'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 189

காங்கிரஸ் கட்சியின் உள்கட்சி ஜனநாயகத்தின் மீட்சி பற்றிய பைலட்டின் கருத்துக்கள்
'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 189

என்னிடம் தொலைபேசி ரிசீவரை நீட்டினார் அஜீத் சிங். எதிர்முனையில் ராஜேஷ் பைலட்.

'அங்கிருந்து கிளம்பி நேராக என் வீட்டுக்கு வாருங்கள். நீங்கள் உருவாக்கி இருக்கும் குழப்பம் கொஞ்சம் நஞ்சமல்ல' - பேசிக் கொண்டே போனார் பைலட். நான் பதில் எதுவும் பேசாமல் கேட்டுக் கொண்டிருந்தேன். அவர் பேசி முடித்ததும் ரிசீவரை அஜீத் சிங்கிடம் கொடுத்தேன்.

'என்ன சொல்கிறார் பைலட்?' என்று சிரித்தபடி கேட்டார் அஜீத் சிங். என்னை உடனே கிளம்பி வரச் சொன்னதாக சொன்னேன். அவரிடம் விடைபெற்றுக் கொண்டு 10, அக்பர் ரோட்டை நோக்கி நகர்ந்தேன்.

எனது பேட்டிக்கு, 'நரசிம்ம ராவ் சகாப்தம் முடிந்துவிட்டது - வி.என். காட்கில்' என்றுதான் நான் தலைப்புக் கொடுத்திருந்தேன். ஆனால் சொல்லி வைத்ததுபோல அனைத்து பத்திரிகைகளும், 'சோனியா அரசியலுக்கு வரமாட்டார் - வி.என்.காட்கில்' என்று தலைப்புப் போட்டுப் பிரசுரித்திருந்தனர்.

வைக்கோல் போரில் தீக்குச்சியைக் கொளுத்தி போட்டதுபோல, மிகப் பெரிய விவாதத்துக்கு அது வழிகோலும் என்று கனவிலும் நான் நினைக்கவில்லை. காட்கிலின் கருத்தை வழிமொழிந்தும், எதிர்த்தும் இந்தியாவின் முன்னணி அரசியல் விமர்சகர்கள் கட்டுரைகளாகவும், தொலைக்காட்சி விவாதங்களிலும் தங்களது கருத்துகளை முன்வைக்கத் தொடங்கிவிட்டனர்.

ராஜேஷ் பைலட் எனக்காகவே காத்திருந்ததுபோல, புல் தரையில் போடப்பட்டிருந்த பிரம்பு நாற்காலியில் அமர்ந்தபடி 'வெயில்' காய்ந்து கொண்டிருந்தார். குளிர்காலத்தில், சில மணி நேரங்களை கிடைக்கும் வெயிலில் அமர்வது தில்லிவாழ் மக்களுக்கு அலாதி இன்பம். எதிரில் சென்று அமர்ந்தேன்.

'காங்கிரஸ் கட்சியில் மீண்டும் உள்கட்சி ஜனநாயகம் ஏற்பட வேண்டும் என்று நான் போராடிக் கொண்டிருக்கிறேன். எனக்கு நரசிம்ம ராவ்ஜி, சீதாராம் கேசரி, சோனியாஜி யாரிடமும் வெறுப்போ, எதிர்ப்போ கிடையாது. காங்கிரஸ் கட்சி மீண்டும் குடும்ப ஆதிக்கத்தின் பிடியில் சிக்கிவிட்டால், நியமனப் பதவிகள் கலாசாரத்துக்கு கட்சி திரும்பிவிடும். எல்லா தளத்திலும் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் நிலைமை ஏற்பட்டால்தான், தேசியக் கட்சியாகக் காங்கிரஸால் தாக்குப் பிடிக்க முடியும்....' - பேசிக் கொண்டே போனார் அவர்.

ராஜேஷ் பைலட் தனது ஆதங்கத்தைக் கொட்டித் தீர்ப்பதைப் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தேன். அவர் சற்று இடைவெளிவிட்டபோது, அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு நான் நடந்ததை அவரிடம் விளக்கினேன். அதற்குப் பிறகுதான் அவர் சற்று அமைதியானார்.

'ஒரிஸ்ஸா முதல்வர் ஜானகி வல்லப் பட்நாயக் தில்லி வந்திருந்திருக்கிறார். வாருங்கள் நாம் அவரை ஒரிஸ்ஸா பவன் சென்று சந்திப்போம்' என்றபடி எழுந்தார் பைலட்.

'நீங்கள் உங்கள் காங்கிரஸ் கட்சி விவகாரங்களைப் பேசும்போது நான் எதற்கு?'

