திரைக் கதிர்

ஸ்டன்ட் மாஸ்டர் அனல் அரசின் இயக்கத்தில், விஜய்சேதுபதியின் மகன் சூர்யா விஜய்சேதுபதி, கதாநாயகனாக அறிமுகமாவது தெரிந்த கதையே.
திரைக் கதிர்

ஸ்டன்ட் மாஸ்டர் அனல் அரசின் இயக்கத்தில், விஜய்சேதுபதியின் மகன் சூர்யா விஜய்சேதுபதி, கதாநாயகனாக அறிமுகமாவது தெரிந்த கதையே. ஆனால், அவர் ஹீரோவானதே எதிர்பாராமல் நடந்த விஷயம் என்கிறார் அனல் அரசு. விஜய்சேதுபதியின் "ஜவான்' படத்தின் ஃபைட் சீக்குவென்ஸின்போது, அப்பாவைப் பார்க்க சூர்யா விஜய்சேதுபதி வந்திருந்தார். அங்கே அவரைப் பார்த்த அனல் அரசு, தன் கதைக்கான நாயகன் கிடைத்த சந்தோஷத்தில்தான் சூர்யாவை கமிட் செய்திருக்கிறார். படப்பிடிப்பை விரைவில் தொடங்கி மார்ச்சுக்குள் படத்தை திரைக்கு கொண்டு வர முயற்சிகள் நடக்கின்றன.

----------------------------------------------------


மிஷ்கின் - விஜய் சேதுபதி இணையுள்ள படத்துக்கு "ட்ரெயின்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.  கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். ஒரு ராத்திரியில் ரயிலில் நடக்கும் சம்பவங்கள்தான் படத்தின் கதை என்கிறது கோடம்பாக்கம். இந்தப் படத்தில் விஜய் சேதுபதியின் ஜோடியாக டிம்பிள் ஹயாதி நடிக்கிறார். ஹிந்தி "அட்ராங்கி ரே', பிரபுதேவாவின் "தேவி 2', விஷாலின் "வீரமே வாகை சூடும்', "டைகர் நாகேஸ்வரராவ்' எனப் பல படங்களில் நடித்தவர் டிம்பிள். இவர்களுடன் நாசர், வினய் ராய், பாவனா, சம்பத் ராஜ், பப்லு பிருத்விராஜ், கே.எஸ்.ரவிக்குமார், யூகி சேது, கணேஷ் வெங்கட்ராமன், கனிஹா, தியா சீதிபள்ளி, சிங்கம் புலி, ஸ்ரீரஞ்சனி, அஜய் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். 

----------------------------------------------------

ஷீலா ராஜ்குமார்... "திரௌபதி', "மண்டேலா' ஆகிய படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர். இவர் நடிப்புப் பட்டறை நடத்தி வரும் தம்பி சோழன் என்பவரை நடுக்கடலில் வைத்து திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகியிருந்தன.  பெற்றோர் சம்மதம் தெரிவிக்காததால் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டதாகவும் அப்போது செய்தி வெளியாகியிருந்தது. இதற்கிடையில் ஷீலா, அவரது கணவரிடமிருந்து நீண்ட நாளாகப் பிரிந்து வாழ்ந்து வருவதாகப் பேச்சுக்கள் அடிபட்டன. இந்நிலையில் தற்போது "திருமண உறவிலிருந்து நான் வெளியேறுகிறேன்' எனத் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், தன் கணவரைக் குறிப்பிட்டு "நன்றியும் அன்பும்' என்று பதிவிட்டுள்ளார். 

----------------------------------------------------

மிக்ஜாம் புயல் பாதிப்பால் நடிகர் விஷ்ணு விஷால் காரப்பாக்கத்தில் தனது வீட்டை மழை நீரை சூழ்ந்துவிட்டதாக தனது  வலைதளத்தில் கோரிக்கை வைத்திருந்தார். இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் சென்று விஷ்ணு விஷாலையும் அதே பகுதியில் தனது தாயின் மருத்துவத்துக்காகத் தங்கியிருந்த பாலிவுட் நடிகர் அமீர் கானையும் மீட்டு வந்தனர். பாதுகாப்பான இடத்திற்கு வந்த விஷ்ணு விஷால் அஜித்துடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து பதிவிட்டிருக்கிறார்.  அந்தப் பதிவில், ""பொதுவான நண்பர் ஒருவரின் மூலம் எங்களின் நிலைமையை அறிந்து, எப்போதும் உதவும் மனப்பான்மை குணம் கொண்ட அஜித் சார் எங்களைப் பார்க்க வந்தார். எங்களுக்கும், எங்கள் வில்லா நண்பர்களுக்கும் போக்குவரத்து உதவிகளை செய்துகொடுத்தார். லவ் யூ அஜித் சார்''  என தெரிவித்திருக்கிறார்.

----------------------------------------------------

சமீபத்தில் ராஷ்மிகா லிஃப்ட்டில் இருந்து வெளியே வருவது போன்ற போலி விடியோ வைரலாகி வருகிறது.  அவர் வருத்தத்துடன் தனது சமூக வலைதளப் பக்கத்தில்,  "இதைப் பகிர்வதில் மிகவும் வேதனையடைகிறேன். ஆன்லைனில் பரப்பப்படும் போலியான வீடியோவைப் பற்றி பேசியே ஆக வேண்டும். உண்மையில் இது எனக்கு மட்டுமல்ல, பெண்களுக்கும் ஒவ்வொருவருக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. பல்வேறு வகையில் நமக்கு உதவியாக இருந்தாலும், அதன் வளர்ச்சி உண்மை எது, போலி எது, என்று கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு பல அச்சுறுத்தல்களை ஏற்படுத்துவதை அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வந்து முறைப்படுத்த வேண்டும் என்பதே தொழில்நுட்ப வல்லுநர்களின் அறிவுரையாக இருந்து வருகிறது" என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com