அப்பா என்னும் அந்த ஆள்

ஓடிச் சென்று  பேருந்தில் ஏறி இடம் பிடிப்போர்,  டீக்கடையில் சாவகாசமாக டீ குடிப்போர்,  நடைமேடையில் சம்மணம்போட்டு உட்கார்ந்து, வியாபாரத்துக்காகப் பனங்கிழங்கின் தோலையை உரித்து, அதன் மூக்கைச்...
அப்பா என்னும் அந்த ஆள்

ஓடிச் சென்று பேருந்தில் ஏறி இடம் பிடிப்போர், டீக்கடையில் சாவகாசமாக டீ குடிப்போர், நடைமேடையில் சம்மணம்போட்டு உட்கார்ந்து, வியாபாரத்துக்காகப் பனங்கிழங்கின் தோலையை உரித்து, அதன் மூக்கைச் சீவிக் கொண்டிருக்கும் பெண்கள், வெள்ளரிப் பிஞ்சு, பனங்கிழங்கு விற்போர் என்று திருச்செந்தூர் பேருந்து நிலையம் ஆரவாரம் நிறைந்திருந்தது.

'இந்தப் பேருந்து எப்போது புறப்படும்' என்ற சிந்தனையில் நான் இருந்தேன். இந்த 9- ஆம் நம்பர் பேருந்து குறிப்பிட்ட நேரத்துக்கும் வரும் என்றோ, போகும் என்றோ சொல்ல முடியாது. அதற்கு நேரம் காலம் என்று எதுவும் கிடையாது. இப்போது நான் வந்த நேரம் நல்ல நேரம். பேருந்து நிலையத்தில் மூச்சு வாங்கிக் கொண்டே அந்தப் பேருந்து நின்றிருந்தது. வசதியாக ஜன்னல் ஓரம் இடம் கிடைத்த மகிழ்ச்சியில் பேருந்து நிலையத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.
அப்போது, 'சார்! வணக்கம்' என்று சொல்லிக் கொண்டே எனக்கு அருகில் காலியாக இருந்த இடத்தில் வந்து அவன் உட்கார்ந்தான். அவன் என்னிடம் படித்த மாணவன். அதுமட்டுமல்ல; நான் குடியிருக்கும் தெருவுக்கு அடுத்த தெருவில்தான் அவன் வீடு. அதனால் அவனைப் பற்றியும் அவனுடைய குடும்பத்தைப் பற்றியும் எனக்கு நன்றாகத் தெரியும். இப்போது வெளியூரில் இருக்கிறான். கொஞ்ச நாளைக்குப் பிறகு அவனை இப்போதுதான் பார்க்கிறேன்.

'என்னப்பா! எப்படி இருக்கிறாய்?'

அவன் இப்போது நல்ல வேலையில், வசதியாக இருக்கிறான் என்பது எனக்குத் தெரியும். இருந்தாலும் அவனிடம் பேச்சைத் தொடங்குவதற்காக இப்படிக் கேட்டேன்.

'நான் நல்லா இருக்கிறேன் சார். சாத்தூரில் ஐம்பது லட்சம் ரூபாயில் பெரிய வீடு கட்டியிருக்கேன். என் பெரிய பொண்ணு பிளஸ் டூ படிக்கிறாள். படிப்பில் கெட்டிக்காரி. நீட் தேர்வுக்கு இப்பவே தயாராகிக்கிட்டு இருக்கிறாள். அவளாகவே முயற்சி எடுத்து படிக்கிறாள். எப்படியும் 'நீட்' தேர்வில் நல்ல 'மார்க்' வாங்குவாள். கவர்மென்ட் மெடிக்கல் காலேஜில் இடம் கிடைத்துவிடும். இளையவன் எட்டாம் வகுப்புப் படிக்கிறான். அவனும் நல்லா படிப்பான். அவனையும் டாக்டராக்கி விடுவேன்.'

