திரைக் கதிர்

பொங்கல் போட்டி தனுஷுக்கும் சிவகார்த்திகேயனுக்கும்தான் என்பது உறுதியாகிவிட்டது.
திரைக் கதிர்

பொங்கல் போட்டி தனுஷுக்கும் சிவகார்த்திகேயனுக்கும்தான் என்பது உறுதியாகிவிட்டது. தனுஷின் "கேப்டன் மில்லர்', சிவகார்த்திகேயனின் "அயலான்' இரண்டு படங்களுக்கும் தியேட்டர்களை ஒதுக்கவே சரியாக இருக்கும் என்பதால், ரஜினியின் "லால் சலாம்' தள்ளிப் போகும் என்கிறார்கள். "குறைவான தியேட்டர்கள் கிடைத்தாலும் பரவாயில்லை' எனச் சொல்லி சுந்தர்.சி.யின் "அரண்மனை 4' படமும் களத்துக்குத் தயாராகிறது. "கிராபிக்ஸ் வேலைகள் நிறைவாக வந்திருப்பதாலும், குழந்தைகளுக்குப் பிடித்த ஏலியன் கதை என்பதாலும் சிவகார்த்திகேயனின் "அயலான்' பொங்கல் ரேஸில் சொல்லி அடிக்கும்' என்கிறார்கள்.

---------------------------------------------------------

விஜய்யின் நடிப்பில் தான் இயக்கிய "தெறி'யை ஹிந்தியில் தயாரிக்கிறார் அட்லி.  "ஜவான்' படத்தை முடித்துவிட்டு "தெறி' ரீமேக்கை அவர் இயக்குவதாக இருந்தது. ஆனால், இப்போது தயாரிப்பு மட்டும் போதுமென நினைத்துவிட்டார். இந்தப் படத்தை காளீஸ் இயக்குகிறார். ஜீவா, நிக்கி கல்ராணி நடிப்பில் வெளியான "கீ' படத்தை இயக்கியவர்தான் இந்தக் காளீஸ். ஹிந்தி "தெறி'யில் ஹீரோவாக வருண் தவானும், ஹீரோயினாகக் கீர்த்தி சுரேஷும் நடிக்கிறார்கள். இதன் மூலம் பாலிவுட் செல்லவிருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

---------------------------------------------------------

ஜய்யின் "லியோ' படத்திற்குப் பிறகு "கைதி -2' மற்றும் ரஜினியின் 172-ஆவது படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளைத் தொடங்கி, தனது அடுத்தடுத்தப் படங்களுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறார் லோகேஷ். இந்நிலையில் தற்போது "ஜி  ஸ்குவாட்' என்ற பெயரில் புதிய தயாரிப்பு நிறுவனம் தொடங்குவது குறித்தான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ""ஐந்து படங்களை இயக்கியப் பிறகு கதை சொல்லல் மற்றும் பொழுதுபோக்கின் தளத்தை விரிவுபடுத்தும் நோக்கத்தில் எனது புதிய முயற்சியாக ஜி ஸ்குவாட்  தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்குவது குறித்தான அறிவிப்பை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்நிறுவனத்தின் முதல் சில தயாரிப்புகள் எனது நெருங்கிய நண்பர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு உதவும் வகையில் தயாரிக்கப்படவுள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.  

---------------------------------------------------------

கமிஷனர் அலுவலகம்போல உருவாகியுள்ள அரங்கத்தில் ரஜினியின் புதிய படக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. காலை ஒன்பது மணி ஷூட் என்றால், சரியாக ஒன்பது மணிக்கெல்லாம் ரஜினி ரெடியாக வந்து நிற்கிறார் என்கிறார்கள். புதுக் கதாநாயகர்களுக்கு சவால் விடும் அவரது உழைப்பு பிரமிக்க வைக்கிறது என்கிறார்கள். சென்னை ஷெட்யூலில் சில நாள்களாக ரஜினி காம்பினேஷனில் ரித்திகா சிங், பகத் பாசில் ஆகியோர் நடித்துவருகின்றனர். இந்த மாதம் முழுவதும், சென்னையில் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறுமெனத் தெரிகிறது. தொடர்ந்து வரும் நாள்களில் ராணா, மஞ்சுவாரியர், துஷாரா ஆகியோரின் காட்சிகளும் எடுக்கப்பட உள்ளன. இது "போலி என்கவுன்ட்டர்' குறித்த கதை என்கிறார்கள். அமிதாப் பச்சன் இதில் என்கவுன்ட்டருக்கு எதிராகப் போராடும் போராளியாக நடிக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com