28 ஆண்டுகளுக்கு பிறகு டோலிவுட்டில் கமல்!

1990களின் பிற்பகுதிக்கு பிறகு, கமல்ஹாசன் மற்ற மொழிப் படங்களில் நடிப்பதைக் குறைத்தார். அடுத்தடுத்த ஆண்டுகளில் மொத்தமாகப் படங்களில் நடிப்பதே குறைந்துவிட்டது.
28 ஆண்டுகளுக்கு பிறகு டோலிவுட்டில் கமல்!
Updated on
2 min read

1990களின் பிற்பகுதிக்கு பிறகு, கமல்ஹாசன் மற்ற மொழிப் படங்களில் நடிப்பதைக் குறைத்தார். அடுத்தடுத்த ஆண்டுகளில் மொத்தமாகப் படங்களில் நடிப்பதே குறைந்துவிட்டது. அதற்கு வெவ்வேறு காரணங்கள் இருக்கலாம்.  ஆனால், எல்லாவற்றுக்கும் சேர்த்து  'விக்ரம்'  மூலமாக கமல் கொடுத்தது வெறித்தனமான ப்ளாக் பஸ்டர்.

அடுத்தடுத்து , அ.வினோத் இயக்கத்தில் ஒரு படம்,  பா.ரஞ்சித் இயக்கத்தில் ஒரு படம், மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படம் என லைன் அப்கள் நீள்கின்றன.

இதற்கிடையில், அவர் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கவிருக்கிறார் என்ற செய்திகள் உலாவத் தொடங்க, அடுத்த சில நாள்களிலேயே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இயக்குநர் நாக் அஷ்வின் இயக்கத்தில்  இணைகிறார், கமல்ஹாசன் என்று.  'நடிகையர் திலகம்' படத்துக்குப் பிறகு, நாக் அஷ்வின் இயக்கும் படம் இது. 

1995 க்கு பிறகு, கமல்ஹாசன் நடிக்கும் நேரடி தெலுங்கு படம் இதுதான். இடையில் இவரின் தமிழ்ப் படங்கள் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியானதே தவிர, நேரடி தெலுங்குப் படத்தில் கமல் நடிக்கவில்லை. கமல்ஹாசன் டோலிவுட்டில் நடித்த படங்களின் பட்டியலைப் பார்க்கலாம்.

அந்துலேனி கதா:

இந்தப் படத்தில்தான் கமல்ஹாசன் முதன்முதலில் தெலுங்கில் நடித்தார். இது கே.பாலச்சந்தர் இயக்கிய 'அவள் ஒரு தொடர்கதை' படத்தின் தெலுங்கு ரீமேக். ரஜினிகாந்த், ஜெயப்ரதா நடித்த இப்படத்தில் கமல் கேமியோ ரோலில் வந்திருப்பார்.  இதனை இயக்கியதும் கே.பாலசந்தர்தான். 

மரோ சரித்ரா :

கமல் தெலுங்கில் நாயகனாக நடித்த முதல் படம். தமிழ் பையனுக்கும் தெலுங்கு பெண்ணுக்குமிடையே இருக்கும் காதல்தான் படம். இந்தப் படத்துக்கு அறிமுகம் தேவையில்லை. கே.பாலசந்தர் இயக்கி சூப்பர் டூப்பர் ஹிட் படம். தெலுங்கு மொழியிலேயே வெளியாகி,  பல ஊர்களில் கொண்டாடப்பட்ட படம். பின்னாளில் 'ஏக் துஜே கேலியே' என்று பாலசந்தர்  கமல் கூட்டணியால் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு கொண்டாடப்பட்டது.  
வயசு பிலிச்சிந்தி: 'இளமை ஊஞ்சலாடுகிறது'  ரீமேக். இயக்குநர் சி.வி.ஸ்ரீதர் இயக்கத்தில் கமல்ஹாசன்  ரஜினிகாந்த் ஸ்ரீப்ரியா  ஜெயசித்ரா ஆகியோர் நடிப்பில் உருவான படம். 

சொக்கோகாடிதி:

சிங்கீதம் ஸ்ரீநிவாச ராவ்   கமல்ஹாசன் கூட்டணியில் உருவான முதல் படம். டூயல் ரோலில் நடித்திருப்பார் கமல். பிறகு, தமிழில் 'இரு நிலவுகள்' என டப் செய்யப்பட்டு வெளியானது. இந்தப் படம் ஹிந்தியில் ராஜேஷ் கண்ணாவை வைத்தும்,  கன்னடத்தில் சிவராஜ்குமரை வைத்தும் ரீமேக் செய்யப்பட்டது.

அந்தமைனா அனுபவம் :

கே.பாலச்சந்தர் இயக்கத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் நடித்த 'நினைத்தாலே இனிக்கும்' படத்தின் தெலுங்கு வெர்ஷன். இரண்டு மொழியிலும் எடுக்கப்பட்ட படம்.

