ஹீரோயின்ஸ் லைன் அப்!

மணிரத்னம் - கமல் கூட்டணியில் நயன்தாரா?
ஹீரோயின்ஸ் லைன் அப்!

மணிரத்னம் - கமல் கூட்டணியில் நயன்தாரா?

திருமணத்துக்குப் பின்னர் கணவர், குழந்தைகள் என குடும்பப் பொறுப்புகளைக் கவனித்து வந்த நயன்தாரா, மீண்டும் நடிப்பில் பிஸியாகி விட்டார். அரை டஜன் படங்கள் கைவசம் வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள். சமீபத்தில் அவர் கமிட் ஆகியிருக்கும் படம் அவரது 75-ஆவது படமாகும்.  81-ஆவது படத்தை துரை.செந்தில்குமார் இயக்குகிறார்.
படங்களை விக்னேஷ் சிவன் தான் இப்போது தேர்வு செய்கிறார்.  முதல் சுற்றில் அவர் கதை கேட்டு முடித்தவுடன், அடுத்த சுற்றில் நயன்தாராவே கதைகளைக் கேட்கிறார். ஹீரோ யார்?  சின்ன ஹீரோவா? ஹீரோயின் சென்ட்ரிக்கா என்பதையெல்லாம அவர் பார்ப்பதில்லை.  கதை பிடித்திருந்தால் போதும், அதில் என்ன விதத்தில் இருக்கோம், எப்படிப் பொருந்திப்போகிறோம் என்பதை மட்டும்தான் அவர் பார்க்கிறார்.
'வாமனன்', 'மனிதன்' படங்களை இயக்கிய அஹமதின் இயக்கத்தில் ஜெயம் ரவியின் ஜோடியாக நடித்திருக்கும் 'இறைவன்'  இந்த மாதம் திரைக்கு வருகிறது. அடுத்து ராஜ்கமல் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் படத்திலும் நயன்தாரா நடிக்க விருக்கிறார். 
'மேயாத மான்' ரத்னகுமார் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் ஜோடியாக ஒரு படம், மலையாளத்தில் நிவின்பாலியுடன் 'லவ் ஆக்ஷன் டிராமா'வுக்கு பிறகு 'டியர் ஸ்டூடண்ட்ஸ்' மற்றும் மாதவன் நடிப்பில் தயாரிப்பாளர் சஷிகாந்த் இயக்குநராக அறிமுகமாகும் 'டெஸ்ட்' படத்திலும் நடித்து வருகிறார். 
ஷங்கரின் உதவியாளர் நீலேஷ் கிருஷ்ணா இயக்கும் 'லேடி சூப்பர் ஸ்டார் 75' நயனின் படங்களிலேயே மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகிறது எனச் சொல்லியிருக்கிறார்கள். தவிர மணிரத்னம் இயக்கத்தில் கமல் இணையும் படத்திலும் நயன்தாராவிடம் பேசி வருவதாகச் சொல்கிறார்கள்.

