வழிகாட்டி..!

ரேடியோ ஜாக்கிகளாக  (ஆர்.ஜே.)  விரும்பும் இளைய தலைமுறையினரின் கனவை நனவாக்கும் வகையில்,  ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக  இலவசப்  பயிற்சியை அளித்து பல திறமைசாலிகளை உருவாக்கி வருகிறார்.
வழிகாட்டி..!

'ரேடியோ ஜாக்கிகளாக'  (ஆர்.ஜே.)  விரும்பும் இளைய தலைமுறையினரின் கனவை நனவாக்கும் வகையில்,  ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக  
இலவசப்  பயிற்சியை அளித்து பல திறமைசாலிகளை உருவாக்கி வருகிறார் தென்காசி மாவட்டத்துக்கு உள்பட்ட சிவகிரியைச் சேர்ந்த ஜெ .மகேந்திரன்.
இவர் தற்போது  'இரத்தினவானி' சமுதாய வானொலியில் நிலைய இயக்குநராகப் பணிபுரிந்து வருகிறார். கொடைக்கானல் அகில இந்திய வானொலி நிலையத்தில் ( கோடை பண்பலை 100.5)  ஐந்து ஆண்டுகள் நிகழ்ச்சித் தொகுப்பாளர்,   திருநெல்வேலி ஹலோ எஃப்.எம்.106.4 வானொலி நிலையத்தில் 15 ஆண்டுகள் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்,  'மகிழ்ச்சி' இணைய வானொலியில் சில ஆண்டுகள் என பணிபுரிந்த அனுபவம் மிக்கவர்.
அவரிடம் பேசியபோது:

'சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை பொழுதுபோக்கு,  செய்திகள், பொது அறிவு உள்ளிட்ட பல தகவல்களையும் பொதுமக்கள் வானொலி வாயிலாகவே அறிந்து வந்தனர்.  'ஆகாசவாணி செய்திகள் வாசிப்பது...' என்று செய்தி வாசிப்பாளர்கள் குரலும் மொழி நடையும் பாமர மக்களை எளிதாகச் சென்றடைந்தது.  நிகழ்ச்சித் தொகுப்பாளர்களுக்கு என்று தனி ரசிகர்கள் உண்டு. 

அகில இந்திய வானொலி நிலையங்களும் , இலங்கை வானொலி நிலையங்களில் தொகுப்பாளர்  பணிக்கு எழுத்துத் தேர்வு, குரல் வளத் தேர்வு, நேர்முகத் தேர்வு என பலகட்டத் தேர்வுகளில் தேர்வானால்தான் பணியாற்ற வாய்ப்பு கிடைக்கும்.

தனியார் வானொலி நிலையங்கள் தொடங்கப்பட்டவுடன்  நிகழ்ச்சித் தொகுப்பாளர் பணிக்கு இளைஞர்கள், இளைஞிகளிடையே ஆர்வம் அதிகரித்தது.  இந்தப் பணியில் பலர் புதுமையான சுவாரசியமான நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி நேயர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளனர். இவர்களில் சிலர் திரைத்துறையிலும் சாதித்து வருகின்றனர்.

இந்தப் பணியில் ஈடுபட வேண்டும் என்று நிறைய பேருக்கு கனவாக உள்ளது. பயிற்சி மையங்களில் அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுவதால்,  பலரின் கனவு நிராசையாகிவருகிறது. இவர்களுக்கு உதவிட முடிவு செய்தேன்.

கனவோடு இருக்கும் இளைஞர்களுக்கும் இல்லத்தரசிகளுக்கும் வழிகாட்டியாக இருந்து அவர்களிடம் கட்டணம் வசூலிக்காமல் இலவசப் பயிற்சியை  அளித்து வருகிறேன்.

அவர்களை ரேடியோ ஜாக்கிகளாக உருவாக்கி பல புதுமையான நிகழ்ச்சிகளை வானொலிகளில் ஒலிபரப்பு செய்து அவர்களுக்கான அங்கீகாரத்தை வழங்கி வருகிறேன்.  பலர் யூடியூப், சமூக வலைதளங்களிலும் தனித்து இயங்குகின்றனர். 

தனியார் அமைப்புகள், 'மகிழ்ச்சி'  இணைய வானொலி நண்பர்களோடு இணைந்து முக்கிய தினங்கள், தலைவர்களின் பிறந்த நாள்களன்று சிறுகதை , கவிதை,  கட்டுரை போட்டிகளை இணையவழியில் நடத்தி  விருதுகளையும், சான்றிதழ்களையும் அளிக்கிறேன்.  அவர்களின் படைப்புகளை இணையதளத்தில் வெளியிட்டு, எழுத்தாளர்களை ஊக்கப்படுத்துகிறேன்.   பல கவிஞர்களின் நூல்களை வெளியிட்டுள்ளேன். 

கோயம்புத்தூரில் ரத்தினம் கலை,  அறிவியல் கல்லூரியில் இயங்கிவரும் 'இரத்தினவானி'  சமுதாய வானொலி சார்பில்,  மாணவர்கள்,  விவசாயிகள், பொதுமக்களுக்குப் பயன்தரும் நிகழ்ச்சிகளையும், கருத்தரங்குகளையும் நடத்தி வருகிறேன். 

இந்தச் சேவைகளுக்காக டாக்டர் பட்டமும், பல அமைப்புகளின் விருதுகளையும் பெற்றுள்ளேன்.

தமிழ்நாடு அரசுக்கு இணைய வானொலியும், கல்வித் துறைக்கு என்று பிரத்யேக 'கல்வி வானொலி'  என இணைய வழி வானொலி ஒலிபரப்பை ஏற்படுத்துவதே எனது லட்சியம்' என்கிறார் மகேந்திரன்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com