'எப்படி இருக்கிறாய்?' என்று நான் கேட்டதற்கு, இவ்வளவும் சொன்ன அவன் பேச்சில் உண்மை இருந்தாலும், அதில் ஒரு பெருமை இருப்பதாக எனக்குப் பட்டது. 'அவன் கொஞ்சம் தற்பெருமை கொண்டவன்' என்பது எனக்கு முன்பே தெரியும். அதற்குக் காரணம் இருந்தது. அவன் வளர்ந்த சூழல் அவனை அப்படி ஆக்கியிருந்தது.
'அப்பாவைப் பார்க்க வாறியா?' என்று நான் கேட்டேன். 'அவன் அம்மா இறந்து பல ஆண்டுகள் கடந்துவிட்டன. அதனால் அப்பாவைத்தான் பார்க்க வருகிறான்' என்று நான் நினைத்துக் கொண்டேன். அவன் அப்பா நான் இருக்கும் ஊரில்தான் இன்னும் இருக்கிறார். அவரை நான் அடிக்கடி பார்ப்பதுண்டு.
'அப்பாவா சார் அந்த ஆள். அவரெல்லாம் மனுஷனே இல்லை. அவரைப் பார்க்க எவன் போவான்' என்று அவன் சொல்ல, நான் எரிச்சலானேன்.
'என்ன இவன். இப்படிப் பேசுகிறான். பெற்ற அப்பாவை அந்த ஆள், இந்த ஆள் என்கிறானே' என்று அதிர்ந்து போன நான், 'ஏன் இப்படிச் சொல்கிறாய்?' என்றேன்.
'பின்ன என்ன சார்! அவரெல்லாம் மனுஷனே இல்லை. நான் வீடு கட்டி, பால் காய்ச்சினதுக்குக் கூட அவர் வரலை. ரெண்டாயிரம் ரூபாய்க்குப் புது வேட்டி, சட்டை, பனியன், அண்டர்வேர் எல்லாம் எடுத்துக் குடுத்திருக்கேன். கையிலே பணமும் கொடுத்திருக்கிறேன். அப்படியிருந்தும் அவர் வரலை சார். அன்றைக்கு ஒருநாளும் குடிக்காமல் இருங்கள் என்றேன். இருக்க முடியாதா சார்? என்னால ஒரு நிமிடம் கூட குடிக்காமல் இருக்க முடியாதுன்னு சொல்லி வராமல் இருந்துட்டார் சார். பால் காய்ப்புக்கு வந்திருந்தவங்க எல்லாரும், 'அப்பாவைக் கூப்பிடாமல் பால் காய்ச்சுகிறியேன்னு' என்னை ஏளனமா பேசினாங்க சார். அது மட்டுமில்ல சார். நான் வாங்கிக் கொடுத்த புது வேட்டி சட்டை அவர்கிட்ட இல்லை. குவார்ட்டருக்கும் கட்டிங்குக்கும் வித்துப்புட்டாருன்னு கேள்விப்பட்டேன். எனக்கு எப்படி இருக்கும் பாருங்க?' என்று பொரிந்து தள்ளிவிட்டு, அமைதியாக இருந்தான்.
அதற்குள் பேருந்து புறப்பட்டு பேருந்து நிலையத்தைவிட்டு வெளியே வந்து, வேகம் எடுத்து ஓடிக்கொண்டிருந்தது. அதைவிட வேகமாக அவன் அப்பாவைப் பற்றிய நினைவு என் மனதில் ஓடத் தொடங்கியது.
'பொன்னையா'- அதுதான் அவனுடைய அப்பாவின் பெயர். ஆனால் பொன்னையா என்றால் யாருக்கும் தெரியாது. 'சரவல் பொன்னையா' என்றால்தான் எல்லோருக்கும் தெரியும். இன்னும் 'சரவல்' என்று சொன்னாலே போதும் அவரைக் கை காட்டி விடுவர் ஊர் மக்கள். அத்தகைய சரவல் பேர்வழி அவர். அவரைக் கண்டாலே, 'சரவல் வருகிறது' என்று மற்றவர்கள் ஒதுங்கி விடுவார்கள். சரவல் என்றால் ஒன்றுமில்லை. மற்றவர்களிடம் வம்பிழுப்பதுதான். அதற்குக் காரணம் அவரிடமிருந்த குடிப் பழக்கம்.
