பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 172

விஞ்ஞான் பவன் அனெக்ஸ் வளாகத்தின் அமைதியைக் கலைத்தபடி, முதல்வர் கருணாநிதியின் கரகரத்த குரல் மிகவும் தெளிவாக அந்த வார்த்தைகளை உதிர்த்தன.
பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 172

விஞ்ஞான் பவன் அனெக்ஸ் வளாகத்தின் அமைதியைக் கலைத்தபடி, முதல்வர் கருணாநிதியின் கரகரத்த குரல் மிகவும் தெளிவாக அந்த வார்த்தைகளை உதிர்த்தன - 'கோபால்சாமி என்னைக் கொல்ல முயற்சிப்பாரா என்று நேரடியாகக் கேட்டால், அப்படி அவர் நினைக்கமாட்டார் என்றுதான் கூறுவேன்'' என்கிற முதல்வர் கருணாநிதியின் சாட்சியத்தைப் பதிவு செய்து கொண்டார் நீதிபதி  ஜெயின்.

அரசுத் தரப்பு வழக்குரைஞர் தத்தாவும், மதிமுக வழக்குரைஞர் ஜேம்ஸூம் நடத்திய குறுக்கு விசாரணையில் பல முக்கியமான குற்றச்சாட்டுகளுக்குத் திமுக தலைவர் கருணாநிதி பதிலளித்தார். அவற்றில் சில - பத்மநாபாவையும், அவரது கூட்டாளிகளும் எங்கே தங்கி இருக்கிறார்கள் என்று தமிழக போலீஸார் புலிகளுக்குக் காட்டிக் கொடுத்தனர் என்று ப. சிதம்பரம் கூறியதை நான் மறுக்கிறேன். அப்படி போலீஸாரே காட்டிக் கொடுத்தனர் என்றால், என் தலைமையிலான தமிழக அரசே அதைச் செய்ததாகப் பொருள். இது அபாண்டமான, ஆதாரமற்ற பழி.
பத்மநாமா எப்படி, எப்போது தமிழகம் வந்தார், அவர் எங்கு தங்கி இருந்தார் என்பது எதுவும் எனக்குத் தெரியாது. எனக்குத் தெரியாது என்று சொன்னால் தமிழக அரசுக்குத் தெரியாது என்று பொருள். இந்த வழக்கில் குற்றவாளிகளைப் பிடிக்காதது குறித்து, என்னுடைய உத்தரவின் பேரில் அப்போதைய உள்துறை செயலாளர் நாகராஜன், அன்றைய டிஜிபி-க்கு கடிதம் எழுதி விளக்கம் கேட்டார்.
காசி ஆனந்தனிடம் 26.06.1990-இல் திமுக சார்பில் ரூ. 4 லட்சம் அளிக்கப்பட்டதாகக் கூறுவது சரியல்ல. உள்நோக்கத்துடன் விடுதலைப் புலிகளுக்கு அந்தப் பணம் வழங்கப்பட்டது என்பது பொய்யான குற்றச்
சாட்டு.
என் முன்னிலையில் விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளிடம் ஒரு திமுக எம்.பி. 'எங்களை நம்புங்கள். உங்களுடைய நடவடிக்கை குறித்து முன்னதாக எங்களிடம் சொன்னால் தமிழக போலீஸாரை எச்சரிக்க உதவியாக இருக்கும்' என்று அவர்களிடம் சொன்னதாகக் கூறுவது கற்பனை, சரியல்ல.
நேரமாகிவிட்டதால், விசாரணை ஜனவரி மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது.
இரவில் தில்லியில்தான் தங்குகிறார் என்றும், அடுத்த நாள் காலை விமானத்
தில்தான் சென்னை திரும்புகிறார் என்றும் ஏற்கெனவே கேட்டுத் தெரிந்து வைத்திருந்தேன். எத்தனை நேரமானா
லும் இரவில் தமிழ்நாடு இல்லத்துக்குத் திரும்பும்போது அவரை சந்தித்துவிட வேண்டும் என்று தீர்மானித்து, ஆட்டோ பிடித்து அவசர அவசரமாக கெளடில்யா மார்க்கிலுள்ள தமிழ்நாடு இல்லத்துக்கு விரைந்தேன். 
என்னைப் போலவே இன்னும் சில பத்திரிகையாளர்களும், குறிப்பாகத் தமிழகப் பத்திரிகைகளைச் சேர்ந்தவர்கள், ஒருவர் பின் ஒருவராகத் தமிழ்நாடு இல்லத்துக்கு வந்துவிட்டனர். சுமார் பத்து பேருக்கும் அதிகமாக இருந்ததால் நிச்சயமாக முதல்வர் கருணாநிதி புறக்கணிக்க மாட்டார் என்கிற எங்களது நம்பிக்கை பொய்க்கவில்லை.
தான் விரும்பினால் மட்டுமே நிருபர்களையும், பத்திரிகையாளர்களையும் சந்திப்பவர் எம்.ஜி.ஆர்; தனியாக மட்டுமே நிருபர்களை எதிர்கொள்ள விரும்புகிறவர் ஜெயலலிதா; நிருபர்களைக் கூட்டமாகச் சந்திப்பதிலும், அவர்களின் கேள்விகளை எதிர்கொள்வதிலும் ஆர்வம் காட்டுபவர் திமுக தலைவர் கருணாநிதி.
மிகவும் களைப்புடனும் சோர்வாகவும் முரசொலி மாறன் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், ஆற்காடு வீராசாமி, தமிழக எம்.பி.க்கள் புடைசூழ தமிழ்நாடு இல்லத்தில் ஜெயலலிதாவால் கட்டப்பட்ட புதிய அனெக்ஸ் கட்டடத்துக்குள் நுழைந்தார் முதல்வர் கருணாநிதி. 'வணக்கம்' சொன்ன நிருபர்களிடம் அவர் நகைச்சுவை ததும்பக் கேட்ட கேள்வி என்ன தெரியுமா?
'ஜெயின் கமிஷனில் நடந்த குறுக்கு விசாரணைகள் போதாதா?''
எல்லோரும் சிரித்து விட்டோம்.  அப்படி இருந்தும், பத்து நிமிடங்கள்முக்கிய மான சில கேள்விகளுக்கு பதிலளிக்க அவர்தயங்கவில்லை.அவரது பேட்டியில் குறிப்பிடும்படியான தகவல் ஒன்றுதான் - 'மூப்பனாருக்கும் தனக்கும் எந்தவிதமான கருத்துவேறுபாடும் கிடையாது. ஜெயலலிதாவின் மீது எடுக்கப்படும் நடவடிக் கையை தமாகாவும் முழுமனதுடன்ஆதரிக்கிறது.''
நாங்கள் கலைந்தோம். அவரும் அடுத்த நான் சென்னை திரும்பிவிட்டார்.
தமிழ்நாடு இல்லத்திலிருந்து கரோல்பாகில் இருந்த எனது வாடகை வீட்டுக்கு இரவு உணவை முடித்துக்கொண்டு நான் திரும்பியபோது மணி ஒன்பது. நவம்பர் மாதக் கடைசி என்பதால் குளிர் தொடங்கி இருந்தது. அறைக்கு வந்து கம்பளிக்குள் என்னை நுழைத்துக் கொண்டு தூக்கம் பிடிக்கும் நேரத்தில், அறையில் இருந்த எனது தொலைபேசி (5745751) ஒலித்தது.
'இந்த நேரத்தில் யார் அழைக்கிறார்கள்; ஒருவேளை சென்னையிலிருந்து மனைவி எஸ்.டி.டி.யில் அழைக்கிறாரோ?'' என்கிற யோசனையுடன், மனதில்லா மனதுடன் குளிர் நடுங்க தொலைபேசியை எடுத்தேன். மறுமுனையில் வாழப்பாடி ராமமூர்த்தி.