'ஜே.பி. பட்நாயக்கை உங்களுக்குத் தெரியும்தானே...?'

'மிக நன்றாகத் தெரியும்.'

'பிறகென்ன? வாருங்கள். ஒரு நிமிடத்தில் உடை மாற்றிக்கொண்டு வந்து விடுகிறேன்.' என்றபடி வீட்டுக்குள் சென்றார்.

நாங்கள் இருவரும் கௌடில்யா மார்க்கில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் அருகில் அமைந்த ஒரிஸ்ஸா பவனுக்குக் கிளம்பினோம்.

தான் வருவதாக ராஜேஷ் பைலட் முன்பே தெரிவித்திருந்தார் போலிருக்கிறது. முதல்வர் ஜே.பி.பட்நாயக் அவரை எதிர்நோக்கிக் காத்திருந்தார். என்னைப் பார்த்ததும் அவருக்கு மகிழ்ச்சி.

'என்ன... தமிழ்நாட்டில் பிரச்னைகள் அதிகரித்து வருகின்றன போலிருக்கிறதே... ஊர்வலத்தில் அடிதடியெல்லாம் நடந்திருப்பதாக செய்தி படித்தேன். ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைக்குமா?, கிடைக்காதா?' என்று ஆர்வத்துடன் கேட்டார் ஒரிஸ்ஸா முதல்வர்.

எம்.ஜி.ஆரின் நினைவு தினத்தையொட்டி, அதிமுக அவைத்தலைவர் நெடுஞ்செழியன் தலைமையில் அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலையின் அருகிலிருந்து கிளம்ப இருந்த அமைதி ஊர்வலம் அமளி ஊர்வலமாக மாறியிருந்தது. கட்சியின் தலைவி ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், தொண்டர்கள் தங்கள் எதிர்ப்பைக் காட்டுவதற்கு அந்த ஊர்வலத்தைப் பயன்படுத்திக் கொண்டனர் என்று சொல்ல வேண்டும்.

ஜெயலலிதா மீதான ஊழல் வழக்குகள், விசாரணைகள், வருவாய் புலனாய்வுத் துறை சோதனைகள் குறித்தெல்லாம் நாங்கள் மூன்று பேரும் பேசிக் கொண்டிருந்தோம். என்னையும் அவர்களுக்கு நிகராக அந்தத் தலைவர்கள் உட்கார வைத்துப் பேசினார்கள் என்றால், எந்த அளவுக்கு அவர்களுக்கு பெருந்தன்மை இருந்தது என்பதை நினைத்துப் பார்க்கிறேன்.

அவர்களது பேச்சு, ஐக்கிய முன்னணி அரசையும், ஆட்சியையும் பற்றி திரும்பியது. நான் சற்று தள்ளிப்போய் அமர்ந்து அங்கிருந்த அன்றைய ஆங்கில நாளிதழ்களைப் புரட்டிப் படிக்கத் தொடங்கினேன். அவர்கள் பேசுவதையும் கேட்டுக்கொண்டிருந்தேன்.

'காங்கிரஸ் கட்சி ஆதரவை விலக்கிக் கொண்டுவிடும், ஐக்கிய முன்னணி அரசு விரைவில் கவிழ்ந்துவிடும் என்றெல்லாம் பேசுகிறார்கள். நாளைக்கு என்ன நடக்கும் என்பதைப் பற்றி எனக்குக் கவலையில்லை.' என்று ஹரியாணாவில் பிரதமர் தேவே கௌடாவும்-

'காங்கிரஸில் உள்கட்சிக் குழப்பம் அதிகரித்துள்ளது. அவர்கள் பல கோஷ்டிகளாகப் பிரிந்தாலும், ஒன்றாக இணைந்தாலும், ஐக்கிய முன்னணி அரசை எந்த விதத்திலும் பாதிக்காது. அப்படி ஐக்கிய முன்னணி அரசு கவிழ்ந்தாலும் காங்கிரஸ் கட்சியால் இனி ஒருபோதும் ஆட்சியைப் பிடிக்க முடியாது' என்று ஆந்திராவில் உள்துறை அமைச்சர் இந்திரஜித் குப்தாவும்-

தெரிவித்திருந்த கருத்துகள் குறித்து இருவரும் விவாதித்தனர். குறைந்த எண்ணிக்கை பலமுள்ள கட்சிகளின் ஏளனத்துக்கும், மிரட்டலுக்கும் ஆளாகும் நிலைக்கு காங்கிரஸ் தள்ளப்படிருப்பது குறித்து இருவரும் கவலை தெரிவித்து பேசிக்கொண்டிருந்தார்கள். பேச்சு, நாடாளுமன்றக் காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தல் குறித்து திரும்பியது.

