'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 168

ஜெயலலிதாவின் பார்வையில் சற்று கோபம் கலந்திருப்பதை என்னால் உணர முடிந்தது.
'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 168

ஜெயலலிதாவின் பார்வையில் சற்று கோபம் கலந்திருப்பதை என்னால் உணர முடிந்தது. சட்டென்று அதற்கான காரணத்தை நான் ஊகித்துக் கொண்டேன். 

தினமும் மதிய வேளையில் வெளிவரும் 'தில்லி மிட் டே' இதழில் ஜெயலலிதாவின் தலைநகர் விஜயம் குறித்து நான் எழுதியிருந்த கட்டுரையை அவர் படித்திருக்கக் கூடும். அந்தக் கட்டுரையில், பிரதமருடனான சந்திப்பில் தமிழகத்தைச் சேர்ந்த அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்த சில புகார்களை அவர் அளிக்க இருக்கிறார் என்று நான் குறிப்பிட்டிருந்தேன். அதேபோல, மூப்பனாருடன் இணைப்புக்கு முயற்சி நடத்திக் கொண்டிருக்கும் வேளையில் ஜெயலலிதாவுடனான சந்திப்பைத் தவிர்ப்பதற்காகத்தான் காங்கிரஸ் தலைவர் சீதாராம் கேசரி தலைநகரில் இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தேன்.

அது மட்டுமல்லாமல் இன்னொரு விஷயமும்கூட ஜெயலலிதா என்னை சற்று கோபமாகப் பார்த்ததற்குக் காரணமாக இருந்திருக்கக் கூடும். அது 'புதிய பார்வை' ஆசிரியர் ம. நடராசனுடனான எனது சந்திப்பு. அவர் தில்லி வந்திருந்தார். சென்னையில் காஸ்மோபாலிடன், ஜிம்கானா, பிரசிடென்ஸி போன்ற கிளப்புகள் இருப்பதுபோல, தில்லியில் உள்ள பல கிளப்புகளில் வசந்த விஹார் கிளப்பும் ஒன்று. அங்கே தங்கியிருந்த ம. நடராசன், எனக்கு செய்தி அனுப்பி சந்திக்க வரச்சொன்னார். நான் சென்று அவரை சந்தித்தேன்.
பிரதமரிடம் தமிழகத்தைச் சேர்ந்த அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து ஜெயலலிதா புகார் அளிக்க இருக்கிறார் என்கிற தகவலையும், சீதாராம் கேசரியும், இந்திரஜித் குப்தாவும் ஜெயலலிதாவின் சந்திப்பைத் தவிர்ப்பதற்காகத்தான் தில்லியில் இல்லை என்கிற தகவலையும் எனக்கு தந்ததும்கூட ம.நடராசன்தான். அதனடிப்படையில்தான் நான் அந்தச் சிறப்புக் கட்டுரையை 'தில்லி மிட் டே' நாளிதழுக்கு அளித்திருந்தேன்.

ஜெயலலிதாவுக்கு என்ன தோன்றியதோ, அவரது கோபமான பார்வை விலகி, மெல்லிய புன்னகையுடன் மற்ற நிருபர்கள் பக்கம் திரும்பினார்.

'தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து நான் ஆந்திராவுக்கோ, அமெரிக்காவுக்கோ ஓடிவிடுவேன் என்றெல்லாம் திமுகவினரும், தமாகாவினரும் கூறிவந்தார்கள். நான் எங்கேயும் ஓடிவிடவில்லை. ஓடவும் மாட்டேன். அதற்கான அவசியமும் இல்லை. நான் சென்னையில்தான் இருக்கிறேன். என் மீது சுமத்தப்படும் புகார்களை எல்லாம் சட்டரீதியாக சந்திக்கத் தயாராகஇருக்கிறேன்'' என்று தெரிவித்தார்.

'பிறகு ஏன் நீங்கள் முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்தை நாடுகிறீர்கள்? வழக்குத் தொடுக்கப்படுவதற்கு முன்பே பயப்படுகிறீர்கள் என்றுதானே அர்த்தம்?''  ஒரு பிரபல தமிழ் நாளிதழின் தில்லி நிருபர் தனது கேள்வியைத் தொடுத்தார்.