'என்னய்யா தூங்கிட்டிங்களா? விஞ்ஞான் பவனிலேயே பேசணும்னு நினைச்சேன். அதற்குள் மாயமா மறைச்சுட்டிங்களே...'' என்றபடி பேச்சைத் தொடங்கினார். முதல்வர் கருணாநிதியைத் தமிழ்நாடு இல்லத்தில் சந்தித்த விவரத்தைச் சொன்னேன்.
'அதெல்லாம் இருக்கட்டும். நாளைக்குக் காலை 7 மணி ஃபிளைட்டில் சென்னை போகிறேன். திங்கள்கிழமை காலை ஃபிளைட்டில திரும்பி விடுவேன். நீங்களும் வருகிறீர்களா? ஃபிளைட்ல பேசிட்டே போகலாம். உங்ககிட்ட சில முக்கியமான விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்...'' என்று அவர் சொன்னபோது, குளிர் மாயமாய் மறைந்துவிட்டது.
தில்லிக்கு வந்து வாரங்கள் போய், மாதம் கடந்துவிட்ட நிலையில், ஒரு நடை சென்னைக்குப் போய் மனைவி, குழந்தைகளைப் பார்த்துவிட்டு வரக் கசக்கவா செய்யும்? அதிகாலை 6 மணிக்கு தில்லி விமானநிலையத்தில் சந்திக்கிறோம் என்கிற முடிவுடன், அலாரம் வைத்துவிட்டு மீண்டும் கம்பளிக்குள் புகுந்து கொண்டேன்.
தில்லியில் அப்போதும் சரி, இப்போதும் சரி ஒரு வசதி உண்டு. எல்லா குடியிருப்புப் பகுதிகளிலும் சர்தார்ஜிக்கள் நடத்தும் வாடகைக் கார்களின் நிறுத்தம் இருக்கும். 24 மணி நேரமும் அழைத்தால் அடுத்த நொடியில் வந்துவிடுவார்கள். அதிகாலையில் விமானநிலையம் செல்ல அவர்களைவிட மேலான சேவையை யாரும் தந்துவிட முடியாது.
பக்கத்து டாக்ஸி ஸ்டாண்ட் சர்தார்ஜி சரியாக 5 மணிக்கு வந்துவிட்டார். ஆறு மணிக்கு, வாழப்பாடியார் வருவதற்கு முன்பே நான் விமானநிலையம் சென்று விட்டேன். சென்னை செல்லும் 'தமானியா ஏர்வேஸ்' விமானத்தில் எங்கள் இருவருக்கும் டிக்கெட்டுடன் ஒருவர் விமானநிலையத்தில் காத்திருந்தார்.
வாழப்பாடி ராமமூர்த்திக்கு தேசிய அளவில் இருந்த தொடர்புகள் குறித்தும், அவருக்கு இருந்த செல்வாக்கு குறித்தும் ஒரு புத்தகமே எழுதலாம். தொழிற்சங்கவாதியான வாழப்பாடி ராமமூர்த்தி, கொள்கை அளவில் தனியார்மயக் கொள்கையை எதிர்த்தாலும், கார்ப்பரேட்டுகள் அல்லாமல் தொழில்துறை வளர்ச்சியும், வேலைவாய்ப்பும் கிடையாது என்று கருதியவர். அதே நேரத்தில், கட்டுப்பாடில்லாத முதலாளித்துவத்தை அவர் ஆதரிக்கவில்லை.
விமானத்தில் நாங்கள் அமர்ந்த பிறகு மெதுவாகப் பேசத் தொடங்கினோம். அவர்தான் பேச்சைத் தொடங்கினார்.
'சோனியா காந்தி சென்னை சென்றிருக்கிறார். ஆளுநர் மாளிகையில் தங்கி இருக்கிறார். மூப்பனார் அவரை சந்திக்க இருக்கிறார்.''

