அக்கரைச் சீமையிலே...

உலகில் ஒவ்வொரு நாடுகளிலும் வித்தியாசமான நிகழ்வுகள், கண்டுபிடிப்புகள், சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன.
அக்கரைச் சீமையிலே...
Updated on
2 min read

உலகில் ஒவ்வொரு நாடுகளிலும் வித்தியாசமான நிகழ்வுகள், கண்டுபிடிப்புகள், சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. சில நாடுகளில் உள்ள சுவாரசியங்களைப் பார்ப்போம்:

மழை பெய்யாத கிராமம்:

உலகிலேயே மழை பெய்யாத கிராமம் மேற்கு ஆசியாவில் உள்ள ஏமன் நாட்டின் தலைநகர் சனாவில் உள்ள 'அல்ஹதைப்' எனும் கிராமம்தான். தரை மட்டத்தில் இருந்து 3,200 மீட்டர் உயரத்தில் சிவப்பு மணற்கல் மலையின் உச்சியில் உள்ளது. மற்ற இடங்களைவிட உயரமாக இருந்தாலும், இந்த இடம் வறட்சியுடன்தான் காணப்படுகிறது. இங்கே பகலில் அதிக வெப்பமும், இரவில் உறைபனி குளிரும் இருக்கும்.

நீர் ஆதாரங்கள் போதுமானதாக இல்லாததும், மேகங்கள் குவியாத உயரத்தில் இருப்பதால் இங்கு மழை பெய்வதில்லை. சாதாரண மழை மேகங்கள் சமவெளியில் இருந்து 2 ஆயிரம் மீட்டர் உயரத்துக்கு குவியும் என்பதால், இந்தக் கிராமத்தின் மீது மேகங்கள் குவிவதில்லை.

இரண்டு பெயருள்ள நதி:

ஜார்ஜியா நாட்டில் அரக்வி என்ற நதி ஓடுகிறது. 12 கி.மீ. தொலைவுக்கு ஓடும் இந்த நதிக்கு வெள்ளை ஆரக்வி, கருப்பு ஆரக்வி என்று இரு பெயர்கள் உள்ளன. ஏனெனில், இந்த நதி வெள்ளை நிறமும், கருப்பு நிறமும் கொண்டிருக்கும்.

தனித்தனியாக பாயும் இவை ஓரிடத்தில் ஒன்று சேரும். ஆனால் இரண்டும் ஒன்றோடென்று கலப்பதில்லை. வெள்ளை, கருப்பு நிறங்களில் தெளிந்த நீரோடை போல பாய்ந்தோடும் காட்சி காண்போரை வியப்பில் ஆழ்த்தும். நதிகளுக்கு இடையே நீரின் அடர்த்தி வேறுபட்டிருப்பதும், அதில் உள்ள கனிமங்களின் வீரியத்தில் மாறுபாடு இருப்பதும்தான் இதற்கு காரணம்.

வட்டவடிவ ஏரி:

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில், 'சில்வர் லேக்' என்ற வட்ட வடிவ ஏரி அமைந்துள்ளது. இது இயற்கையாகவே உருவானது. துல்லியமாக அளவெடுத்து வெட்டியதுபோல், மிகச் சரியாக வட்ட வடிவத்தில் அமைந்துள்ளது. சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது. 90 மீட்டர் ஆழமுள்ள ஏரியின் ஒரு கரைக்கும், மற்றொரு கரைக்கும் உள்ள தூரம் 8.8 கி.மீ. ஆகும். இதனால் உலகில் மிகப் பெரிய ஏரிகளில் ஒன்றாகவும் இருக்கிறது.

நவீன திரை:

போலந்து நாட்டின் முக்கிய நகரங்களில் 'போர்ட்டல்' எனப்படும் நவீன திரை அமைக்கப்பட்டிருக்கிறது. இதில், ஒரு நகரில் இருந்து மற்றொரு நகரில் இருப்பவர்களைப் பார்க்க முடியும். அவர்களோடு பேசவும் முடியும். கிட்டத்தட்ட வீடியோ கால் வடிவில் இந்தத் திரை உள்ளது.

