பேல்பூரி

''உன் வீட்டில் 'சின்னக்குயில்' இருக்கா?''''ஆமாம். என் கணவர் செல்லமா அப்படித்தான் கூப்பிடுவார்.''
பேல்பூரி

கண்டது


(தருமபுரியில் உள்ள பள்ளிஒன்றின் சுற்றுச்சுவரில் எழுதப்பட்டிருந்த வாசகம்)

''காற்றின் அழுக்கைப் போக்க எந்தச்
சோப்பும் கண்டுபிடிக்கவில்லை மரங்களைத் தவிர!

-மா.பழனி,
கூத்தப்பாடி.


(திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ஓர் ஊராட்சியின் பெயர்)

''ஆணாய்பிறந்தான்''

ம.வசந்தி,
திண்டிவனம்.

(குற்றாலம் வனச்சரக அலுவலக அறிவிப்புப் பலகையில் எழுதப்பட்டிருந்தது)

''கடைசி மரமும் வெட்டி உண்டு கடைசி நதியும் விஷம் ஏறி கடைசி மீனும் பிடிபட அப்போதுதான் உரைக்கும். இனி பணத்தைச் சாப்பிட முடியாது என்பது!

கமலா முத்து,
மாதவரம்.

கேட்டது


(தென்காசி பேருந்து நிலையத்தில்இரு பெண்கள்..)

''உன் வீட்டில் 'சின்னக்குயில்' இருக்கா?''
''ஆமாம். என் கணவர் செல்லமா அப்படித்தான் கூப்பிடுவார்.''

கு.அருணாசலம்,
தென்காசி.

(கரூரில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் இருவர் பேசியது)

''இந்த கல்யாண மண்டபத்துல 'பத்து' பாத்திரம்
தேய்க்கிறவங்களுக்கெல்லாம் இவர்தான்'ஹெட்' !''
''அப்போ 'பத்து தல'ன்னு சொல்லுங்க?'''

சம்பத்குமாரி,
பொன்மலை.

(திருச்சி கே.கே. நகரில் இரண்டு ரியல் எஸ்டேட் தரகர்கள் பேசியது)

'' உப்பு விற்பதும், மனைவிற்பதும் ஒன்றா?''
''ஆமாம். மழைக் காலத்துல ரெண்டையும் விற்க முடியாதே!''

அ.சுஹைல் ரஹ்மான்,
திருச்சி.

யோசிக்கிறாங்கப்பா!

பணம் கேட்காதவன் நல்ல நண்பன்.
பணம் கொடுப்பவன் உயிர்நண்பன்.
பணம் இல்லை என்பவன் ஆத்ம நண்பன்.

அ.செந்தில்குமார்,
சூலூர்.

மைக்ரோ கதை

காலையில் இருந்து இரவு 11 மணி வரை பலசரக்குக் கடையில் ஒன்பது ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்கு சாப்பிட்டோ, சாப்பிடாமலோ உழைத்து கஷ்டப்படுவதா? என்று இரவு முழுவதும் யோசித்தான் கந்தசாமி. சென்னையில் இருந்து தனது கிராமத்துக்கே சென்று, தந்தையின் நிலத்தில் உழுது காலத்தை ஓட்டுவது என முடிவு செய்தான்.
மறுநாள் தனது முதலாளியிடம் ஊருக்குப் போய் வருவதாகச் சொல்லி புறப்பட்டான். தந்தையிடம் செல்போனில் தொடர்பு கொண்டு ஊருக்கு வருவதாய் சொன்னான். பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்து, பல மாதங்கள் கழித்து வரும் மகனை சந்தோஷத்துடன் வரவேற்று வீட்டுக்கு அழைத்துச் சென்றார் கோவிந்தன்.
''சரி வாப்பா. நிலத்தைப் பார்த்துவிட்டு வருவோம்'' என்று கந்தசாமியை அழைத்துச் சென்றார் கோவிந்தன். அங்கே நிலம் வீட்டுமனைகளாகப் பிரிக்கப்பட்டு 'விற்பனைக்கு' என்று விளம்பரப் பலகை வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு, கந்தசாமி அதிர்ச்சியடைந்து, ''என்னப்பா இது'' என்று கேள்வி எழுப்பினான்.
''என்ன செய்ய? ரெண்டு வருஷமா மழையே இல்லை. கிணறும் வற்றிப் போச்சு. விளைச்சல் இல்லாததால், கடன்தான். அதான் நிலத்தை பிளாட் போட்டு வித்துட்டு, கடனை அடைச்சிட்டு உன் கூடவே சென்னைக்கு வரலாமுன்னு முடிவு பண்ணிட்டேன்!'' என்றார் கோவிந்தன் கவலையுடன்.
''மறுநாள் காலை சென்னைக்கு பஸ் எத்தனை மணிக்கு இருக்குப்பா?'' என்று கேட்ட கந்தசாமி, இருக்கும் வேலையைத் தக்க வைக்க முடிவு செய்துவிட்டான்.