'அதனால்தான் நீங்கள் இப்படி அவசரமாக சென்னை செல்கிறீர்களா?''
'மூப்பனார் வெளியேறிவிட்டார் என்பதால்தான் நான் காங்கிரஸில் மீண்டும் சேர்ந்திருக்கிறேன். இப்போது சோனியா காந்தியுடன் மூப்பனார் கைகோத்து செயல்படும் நிலைமை ஏற்பட்டால், அடுத்து என்ன செய்வது என்கிற கேள்வி எழுகிறது.''
'சோனியா காந்தியை நீங்கள் சந்தித்து இது குறித்துப் பேசப் போகிறீர்களா?''
'அப்படிப் பேசுவது நன்றாக இருக்காது. அவர்கள் என்ன பேசுகிறார்கள், ஐக்கிய முன்னணி அரசிலிருந்து விலகிக் காங்கிரஸூடன் இணைய மூப்பனார் சம்மதிப்பாரா, திமுக அவ்வளவு சீக்கிரத்தில் மூப்பனார் தங்களிடம் இருந்து விலக அனுமதிக்குமா, சிதம்பரம் அதை ஏற்றுக்கொள்வாரா என்கிற கேள்விகள் எல்லாம் இருக்கின்றன.''
'என்னை எதற்காக உங்களுடன் அழைத்துச் செல்கிறீர்கள்? நான் என்ன செய்துவிட முடியும்?''
'உங்களால் ஒன்றும் செய்துவிட முடியாது. ஆனால், என்னதான் நடக்கிறது என்கிற தகவல்கள் உங்களுக்கும் கிடைக்கும். திமுக, தமாகா, காங்கிரஸ் என்று எல்லா கட்சியிலும்தான் உங்களுக்கு நண்பர்கள் இருக்கிறார்களே...''
'சோனியா காந்தி யாருடைய அழைப்பில் சென்னை சென்றிருக்கிறார்?''
'இன்று சென்னையில் நடைபெறும் தென்கிழக்கு ஆசிய அமெச்சூர் ரேடியோ உபயோகிப்பாளர் மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்றிருக்கிறார். அப்படியே ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி நினைவிடத்தின் பணிகளையும் மேற்பார்வையிடுவார். அந்த மாநாட்டிலும், ஸ்ரீபெரும்புதூர் நினைவிடத்திலும் அவருடன் கூடவே இருக்கப் போவது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் குமரி அனந்தன் மட்டுமல்ல, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனாரும்தான்!''
'அப்படியானால், ராஜ்பவனில் ஜி.கே. மூப்பனார் முன்னிலையில் முதல்வர் கருணாநிதியை சோனியா காந்தி சந்திப்பாரா?''
பதில் சொல்லவில்லை வாழப்பாடியார். புன்னகையை உதிர்ந்தார்.
விமானம் சென்னை விமானநிலையத்தில் இறங்கியது. வாழப்பாடியாரை வரவேற்க அவரது தொண்டர்கள் காத்திருந்தனர். நான் விடைபெற்றுக் கொண்டு எனது வீட்டுக்குக் கிளம்பினேன்.
நாங்கள் வந்த விமானத்துக்கு முன்னர் வந்திருந்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்னை திரும்பி இருந்த முதல்வர் கருணாநிதி, தனது தில்லி விஜயம் குறித்து என்ன கூறினார் என்று அங்கிருந்த பத்திரிகையாளர் ஒருவரிடம் கேட்டேன்.
'தில்லியில் குளிர் மிதமாக இருக்கிறது. அரசியல் கிளைமேட் நன்றாகவே இருக்கிறது...'' என்கிற முதல்வரின் பதில் பல செய்திகளைத் தெரிவித்தது!

