பேல்பூரி

'கையை வச்சிக்கிட்டு சும்மா இருங்கப்பா?'
பேல்பூரி

கண்டது

(கடலூர் வடலூர் இடையே செல்லும் தனியார் பேருந்தில் எழுதியிருந்தது)

'கையை வச்சிக்கிட்டு சும்மா இருங்கப்பா?'

பி.கவிதா,
சிதம்பரம்.


(அரவக்குறிச்சிப்பட்டியில் ஓடிய  இரு ஆட்டோக்களில் எழுதியிருந்த வாசகம்)

'சண்டை என்பது ஒரு விநாடியில் முடிந்திட வேண்டும். அன்பு என்பது ஒவ்வொரு விநாடியும் தொடர்ந்திட வேண்டும்.'
'ஓடினால் சக்கரம். ஓய்ந்தால் சங்கு. இவ்வளவுதான் வாழ்க்கை!'

-எம். அசோக்ராஜா,
அரவக்குறிச்சிப்பட்டி.


(ஓசூரில் ஓடிய லாரி ஒன்றின் பின்பக்கம் எழுதியிருந்த வாசகம்)

'எந்த நிலை வந்தாலும்  வந்த நிலை மறவாதே!'

-மஞ்சுதேவன்
பெங்களூரு.

கேட்டது

(திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இரு பெண்கள்)


'பஸ்ல ஓ.சி. பயணம்தானே! அசால்டா இருக்காதே! டிக்கெட்டை பத்திரமா வை.'
'என்ன சொல்றே?'
'செக்கிங் வந்து கேட்கும்போது, டிக்கெட் இல்லைன்னா அபராதம் கட்டணும் பார்த்துக்கோ?'

அ.சுஹைல் ரஹ்மான்,
திருச்சி.

(திருநெல்வேலியில் உள்ள ஓர் வங்கி ஒன்றில் இருவர் பேசியது)

'கூட்டுறவு வங்கியிலே ஏன் கடன் வாங்குறே?'
'தேர்தல் நேரத்தில் தள்ளுபடி ஆனாலும் ஆகுமே! அதற்காகத்தான்!'

எஸ்.மோகன்,
கோவில்பட்டி.

(தஞ்சாவூர்  ஹோட்டல் ஒன்றில் சாப்பிட வந்தவரும் சர்வரும்)

'என்னப்பா... நாலு இடியாப்பமும் ஒன்னா ஒட்டி வருது?'
'இடியாப்பம்னாலே சிக்கல் தானே.. அட்ஜஸ்ட் பண்ணி சாப்பிடுங்க சார்!'

-பா. து. பிரகாஷ்,  
தஞ்சாவூர். 


யோசிக்கிறாங்கப்பா!


சண்டையில் ஒருவர்தான் வெல்ல முடியும். 
சமாதானத்தில் இருவரும் வெல்ல முடியும்.

எஸ்.உமாதேவி,  
திருவண்ணாமலை.


 மைக்ரோ கதை

மன்னருக்கு மீன் கொண்டு வந்த மீனவன், 'அரிதான இந்த மீனை தாங்கள் வாங்குவது தான் பொருத்தமாக இருக்கும்.'  
என்றான். 
மன்னரும் மகிழ்ந்து அவனுக்கு ஐந்தாயிரம் பொற்காசுகளைக் கொடுத்தார்.  மகாராணி கொதித்துவிட்டு,  'ஒரு மீனுக்கு இவ்வளவு பணமா? அதை திரும்ப வாங்குங்கள்' என்றார்.
'முடிந்ததை மாற்றுவது அழகல்ல!'  என்று மன்னர் மறுத்தார். 
எப்படியும் அவனிடமிருந்து பொற்காசுகளை திரும்ப பெற்றே ஆக வேண்டும் என்று நினைத்த மகாராணி,  ' சரி. இந்த மீன் ஆணா? பெண்ணா?' என்று கேளுங்க என்றார்.
மீனவன் திருப்பி அழைக்கப்பட்டான்.  கேள்விக்கணையை மகாராணியே தொடுத்தாள்.  அவன் உஷாராக, ' இது ஆணுமில்லை, பெண்ணுமில்லை. இரண்டின் குணங்களையும் கொண்ட அதிசய மீன். அதனால் தான் அதை மன்னருக்கு கொண்டு வந்தேன்'  என்றான். 
இந்தப் பதிலால் நெகிழ்ந்த மன்னர் மேலும் ஐந்தாயிரம் பொற்காசுகளை கொடுத்தார். அதிலிருந்து ஒரு காசு தரையில் விழுந்து ஓடியது. மீனவன் அதை தேடி எடுத்தான். மகாராணி கோபத்தின் உச்சிக்கே சென்று,  
'பேராசைக்காரன், கீழே விழுந்த காசை யாராவது வேலைக்காரர்கள் எடுத்து போகட்டுமே என்று விடவில்லை பாருங்கள்'  என்றாள்.
இதற்கு மீனவன், 'நான் பேராசையில் அதை எடுக்கவில்லை மகாராணி! அந்த நாணயத்தில் மன்னரின் உருவம் இருக்கிறது. யாராவதுஅதை மிதித்தால் கூட என்னால் தாங்கிக் கொள்ள முடியாது' என்றான்.  இதனால் இன்னும் நெகிழ்ந்த மன்னர்,  மூன்றாவது முறையாக ஐந்தாயிரம் பொற்காசுகளைக் கொடுத்தார்.
யாரிடம் எப்போது எப்படிப் பேச வேண்டும் என்று தெரிந்திருப்பவர்களே வெற்றி அடைகின்றனர்.

