பிரணாப்தா என்கிற மந்திரச் சொல்! - 205

சோனியா காந்திக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்கிற பட்டியலில் அப்போது வெகுசிலர் மட்டுமே இருந்தனர்.
பிரணாப்தா என்கிற மந்திரச் சொல்! - 205
Published on
Updated on
4 min read

சோனியா காந்திக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்கிற பட்டியலில் அப்போது வெகுசிலர் மட்டுமே இருந்தனர். மீரா குமார், பிரதீபா பாட்டீல் இருவரும் 10, ஜன்பத்துக்கு அடிக்கடி விஜயம் செய்யும் சோனியா காந்தியின் நெருக்கத்துக்குரியவர்கள். ஷீலா தீட்ஷித் அவ்வப்போது அவரை சந்திக்கப் போவது வழக்கம்.

மிக முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு அப்போது சோனியா காந்தி ஆலோசனை கேட்பது ஷீலா கெளலிடம் என்று எனக்குத் தெரியும். ஷீலா கெளலும் அதை மறுத்ததில்லை.

நேரு குடும்பத்துக்கும் ஷீலா கெளலுக்குமான தொடர்பு மிகவும் நெருக்கமானது. ஜவாஹர்லால் நேருவின் மனைவி கமலா நேருவின் சகோதரர் கைலாஸ்நாத் கெளலின் மனைவிதான் ஷீலா கெளல். அதனால், இந்திரா காந்தி அவருக்கு மிகவும் மரியாதையும், முக்கியத்துவமும் கொடுத்தார். தனது 1980 அமைச்சரவையில் தனிப் பொறுப்புடனான இணையமைச்சர் பதவியை வழங்கியிருந்தார்.

குடும்பத்தின் மூத்த உறுப்பினர் என்பதால் அவருக்கு சோனியா காந்தி மிகுந்த மரியாதை அளித்ததில் வியப்பில்லை. அவரை சந்திப்பதற்காக நான் மோதிலால் நேரு மார்கில் உள்ள அவரது பங்களாவுக்குச் சென்றபோது ஷீலா கெளல் வெளியே போயிருந்தார். அப்போதே அவருக்கு வயது 80ஐ தாண்டியிருந்தது. மருத்துவரைச் சந்திக்கச் சென்றிருப்பதாக உதவியாளர் தெரிவித்தார். நான் காத்திருந்தேன். அவர் ஒரு மணி நேரத்துக்குப் பிறகுதான் வந்தார்.

15 ஆண்டுகளுக்கும் மேலாக அவருக்கு என்னைத் தெரியும் என்பதால், மகிழ்ச்சியுடன் வரவேற்றார். ஷீலா கெளலுக்கும், ஜெயலலிதாவுக்கும் நெருக்கம் உண்டு. ஜெயலலிதா குறித்து அடிக்கடி விசாரித்துத் தெரிந்துகொள்வார் ஷீலா கெளல். அவர் மீது வழக்குகள் தொடரப்பட்டிருப்பதை குறிப்பிட்டு வருத்தம் தெரிவிப்பவர்களில் ஷீலா கெளலும் ஒருவர்.

பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசிவிட்டு மெதுவாக போஃபர்ஸ் ஆவணங்கள் வந்திருப்பது குறித்து நான் பிரஸ்தாபித்தபோது ஷீலா கெளலின் முகம் மாறியது. அதுபற்றி பேச அவர் விரும்பவில்லை என்றுதான் நான் நினைத்தேன். ஆனால், அவரே பேசத் தொடங்கினார்.

'நேரு குடும்பம் அரசியலில் இருக்கக் கூடாது என்பதில் எல்லா அரசியல் கட்சியினர் மத்தியிலும் ஒற்றுமை நிலவுகிறது. எங்கள் குடும்பத்தினர் மீது களங்கம் சுமத்தி, அரசியலில் இருந்து அகற்றிவிட வேண்டும் என்று எல்லோரும் துடிக்கிறார்கள். இப்போது போஃபர்ஸ் ஆவணங்கள் என்று சொல்லி சோனியா காந்தியை மிரட்ட நினைக்கிறார்கள்...'' என்று சொல்லி நிறுத்தினார் ஷீலா கெளல்.

நான் எதுவும் பேசாமல் அவர் மேலே என்னச் சொல்லப்போகிறார் என்று காத்திருந்தேன். நானாகக் கேட்க விரும்பவில்லை.