இரா.சிவானந்தம்,
கோவில்பட்டி.

ஸ்.எஸ்.எம்.


பேசித் தீர்க்க முடியாத ஒரே காரியம் துரோகம் மட்டுமே!

விமலா சடைப்பபன்,
காளனம்பட்டி.

அப்படீங்களா!

ட்விட்டருக்கு போட்டியாக , ஃபேஸ்புக்கின் மெட்டா நிறுவனம் 'த்ரெட்ஸ்' எனும் புதிய செயலிலை அறிமுகம் செய்துள்ளது.
புகைப்படம், விடியோக்களுக்காக மெட்டா நிறுவனம் பிரத்யேகமாக இன்ஸ்டாகிராம் செயலியை உருவாக்கியது. இதைப்போல் எழுத்துவடிவ தகவல்களை பிரபலமாக்கி கருத்து பரிமாற்றம் செய்ய திரெட்ஸ் எனும் புதிய செயலியை புதன்கிழமை முதல் அறிமுகம் செய்துள்ளது.
கருத்துப் பரிமாற்றம் களமாக உள்ள ட்விட்டரில் உள்ள பெரும்பாலான அம்சங்கள் அனைத்தும் த்ரெட்ஸிலும் உள்ளன. ஆனால், ட்விட்டரின் லி ஹேஷ்டாக் த்ரெட்ஸில் இல்லை. பதிலுக்கு ஃ என்ற வார்த்தையை பயன்படுத்தி பிறரின் பதிவுகளை மறுபதிவிடலாம். 'கு' எழுத்தைப்போல் த்ரெட்ஸ் லோகோவாக வைத்துள்ளது. 500 வார்த்தைகள் வரையிலும், 5 நிமிஷங்கள் வரையிலான விடியோக்களையும் த்ரெட்ஸில் பதிவிடலாம்.
த்ரெட்ஸை பயன்படுத்த இன்ஸ்டாகிராம் கணக்கு கட்டாயமாகும். இன்ஸ்டாகிராமின் செட்டிங்க்ஸில் சென்று த்ரெட்ஸ் செயலிலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இன்ஸ்டாகிராமில் உங்களை பின்தொடர்பவர்களை அப்படியே த்ரெட்ஸிலும் இணைத்துக் கொள்ளலாம். செயலியாக பயன்படுத்த விரும்பாதவர்கள், இணையதளத்தில் த்ரெட்ஸை பயன்படுத்தலாம்.
கடந்த அக்டோபர் மாதம் ட்விட்டரை உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் வாங்கியதில் இருந்து பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். நீல நிற டிக் அங்கீகாரம், மாதக் கட்டணம் போன்றவற்றை பயன்பாட்டாளர்கள் பெரும் இடையூறாக கருதுகின்றனர்.
இதுபோன்ற ட்விட்டரின் அதிருப்தி பயன்பாட்டாளர்களை கவரவே த்ரெட்ஸை மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இந்தியா உள்பட 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் த்ரெட்ஸ் அறிமுகமாகி பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கையை வேகமாக கூட்டி வருகிறது.

அ.சர்ப்ராஸ்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com