(தொடரும்)

தினமணி கதிரில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை வரும் "பிரணாப்தா' கட்டுரையை இடைவிடாமல் படிக்கும் லட்சக்கணக்கான வாசகர்களில் நானும் ஒருவன். 1996}இல் திருச்செங்கோடு தொகுதி மக்களவை உறுப்பினர் என்ற முறையில், அன்றைய தமிழக முதல்வர் தலைவர் கலைஞரின் தில்லி நிகழ்வுகள் அனைத்திலும் அண்ணன் ஆற்காட்டாரோடு இணைபிரியாமல் தொடர்ந்தவன். அதையெல்லாம் அட்சரம் பிசகாமல் காலக்கண்ணாடிபோல் "பிரணாப்தா' தொடரில் நமது ஆசிரியர் பதிவிட்டுள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை சம்பந்தமாக விஞ்ஞான் பவனில் அமைக்கப்பட்டிருந்த ஜெயின் கமிஷன் முன்னிலையில் தமிழக முதல்வராக இருந்த கலைஞர் கூண்டில் ஏறி சாட்சியம் அளித்த நிகழ்வையும், அவரை வாழப்பாடியார் வழக்குரைஞர் என்ற வகையில் நேரடியாக குறுக்கு கேள்விகள் கேட்டதையும், வைகோ பற்றிய கேள்விகளுக்கு கலைஞர் அளித்த சாதுரியமான பதிலையும், கலைஞர் தமிழில் நீதிபதி ஜெயின் முன் சாட்சியம் அளிக்க முற்பட்டதும், அதை மொழிபெயர்க்க அதிமுக சார்பில் ஆஜரான வழக்குரைஞரையே கலைஞர் மகிழ்வோடு ஏற்றதையும் அப்படியே தினமணி ஆசிரியர் பதிவிட்டருந்தது என்னை மேலும் வியக்கவைத்தது.

அந்த விசாரணையின் போது கோர்ட்டில் நானும், கோவை இராமனாதனும், ஸ்ரீபெரும்புதூர் எம்பி நாகரத்தினமும் பார்வையாளர் பகுதியில் இருந்து எப்படி நடந்துகொண்டோமோ, அதை ஒரு சம்பவம் கூட மாறாமல் 27 ஆண்டுகளுக்கு பிறகு ஒருவரால் எழுத முடிந்திருக்கிறது என்றால் அது நமது தினமணி ஆசிரியரால் மட்டுமே சாத்தியம். அவரது நினைவாற்றல் ஆச்சரியப்படுத்துகிறது.

டாக்டர் கே.பி. இராமலிங்கம்,
முன்னாள் உறுப்பினர் மக்களவை, மாநிலங்களவை
மாநில துணைத்தலைவர்,
தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com