'உயர்ந்த நோக்கத்துக்காகவோ, கொள்கைக்காகவோ சிறை செல்வது நியாயம். அதற்கு நான் தயாரானவள். ஆனால், வேண்டுமென்றே அரசியல் பழியுணர்வு காரணமாக கருணாநிதியால் போடப்படும் பொய் வழக்குகளுக்காக நான் சிறை செல்ல விரும்பவில்லை. அதனால்தான் முன்ஜாமீனுக்கு நீதிமன்றத்தை அணுகி இருக்கிறேன்.''

'சென்னை விமான நிலையத்தில், உங்களுக்குத் தமிழக அரசு போதிய பாதுகாப்பு தரவில்லை என்று கூறியிருக்கிறீர்கள். அது பற்றிப் பிரதமரிடம் பேசினீர்களா?''

'எனக்கு என்.எஸ்.ஜி. பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்கிற உத்தரவு வெளியாகி இரண்டு மாதங்களாகிவிட்டன. இதுவரை பாதுகாப்புப் படையினருக்குத் தேவையான வாகனங்கள், தங்குமிடங்கள் போன்றவை கருணாநிதி அரசால் வழங்கப்படவில்லை. என்னைப் பழிவாங்கும் நோக்கத்துடனும், என் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் உள்நோக்கத்துடனும் கருணாநிதி அரசு செயல்படுகிறது. இதை நான் சொல்லிதான் பிரதமர் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில்லை.''

'உங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று நீங்கள் பயப்படுகிறீர்களா?''

'பயப்படவில்லை. உண்மையைச் சொல்கிறேன். திமுக ஆட்சி ஏற்பட்ட பிறகு தமிழகத்தில் மீண்டும் விடுதலைப் புலிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. அந்த அமைப்பைத் தடை செய்வதற்கு நான் காரணமாக இருந்தேன் என்பதால், என் உயிருக்குப் புலிகளால் ஆபத்து என்பது அனைவருக்கும் தெரியும். நான் கட்சித் தொண்டர்களையும் பொதுமக்களையும் சந்தித்துவிடக் கூடாது என்று நினைக்கிறது கருணாநிதியின் அரசு. என்னால் கூட்டங்களுக்குச் செல்ல முடிவதில்லை.''

'நீங்கள் சசிகலாவை நியாயப்படுத்த முற்பட்டிருப்பது ஏன்?''

'அந்த அறிக்கையைப் படித்துப் பாருங்கள், தெளிவாக விளக்கம் தந்திருக்கிறேன். சசிகலா குறித்து ஏற்கெனவே பலமுறை கூறிவிட்டேன். அதுகுறித்து நீங்கள் வேண்டுமென்றே திரும்பத் திரும்ப கேள்வி எழுப்பினால், அதற்கெல்லாம் பதிலளித்து நான் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை.''

'தேவே கெளடா அமைச்சரவையில் இருக்கும் தமிழக அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?''

'தமிழகத்தில் இருந்து எட்டு அமைச்சர்கள் இருக்கிறார்கள் என்று எண்ணிக்கை காட்டலாம். ஆனால், அவர்கள் தங்களது அரசியல் ஆதாயத்துக்காக அதிகாரத்தை பயன்படுத்துகிறார்களே தவிர, தமிழகத்தின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை.''

'இது பற்றி நீங்கள் பிரதமரிடம் புகார் கூறினீர்களா?''

இந்தக் கேள்வி எழுப்பப்பட்டதும், ஜெயலலிதாவின் பார்வை என்னை நோக்கித் திரும்பியது.

'தனது அமைச்சர்கள் எப்படிச் செயல்படுகிறார்கள் என்பது அவருக்கு தெரியும். நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.''

'பிரதமரிடம் சுமார் 35 நிமிடங்கள் நீங்கள் பேசினீர்களே, அப்படி என்னதான் பேசினீர்கள்?''

'என் தனிப்பட்ட பிரச்னைகள் குறித்துப் பேச நான் பிரதமரை சந்திக்கவில்லை. இட ஒதுக்கீடு, காவிரிப் பிரச்னை ஆகிய இரண்டு விஷயங்கள் குறித்தும்தான் பேசினோம். தமிழகத்தில் 69% இட ஒதுக்கீடு தொடரை அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்றும், விரைவில் காவிரி நடுவர் மன்றத்துக்குத் தலைவர் நியமிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினேன்.''
'பிரதமர் தேவே கெளடா குறித்தும் அவரது ஆட்சி குறித்தும் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?''