ஏற்கெனவே பவார் ஆதரவாளர்களும், சீதாராம் கேசரியின் ஆதரவாளர்களும் ஜே.பி.பட்நாயக்கை சந்தித்திருந்தனர் என்பதை அவர்களது பேச்சிலிருந்து தெரிந்து கொண்டேன். 'ஒருவருக்கு ஒரு பதவி' என்கிற ராஜேஷ் பைலட்டின் கருத்தையும், தேர்தல் மூலம் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்கிற அவரது கோரிக்கையையும், முதல்வர் ஜே.பி.பட்நாயக் ஏற்றுக்கொள்வதாக இல்லை.

ராஜேஷ் பைலட் அவரை எப்படியும் தனது வழிக்குக் கொண்டுவர என்னென்னவோ சொல்லிப் பார்த்தார். ஜே.பி.பட்நாயக் சற்றும் பிடிகொடுத்துப் பேசவில்லை. கடைசியில், ராஜேஷ் பைலட் விடைபெற்றுக் கிளம்பத் தயாரானார். நானும் எழுந்து கொண்டேன்.

அப்போது முதல்வர் ஜே.பி.பட்நாயக் சொன்ன வார்த்தைகளை நான் இன்று வரை மறக்கவில்லை. ராஜேஷ் பைலட் குறித்த நினைவு வரும்போதெல்லாம் ஜே.பி.பட்நாயக் சொன்னதுதான் நினைவுக்கு வரும்.

'ராஜேஷ்ஜி, நீங்கள் துடிப்பானவர், லட்சியவாதி, இளைஞர். உங்களைப் போன்ற ஒருவரால்தான் வருங்காலத்தில் காங்கிரஸ் இயக்கம் காப்பாற்றப்படும் என்றும், வழிநடத்தப்படும் என்றும் எனக்குத் தெரியும். வாழ்க்கையில், அதிலும் குறிப்பாக அரசியல் வாழ்க்கையில், வேகம் மட்டுமே போதாது; கூடவே விவேகமும் வேண்டும். விவேகம் மட்டுமே போதாது; நிதானமும் வேண்டும். உங்களுக்கு இறைவன் நீண்ட ஆயுளைத் தர வேண்டும் என்பதுதான் எனது பிரார்த்தனை!' என்று ஜே.பி.பட்நாயக், ராஜேஷ் பைலட்டை வாழ்த்தியபோது அவரது குரலில் சற்று தடுமாற்றம் தெரிந்தது.

அந்த சந்திப்பு நிகழ்ந்து நான்கு ஆண்டுகளில் கார் விபத்தில் ராஜேஷ் பைலட் அகால மரணம் அடைந்தபோது, எனக்கு ஜே.பி.பட்நாயக் சொன்னதுதான் நினைவுக்கு வந்தது. ராஜேஷ் பைலட்டின் வாழ்க்கை வேகமாக முடிந்துவிட்டது என்பது மிகப் பெரிய சோகம். ஜே.பி.பட்நாயக்கின் உள்ளுணர்வு நான்கு ஆண்டுகளுக்கு முன்பே அதை உணர்ந்திருந்ததோ?

அக்பர் ரோடு காங்கிரஸ் தலைமையகத்தில் எப்போதும் கலகலப்பாக இருக்கும் அறை எது என்று கேட்டால், ஆஸ்கர் பெர்ணான்டஸின் அறை என்று எல்லோருமே சொல்வார்கள். ஆஸ்கருக்கு அமைச்சர் பதவி மோகமெல்லாம் எப்போதுமே கிடையாது. அவர் கட்சி அமைப்பு நிர்வாகத்தில் கவனம் செலுத்தும் தலைவராகவே கடைசி வரை இருந்தவர். சில ஆண்டுகள் அமைச்சராகப் பணியாற்றியபோதும்கூட, அக்பர் ரோடு அலுவலகத்துக்கு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

கட்சித் தலைமை முதல், இந்தியாவின் ஒவ்வொரு மாநில காங்கிரஸ் கமிட்டி வரை அத்தனை அக்கப்போர்கள் குறித்தும் தெரிந்துகொள்ள வேண்டுமானால் ஆஸ்கர் பெர்ணான்டஸின் அறைக்குப் போனால் போதும். பல மாநிலங்களிலிருந்தும் அவரது சிஷ்யர்கள் அவரைப் பார்க்க அங்கே குழுமி இருப்பார்கள். எல்லா மாநில அரசியலும், எல்லா கட்சிகளின் தலைவர்களும், அவர்கள் குறித்த தகவல்களும் ஆஸ்கருக்கு அத்துப்படி. எல்லா விஷயங்களிலும் 'அப்டேட்டடாக' இருப்பார்.

