பாலிவுட்டில் தமிழ் கதைகள் !

பாலிவுட்டில் தமிழ் கதைகள் !

ஒருபடம் லாபத்தைச் சம்பாதிப்பதற்கு இது ரீமேக்கா, நேரடிப் படமா என்பது முக்கியமில்லை.  படம் பார்க்க வரும் பார்வையாளர்கள் இது ரீமேக்கா, நேரடிப் படமா என்பதை பார்த்தும் வருவது இல்லை.

ஒருபடம் லாபத்தைச் சம்பாதிப்பதற்கு இது ரீமேக்கா, நேரடிப் படமா என்பது முக்கியமில்லை.  படம் பார்க்க வரும் பார்வையாளர்கள் இது ரீமேக்கா, நேரடிப் படமா என்பதை பார்த்தும் வருவது இல்லை. சினிமாவில் ரீமேக்குக்கு எப்போதுமே ஒரு வரவேற்பு உண்டு.  ஹிந்தியிலிருந்து 'குயின்', 'அந்தாதூன்', 'ஆர்ட்டிகிள்15' உள்ளிட்ட கதைகள் தமிழுக்கு வர...  நம் கதைகளும் அங்கே பயணமாகின்றன. அதுகுறித்த அப்டேட் இது.

பரியேறும் பெருமாள் 
 மாரி செல்வராஜ் இயக்கத்தில்,  பா.ரஞ்சித் தயாரிப்பில் 2018-ஆம் ஆண்டு வெளியான படம்  'பரியேறும் பெருமாள்'.  கதிர், ஆனந்தி, யோகி பாபு, மாரிமுத்து உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்திருந்தனர்.  சாதியக் கொடுமைகளைக் கேள்விக்குள்படுத்தி சமத்துவத்தைப் பேசிய இப்படம்  மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இப்படம் ஹிந்தியில் ரீமேக்காகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளரான கரண் ஜோஹர் இதற்கான ரீமேக் உரிமத்தை வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. பாலிவுட் நடிகர்களான சித்தார்த் சதுர்வேதியும், டிரிப்டி டிமிரி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.  

லவ் டுடே

'லவ் டுடே'  வெற்றியின் காரணமாக ஹிந்தியிலும்,  அது ரீமேக் செய்யப்பட உள்ளது. அதை போனி கபூர் தயாரிக்கிறார் என்பது போன்ற தகவல்களும் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டின் இறுதியில் திரையரங்குகளில் ரிலீஸôன படம் 'லவ் டுடே'. 'கோமாளி' படத்தின் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இப்படத்தை இயக்கி நடித்திருந்தார். படத்தின் டீசர், டிரெய்லர் வெளியானபோதே ஒருவித எதிர்பார்ப்பு இளைஞர்கள் மத்தியிலிருந்தது. 
படம் ரிலீஸான முதல் நாளிலிருந்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்களையும் கடந்தும் படம் திரையரங்குகளில் ஓடி சாதித்தது. ஐந்து கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரான இப்படம் அதைவிடக் கிட்டத்தட்ட 10 மடங்கு வசூலை ஈட்டி விட்டது. இப்படத்தைத் தயாரித்த ஏ.ஜி.எஸ் நிறுவனத்துக்கு பெரும் வெற்றியாக இது அமைந்தது. 
இப்போது ஹிந்தியிலும் அது ரீமேக் செய்யப்பட உள்ளது. ஹிந்தியில் பிரதீப் இப்படத்தை இயக்கவில்லை. அவர் வேறு ஒரு திரைக்கதையில் இயங்கி வருகிறார்.  அதுபோல அவருக்கு ஹிந்தி தெரியாத காரணத்தால் அவரும் நடிக்கவில்லை.  வேறொரு ஹீரோ நடிக்கவிருக்கிறார். ஆனால், படத்தில் ஒரு ஸ்பெஷல் கெஸ்ட் ரோலில் பிரதீப் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இவை குறித்து விரைவில் அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது. 

அந்நியன்

2004-ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான படம்  'அந்நியன்'. சைக்கலாஜிக்கல் ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகிய இந்தப் படத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
 இதில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் இன்றளவும் மனதில் நிற்பவை.  இந்தப் படத்தை பாலிவுட்டில் ரீமேக் செய்யவிருக்கிறார் ஷங்கர். 'இந்தியன் 2' படத்தின் வேலைகளில் பிஸியானார் ஷங்கர். சில காரணங்களால் இடைவெளி விட்டுவிட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இந்த நிலையில், டோலிவுட்டில் ராம் சரணையும் இயக்கி வருகிறார்.  இந்தப் படத்தை தில் ராஜூ தயாரிக்கிறார். இந்தச் சமயத்தில், 'பாலிவுட்டில் ரன்வீர் சிங்கை வைத்து ஒரு படம் ஷங்கர் பண்ணப்போறாராமே' என்ற தகவல்கள் அரசல் புரசலாக வெளியாயின.  தற்போது, அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. 
'முதல்வன்' படத்தை அனில் கபூரை வைத்து பாலிவுட்டில் 'நாயக்' என்ற பெயரில் ரீமேக் செய்திருந்தார் ஷங்கர். அந்தப் படம் 2001-ஆம் ஆண்டு வெளியானது. அதனைத் தொடர்ந்து, சுமார் 20 ஆண்டுகள் கழித்து, தற்போது, 'அந்நியன்' ரீமேக்கிற்காக பாலிவுட்டிற்கு செல்கிறார். இதில் ரன்வீர் சிங் நாயகனாக நடிக்கிறார். பென் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிக்கான முதற்கட்ட வேலைகள் நடந்து வருகின்றன. 

மீண்டும் ஹிந்தியில் தனுஷ்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகிய படம்  'கர்ணன்'.  தனுஷ் மட்டுமல்லாது இதில் நடித்த அனைவரின் நடிப்பும் பேசப்பட்டது. இயக்குநர் மாரி செல்வராஜின் கதை சொல்லல் படத்தை தூக்கி நிறுத்தியது. 
 'கர்ணன்' திரைப்படமும் ரீமேக்காக இருக்கிறது.  விரைவில் ஹிந்தி மற்றும் தெலுங்கில் 'கர்ணன்' ரீமேக்காகிறது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். 'கர்ணன்' திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை அதன் தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவிடம் இருந்து வாங்கிவிட்டார், தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் பெல்லம்கொண்டா சுரேஷ். அது போல ஹிந்தியிலும் ரீமேக் உரிமை பேசப்பட்டு வருகிறது. இந்தப் படம் மூலம் மீண்டும் தனுஷ் பாலிவுட்டுக்கு செல்லலாம் என்று சொல்லப்படுகிறது. ஏற்கெனவே ராஞ்சனா உள்ளிட்ட படங்களின் மூலம் அவருக்கு ஹிந்தி மார்க்கெட் பரிச்சயம் இருப்பதால் கர்ணன் ரீமேக்கிலும் அவர் நடிப்பது உறுதியாகி விடும் என்கிறார்கள். ஹீரோயினாக மும்பை மாடல் ஒருவர் அறிமுகமாக இருக்கிறார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com