எம்.ஜி.ஆர். முதல் மோடி வரை...

நரேந்திர மோடி, ஜெயலலிதா, எம்.ஜி.ஆர்., என்.டி.ஆர். என அரசியல் கட்சித் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு படங்கள் உருவாகி வெளிவந்திருக்கின்றன.
எம்.ஜி.ஆர். முதல் மோடி வரை...

பெரும் ஆளுமையின் வாழ்க்கையை ஆவணப்படுத்தும் நோக்கம் மட்டுமே இருந்த வாழ்க்கை வரலாற்றுப் படங்கள்,  தற்காலத்தில் வணிக லாபம், அரசியல் நோக்கம், கொள்கைப் பரப்புரை எனப் பல வடிவங்களில் உருவாக்கப்படுகின்றன. இந்த வகையில் நரேந்திர மோடி, ஜெயலலிதா, எம்.ஜி.ஆர்., என்.டி.ஆர். என அரசியல் கட்சித் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு படங்கள் உருவாகி வெளிவந்திருக்கின்றன.
 'கப்பலோட்டிய தமிழன்', 'வீரபாண்டிய கட்டபொம்மன்', 'ராஜராஜசோழன்' என தமிழ் வரலாற்று அடையாளங்களாகத் திகழ்ந்தவர்களின் படங்கள் மட்டுமே ஒரு காலத்தில் வெளியாகி வந்தன. இந்த வகை படங்களில் நடிகர் சிவாஜி கணேசன் நடித்து பெரும் புகழ் பெற்றார்.  


தமிழில் மணிரத்னத்தின் தைரியமாக முயற்சி 'இருவர்'.  மோகன்லால், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா, ரேவதி, தபு, கௌதமி என பலர் நடிப்பில் 1997-ஆம் ஆண்டு  வெளியானது.  அரசியலிலும், சினிமாவிலும் ஆட்டிப்படைத்த எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவான படம்.  
 இதே பாணியில் மும்பை தாராவியை ஆண்ட தமிழர் வரதராஜ முதலியாரின் வாழ்வைத் தழுவி,  மணிரத்னம் உருவாக்கிய 'நாயகன்',  திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரியில் வாழ்ந்த மறைந்த பாண்டியனின் வாழ்வைத் தழுவிய 'சீவலப்பேரி பாண்டி',  கோவில்பட்டியில் வாழ்ந்த வீரப் பெண்மணி வீரலெட்சுமியின் வாழ்க்கையைத் தழுவி உருவான 'கோவில்பட்டி வீரலெட்சுமி', அம்பானியின் வெற்றிக் கதையை படமாக்கிய மணிரத்னத்தின் 'குரு',  நடிகை சில்க் ஸ்மித்தாவின் சினிமா பயணத்தை தழுவி உருவான 'தி டர்ட்டி பிக்சர்' என பல படங்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.  


தற்போது இந்த வகையில் ஆளுமைமிக்க அரசியல் கட்சித் தலைவர்களின் வாழ்க்கையைத் தழுவி படமாக்கும் பாணி தொடங்கியுள்ளது. தமிழ் மட்டுமன்றி ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் என எல்லா மொழிகளிலும் இதுதான் புது பாணி.  'நடிகையர் திலகம் (மகாநடி)', 'செல்லுலாய்ட்', 'பேட்மேன்', 'ராமானுஜன்' என ஏதோவொரு துறையின் சாதனையாளர்களைப் பற்றி ஒருபுறம் வந்துகொண்டிருந்தாலும், 'சஞ்சு', 'ஆக்ஸிடென்டல் பிரைம் மினிஸ்டர்', 'என்.டி.ஆர்.' என உள்நோக்கத்துடன் எடுக்கப்படும் வாழ்க்கை வரலாற்றுப் படங்களும் திரைக்கு வந்துகொண்டுதான் இருக்கின்றன. 

எம்.ஜி.ஆர்.

மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரை நினைவுகூர்ந்து தமிழ்நாடு அரசு கொண்டாடி வந்த நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக, இந்தப் படம் அரசு சார்பில் உருவாகி வெளியாகப்போகிறது. அதிமுக ஆட்சி தற்போது இல்லாத நிலையில் அப்படியே கிடக்கிறது.  அரசே எடுத்து நடத்துவதால், இந்தப் படத்தில் எம்.ஜி.ஆர் பற்றிய எதிர்மறையான காட்சிகள் இடம்பெறாது எனவும்,   இது ஒரு முழுமையான பயோபிக்காக இருக்காது அப்போது கூறப்பட்டது. ஆனால் ரத்தத்தின் ரத்தங்களால் இந்தப் படம் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. 

என்.டி.ஆர்.

