'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 126

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 126

புதுதில்லி கெளடில்யா மார்க் மிகவும் பரபரப்பாக இருந்தது. தமிழ்நாடு, கர்நாடகம், பிகார் மாநிலங்களின் விருந்தினர் மாளிகைகள் அங்கே அமைந்திருந்தன; அருகே இருந்த நிதி மார்கில் ஒடிஸா விருந்தினர் மாளிகையும்.

புதுதில்லி கெளடில்யா மார்க் மிகவும் பரபரப்பாக இருந்தது. தமிழ்நாடு, கர்நாடகம், பிகார் மாநிலங்களின் விருந்தினர் மாளிகைகள் அங்கே அமைந்திருந்தன; அருகே இருந்த நிதி மார்கில் ஒடிஸா விருந்தினர் மாளிகையும். மாநிலக் கட்சிகளைச் சேர்ந்த கணிசமான எம்.பி.க்கள் வெற்றி பெற்றிருந்த  நிலையில், அடுத்து அமைய இருக்கும் ஆட்சியை நிர்ணயிக்கும் சக்தியாக அவை உயர்ந்திருந்தன.

பாரதிய ஜனதா, காங்கிரஸ் கட்சிகளுக்கு அடுத்தபடியாக மிக அதிகமான இடங்களைப் பெற்றிருந்த கட்சியாக ஜனதா தளம் இருந்தது. அதன் பெரும்பான்மை உறுப்பினர்கள் கர்நாடகம், பிகார் மாநிலங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். முலாயம் சிங் யாதவ் தனியாகப் பிரிந்து சமாஜவாதி கட்சியாகவும், நிதிஷ்குமார், ஜார்ஜ் பெர்ணான்டஸ் உள்ளிட்டோர் சமதா கட்சியாகவும் பிரிந்து விட்டனர்.

உடல்நிலைக் குறைவால் வி.பி. சிங் அரசியலில் இருந்து ஒதுங்கியதும், முலாயம் சிங் யாதவ் தனிக்கட்சி தொடங்கிப் பிரிந்து விட்டதும், ஜனதா தளத்தின் தலைவராகவும், முகமாகவும் பிகார் முதல்வர் லாலு பிரசாத் யாதவை உயர்த்தி இருந்தது. அதனால், தேசிய முன்னணி, இடதுசாரி கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் பிகார் பவனில் கூடியிருந்தது.

தமிழக முதல்வராகப் பதவியேற்ற திமுக தலைவர் கருணாநிதியின் பிரதமருக்கான முதல் தேர்வு வி.பி. சிங்காகத்தான் இருந்தது. உடல்நிலை காரணமாகத் தான் பிரதமர் பதவிக்கான போட்டியில் இல்லை என்று முன்னாள் பிரதமர் வி.பி. சிங் வெளிப்படையாகவே அறிவித்திருந்தார். சென்னையிலிருந்து முதல்வர் கருணாநிதி வி.பி. சிங்கைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரது முடிவை மறுபரிசீலனை செய்யக் கேட்டுக் கொண்டார் என்கிற தகவல் வந்தது.

நான் பிகார் பவனை அடைந்தபோது, வெளியே பலத்த பாதுகாப்பு காணப்பட்டது. என்னைப் போலவே பத்திரிகையாளர்கள் பலர் சுட்டெரிக்கும் மே மாத தில்லி வெயிலில் பிகார் பவனுக்கு வெளியே குழுமியிருந்தனர். 

மேற்கு வங்க முதல்வர் ஜோதிபாசு, முன்னாள் பிரதமர் வி.பி. சிங், ஜனதா தளத் தலைவரும், பிகார் முதல்வருமான லாலுபிரசாத் யாதவ், மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் ஹர்கிஷண்சிங் சுர்ஜித், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் இந்திரஜித் குப்தா, சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ், ஒடிஸாவின் முன்னாள் முதல்வரும், ஜனதா தளத்தின் மூத்த தலைவருமான பிஜு பட்நாயக், கர்நாடக முதல்வர் தேவே கெளடா, ஜனதா தளத்தின் ஏனைய மூத்த தலைவர்கள் ராமகிருஷ்ண ஹெக்டே, ராம் விலாஸ் பாஸ்வான், சரத் யாதவ், ஐ.கே. குஜ்ரால் மட்டுமல்லாமல் இடது முன்னணித் தலைவர்களும், ஏனைய சில மாநில கட்சித் தலைவர்களும்கூட அந்தக் கூட்டத்தில் இருந்தனர்.

