பேல்பூரி
''சார். உங்க கடையில் வேலை இருக்கா?''''இருக்கு. நீ வாட்ஸ் ஆப், பேஸ்புக், டிவிட்டர் யூஸ் பண்றியா?''''ஆமா சார்..''''அப்போ உனக்கு வேலை இல்லை!''


கண்டது
(கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஊர்களின் பெயர்கள்)
''மாடுகட்டி விழை'', ''ஊர்வம்பு''.
-கே.பிரபாவதி,
மேலகிருஷ்ணன்புதூர்.
(அதிராம்பட்டினம் அருகே உள்ள ஊரின் பெயர்)
''கொள்ளுக்காடு''
(திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகில் ஒரு கிராமத்தின் பெயர்)
''வெள்ளைகுட்டை''
ஏ.மஜ்பாசாகுல்,
தஞ்சாவூர்.
(திருப்பூரில் ஓடிய ஆட்டோஒன்றில் கண்ட வாசகம்)
''ஓடுவது தங்கம்.
ஓட்டுவது சிங்கம்''
மகா,
திருப்பூர்.
கேட்டது
(சிதம்பரம் மேல வீதி கடைத் தெருவில் கடை உரிமையாளரும், இளைஞரும்..)
''சார். உங்க கடையில் வேலை இருக்கா?''
''இருக்கு. நீ வாட்ஸ் ஆப், பேஸ்புக், டிவிட்டர் யூஸ் பண்றியா?''
''ஆமா சார்..''
''அப்போ உனக்கு வேலை இல்லை!''
பி.பரத்,
சிதம்பரம்.
(கரூர் பேருந்து நிலையத்தில் இரு நண்பர்கள்)
''யானைகளைச் செல்லமாக வளர்த்து குறும்
படம் எடுத்து வெளியிடுறாங்களே? நல்லாயிருக்குல்ல..?''
''அப்படியே நம்ப அரிசிகொம்பன் யானை செய்யும் அட்டகாசத்தையும் படமா வெளியிடலாமே!''
எஸ்.மோகன்,
கோவில்பட்டி.
(திருநெல்வேலி திரையரங்கம் ஒன்றின்வாயிலில் இரு இளைஞர்கள்)
''மாப்ளே. சொன்னா கேளு. இந்தப் படம் வெறும் குப்பை. வேற படத்துக்குப் போவோம்!''
''மச்சான். வந்துட்டோம். இது மக்கும் குப்பையா?, மக்கா
குப்பையான்னு பார்த்துட்டுபோகலாம்!''
க.சரவணகுமார்,
திருநெல்வேலி.
யோசிக்கிறாங்கப்பா!
குழந்தைகளோடு ஓடும்போது
தோற்பதே வெற்றி.
வி.ந.ஸ்ரீதரன்,
சிறுசேரி.
மைக்ரோ கதை
குடிசை வீட்டுக்கு மன வருத்தத்தோடு திரும்பி, திண்ணையில் சோர்வாக அமர்ந்த தனது மனைவி கண்ணம்மாவை பார்த்து, ''என்ன புள்ளே.. கவலையா இருக்கே போலிருக்கு?'' என்று கேட்டார் மாணிக்கம்.
''ஆமாய்யா! நான் வேலை செய்கிற வீட்டு எஜமானியின் மகன் காலேஜில நல்லா படிச்சு மார்க் வாங்குறான். எஜமானியம்மா ரொம்ப பெருமையா என்கிட்ட சொன்னாங்க! கேட்க ரொம்ப சந்தோஷமா இருந்தது. ஆனா, நம்ம பையனும் இருக்கான் பாருய்யா, பிளஸ் டூ பாஸ் பண்றதுக்கே தாளம் போடுறான்'' என்றாள். தொடர்ந்து, இருவரது பேச்சும் தொடர்ந்தது.
'' விடு கண்ணம்மா. எல்லாம் நல்லதுக்குதான்!'
'' என்னையா பேச்சு பேசுற நீ! நம்ம புள்ள சரியா படிக்க மாட்டேங்குறான்னு சொல்றேன். நீ என்னடான்னா, எல்லாம் நல்லதுக்கு தான் சொல்றியே ! அறிவு இருக்காயா உனக்கு?''