அவரால் குடிக்காமல் இருக்க முடியாது. குடித்தால் சும்மா இருக்க முடியாது. யாரிடமாவது வம்பிழுத்துக் கொண்டிருப்பார். அதுவும் நேரடியாகப் பேச மாட்டார். ஜாடை சொல்லி வம்பிழுப்பார். அதனால் அவர் 'சரவல் பேர்வழி' என்றாகிவிட்டார். அதனால் அவரைக் கண்டாலே எல்லோரும் விலகிப் போகத்தான் நினைப்பர்.
குடிக்காமல் இருக்கும்போது புறங்கை கட்டிக் கொண்டு அப்பாவி போல போவார். ஆனால் அவரை அப்படி எப்போதாவதுதான் பார்க்க முடியும். அடுத்த நிமிடமே விரைப்பாகி வந்து யாரையாவது ஜாடை சொல்லி முணுமுணுத்துக் கொண்டிருப்பார். சில நேரம் 'தத் புத்' என்று புரியாத வகையில் ஏதோ ஒலி சத்தமாகப் போட்டுக்கொண்டிருப்பார். சரக்கு அவருக்குள் ஏறி இருப்பதுதான் அதற்குக் காரணம். குடிக்கப் பணம் கிடைக்கவில்லையானால் கண்ணில் படுவோரிடம் கையேந்தி யாசிக்கவும் தயங்கமாட்டார். அவன் சொன்ன மாதிரி வேட்டி, சட்டை, வீட்டிலிருக்கும் பொருட்களையும் விற்று
விடுவார். இப்படி இருக்கும் அப்பாவை, வளர்ந்து
விட்ட,அதுவும் படித்து நல்ல நிலைமையில் இருக்கும் எந்த மகனுக்குத்தான் பிடிக்கும். இதனால் உண்டான அவமான உணர்வைப் போக்கத்தான் அவன் உயர்வு மனப்பான்மையை வளர்த்திருந்தான் என்பது என்னுடைய கணிப்பு.
அவனுடைய அப்பாவுக்கு என் மீது தனி மதிப்பு உண்டு. அவனுடைய ஆசிரியர் என்பதாலோ என்னவோ தெரியாது. எப்போதும் என்னிடம் ஒரு மரியாதை காட்டுவார். என்னைக் கண்டதும் மடித்துக் கட்டியிருக்கும் சாரம் அல்லது வேட்டியை அவிழ்த்து இறக்கிவிட்டு, சலாம் போடுவார். ஆத்திசூடி, திருக்குறள் என்று சிறு வயதில் படித்த பல மனப்பாடச் செய்யுள் வரிகளை அப்படியே ஒப்பிப்பார். இத்தனைக்கும் அவரின் படிப்பு ஐந்தாவது வகுப்புவரைதான், அத்தனையும் போதையில்தான். இருந்தாலும் நான் முகம் சுழிப்பதில்லை. அவருடைய ஞாபக சக்தி என்னை ஆச்சரியப்படுத்தும். கடைசியில் பத்தோ இருபதோ கொடுத்தபின்னர்தான் அவர் நகர்வார். அது வேறு விஷயம். அதுகுடிப்பதற்குத்தான் போகிறது என்று எனக்குத் தெரியும். அவர் பழக்கம் அப்படி ஆகிவிட்டது என்று சமாதானம் சொல்லிக் கொள்வேன்.அதனால் அவர் மீது எனக்கு ஒருபோதும் வெறுப்பு ஏற்பட்டதில்லை.ட
இப்படி ஓடிக்கொண்டிருந்த ஏன் நினைவை நிறுத்தி, அவன் பக்கம் திரும்பி, 'உங்க அப்பாவுக்குச் செலவுக்குப் பணம் கொடுப்பியா?' என்று கேட்டேன்.