கூட்டம் முடிந்த பிறகு பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. தலைவர்கள் சார்பில் நிருபர்களின் கேள்விகளுக்கு பதில் சொன்னார் முன்னாள் பிரதமர் வி.பி. சிங்.

"யார் பிரதமர் என்று முடிவெடுத்திருக்கிறீர்கள்?''

"நான் பிரதமர் வேட்பாளராகத் தோழர் ஜோதிபாசு பெயரை முன்மொழிந்தேன். அதை கூடியிருந்த அனைவரும் ஏற்றுக் கொண்டனர். வெளியிலிருந்து ஆதரவு என்கிற மார்க்சிஸ்ட் கட்சியின் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அவர்களுக்குக் கோரிக்கை விடப்பட்டிருக்கிறது.''

"அவர்கள் ஏற்றுக் கொண்டார்களா?''

"நாளை அவர்களது மத்திய கமிட்டி கூடுகிறது. அதில் முடிவெடுப்பார்கள்.''

அவரை இடைமறித்து, முதல்வர் ஜோதிபாசுவே நிலையைத் தெளிவுபடுத்தினார்.

"இந்த விஷயத்தில் முடிவெடுக்க துரதிருஷ்டவசமாக நான் தனி மனிதரல்ல. கட்சிக் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவன். மத்தியக் குழுவால்தான் முடிவெடுக்க முடியும். அதுவரை நான் எதுவும் தனிப்பட்ட முறையில் கருத்துச் சொல்ல முடியாது.''

அத்துடன் நிருபர் கூட்டம் முடிந்து தலைவர்கள் கிளம்பினார்கள். வி.பி. சிங், ஐ.கே. குஜ்ரால், ராம் விலாஸ் பாஸ்வான் மூவரும் லாலுபிரசாத் யாதவுடன் தனியாகப் பேச அவரது அறைக்குச் சென்றனர். இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் ஹர்கிஷண்சிங் சுர்ஜித், இந்திரஜித் குப்தா ஆகியோருடன் கிளம்பிச் சென்றுவிட்டனர். முலாயம்சிங் யாதவும், சரத் யாதவும் தனியாக ஓர் ஓரத்தில் நின்றபடி ஏதோ விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.

பிஜு பட்நாயக் தனித்திருந்தார். ஏற்கெனவே 1995-ஆம் ஆண்டு நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் ஜனதா தளம் தோல்வியடைந்து, ஒடிஸாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்திருந்தது. பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சி, ஜனதா தளத்தைக் கடுமையாகப் பாதித்திருந்தது. 1996 மக்களவைத் தேர்தலிலும் அதேநிலை தொடர்ந்ததால், ஒடிஸாவின் 21 மக்களவைத் தொகுதிகளில் ஜனதா தளம் 4 இடங்களை மட்டுமே வெல்ல முடிந்தது. தன்னிடம் எண்ணிக்கை பலம் இல்லாததும்கூட பிஜு பட்நாயக்கை சோர்வடையச் செய்திருக்கும் என்று தோன்றியது.

நான் அவரை நெருங்குவதா, வேண்டாமா என்கிற யோசனையில் நின்று கொண்டிருந்த போது அவரது பார்வை என்மீது விழுந்தது.

"அங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய், இங்கே வா'' என்று அவர் உத்தரவு பிறப்பித்த பிறகு நான் விலகி நிற்கவா முடியும்? அருகில் சென்ற எனது தோளைத் தட்டித் தந்து, "வா, ஒடிஸா பவன் போகலாம்'' என்றார் பிஜு பாபு. மற்றவர்கள் அவரை உள்ளே அழைக்கவில்லை என்கிற ஆதங்கம் அவருக்கு இருந்ததை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. 

அங்கே நான் இன்னொரு காட்சியையும் பார்த்தேன். சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னால், "கர்நாடகத்துக்கு நானும், தில்லிக்கு அண்ணாவும்' என்று மிகவும் பெளவ்யமாக ராமகிருஷ்ண ஹெக்டேயை வணங்கி மரியாதை செலுத்திய முதல்வர் தேவே கெளடா, அவரை சட்டையே செய்யாமல், தனது ஆதரவாளர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். ஹெக்டே இன்னொருபுறம் தனது ஆதரவாளர்கள் சூழ சென்று கொண்டிருந்தார்.