'நான் மூன்று முறை 10, ஜன்பத்துக்கு சென்று வந்தேன். சோனியா இதைப் பற்றி சட்டை செய்வதாகவே தெரியவில்லை. எனக்குத்தான் கோபம் வருகிறது.அவர் அப்படி ஒன்று வந்திருப்பது குறித்துப் பேசுவதுகூட கிடையாது'' என்று தொடர்ந்தார் அவர்.

நான் தெரிந்துகொள்ள விரும்பிய தகவல் கிடைத்துவிட்ட திருப்தியில் அவரிடமிருந்து விடைப்பெற்றேன்.

மோதிலால் நேரு மார்கிலிருந்து காங்கிரஸ் தலைமையகம் நோக்கி நடையைக் கட்டினேன். காங்கிரஸ் அலுவலகத்தில் கட்சித் தலைவர் சீதாரம் கேசரியின் அரசியல் செயலாளர் தாரிக் அன்வர் இருந்தார்.

காங்கிரஸ் கட்சி ஐக்கிய முன்னணியில் இணையும் என்றும், இணையாது என்றும் விவாதம் நடந்துகொண்டிருந்த நேரம் அது. போஃபர்ஸ் ஆவணங்கள், சீதாராம் கேசரியிடம் சிபிஐ நடத்திய விசாரணை ஆகியவற்றின் பின்னணியில் காங்கிரஸ் தனது ஆதரவை விலக்கிக் கொள்ளும் என்கிற வதந்தியும் பரவிக் கொண்டிருந்தது.

'ஐக்கிய முன்னணி அரசில் பங்குபெறுவது உள்ளிட்ட முடிவுகளை காங்கிரஸ் காரிய கமிட்டிதான் எடுக்க முடியும். இப்போதைக்கு ஐக்கிய முன்னணி அரசுக்கு வெளியில் இருந்து மட்டும் ஆதரவு தருவது என்கிற எங்களது கொள்கையில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்'' என்று தெரிவித்தார் தாரிக் அன்வர்.

'ஐக்கிய முன்னணி அரசில் காங்கிரஸ் சேர வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.மூப்பனார் கூறியிருப்பது குறித்து சீதாராம் கேசரி என்ன நினைக்கிறார்?''

'அவர் எதுவும் நினைக்கவில்ல. நாங்கள் ஐக்கிய முன்னணி அரசில் இணைவது இருக்கட்டும். முதலில் மீண்டும் காங்கிரஸில் இணைவது குறித்து ஜி.கே.மூப்பனாரும், தமாகாவினரும் முடிவெடுக்க வேண்டும் என்பதுதான் எங்களது நிலைப்பாடு'' என்று சிரித்தார் அவர்.

தாரிக் அன்வர் தெரிவித்த இதே கருத்தைத்தான், அன்று மாலையில் கே.கருணாகரனை அவரது சுநேரிபாக் வீட்டில் சந்தித்தபோது தெரிவித்தார். மூப்பனாரை காங்கிரஸில் இணையக் கோரியிருக்கிறேன் என்றும் என்னிடம் பகிர்ந்துகொண்டார் கே.கருணாகரன். அடுத்த நாள், தான் பிரதமரை சந்திக்க இருப்பதாகவும் என்னிடம் கூறினார் அவர்.

சீதாராம் கேசரிக்கும், பிரதமர் தேவே கெளடாவுக்கும் இடையேயான விரிசல் அதிகரித்து வந்தது. அதை சீராக்க விரும்பினார் பிரதமர். கே.கருணாகரனை பிரதமரே நேரில் சென்று சந்தித்தார் எனும்போது எந்த அளவுக்கு அதுகுறித்து பிரதமர் தேவே கெளடா கவலைப்பட்டிருக்க வேண்டும் என்று நான் நினைத்துக்கொண்டேன்.

பிரதமரும், கே.கருணாகரனும் என்ன பேசினார்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால், சீதாராம் கேசரி மீதான சிபிஐ விசாரணை தொடர்பாக நிச்சயம் பேசியிருப்பார்கள் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை.

தில்லி ஜவாஹர்லால் நேரு ஸ்டேடியத்தின் அருகேயுள்ள மத்திய புலனாய்வுத் துறையின் (சிபிஐ) அலுவலகத்தில் போஃபர்ஸ் ஆவணங்கள் குறித்து நிருபர் கூட்டம் நடைபெற இருப்பதாக தகவல் கிடைத்தது. அந்த அலுவலகம் நோக்கி விரைந்தேன்.