'பிரமதர் தேவே கெளடா மிகவும் திறமையாகச் செயல்படுகிறார். இப்போதுள்ள மிகக் கடுமையான சூழ்நிலையில், கெளடாவைவிட வேறு எவரும் இந்த அளவுக்குச் சிறப்பாகச் செயல்பட முடியாது. அவரது அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள தமிழகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள்தான் தங்கள் பணிகளைச் சரிவரச் செய்யவில்லை. என்னையும், அதிமுகவையும் பழிவாங்கும் ஒற்றைக் குறிக்கோளுடன் செயல்படுகிறார்கள்.''

அதோடு தனது பேட்டியை முடித்துக்கொண்டு விட்டார். திரும்பிப் போகும்போது, மீண்டும் ஒருமுறை என்னை ஒரு பார்வை பார்த்துவிட்டு அகன்றார்.

அன்று இரவு விமானத்தில் அவர் சென்னை திரும்பிவிட்டார். 

ஜெயலலிதா சென்னை திரும்பினார் என்றால் அடுத்த நாள் ஜெயின் கமிஷனில் சாட்சி சொல்லவும், ஐக்கிய முன்னணியின் வழிகாட்டு குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ளவும் தமிழக முதல்வர் கருணாநிதி தில்லி வந்தார். தமிழ்நாடு இல்லம் பரபரப்பானது. தமிழ்நாடு இல்லம் மட்டுமல்ல; ஆந்திர பவன், அஸ்ஸாம் பவன், பிகார் பவன் ஆகியவையும் தலைவர்களின் வரவால் பரபரப்பாக இருந்தன.

பிரதமர் இல்லத்தில் நடந்த வழிகாட்டுதல் குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்திருந்த மேற்கு வங்க முதல்வர் ஜோதிபாசுவை சந்திக்கச் சென்றிருக்கிறார் முதல்வர் கருணாநிதி என்று தமிழ்நாடு இல்லத்தில் தெரிவித்தார்கள். அருகில் இருந்த பிகார் பவனில் லாலு பிரசாத் யாதவ் வந்திருந்தால் சந்திக்கலாம் என்று அங்கே போனேன்.

வெளியுறவுத் துறை அமைச்சர் ஐ.கே. குஜ்ராலின் வீட்டில் ஜனதா தளத் தலைவர்கள் சந்திக்க இருப்பதாகவும், அதற்குப் போயிருக்கிறார் லாலு பிரசாத் யாதவ் என்றும் சொன்னார்கள். மேலும் விசாரித்தபோது, அஸ்ஸாம் முதல்வர் பிரபுல்ல குமார் மஹந்தாவும், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் ஆந்திர பவனில் சந்திக்கிறார்கள் என்கிற செய்தியும் கிடைத்தது.

ஐக்கிய முன்னணி வழிகாட்டுதல் குழுவின் கூட்டத்துக்கு முன்னால், வேறு சில அரசியல் நகர்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன என்கிற ஐயப்பாட்டை அந்த சந்திப்புகள் எழுப்பின.

குறிப்பாக, தமிழ் மாநிலக் காங்கிரஸைத் தங்கள் பக்கம் இழுக்கக் காங்கிரஸ் தலைவர் சீதாராம் கேசரி முன்னெடுக்கும் முயற்சிகள், ஐக்கிய முன்னணித் தலைவர்களுக்கு சற்று கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கக்கூடும் என்று நான் ஊகித்தேன். சட்டென்று ஜனதா தளத்தின் செய்தித் தொடர்பாளராக இருந்த ஜெய்பால் ரெட்டி நினைவுக்கு வந்தார்.

அவசரநிலை பிறப்பிக்கப்பட்டபோது, அதை எதிர்த்து காங்கிரஸில் இருந்து விலகிய ஒருசிலரில் ஜெய்பால் ரெட்டியும் ஒருவர். போலியோ பாதிப்பால் தனது கால்களின் செயல்பாடுகளை இழந்த நிலையிலும், தன்னம்பிக்கையுடன் போராடித் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்த ஜெய்பால் ரெட்டியை தில்லி அரசியல் மறக்கவே முடியாது.