பிஜு பாபுவுடன் அவரது காரில் ஒடிஸா பவன் வந்தேன். அவரது அறைக்குச் சென்றோம். அவர் தனது கைத்தடியை கட்டிலில் வைத்தபடி, காலை நீட்டி அமர்ந்தார். எதுவுமே பேசவில்லை. நான் தான் அந்த மெளனத்தைக் கலைத்தேன். 

"பிஜு பாபு, என்ன யோசிக்கிறீர்கள்?''

"ஜவாஹர்லால் நேரு, மொரார்ஜி தேசாய் கால அரசியல் முடிவுக்கு வந்துவிட்டது. இனி வரப்போவது பதவிக்கான அரசியல். கூட்டணி ஆட்சிக்கான காலம் தொடங்கிவிட்டது. கொள்கை, கோட்பாடு எல்லாமே இனி இருக்கப்போவதில்லை.''

"யார் பிரதமரானால் நல்லது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?''

"முதலில் யார் ஆட்சி அமைக்கப்போவது என்று தீர்மானமாகட்டும், அதற்குப் பிறகு பிரதமர் குறித்து யோசிப்போம். என்னுடைய தனிப்பட்ட அபிப்பிராயத்தைக் கேட்டால், ஜோதிபாசு பிரதமராவது நாட்டுக்கு நல்லதல்ல.''
அந்த பதிலைக் கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். 

"ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்? நீங்கள் அவரது நேர்மையையும், திறமையையும் சந்தேகிக்கிறீர்களா?''

"ஜோதிபாசுவின் நேர்மையும், திறமையும் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவை. 

கம்யூனிஸ்டுகளின் தலைமையில் ஆட்சி அமைந்தால், கடந்த ஐந்து ஆண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்டுவரும் பொருளாதாரக் கொள்கைகள் தடம் புரளும். பொருளாதாரக் கொள்கைகளை அப்படி மாற்றுவது பெரும் பாதிப்பில் முடியும். அதனால்தான் ஜோதிபாசு வேண்டாம் என்கிறேன்.''

"யார்தான் பிரதமராக வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?''

அவர் பதிலே சொல்லவில்லை. சற்று நேரம் கண்களை மூடிக்கொண்டு இருந்தார். பிறகு மெதுவாகப் படுக்க முற்பட்டார். நான் எழுந்து வெளியே வந்துவிட்டேன்.

ஒடிஸா பவனிலிருந்து கர்நாடக பவன், தமிழ்நாடு இல்லம் என்று சுற்றி வந்தேனே தவிர, குறிப்பிடும்படியாக யாரையும் சந்திக்க முடியவில்லை. அடுத்த நாள் காலையில், முதல்வர் கருணாநிதியை வரவேற்க தமிழ்நாடு இல்லம் தயாராகிக் கொண்டிருந்தது.

அடுத்த நாள் காலையில் முரசொலி மாறனுடன் முதல்வர் கருணாநிதி தில்லி வந்தார். விமான நிலையத்திலிருந்து நேராக முன்னாள் பிரதமர் வி.பி. சிங்கை சந்தித்து, அவருடன் அரை மணி நேரத்துக்கும் அதிகமாக அரசியல் நிலவரத்தை இருவரும் விவாதித்தனர். பிறகு தமிழ்நாடு இல்லம் வந்து சேர்ந்தார் முதல்வர்.

வழக்கத்தைவிட மகிழ்ச்சியான மூடில் இருந்த முதல்வர், ஜெயலலிதா ஆட்சியில் புதுப்பிக்கப்பட்ட தமிழ்நாடு இல்லத்தைச் சுற்றிப் பார்த்தார். ஐந்து நட்சத்திர வசதிகளுடன்கூடிய புதிய வளாகத்தை அவர் வியப்புடன் பார்த்ததை, மறக்க முடியவில்லை. அதற்குப் பிறகு அவர் அது குறித்துத் தெரிவித்த சில கருத்துகளையும்...

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதல்வர் தேவே கெளடா, அஸ்ஸாம் கன பரிஷத் தலைவர் பி.கே. மகந்தா உள்ளிட்டவர்கள் அவரை சந்திக்க வந்தனர். ஆட்சி அமைப்பது குறித்து விவாதித்தனர். ப. சிதம்பரம், எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம் இருவருடனும் தமாகா தலைவர் ஜி.கே. மூப்பனார் அவரை சந்திக்க வந்தார். பத்திரிகையாளர்கள் அதை வேடிக்கை பார்க்க முடிந்ததே தவிர, என்ன பேசினார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள முடியவில்லை.

