மனு பாக்கரின் பிராண்ட் மதிப்பானது ரூ.20 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை இருந்த நிலையில், தற்போது ரூ.1 கோடி முதல் ரூ.1.5 கோடி வரை அதிகரித்துள்ளது. சில நிறுவனங்கள் அவர் பாரிஸில் இருக்கும்போதே பிராண்ட் மதிப்புக்கு ஒப்பந்தம் போட்டுவிட்டன. இனி மனுவின் வீட்டில் பண மழைதான்!
பாரிஸில் நடந்துகொண்டிருக்கும் 33 ஆவது ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் 10 மீ. பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதல், 10 மீ. ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் துப்பாக்கிச் சுடுதல் என இரு வெண்கலப் பதக்கங்களை மனு பாக்கர் வென்றார்.
மனு பாக்கரால் மூன்றாம் பதக்கம் கிடைக்கும் என்று இந்தியா எதிர்பார்த்திருந்தபோது, அவரால் மூன்றாம் போட்டியில் நான்காம் இடத்துக்கு மட்டுமே வர முடிந்தது. ஆனாலும், 124 ஆண்டுகளில் முதல் முறையாக ஒரு ஒலிம்பிக்ஸில் , 'இரு பதக்கங்களை அறுவடை செய்த இந்தியர் என்ற பெருமையை மனு பெற்றுள்ளார்.
இந்த சாதனைகளின் அடிப்படையில், இந்திய தனியார் நிறுவனங்கள் 'மனுவுக்கு வாழ்த்துகள்' என்ற அறிவிப்புடன் தங்களது நிறுவனங்களின் விளம்பரங்களை வெளியிட்டன. உடனே மானு பாக்கரும், , 'எனது அனுமதி பெறாமல் எனது படத்துடன் விளம்பரங்கள் வெளியிடும் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என்று அறிவித்ததுடன் தனது பிராண்ட் வேலைகளைச் செய்யும் நிறுவனத்தின் மூலம் ஐம்பதுக்கும் மேற்பட்ட நோட்டீஸ்களையும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அனுப்பியிருக்கிறார்.
டோக்கியோ ஒலிம்பிக்ஸில் பதக்கம் எதையும் பெறாமல் வெறுங்கையுடன் வந்த மனு நிதியுதவி கேட்டு இந்திய நிறுவனங்களை அணுகியபோது, பல நிறுவனங்கள் மறுத்துவிட்டன. சில நிறுவனங்கள் 20 லட்சம் ரூபாயைக் கொடுத்து பல ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போட்டுக் கொண்டுள்ளன. இப்போது நிலைமை மாறியுள்ளது.
இறகுப் பந்தாட்ட நட்சத்திர ஆட்டக்காரராக பி.வி.சிந்து போல மனுவும் 2 பதக்கங்களை வென்றதன் மூலம் பிரபலமாகிவிட்டார். மனு பாக்கரை தங்களின் நிறுவனத்தின் விளம்பரத் தூதுவராக ஒப்பந்தம் செய்ய நாற்பதுக்கும் அதிகமான நிறுவனங்கள் மனுவை அணுகியுள்ளன.
ரூ.20 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை இருந்த மனுவின் பிராண்ட் மதிப்பு தற்போது ரூ.1 கோடி முதல் ரூ.1.5 கோடி வரை எகிறியுள்ளது. சில நிறுவனங்கள் மனு பாரிஸில் இருக்கும்போதே ஒப்பந்தம் போட்டுவிட்டன.
அங்கே பாரிஸில் ஒலிம்பிக்ஸ் வளாகத்தில், கார்பன் வாயு வெளியாவதைக் குறைக்க வேண்டும் என்று ஒலிம்பிக்ஸ் அமைப்பாளர்கள் முடிவு செய்துள்ளதால் விளையாட்டு வீரர்கள் தங்குமிடத்தில் ஏ.சி. வசதி செய்து தரப்படவில்லை.
இந்திய வீரர்களுக்கு ஏற்ற உணவும் கிடைப்பதில்லையாம். உலர் பருப்புகள், உலர் பழங்கள், வேகவைத்த ப்ரோகோலி, வேகவைத்த காய்கறிகள், தயிர் சாப்பிட்டு சமாளித்து வருகின்றனர்.
'வீடு சென்று அம்மா சுமிதா பாக்கர் சமைத்துத் தரும் உணவை வயிறு நிறைய சாப்பிட வேண்டும்' என்கிறார் மனு.