2019-ஆம் ஆண்டு என்.டி.ஆரின் வாழ்க்கைப் படம் வெளியானது. டோலிவுட் சூப்பர் ஸ்டாரும் ஆந்திர முன்னாள் முதல்வருமான என்.டி.ராமராவின் வாழ்க்கையை மையப்படுத்தியது இது.  திரைத்துறை வாழ்க்கையை முதல் பாகமான 'கதாநாயகுடு (கதாநாயகன்)' படத்திலும், அரசியல் வாழ்க்கையை 'மஹாநாயகுடு (மகாநாயகன்)' என இரண்டாம் பாகத்திலும் படமாக்கினர். ஏற்கெனவே முதல் பாகம் வெளியாகியுள்ள நிலையில், 'மஹாநாயகுடு'  படமும் திரைக்கு வந்தது.  என்.டி.ஆராக பாலகிருஷ்ணா நடிக்க, 'வானம்' திரைப்படத்தை இயக்கிய கிருஷ் இந்த இரண்டு படங்களையும் இயக்கியுள்ளார். 
இதே போன்று என்.டி.ஆரின் வாழ்க்கை வரலாற்றை ராம்கோபால் வர்மாவும் வேறு ஒரு கோணத்தில் இயக்கியிருக்கிறார். ராமராவின் இரண்டாவது மனைவி லட்சுமியின் கண்ணோட்டத்தில் சொல்லப்படும் திரைக்கதையில் அமைந்திருக்கும் இந்தப் படத்துக்கு, 'லக்ஷ்மிஸ் என்.டி.ஆர்' எனப் பெயரிட்டுள்ளனர். வெளியுலகத்துக்குத் தெரியாத பல செய்திகள் இந்தப் படத்தில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயலலிதா

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படங்கள் எத்தனை உருவாகும் என இப்போது சொல்ல முடியாது. அந்தளவுக்கு அறிவிப்புகள் வெளிவந்துக் கொண்டிருக்கின்றன. இயக்குநர்கள் ஏ.எல்.விஜய், பிரியதர்ஷினி, கௌதம் மேனன், லிங்குசாமி, பாரதிராஜா எனப் பலரால் ஜெயலலிதா வாழ்க்கை திரைப்படம், வெப் சிரீஸ் என இரண்டு வடிவங்களிலும் உருவாக்கப்படுகின்றன. இதில், பிரியதர்ஷினியின் படம் 'அயர்ன் லேடி' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது., கௌதம் மேனன் எடுத்த பயோபிக் ‘குயின்' எனவும் பெயரிடப்பட்டு, வெளிவந்தது.  பிற இயக்குநர்களின் படங்கள் அறிவித்த நிலையிலும், திரைக்கதை எழுதும் நிலையிலும் இருக்கின்றன. நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளதால், ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் இருந்த இறுதி 75 நாள்கள் குறித்த காட்சிகளைத் திரைப்படத்தில் சேர்ப்பதில் சட்ட சிக்கல்கள் இருப்பதாகப் பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளிவந்த 'தலைவி' குறிப்பிடத்தகுந்த வெற்றியைப் பெற்றது. ஜெயலலிதாவாக கங்கனா நடித்திருந்தார். 

பால் தாக்கரே

'மஹாராஷ்ட்ரா மராத்தியருக்கே' என்ற உணர்வையும் முழக்கத்தையும் வலுவாக அரசியல் களத்தில் உச்சரித்த தலைவர்களில், பால் தாக்கரே முதன்மையானவர். இனவாதம், பிரிவினைவாதம், அடிப்படைவாதம் எனப் பல வாதங்களுக்குள் அடக்கப்பட்டாலும்,  மராத்தியர்கள் பெரும்பான்மையினருக்கு தாக்கரே சூப்பர் ஹீரோதான். அப்படிப்பட்டவரின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி மராத்தி, ஹிந்தி என இரண்டு மொழிகளிலும் கடந்த ஜனவரியில் வந்தது  'தாக்கரே'.  மக்களவைத் தேர்தலைக் குறிவைத்து எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும், சில போல்டான காட்சிகள் வரவேற்பைப் பெற்றன. 

மன்மோகன் சிங்

மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலகட்டத்தை மட்டும் விவரிக்கும் படமாக இருந்தது, 'தி ஆக்ஸிடெண்டல் பிரைம் மினிஸ்டர்'.  2004 முதல் 2008 வரை பிரதமர் அலுவலகத்தின் ஊடகப் பிரிவு ஆலோசகராகச் செயல்பட்ட சஞ்சய் பாரு,  2014  மக்களவைத் தேர்தலுக்கு முன் எழுதி வெளியிட்ட  நுலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் இது. மன்மோகனை ஹீரோவாகவும், சோனியா காந்தியை வில்லியாகவும் வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தில், பத்தாண்டு கால காங்கிரஸ் ஆட்சி வலுவாக விமர்சிக்கப்பட்டிருக்கும்.  திரைக்கதையில் தொய்வு இருந்தாலும், இந்தப் படம் தனக்கான கடமையைச் செவ்வனே செய்து முடித்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

நரேந்திர மோடி

கடந்த மக்களவைத்  தேர்தலுக்கான பா.ஜ.க பிரசாரத்தின் ஓர் அங்கமாகவே பார்க்கப்பட்டது, இந்தப் படம்.  இந்தப் படத்தில், விவேக் ஓபராய் நரேந்திர மோடியாக நடித்தார்.  மோடியின் தேநீர்க் கடை நாள்கள் முதல் பிரதமராகி அவர் மேற்கொண்ட திட்டங்கள் வரை அனைத்தையும் அலசும் ஒரு படமாக இது அமைந்தது. தற்போது 'மன் பைரங்கி' என்ற பெயரில் நரேந்திர மோடியைப் பற்றிய மற்றொரு படம் வெளியாகவுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com