இன்னொருபுறம், அதிவேக அரசியல் நகர்வுகள் நடைபெற்று வந்தன. மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு, ஆட்சியில் பங்கேற்பதில்லை என்றும், ஜோதிபாசு பிரதமராக வேண்டாம் என்று தீர்மானம் நிறைவேற்றியது. அதற்கு அவர்கள் சொன்ன முக்கியமான காரணம், காங்கிரஸ் ஆதரவுடனான கூட்டணி ஆட்சி!

காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் அமையும் அரசில் அங்கம் வகிப்பது மேற்கு வங்கம், கேரளத்தில் கட்சியை பாதிக்கும்; நிலையில்லாத கூட்டணி ஆட்சியில் பங்கு பெறும்போது, பல்வேறு கொள்கை சமரசங்களை செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்படும்; பொருளாதாரக் கொள்கையில் கட்சியின் நிலைப்பாட்டை மேற்கொள்ள முடியாது - இவை மூன்றும்தான் ஜோதிபாசு பிரதமராக வேண்டாம் என்றும், கூட்டணி ஆட்சியில் பங்கு பெறக்கூடாது என்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு முடிவெடுத்ததற்குக் காரணம் என்று உறுப்பினர்கள் சிலர் என்னிடம் தெரிவித்தனர்.

ஜோதிபாசு பிரதமர் வேட்பாளருக்குத் தயாரில்லை என்றபோது, அடுத்த தேர்வாக வி.பி. சிங்கை எப்படியும் வற்புறுத்தி சம்மதிக்க வைப்பது என்று முடிவெடுத்தார்கள். பிகார் பவனில், லாலுபிரசாத் யாதவுடன் ஐ.கே. குஜ்ராலும், பிஜு பட்நாயக்கும் பேசிக் கொண்டிருந்தார்கள். திமுக தலைவர் கருணாநிதி அழைக்கிறார் என்றதும், கிளம்பிச் சென்றார் பிகார் முதல்வர் லாலுபிரசாத் யாதவ்.

"முதல்வர்களான கருணாநிதி, சந்திரபாபு நாயுடு, ஜோதிபாசு, லாலுபிரசாத் யாதவ், தேவே கெளடா ஆகியோர் பிரதமர்களாகத் தயாராக இல்லை. வி.பி. சிங்கும் மறுக்கிறார். அப்படியானால் ஜி.கே. மூப்பனாரோ, ராமகிருஷ்ண ஹெக்டேவோ பிரதமரானால் என்ன? மூப்பனார் பிரதமரானால், அவர் காங்கிரஸூடன் சுமுகமான உறவை மேற்கொள்ள முடியும். கூட்டணி பிரச்னையில்லாமல் இருக்கும். ஹெக்டே பிரதமரானால், அவரால் சாமர்த்தியமாகக் கூட்டணியை நடத்த முடியும்...'' - சொன்னவர் ஐ.கே. குஜ்ரால்.
"இங்கே உட்கார்ந்து இதை ஏன் சொல்கிறீர்கள்? அவர்களிடம் போய்ச் சொல்லுங்கள். உங்கள் முடிவுதான் சரி. மூப்பனாரோ, ஹெக்டேயோ பிரதமரானால் மட்டும்தான் கூட்டணி பிரச்னை இல்லாமல் தொடரும். இல்லையென்றால், காங்கிரஸ் கவிழ்த்துவிடும்'' - இது பிஜு பட்நாயக்.

அவர்கள் பேசுவதை சற்று தள்ளியிருந்து நான் சுவாரஸ்யமாகக் கேட்டுக் கொண்டிருந்தேன்.

கருணாநிதி, சந்திரபாபு நாயுடு, லாலுபிரசாத் யாதவ் மூவரும் வி.பி. சிங்கை சந்திப்பதற்காக விரைந்திருப்பதாக ஒருவர் வந்து சொன்னார். என்னவாயிற்று என்று நான் விசாரித்தபோது, அவர்கள் மூவரும் வி.பி. சிங்கின் வீட்டில் காத்திருப்பதாகத் தகவல் கிடைத்தது.

வி.பி. சிங் எங்கே போனார் என்று யாருக்கும் தெரியவில்லை. யாரை சந்திக்கப் போனார், எதற்காகப் போனார் என்று தலைவர்கள் ஒருவரையொருவர் கேட்டுக் கொண்டிருந்தனர். வி.பி. சிங் தலைமறைவானதன் பின்னணிதான் என்ன?

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com