இதி கதை காது:

'அவர்கள்' படத்தின் தெலுங்கு ரீமேக் இது. கே.பாலசந்தர் இயக்கத்தில் உருவான தெலுங்கு வெர்ஷனில் ரஜினிக்கு பதில் சிரஞ்சீவிவும் சுஜாதாவுக்கு பதில் ஜெயசுதாவும் நடித்திருப்பார்கள். 

குப்பேடு மனசு :

மலையாளத்தில் ஐவி சசி இயக்கத்தில் வெளியான 'ஆ நிமிஷம்'  படத்தின் தெலுங்கு ரீமேக்.  கே.பாலச்சந்தர் இயக்கத்தில் தெலுங்கில் 'குப்பேடு மனசு' என்ற பெயரிலும் தமிழில் 'நூல் வேலி' என்ற பெயரிலும் வெளியானது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ஒரே சமயத்தில் எடுக்கப்பட்ட இப்படத்தில் கமல்ஹாசன் கேமியோ ரோலில் நடித்திருப்பார்.

சாகர சங்கமம் :

கே.விஸ்வநாத் இயக்கத்தில் கமல்ஹாசன், ஜெயப்ரதா நடித்த காவியம் என்றே சொல்லலாம். இதுதான் தமிழில் டப் செய்யப்பட்டு 'சலங்கை ஒலி' என்று வெளியானது. இரண்டு தேசிய விருது, ஆறு நந்தி விருது என விருதுகளைக் குவித்த படம். இந்தப் படத்துக்குப் பிறகு, கே.விஸ்வநாத்  கமல் கூட்டணியில் படங்கள் உருவாக தொடங்கின. 230 படங்களுக்கு மேல் கமல் பல மொழிகளில் நடித்திருந்தாலும் கமல்ஹாசனின் டாப் 10 படங்கள் எடுத்தால் நிச்சயம் இந்தப் படம் முதல் வரிசையில் இருக்கும்.

ஸ்வாதி முத்யம் :

கே.விஸ்வநாத்  கமல்ஹாசன் காம்போவில் மீண்டுமொரு சூப்பர்ஹிட். 25 வயது இளைஞன் ஆனால், ஆறு வயது பையனுக்கான மனநிலை. கமல் இந்தப் படத்தில் செய்தவை எல்லாம் நடிப்பின் இலக்கணம். விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ஒரு படத்தை உச்சத்தில் கொண்டுபோய் நிறுத்தியது. தமிழில் 'சிப்பிக்குள் முத்து' என்ற பெயரில் வெளியானது. 

ஒக்க கதா இடாரு கிருஷ்ணலு:

இயக்குநர் கொடன்டராமி ரெட்டி (நடிகர் வைபவ்வின் தந்தை) இயக்கத்தில் கமல்ஹாசன்  ஸ்ரீதேவி நடிப்பில் வெளியான காமெடி படம். 'இந்துருடு சந்துருடு'  சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கமல்ஹாசன், விஜயசாந்தி, ஸ்ரீவித்யா ஆகியோர் நடிப்பில் வெளியான படம். 'சத்யா' வெற்றிக்குப் பிறகு, சுரேஷ் கிருஷ்ணா  கமல் கூட்டணியில் உருவான இந்த காமெடி படத்தில் கமல் டபுள் ஆக்ஷனில் நடித்திருப்பார்.

சுபா சங்கல்பம்:

இயக்குநர் கே.விஸ்வநாத்  கமல் கூட்டணியில் மூன்றாவது படம். எஸ்.பி.பாலசுப்ரமணியம் தயாரித்த இந்தப் படத்தில்தான் கே.விஸ்வநாத் நடிகராகத் தோன்றினார். அதன்பின், தமிழ், தெலுங்கு எனப் பல படங்களில் நடித்தார்.  1995  ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்துக்குப் பிறகு, நேரடியான தெலுங்கு படத்தில் கமல் நடிக்கவில்லை.  'குருதிப்புனல்' (துரோகி), 'உன்னைப்போல் ஒருவன்' (ஈநாடு),  'தூங்கா வனம்' (சீக்கத்தி ராஜ்யம்),  'விக்ரம்' (விக்ரம்)  என டப் வெர்ஷனில் மட்டுமே கமல்ஹாசனின் படங்கள் டோலிவுட்டில் வெளியாயின.

இப்போது, 28 ஆண்டுகளுக்குப் பிறகு, நேரடித் தெலுங்கு படத்தில் நடிக்கவிருக்கிறார்;  அவருடன் அமிதாப் பச்சன், பிரபாஸ் ஆகியோர் இருக்கிறார்கள் என்பதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்தியத் திரையுலகமே எதிர்பார்த்திருக்கும் இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். சயின்ஸ் ஃபிக்ஷன் ஜானரில் பிரம்மாண்ட பொருட் செலவில் உருவாகி வரும் இத்திரைப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com