பேல் பூரி

""மனைவியை சாமியாகக் கிடைத்ததால், நான் பல வருஷமாகக் கோயிலுக்குச் செல்லவில்லை. என் மனைவிதான் கடவுள்.''
பேல் பூரி


கண்டது


(விழுப்புரம் இரு சக்கர வாகனத்தில்...)

""மனைவியை சாமியாகக் கிடைத்ததால், நான் பல வருஷமாகக் கோயிலுக்குச் செல்லவில்லை. என் மனைவிதான் கடவுள்.''

-கே.இந்து குமரப்பன்,
விழுப்புரம்.

(கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகேயுள்ள ஊரின் பெயர்)

மறுகால்தலை விளை

-அ.இரவீந்திரன்,
கன்னியாகுமரி.

(புதுக்கோட்டை- கும்பகோணம் சாலையில் உள்ள ஓர் ஊரின் பெயர்)

""இரும்புத் தலை''

-கே.பிரபாவதி,
மேலகிருஷ்ணன்புதூர்.

(திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகேயுள்ள ஊரின் பெயர்)

""குண்டல்''

-திசை மீனாமுத்து,
மதுரை.

கேட்டது


(நாகர்கோவில் ரேஷன் கடை ஒன்றில் விற்பனையாளரும், வாடிக்கையாளரும்...)

""வரிசையை சரியாகக் கடைபிடிங்க.  நானும் பலமுறை சொல்றேன். ஆனா கரடி புகுந்துவிடுது..''
""நீங்க சொல்றது சரிதான் சார். டாஸ்மாக் கடையில் யாரும் சொல்லாமலேயே வரிசையைக் கடைபிடிக்கிறாங்க. இங்க என்ன கோளாறோ தெரியலையே..!''

-ஆர்.கே.லிங்கேசன்,
மேலகிருஷ்ணன்புதூர்.

(திருச்சி பேருந்து நிலையத்தில் இருவர் பேசிக் கொண்டது..)

""அந்த அம்மாகிட்டே போய் அட்ரஸ் கேட்டேன். நீங்க என்ன அரை லூசான்னு கேட்கிறாங்க..!''
""அட அவங்க கேட்டது "அசலூரா'-ன்னு.. உன் காதில் என்ன கோளாறோ..?''

-து.இராமகிருஷ்ணன்,
எரகுடி.

(சென்னை கேளம்பாக்கத்தில் ஒரு செல்போன் உதிரிபாகங்கள் விற்பனைக் கடையில் ஊழியரும், வாடிக்கையாளரும்..)

""கீழே போட்டுட்டேன். இந்தப் போனுக்கு டெம்பர் கிளாஸ் மாத்தித்தாங்க''
""இதுல டிஸ்பிளேவும் கொஞ்சம் போயிருக்கு சார்!''
""அப்ப என்ன செய்யலாம்!''
""இன்னொரு முறை நல்லா கீழே போடுங்க சார். அதையும் ஒரேடியாக மாற்றிடலாம்.''

-வி.சி.கிருஷ்ணரத்னம்,
கேளம்பாக்கம்.

யோசிக்கிறாங்கப்பா!

பயம்  வந்து நம்மை பிடிப்பதில்லை. நாம் தான் போக விடாமல் 
அதை பிடித்து வைத்துக் கொண்டு தவிக்கிறோம்.          