ஜி. மஞ்சரி,
கிருஷ்ணகிரி.

எஸ்எம்எஸ்

வலிமை என்பது வெற்றியால் மட்டும் வருவது அல்ல.
வெற்றிக்கான போராட்டத்தில் வருவது.

இ. அப்துல் ரஹ்மான்,
திருநெல்வேலி

அப்படீங்களா!


வேகமான தகவல் பரிமாற்றத்துக்கு வாட்ஸ் ஆப் உதவினாலும், அதில் உள்ள தகவல்களை புதிய கைப்பேசிக்கு மாற்றும்போது சிரமத்தை சந்திப்பதுண்டு. 
முதலில் பழைய கைப்பேசியில் உள்ள வாட்ஸ்ஆப் கணக்கை அழித்துவிட்டு புதிய கைப்பேசியில் அந்தக் கணக்கை தொடங்கும்போது பழைய தகவல்கள் அதில் பதிவிறக்கமாகி
விடும். இதற்கு வாட்ஸ்ஆப் தகவல்களை கிளவுட் எனும் தொழில்நுட்பத்தில் அவ்வப்போது பதிவேற்றம் செய்து வைத்திருக்க வேண்டும்.
இதுபோன்ற சிரமத்தை எளிதாக்கும் வகையில் க்யூஆர் கோட் மூலம் புதிய கைப்பேசியில் வாட்ஸ் ஆப் தகவல்களை உடனடியாக பகிர புதிய சேவையை மெட்டா அறிவித்துள்ளது.
இதற்காக பழைய, புதிய கைப்பேசிகள் அருகருகே வைத்திருக்க வேண்டும். இரண்டும் ஒரே வைஃபை இணைப்பில் வைத்து, லோகேஷனை ஆன் செய்திருக்க வேண்டியது அவசியம். இரண்டும் ஆண்ட்ராய்டு தொழில்நுட்பத்தில் இயங்க கூடியதாக இருக்க வேண்டும்.
பழைய கைப்பேசியின் வாட்ஸ்ஆப்பில் செட்டிங்ஸ் சாட்ஸ்சாட்ஸ் டிரான்ஸ்பர் என தேர்வு செய்தவுடன் க்யூஆர் கோட் காண்பிக்கும்.
புதிய கைப்பேசியிலும் இதேபோல் வாட்ஸ்ஆப்பில் செட்டிங்ஸில் சென்று சாட்ஸ் டிரான்ஸ்பர் சென்று அங்கிருந்து பழைய கைப்பேசியின் க்யூஆர் கோட்டை ஸ்கேன் செய்ய வேண்டும்.
பழைய கைப்பேசியின் வாட்ஸ்ஆப் தகவல்கள் அனைத்தும் புதிய கைப்பேசிக்கு மாறிவிடும். 
பழைய கைப்பேசியைப் போலே புதிய கைப்பேசியில் உள்கள் வாட்ஸ்ஆப் கணக்கை இயக்கலாம்.

அ.சர்ப்ராஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com