குழந்தை பிறந்தால் ரூ.50 ஆயிரம்:

தென் கொரியாவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்துவருவதைத் தடுக்கும் விதமாக, புதியதாகப் பிறக்கும் குழந்தைகளுக்கு மாதம்தோறும் ரூ.50 ஆயிரம் (இந்திய மதிப்பில்) உதவித் தொகை வழங்கும் திட்டம் இருக்கிறது.

ரயில் நிற்கும் ஆனால்...?

ஜப்பான் நாட்டில் செயரியூமிஹாரிஷி ரயில் நிலையத்தில் ரயில்கள் நின்று செல்லும். ஆனால், பயணிகளால் இறங்கவோ, ஏறவோ முடியாது. ஏனெனில், இயற்கை அழகை ரசிப்பதற்காகவே கட்டப்பட்ட இயற்கை ரயில் நிலையம் இது.

யானைகளின் ஒலி:

அமெரிக்காவில் உள்ள கொலராடோ பல்கலைக்கழம் அண்மையில் மேற்கொண்ட ஆய்வில், யானைகள் தங்களின் நண்பர்களை அழைக்க பல்வேறு விதமான ஒலிகளை எழுப்புகின்றன. இது மனிதர்களை ஒருவரையொருவர் பெயர் சொல்லி அழைப்பது போல் இருக்கும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

செவ்வாய்க் கிரகத்தில் மனிதர்கள்?

வருங்காலத்தில் செவ்வாய்க் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் பல நாடுகளுக்கு உள்ளது. அவ்வாறு அனுப்பும்போது, அங்குள்ள குறைந்த ஈர்ப்பு விசையால் சிறுநீரகம் பாதிக்கப்படும் என்பது தெரியவந்துள்ளது. இதை எவ்வாறு தடுப்பது என்பது குறித்த ஆய்வுகளை பிரிட்டனை சேர்ந்த யு.சி.எல். பல்கலைக்கழகம் மேற்கொண்டு வருகிறது.

வாசனைத் தபால் தலை:

தபால் தலைகளில் பல வகை உண்டு. சதுரம், நீள்சதுரம், தவிர வட்டம், முக்கோண வடிவங்களில் பல நாடுகளில் தபால் தலைகளை வெளியிட்டுள்ளனர். முப்பரிமாண தபால் தலைகளும் உண்டு. ஆனால், தென் ஆப்பிரிக்காவில் வாசனை தபால் தலை உள்ளது. தபால் தலையின் மேலே தடவுவதோடு, ஒட்டும் பசையிலும் சேர்த்திருக்கின்றனர்.

மஞ்சள் நிற தாமரை:

தாமரை என்றாலே அதன் வெளிர் சிவப்பும். வெள்ளை நிறமும்தான் நினைவுக்கு வரும். ஆனால், மஞ்சள் நிறத்தில் தாமரைகள் மேற்கிந்திய தீவுகளிலும், அமெரிக்காவின் சில பகுதிகளிலும் மலர்கின்றன.

மிகப் பெரிய சிலை:

ரஷியாவின் வால்காகிராட் பகுதியில் 'தி மதர்லேண்ட் கால்ஸ்' என்ற சிலை உலகில் உள்ள மிகப் பெரிய சிலைகளில் ஒன்றாகும். இதன் உயரம் 279 அடி. 1967இல் இது கட்டி முடிக்கப்பட்டபோது, உலகின் மிகப் பெரிய சிலையாக விளங்கியது. ஸ்டாலின்கிராட் என்ற இடத்தில் நடந்த போரில், ரஷியா பெற்ற வெற்றியின் நினைவாக இந்தச் சிலை அமைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com