- பம்மல் நாகராஜன்

மைக்ரோ கதை


அன்று ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊர் மக்கள் கூட்டம். ""நமது ஊராட்சிக்குள்பட்ட பகுதியில் மரக்கன்றுகளை வளர்க்க முடியவில்லை என்று கிராம மக்கள் சொல்கின்றனர். வெள்ளாடுகள் வளர்ப்பதே இதற்கு காரணம்.  ஆகவே, எல்லோரும் வெள்ளாடுகளை ஒரு மாதத்துக்குள் விற்க வேண்டும். காலக்கெடுவை மீறி யாராவது விற்றால், அவை பறிமுதல் செய்யப்பட்டு ஊராட்சி சார்பாக விற்பனை செய்யப்பட்டு, ஊராட்சி மன்றக் கணக்கில் சேர்க்கப்படும்'' என்றார் தலைவர்.
ஒரு மாதம் கெடு நிறைவடைந்தது.
ஊர் மக்கள் பெரும்பாலானோர் வெள்ளாடுகளை விற்றுவிட்டனர். ஆனால், காத்தமுத்து என்ற விவசாயி மட்டும் வெள்ளாடுகளை விற்காமல் வைத்திருந்தார்.
இதையடுத்து, காத்தமுத்து ஊராட்சி மன்றத்துக்கு அழைத்துவரப்பட்டார். 
""உங்களிடம் உள்ள வெள்ளாடுகளைப் பறிமுதல் செய்கிறோம்'' என்றார் தலைவர் .
இதற்கு காத்தமுத்துவோ, ""மன்னிக்க வேண்டுகிறேன் ஐயா. நீங்க விற்க சொன்னது வெள்ளாடுகளைத்தான்.  என்னிடம் இருப்பதோ கருப்பு ஆடுகள்தான்.'' என்றார்.  
இதைக் கேட்ட கிராம மக்கள் சிரித்து சிரித்து அடங்கவே நிறைய  நேரம் ஆகிவிட்டது.

-க.ச.பெத்தையன்,
பேராவூரணி.

எஸ்எம்எஸ்


சாலையைப் பார்த்து ஓட்டினால் சமர்த்து. 
சேலையைப் பார்த்து ஓட்டினால் விபத்து.

-கோ.குப்புசுவாமி,
வடபழனி, சென்னை.

அப்படீங்களா!


இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும் சிறு விடியோக்களின் (ரீல்ஸ்) எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

பொழுதுப்போக்குக்காகத் தொடங்கப்பட்ட இந்த ரீல்ஸ் விடியோ சேவை, இன்று வியாபார நோக்கத்திலான விடியோக்கள் உருவாக்கத்தால் கொடிகட்டி பறக்கின்றன.  இந்த வகை விடியோக்கள் உருவாக்கத்துக்கு வழிகாட்டியாக அமைந்தது டிக் டாக் செயலிதான். 

இதற்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டதையடுத்து,  ஃபேஸ்புக்கின் மெட்டா நிறுவனம் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் எனும் சிறு விடியோக்களை அறிமுகம் செய்தது. டிக் டாக்குடனான போட்டியைச் சமாளிக்க ஃபேஸ்புக்கிலும் ரீல்ஸ் விடியோக்களை மெட்டா அறிமுகம் செய்தது. இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் விடியோக்களின் அளவை 60 விநாடிகளில் இருந்து 90 விநாடிகளாக கடந்த ஜூலை மாதம் அதிகரிக்கப்பட்டது.

மேலும், சிறு விடியோக்களில் சேர்க்கப்படும் ஆடியோ பாடல்களுக்கு ஏற்ப வாய் அசைப்பதை இணைக்கும் புதிய தொழில்நுட்பமாக "குருவ்ஸ்' இன்ஸ்டாகிராமில் இணக்கப்பட்டது.

தற்போது ஃபேஸ்புக் ரீல்ஸின் விடியோ அளவை 60 விநாடிகளில் இருந்து 90 விநாடிகளாக மெட்டா நிறுவனம் நீட்டித்துள்ளது.  குரூவ்ஸைப் போன்ற அதிநவீன தொழில்நுட்பமும் ஃபேஸ்புக் ரீல்ஸில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், சேமிக்கப்பட்டுள்ள படங்களை வைத்தும் ரீல்ஸ் தயாரிக்கவும், தேவைக்கு ஏற்ப அதற்கான டெம்ப்லேட்டுகளை மாற்றி வைத்து கொள்ளவும் புதிய சேவையை ஃபேஸ்புக் வழங்கி உள்ளது.

டிக் டாக்கில் 10 நிமிஷம் வரையில் விடியோ பதிவிடும் வசதி உள்ளது. இந்த அளவுக்கு மெட்டா நிறுவனம் சேவை வழங்கவில்லை என்றாலும், இந்த புதிய சேவைகள் வாடிக்கையாளர்களை கவரும்.

-அ.சர்ப்ராஸ்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com