'கொடுத்துக்கொண்டுதான் இருந்தேன் சார். அவர் கையில கொடுக்க மாட்டேன். கொடுத்தா ஒரே நாள்ல குடிச்சிப்புட்டு அடுத்தவங்க கிட்ட கையேந்தி நிற்பார். அதனால எனக்குத் தெரிஞ்ச கடையில கொஞ்சம், கொஞ்சமா கொடுக்கச் சொல்லி கொடுத்து வச்சிருவேன். ஆனால் அதையும் கரச்சல் பண்ணி நாலு நாள்களுக்குள் வாங்கிவிடுவார். சில நேரங்களில் கடைக்காரரோடு சண்டைக்கும் போய்விடுவார். அதனால அந்தக் கடைக்காரங்களும் 'உங்க அப்பா சச்சரவு தாங்க முடியலன்னு சொல்லி, வேற ஆளப் பார்த்துக் கொடுன்னு சொல்லிடுவாங்க. இப்படி எத்தனை பேர சார் நான் மாத்துறது. இன்னும் சிலபேர் என்னிடம் வாங்கிய பணத்தைக் கொஞ்சமா கொடுத்துட்டு, மீதியைக் கொடுக்காமலே கொடுத்ததாகச் சொல்லி என்னையே ஏமாத்திப்புட்டாங்க. அவரால நான் பட்ட அவமானம்தான் ஜாஸ்தி. அதாவது பரவாயில்லை. எங்க அப்பாவை எல்லாரும் ஈஸியா ஏமாத்திப்புடுறாங்க சார். வேலைக்குக் கூட்டிட்டுப் போய் அம்பது ,நூறு கொடுத்து ஏமாத்திப்புடுறாங்க சார். இவரும் குவாட்டருக்குக் கிடைத்தால் போதும்னு நெனச்சி வாங்கிக்கிடுறாரு. இதைப் பலபேரு என்கிட்ட சொல்லியிருக்காங்க? வேலைக்குப் போக வேண்டாம்னு நான் எத்தனையோ முறை சத்தம் போட்டும் அவர் கேட்கல. என்ன செய்யுறதுன்னு நானும் விட்டுட்டேன்.'
இப்படி அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போது, 'நல்ல வேளை நம்மைச் சொல்லவில்லை. நாம் அந்த ஏமாற்றுபவர் பட்டியலில் இல்லை' என்ற நினைவு என் மனதில் ஓடியது. ஏனென்றால் நானும் அவரை சின்ன சின்ன வேலைக்குக் கூப்பிட்டிருக்கிறேன். ஆனால் ஒருநாளும் சம்பளத்தைக் குறைத்துக் கொடுத்ததில்லை. கூடத்தான் கொடுத்திருக்கிறேன்.' என் உள்மனம் சொல்லிக்
கொண்டது.
உண்மையில் பொன்னையா நல்ல வேலைக்காரர்தான். ஆனால் அவரை வேலைக்கு அழைத்துச் செல்வது கஷ்டமான ஒன்று. 'இதோ வருகிறேன்' என்று சொல்லிவிட்டு எங்கேயாவது சாராயக் கடையில் போய் நிற்பார். பிறகு நாலு நாளைக்குப் பிறகுதான் நம் கண்ணிலே படுவார்.
'எங்க அப்பா இவ்வளவு கஷ்டப்படவேண்டியவர் இல்லை சார். வசதியான வீட்டில பிறந்து சின்ன வயசில ரொம்ப செல்லமா வளர்ந்தவர். அவருடைய அப்பாவைப் பெற்ற தாத்தா இவரைச் செல்லமா வளர்த்திருக்காரு. செக்கச்சேவேர்னு பிறந்த பேரப் பிள்ளைக்குப் பொன்னையான்னு பேர் வைத்ததுஅந்தத் தாத்தாதானாம். அவருக்குச் சொந்த ஊரு இப்போ நாங்க இருக்கிற உடன்குடி இல்ல. வள்ளியூர். அங்கே அவங்களுக்கு நிறைய சொத்து இருந்தது. எல்லாவற்றையும் குறைந்து விலைக்கு விற்றுவிட்டுத்தான் இப்போ உடன்குடியில் வந்து தங்கி உள்ளார். இது எங்க அம்மா ஊரு. இப்பவும் எங்கள் சொந்தக்காரங்க வள்ளியூரில் வசதியா இருக்காங்க. ஒத்தைக்கொரு பிள்ளையா செல்லமா வளர்ந்த பிள்ளைதான் இப்போது இப்படி இருக்கிறார். இப்பவும் என்ன குறை சார். நான் நல்லாத்தானே இருக்கேன். என்கூட அவர் வந்து இருக்க வேண்டியதுதானே. வரமாட்டேன் என்கிறார். நான் என்ன செய்வது சார்' என்று என்னிடமே கேள்வி எழுப்பினான்.