'சுவிட்சர்லாந்தில் இருந்து கொண்டுவரப்பட்டிருந்த போஃபர்ஸ் ஆவணங்களில் ஜெர்மன், பிரெஞ்ச், சுவிஸ் மொழிகளில் ரகசிய குறிப்புகள் காணப்படுகின்றன. அவற்றை மொழிபெயர்க்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன'' என்று தெரிவித்தார் சிபிஐ செய்தித் தொடர்பாளர்.

மொழி தடையாக இருந்தாலும் ஆய்வு செய்யும் பணி வேகமாக நடந்து வருவதாகவும், அடுத்த ஒரு வாரத்தில் ஊழலில் பங்குபெற்றவர்கள் குறித்த முக்கியமான தகவல்கள் கிடைக்கக் கூடும் என்றும் அவர் தெரிவித்தார். சிபிஐ இயக்குநர் ஜோகிந்தர் சிங் சில நாள்களில் பிரதமரை சந்திக்க இருப்பதாகவும், இதுவரையில் எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் குறித்து அவரிடம் விளக்குவார் என்றும் அவர் மேலும் சொன்னார்.

பத்திரிகையாளர் சந்திப்பு முடிந்ததும் இயக்குநர் ஜோகிந்தர் சிங்கை சந்தித்துப் பேச முடியுமா என்கிற முயற்சியில் நான் இறங்கிறேன். இயக்குநர் அலுவலகத்தில் எனது விவரக் குறிப்பை (விசிடிங் கார்ட்) அளித்துவிட்டு இயக்குநர் உடனான சந்திப்புக்கு நேரம் ஒதுக்கக் கோரினேன். அங்கிருந்து வெளியேறி, கன்னாட் ப்ளேஸில் உள்ள எனது அலுவலகம் நோக்கிப் பயணித்தேன்.

அலுவலகத்துக்குள் நான் நுழைந்ததுமே, சிபிஐ இயக்குநர் அலுவலகத்திலிருந்து எனக்கு அழைப்பு வந்ததாகச் சொன்னார்கள். தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது இயக்குநர் அலுவலகத்தில் இயக்குநர் இருப்பதாகவும், உடனே வந்தால் சந்திக்கலாம் என்றும் தெரிவித்தனர். அதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. சிபிஐ அலுவலகம் நோக்கி விரைந்தேன்.

நான் மட்டுமல்ல, என்னைப் போல மேலும் இரண்டு பத்திரிகையாளர்களும் அவரை சந்திக்க நேரம் கேட்டிருந்தார்கள். அவர்களும் வந்திருந்தனர். எங்கள் மூவரையும் ஒன்றாகச் சந்தித்தார் இயக்குநர் ஜோகிந்தர் சிங். நாங்கள் கேள்விகளை எழுப்புவதற்கு காத்திருக்காமல், அவரே தாம் சொல்ல விரும்பியதைப் பகிர்ந்துகொண்டார்.

'நான் அந்த ஆவணங்களை இன்னும் நேரிடையாக ஆய்வு செய்யவில்லை. ஐநூறு பக்கங்கள் கொண்ட அந்த ஆவணங்களில் உள்ள ரகசிய பெயர்களை கண்டுபிடிக்கும் பணி முழு வேகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சர்வதேசப் போலீஸ் நிர்வாக குழுவில் நான் இடம்பெற்றிருப்பதால், தேவைப்பட்டால் அதன் உதவியையும் நாடி பெயர்களைக் கண்டுபிடிப்போம்'' என்று விவரித்தார் ஜோகிந்தர் சிங்.

அவரிடமிருந்து விடைபெறத் தயாரானோம். அப்போது, என்னை மட்டும் அவர் இருக்கச் சொன்னபோது, உடனடியாக என்னை சந்திக்க வரச் சொன்னதற்கு வேறு ஏதோ ஒரு காரணமும் இருந்திருக்கிறது என்று எனக்கு புரிந்தது. நான் நினைத்தது தவறாகவில்லை.