1969 காங்கிரஸ் பிளவின்போது அரசியல் பிரவேசம் செய்த ரெட்டி, ஜனதா கட்சி, ஜனதா தளத்தில் முக்கியமான பொறுப்புகளை வகித்தார். பிற்காலத்தில் மீண்டும் காங்கிரஸில் இணைந்து மன்மோகன் சிங் அமைச்சரவையில் முக்கியப் பொறுப்புகள் வகித்தார் என்றாலும், 'ஜனதா' பரிவாரத்தில் இருந்தபோது, மிகக் கடுமையாகக் காங்கிரஸை எதிர்த்தவர்களில் ஒருவர் அவர்.

சந்திக்க வரலாமா என்று கேட்க அவரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, 'உடனே வாருங்கள்' என்று அழைப்பு வந்தது. சந்திக்க விரைந்தேன். சந்திக்க அவர் அழைத்திருந்த இடம் எது தெரியுமா? ஒடிஸா பவன்!

ஒடிஸா பவனில் மூத்த ஜனதா தளத் தலைவரும், முன்னாள் முதல்வருமான பிஜு பட்நாயக்கின் அறையில் இருந்தார் ஜெய்பால் ரெட்டி. அங்கே முலாயம் சிங் யாதவ், ராம் விலாஸ் பஸ்வான் ஆகியோரும் இருந்தனர்.  நான் வந்திருக்கும் தகவல் சொன்னதும், பக்கத்து அறையில் சற்று நேரம் காத்திருக்கச் சொன்னார். மிக முக்கியமான ஆலோசனை நடந்து கொண்டிருக்கிறது என்று புரிந்து கொண்டேன்.

சுமார் அரை மணி நேரத்துக்குப் பின்னர், கூட்டம் முடிந்து எல்லோரும் கிளம்பிச் சென்றனர். ஜெய்பால் ரெட்டி நானிருந்த அறைக்கு வந்தார். எங்களுக்குள் நீண்டகாலத் தொடர்பு இருப்பதால் நான் அவரிடம் உரிமையுடன் பேசத் தொடங்கினேன்.

'என்ன, எங்கு பார்த்தாலும் பரபரப்பாக இருக்கிறது? ஐக்கிய முன்னணித் தலைவர்கள் ஆங்காங்கே குழு, குழுவாகக் கூடிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆட்சிக்கே ஆபத்து ஏற்பட்டிருக்கிறதா, என்ன?''

சிரித்தார் ஜெய்பால் ரெட்டி. 'உடனடியாக ஐக்கிய முன்னணி ஆட்சிக்கு ஆபத்து ஏற்படும் என்று தோன்றவில்லை. ஆனால்...'' என்று சொல்லி நிறுத்தினார்.
'ஆனால்... என்றால்?''

'தேவே கெளடாவைக் காங்கிரஸ் தொடர அனுமதிக்குமா என்று தெரியவில்லை. எல்லாம் திமுக தலைவர் கருணாநிதியின் கையில்தான் இருக்கிறது.''

'புரியும்படியாகச் சொல்லுங்கள்...''

'மூப்பனார்ஜியை பயன்படுத்திக் கொல்லைப்புற வழியாக ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸூம் சீதாராம் கேசரியும் திட்டமிடுவதாகத் தெரிகிறது. பிரதமர் வீட்டில் இப்போது, தமாகா தலைவர் மூப்பனார் காங்கிரஸூடன் கைகோத்து விடாமல் இருக்கும் முயற்சி நடந்து கொண்டிருக்கிறது...''

'யாரெல்லாம் இருக்கிறார்கள்...''

'பிரதமர், கருணாநிதி, மாறன்ஜி, மூப்பனார்ஜி ஆகிய நால்வரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நாங்களும் அந்த முடிவைத் தெரிந்துகொள்ளத்தான் காத்திருக்கிறோம்...''

என் மனதில் சட்டென்று ஒரு கேள்வி எழுந்தது. பிரதமர்  மூப்பனார்  கருணாநிதி சந்திப்பில் 'முரசொலி' மாறன் கலந்துகொள்ளும்போது தமாகாவின் மூத்த தலைவரும், நிதியமைச்சருமான ப. சிதம்பரம் ஏன் கலந்துகொள்ளவில்லை?

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com