ஆக்ஷன் பார்முலாவுக்கு திரும்பிய கீர்த்தி

தென்னிந்திய சினிமாவில் தனக்கென தனி முத்திரை பதித்துவிட்டார் கீர்த்தி சுரேஷ்.  2013-ஆம் ஆண்டில் மலையாளத்தில் வெளியான 'கீதாஞ்சலி' படத்தின் மூலம் அறிமுகமான கீர்த்தி,  தனது பத்தாவது ஆண்டைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார். தமிழ், தெலுங்கிலும் அசத்தி வரும் அவருக்கு தற்போது பாலிவுட் கதவு திறந்திருக்கிறது. 
'நடிகையர் திலகம்' படத்துக்குப் பின்னர் வித்தியாசமான படங்களில் நடித்து வருகிறார் கீர்த்தி. இப்போது கதாநாயகியை மையப்படுத்தும் கதைகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். கீர்த்தி நடித்து வரும் படங்கள் ஒரு பார்வை.
தமிழில் 'மாமன்னன்', தெலுங்கில் சிரஞ்சீவியுடன் 'போலா சங்கர்' படங்களுக்குப் பின்னர், ஜெயம் ரவியுடன் 'சைரன்' படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அறிமுக இயக்குநர் அந்தோணி பாக்யராஜ் இயக்கியிருக்கும் படமிது. 'இரும்புத்திரை', 'விஸ்வாசம்' படங்களின் ரைட்டராக அறியப்பட்டவர் இந்த இயக்குநர்.  இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் கீர்த்தி. 
இதுதவிர ஹீரோயின் சென்ட்ரிக் கதைகளிலும் தனிக் கவனம் செலுத்துகிறார். அதிலும் அறிமுக இயக்குநர்களின் படங்களில் அதிக ஸ்கோர் எடுத்து வருவதால், இப்போது 'ரகு தாத்தா', 'ரிவால்வர் ரீட்டா', 'கண்ணிவெடி' ஆகிய படங்களைக் கைவசம் வைத்திருக்கிறார். இந்த வரிசையில்தான் அந்தப் படங்கள் ரிலீஸூக்கும் தயாராகி வருகின்றன. 
மாதவன், சித்தார்த் இணைந்து நடித்துவரும் 'டெஸ்ட்' படத்தின் ரைட்டரான சுமன்குமார், 'ரகு தாத்தா'வை இயக்கியிருக்கிறார்.  இதன் படப்பிடிப்பும் முடிந்துவிட்டது. அதனை அடுத்து 'ரிவால்வர் ரீட்டா'வில் நடித்து வருகிறார். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகிவிட்டது. ஜெய் நடித்த 'நவீன சரஸ்வதி சபதம்' படத்தை இயக்கிய கே.சந்துரு, இந்தப் படத்தை  இயக்கி வருகிறார். பெரும்பான்மையான படப்பிடிப்பு நடந்திருக்கிறது. 
அடுத்த ஹீரோயின் சென்ட்ரிக், 'கண்ணி வெடி.' அறிமுக இயக்குநர் கணேஷ்ராஜ் இயக்குகிறார். 'டாணாக்காரன்' படத்தை தயாரித்த எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார். 'டாணாக்காரன்' மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்கிறார். இயக்குநர்கள் ராம், ஹரி இருவரின் பட்டறையில் இருந்து வந்தவர் இதன் இயக்குநர் கணேஷேராஜ். 
பாலிவுட்டில் 'தெறி' ஹிந்தி ரீமேக்கில் வருண் தவான் ஜோடியாக கீர்த்தி அறிமுகமாக இருக்கிறார் எனத் சொல்லப்பட்ட நிலையில், இப்போது பாலிவுட் வெப்சிரீஸில் கால்பதிக்கிறார் என்ற தகவலும் வெளியாகியிருக்கிறது. ராதிகா ஆப்தேவுடன் இணைகிறார். அந்த வெப் சீரியஸ் தமிழில் 'அக்கா' எனவும் வருகிறது. ஆக்ஷன் த்ரில்லரான இந்தத் தொடரை அறிமுக இயக்குநர் தர்மராஜ் ஷெட்டி இயக்கி வருகிறார்.

விஜய்யின் தங்கையாக நடிக்கிறார் இவானா?

மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை இவானா. தமிழில் பாலாவின் இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் நடித்த 'நாச்சியார்' படத்தின் மூலம் அறிமுகமானார். 
கடந்த ஆண்டில் வெளியான 'கோமாளி' பிரதீப் ரங்கநாதன் நடித்த 'லவ் டுடே'வில் நாயகியானார் இவானா. அந்தப் படம் அவருக்கு ஒரு பிரேக்காக அமைந்தது.அதன் பிறகு 'எல்.ஜி.எம்' என்ற படத்திலும் நடித்தார். கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி தயாரித்த படமிது. 'லவ் டுடே'வின் வெற்றி, இவானாவைத் தெலுங்கு பட உலகம் வரை அழைத்துச் சென்றது. அங்கே விஜய்யின் 'வாரிசு' படத் தயாரிப்பாளரான தில் ராஜூவின் மருமகனான ஆசிஷ் ரெட்டி நடிக்கும் 'செல்ஃபிஷ்' படத்தில் கமிட் ஆனார்.
இதற்கிடையே ஜி.வி.பிரகாஷின் ஜோடியாக 'கள்வன்' படத்தையும் முடித்துக் கொடுத்துவிட்டார்.  இது தவிர 'காம்ப்ளக்ஸ்' என்ற படத்திலும் நடித்து 
வருகிறார். 
இந்த நிலையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய்யின் 'தளபதி 68' படத்தில் விஜய்யின் தங்கையாக இவானா நடிக்கிறார் என்ற பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது.  இதுகுறித்து இவானா தரப்பில் விசாரித்தபோது, ''இரண்டு மாதத்துக்கு முன்னரே அவரை 'தளபதி 68' படத்தில் நடிக்கக் கேட்டனர்.  கதையும் சொல்லப்பட்டது. அவரது கதாபாத்திரம் தங்கை அல்ல;  வேறொரு கதாபாத்திரம். கதாநாயகியாக நடித்து வரும் நிலையில், இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடித்தால்,  வழக்கமான சென்டிமென்ட்படி, அவரை மீண்டும் அதே போன்ற கதாபாத்திரங்களில் நடிக்கவே அணுகுவார்கள் என்பதால் அந்த ரோலைத் தவிர்த்து விட்டார்''  என்கிறார்கள். 
இவானாவுக்கு 23 வயதுதான் என்பதால் சினிமாவில் சாதனைகள் புரிய வயதிருக்கிறது.  அவசரப்பட்டு, அதில் சின்ன ரோல்களை ஒப்புக்கொள்ள வேண்டாம் என அவரது நெருங்கிய நண்பர்கள் அறிவுறுத்தி உள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com