தமிழகத்தில், பாட்டாளி மக்கள் கட்சியினர் 'ஈழத் தமிழர் பாதுகாப்பு மாநாடு' ஒன்றை சென்னையில் கூட்ட இருந்தனர். அது தமிழ்நாடு சட்டப்பேரவையில் பெரும் விவாதத்தைக் கிளப்பியது. சென்னையில் பிரபாகரன் படத்தை வைத்து ஊர்வலம் நடத்திய பாமகவினர், மாநாடு என்கிற பெயரில் ஆட்சிக்குப் பிரச்னை ஏற்படுத்த நினைக்கிறார்கள் என்பது திமுக, தமாகாவினரின் குற்றச்சாட்டு.

'தமிழ் ஈழப் பிரச்னையில் மத்திய அரசு தலையிட வேண்டும். பேச்சுவார்த்தைக்கு வழிகோல விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்க வேண்டும்'' என்பது பாமகவின் கோரிக்கை. விடுதலைப் புலிகளுக்கு தார்மிக ஆதரவு வழங்குவது குற்றமல்ல என்பது பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் நிலைப்பாடு.

'பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸூடன் நான் பேசினேன். விடுதலைப் புலிகளுக்கு வக்காலத்து வாங்கும் வகையில் யாரும் பேச மாட்டோம் என்று அவர் உறுதியளித்திருக்கிறார். தமிழக அரசுக்கு தர்ம சங்கடம் ஏற்படுத்தும் விதத்தில் எந்தத் தீர்மானமும் போடமாட்டோம் என்றும் தெரிவித்தார். விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசினால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள்; நீங்கள் குறுக்கிடக் கூடாது என்று அவரை எச்சரித்திருக்கிறேன்'' என்று முதல்வர் கருணாநிதி சட்டப் பேரவையில் தெரிவித்திருந்தார்.

சிபிஐ இயக்குநர் ஜோகிந்தர் சிங் என்னிடம் கேட்ட கேள்வி இதுதான் 'தமிழகத்தில் விடுதலைப் புலிகளுக்கு எந்த அளவுக்கு ஆதரவு இருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? திமுகவுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் ரகசியத் தொடர்பு நிலவுகிறதா? வை.கோபாலசாமியும் அவரது மதிமுகவும் எந்த அளவுக்கு விடுதலைப் புலிகளுடன் நெருக்கமாக இருக்கிறார்கள்?'

எனக்குத் தெரிந்த விவரங்களை அவரிடம் பகிர்ந்துகொண்டேன். அவரிடமிருந்து நான் விடைபெறும்போது, அவர் என்னிடம் கேட்ட கேள்வி, என்னை ஒரு விநாடி அதிர வைத்தது.

'நீங்கள் ஏன் பிரபாகரனை சந்திக்க முயற்சிக்கக் கூடாது? அவரை பேட்டி எடுங்களேன். நீங்கள் சென்று வருவதற்கு மறைமுகமாக எல்லா உதவிகளையும் நாங்கள் செய்து தருகிறோம்' என்று ஜோகிந்தர் சிங் எனக்கு வலை விரித்தார்.

பிரபாகரனுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள இந்திய அரசு விரும்புகிறதா அல்லது என்னை பயன்படுத்தி அவர் இருக்கும் இடம், சூழல் குறித்துத் தெரிந்துகொள்ள விரும்புகிறதா என்று எனக்கு நானே கேட்டுக்கொண்டேன். ஒருபுறம், பிரபாகரனை சந்திக்க வேண்டும். பேட்டி எடுக்க வேண்டும். ராஜீவ் காந்தி படுகொலை குறித்த அவரது கருத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்பினாலும், ஜோகிந்தர் சிங்கின் வேண்டுகோளை ஏற்றுக் கொள்ள நான் தயாராக இருக்கவில்லை.

ஜோகிந்தர் சிங் என்னை விடுவதாக இல்லை. 'நீங்கள் தயங்குவதாகத் தெரிகிறது. பயப்படத் தேவையில்லை. உங்களை எங்கள் உளவாளியாக போகச் சொல்லவில்லை. நீங்கள் ஒரு பத்திரிகை நிருபராக சென்று வாருங்களேன். அதில் என்ன தவறிருக்கிறது?'' என்று என்னை அவர் ஆற்றுப்படுத்த முற்பட்டார்.

'பிரபாகரனுக்கு நெருக்கமான சிலர் உங்களுக்கு நண்பர்கள் என்று எனக்குத் தெரியும். அவர்கள் மூலம் சந்திக்க ஏற்பாடு செய்து கொண்டால் மற்றவற்றை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்'' என்றபடி என்னை நோக்கிப் புன்னகைத்தார் ஜோகிந்தர் சிங்...

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com