ஆஸ்கர் பெர்ணான்டஸின் நம்பிக்கையைப் பெறுவது மிகவும் சிரமம். அவருக்கு நெருக்கமாகிவிட்டால், எல்லா விஷயங்களிலும் வெளிப்படையாக இருப்பது அவரது சுபாவம். அதனால்தான், என்ன நடக்கப் போகிறது என்று தெரிந்துகொள்ள அவரைத் தேடிப்போனேன். எனது எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை.

அவருக்கும் சற்று 'டைவர்ஷன்' தேவைப்பட்டது என்று நினைக்கிறேன். கட்சிக்காரர்களை வெளியே போகச் சொல்லிவிட்டு, என்னிடம் கலகலப்பாகப் பேசத் தொடங்கினார். டீயும், பிஸ்கட்டும் வந்தன. அவராகவே சில தகவல்களைத் தெரிவித்தார். சோனியா காந்தியை சந்திக்கப் பவார் பகீரதப் பிரயத்தனம் நடத்தி வருகிறார் என்கிற தகவலை அவர் பகிர்ந்து கொண்டபோது நான் நிமிர்ந்து உட்கார்ந்தேன்.

நரசிம்ம ராவ் பதவி விலகியது முதலே, சோனியா காந்தியை சந்திக்க சரத் பவார் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக ஆஸ்கர் சொன்னார். ஒரு வாரம் முன்பு, சோனியா காந்தி மும்பைக்குச் சென்றதாகவும், அவருடன் தானும் சென்றிருந்ததாகவும் தெரிவித்தார் ஆஸ்கர் பெர்ணான்டஸ்.

'நான் எதிர்பார்க்கவே இல்லை, என்னை சந்திக்க விரும்புவதாக சரத் பவாரிடமிருந்து தொலைபேசி வந்தது. நான் தங்கியிருந்த ஹோட்டலில் அவரை சந்தித்தால், அது தேவையில்லாத வதந்திக்கு வழிகோலும் என்பதால் மறுத்து விட்டேன். என்னை பவார் விடுவதாக இல்லை. நாங்கள் குருதாஸ் காமத் வீட்டில் சந்திப்பதாக ஏற்பாடு செய்யப்பட்டது.'

'அங்கே போய் அவரைச் சந்தித்தீர்களா? என்னதான் சொன்னார் பவார்?'

'வேறென்ன, சோனியாஜியை நேரில் சந்திக்க வேண்டும், அவருடன் பேச வேண்டும் என்று சொன்னார். சோனியாஜி தன்னை ஏன் புறக்கணிக்கிறார் என்று தெரியவில்லை என்றும், அந்த சந்திப்புக்கு நான் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.'

'நீங்கள் அந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்தீர்களா? என்ன நடந்தது?'

'என்ன நடந்தது? நான் சோனியாஜியிடம் சரத் பவார் உங்களைச் சந்திக்க விரும்புகிறார் என்று சொன்னேன். அவர் பதில் எதுவும் சொல்லவில்லை. அவரை வற்புறுத்த நான் தயாராக இல்லை. தில்லி திரும்பி விட்டோம்.'

'அதற்குப் பிறகு?'

'மீண்டும் மீண்டும் சரத் பவார் என்னைத் தொடர்பு கொண்டபடி இருந்தார். அதற்குப் பிறகும் பேசாமல் இருந்தால் எப்படி? சோனியாஜியை சந்தித்து, சரத் பவார் தொடர்ந்து தொலைபேசியில் சந்திக்க வேண்டும் என்று கேட்கிறார். நான் என்ன சொல்லட்டும் என்று கேட்டேன்...'

'அவர் என்ன சொன்னார்?'

'ஒன்றும் சொல்லாமல் மௌனமாக இருந்தார். சற்று நேரத்துக்குப் பிறகு, 'நான் யாரையும் சந்திக்க விரும்பவில்லை என்று சொல்லி விடுங்கள்' என்று சொன்னார்.'

'சரத் பவாரை சந்திக்க மறுப்பதற்கு ஏதாவது காரணம் இருக்கிறதா?' என்று கேட்டேன்.

வேறு பக்கமாகப் பார்த்துக் கொண்டிருந்தவர் என்னை நோக்கித் திரும்பினார். அவரது விழிகளில் ஈரம் கசிந்திருந்தது. ஏதோ சொல்ல வாயெடுத்தார்...

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com