''உலக நடப்பு தெரியாம என் மேல் கோபப்படுறியே கண்ணம்மா! இப்பவெல்லாம் பசங்க நல்லா படிச்சு அதிகமா மார்க் வாங்குறாங்க? அப்புறம், ஏதாவது ஒரு வெளிநாட்டுக்கு போய் மனைவி, குழந்தைகள்னு அங்கேயே செட்டில் ஆயிடுவாங்க! அவங்க அப்பா, அம்மா தங்களோட கடைசி காலத்துல தனிமையிலோ, முதியோர் இல்லத்திலோ இருந்து புலம்பிக்கிட்டு இருப்பாங்க? நமக்கு அப்படிப்பட்ட நிலைமை எல்லாம் வராது. நம்ம புள்ள நம்மள கவனிக்கிறானோ இல்லையோ, கடைசி வரைக்கும் அவன் முகத்தையும், பேர பசங்க முகத்தையும் பார்த்துகிட்டு திருப்தியோட இருக்கலாம்!'' என்ற மாணிக்கத்தின் வார்த்தைகளில் வார்த்தைகளில் உண்மை இருப்பதை உணர்ந்து சமாதானமானாள் கண்ணம்மா.
இரா.சாந்தகுமார்,
கூடுவாஞ்சேரி.
எஸ்எம்எஸ்
உன்னை நீ திருத்திக் கொள்ள வேண்டுமா!
உன் மூளையை பயன்படுத்து.
பிறரை நீ திருத்த வேண்டுமா! உன் இதயத்தை பயன்படுத்து.
அண்ணா அன்பழகன்
அந்தணப்பேட்டை.
அப்படீங்களா!
புகைப்படங்கள், விடியோக்கள் பகிர்வதற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட இன்ஸ்டாகிராம் சமூக ஊடகத்தில் புதிதாக சேனல்ஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
இன்ஸ்டாகிராமின் தலைமை நிறுவனமான மெட்டா இந்தச் சேவையை உலகம் முழுவதும் ஜூன் 15ஆம் தேதி தொடங்கியது.
வாட்ஸ் ஆப் சேனல்ஸ் சேவை குறிப்பிட்ட சில நாடுகளில் மட்டும் இயங்கி வருகிறது. ஆனால் இன்ஸ்டாகிராம் சேனல்ஸ் சேவை உலகம் முழுவதும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
ஒருவரின் தினசரி விடியோ, புகைப்படங்கள், கருத்துகள் ஆகியவற்றை தொடர்ந்து அறிந்து வருவதே இந்தச் சேனல்ஸின் முக்கிய நோக்கமாகும். இன்ஸ்டாகிராம் பயனாளர் குறிப்பிட்ட தலைப்பின் கீழ் விடியோ, ஆடியோ படைப்புகளை உருவாக்கி சேனல்ஸில் பதிவிட்டு வந்தால், அந்த சேனல்ஸை பலர் பின்தொடர்வார்கள். இந்த சேனல்ஸை உருவாக்கியவர் மட்டுமே இதில் தகவல்களை பதிவிட முடியும். மற்றவர்கள் வெறும் பார்வையாளர்களாக இருக்க முடியும்.
புதிய சேனல்ஸை உருவாக்க இன்ஸ்டாகிராமில் வலது மேல்புறத்தில் உள்ள மெசெஞ்சர் எடிர் ஆர் ரைட் மெசேஜ் கிரியேட் பிராட்காஸ்ட் சேனல் தேர்வு செய்து பெயரிட வேண்டும். பின்னர் சேனல் ஆரம்பிக்கப்பட்டதற்கான நோட்டிபிகேஷன் வந்துவிடும். அதில் ஜாயின் பிராட்காஸ்ட் சேனலை தேர்வு செய்யலாம். இதுபோன்ற சேனல்களில் பார்வையாளர்களாக சேருபவர்கள் அதில் வரும் விடியோக்கள், புகைப்படங்களுக்கு பதில் கருத்தை பதிவிடவும், கருத்துக் கணிப்பில் பங்கேற்கவும் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
சேனலை உருவாக்கியவர் பிறருக்கு இதன் லிங்கை அனுப்பி புதிய பயனாளர்களைச் சேர்த்து கொள்ளலாம். இது இளைஞர்களிடம் பெரும் வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அ.சர்ப்ராஸ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...