? என்று சலிப்பாகச் செய்தால் வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்த முடியாது.
நானும் தொடக்கத்திலிருந்து பல தொழில்கள் செய்தேன். அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்தேன். வெற்றி பெற முடியவில்லை. இப்போதைய தொழிலை விரும்பி நேசத்துடன்
செய்கிறேன்.
வியாபாரம் திருப்திகரமாக இருக்கிறது. 'சநல்' என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை திருவண்ணாமலையில் ஆரம்பித்து பிளாஸ்டிக் கலப்பு இல்லாத பொருள்களைத் தயாரிக்க முடிவு செய்து துணிப் பைகளை தயாரித்து விற்று வந்தேன்.
மக்கள் பயன்படுத்தாமல் வீணாக்கும் பொருள்களிலிருந்து மக்களுக்குப் பயன்படும் பலவித தயாரிப்புகளைத் தயாரிக்க ஆரம்பித்தேன். சென்னையிலும் கிளை அலுவலகத்தைத் தொடங்கியுள்ளேன்' என்றார் தட்சணாமூர்த்தி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com