'அவர் அப்படித்தான் சொல்வார். அவர் இங்கேயே இருந்து பழகிவிட்டாரா அதனால் அப்படித்தான் சொல்வார். பெரிய ஆளுகளுக்கெல்லாம் புது இடத்துக்குப் போகப் பிடிக்காது. நாமதான் கொஞ்சம் அனுசரித்துப் போகணும்.'
'நீங்க சொல்றது சரிதான் சார். அவர் என்கூட வர வேண்டாம். குடிப்பதையாவது நிறுத்தலாம்லா? நான் குடுக்கிற பணத்துல ஒழுங்கா இருக்கலாம்லா? நான் சின்ன பையான இருந்தபோது எனக்கு ஒண்ணும் தெரியலை. இப்போ நான் ஒரு நல்ல 'பொஸிசன்ல' இருக்கேன். இப்போ குடிச்சிட்டு என் மானத்தை வாங்கலாமா?அவர் குடிப்பதால என் மானம் போகுது. ஊருக்குள்ள தல காட்ட முடியலை சார். அவ்வளவு அவமானமா இருக்கு..' என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போது உடன்குடி பேருந்து நிலையத்துக்குள் பேருந்து புகுந்தது. அவன் இறங்குவதற்குத் தயாரானது போல எழுந்தான்.
பேருந்து நிலையம்தான் வந்துள்ளது. பஜார் நிறுத்தம் வரவில்லை. அவனிடம் நான் சொன்னேன். பஜார் நிறுத்தம்தான் எங்கள் தெருவுக்குப் பக்கத்து நிறுத்தம். அதனால் அப்படிச் சொன்னேன்.
' நான் பஜாருக்கு வரவில்லை. எனக்கு அங்கு வேலையில்லை. இங்குதான் இறங்கப் போகிறேன். ஒரு ஆளைப் பார்க்கப் போகிறேன். பார்த்துவிட்டு உடனே அடுத்தபஸ்ஸில் சாத்துருக்குக் கிளம்பி விடுவேன்' என்று சொல்லிக் கொண்டே அவன் இறங்கிப் போனான்.
'என்ன பையன் இவன். பெற்று,வளர்த்து படிக்க வைத்த அப்பாவையே மதிக்காமல் இருக்கானே. குடிப்பது தப்புத்தான். அதற்காக அப்பாவை அந்த ஆள் என்றும் மனுஷனே இல்லையென்றும் ஏளனமாகப் பேசலாமா. எல்லாம் படித்துப் பணம் சம்பாதிக்கும் திமிர்' என்று நினைத்துக் கொண்டே பஜார் நிறுத்தத்தில் நின்ற பேருந்திலிருந்து இறங்கினேன்.
அங்கே நின்ற பயணி ஒருவரிடம் பொன்னையா, அதுதான் அவனுடைய அப்பா, பணம் கேட்டு நச்சரித்துத் தள்ளாடிக் கொண்டிருந்த காட்சி என் கண்ணில் பட்டது.
'சும்மா சரவல் பண்ணாதையா' என்று சொல்லிக் கொண்டே அந்தப் பயணி அவரைத் தள்ளிவிட்டுக் கொண்டிருந்தார்.
'அப்பாவா அந்த ஆள்' அவன் சொன்னது சரிதானென்று நினைத்துக் கொண்டு வீட்டை நோக்கிநடந்தேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com