இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

இப்போதுபோல விரல் நுனியால் தட்டினால் எந்தவொரு தகவலும் வந்துவிழும் இணையதளப் புரட்சி ஏற்படாத கடந்த நூற்றாண்டின் சாதனையாளர்கள் குறித்து சிந்தித்தால் மலைப்பு ஏற்படுகிறது.
இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026
Updated on
2 min read

இப்போதுபோல விரல் நுனியால் தட்டினால் எந்தவொரு தகவலும் வந்துவிழும் இணையதளப் புரட்சி ஏற்படாத கடந்த நூற்றாண்டின் சாதனையாளர்கள் குறித்து சிந்தித்தால் மலைப்பு ஏற்படுகிறது. முறையூர் அரு. சொக்கலிங்கம் செட்டியாரின் நினைவு மலரைப் படித்தபோது, தன்னலமற்ற கடந்த தலைமுறை தமிழ்ப் பற்றாளர்களை இருகரம் கூப்பி வணங்கத் தோன்றுகிறது.

செட்டி நாட்டரசர் ராஜா சர்

அண்ணாமலை செட்டியாரின்

ரங்கூன், கல்கத்தா நிறுவனங்களில் மேலாளராகப் பல ஆண்டுகள் பணியாற்றியவர் என்பதுடன் நின்றுவிடவில்லை முறையூர் அரு. சொக்கலிங்கம் செட்டியாரின் வாழ்க்கை. 1921 முதல் 1940 வரை பர்மாவில் (இன்றைய மியான்மர்) வியாபார நிமித்தம் அவர் தங்கி வந்தார் என்றாலும், தமிழ்ப் பணியை மறக்கவில்லை.

கடந்த நூற்றாண்டின் தமிழருக்கு உலக வரலாற்றையும், உலகளாவிய பேராளுமைகளையும் அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர் வெ.சாமிநாத சர்மா. நவசக்தி, தேசபக்தன் இதழ்களில் 'தமிழ்த் தென்றல்' திரு.வி.க.வுடன் இணைந்து பணிபுரிந்த சாமிநாத சர்மா திரு.வி.க.வின் உடல் நலிவுக்குப் பின் சுற்றத்தார் ஆதரவுடன் ரங்கூனில் ஒரு சிறு வியாபாரம் நடத்தி வந்தார்.

அடக்கத்துக்கு உறைவிடமான சாமிநாத சர்மாவை பர்மா தலைநகர் ரங்கூனில் ஓர் எழுத்தாளர் என்றுகூட பலர் அறிந்திருக்கவில்லை. அவரை அடையாளம் கண்டு, அந்த அறிஞரின் ஆற்றல் வீணாகிவிடக்கூடாது என்று முனைந்து செயல்பட்ட பெருமைக்குரியவர் அரு. சொக்கலிங்கம் செட்டியார்தான்.

வெ. சாமிநாத சர்மாவை நூல்கள் எழுதவைத்து, நாடறிந்த எழுத்தாளராக்கிய பெருமை அரு. சொ.-வினுடையது. எந்தவித லாப நோக்கமும் இல்லாமல், சாமிநாத சர்மாவின் நூல்களை மட்டுமே பிரசுரிப்பதற்காக 1935-இல் அவர் ரங்கூனில் 'பிரபஞ்சஜோதி பிரசுராலயம்' என்கிற பதிப்பகத்தை நிறுவி 52 நூல்களை வெளிக்கொணர்ந்திருக்கிறார்.

1940 முதல் 1965 வரையில் கல்கத்தாவுக்கு வந்த பிறகும், அவரது தமிழ்ப் பணியில் தொய்வு ஏற்படவில்லை. தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர், பாரதி தமிழ்ச் சங்கத் தலைவர், ஹவுரா திருவள்ளுவர் கலை மன்றத்தின் தலைவர் என்று இயங்கியதுடன் நண்பர்களுடன் இணைந்து 'ஜோதி' என்கிற மாத இதழையும் வெளிக்கொணர்ந்திருக்கிறார். முறைசைக் கிழார் என்கிற பெயரில் 1930-இல் 'மலேயாவும் அதன் மக்களும்' என்று ஆனந்தவிகடனில் இவர் எழுதிய கட்டுரைதான் அநேகமாகத் தமிழில் எழுதப்பட்ட முதலாவது பயணக் கட்டுரையாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

திருப்பத்தூருக்கு அருகில் உள்ள சொந்த ஊரான முறையூரில் தம் இல்லத்தில் பல்லாயிரக்கணக்கான சிறந்த நூல்களுடன் அவர் அமைத்திருந்த 'சொக்கலிங்கன்ஸ் ஹோம் லைப்ரரி' குறித்து நினைவு மலரில் குறிப்பு இருக்கிறது. அந்த நூலகம் இப்போதும் இயங்குகிறதா, என்னவானது என்று தெரியவில்லை.

அகவை 83-இல் மறைந்த முறையூர் அரு. சொக்கலிங்கம் செட்டியாருக்கு முதலாண்டு நினைவின்போது 1988-இல் நினைவு மலர் வெளிக்கொணர்ந்திருக்கிறார் அவரது திருமகனார் சொ. அருணப்பிரகாஷ். இல்லையென்றால், அரு.சொ. குறித்துப் பதிவு செய்ய எனக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்திருக்குமா?

நமது 'தமிழ்மணி' பகுதியில் 65 வாரங்கள் தொடர்ந்து வெளிவந்த 'இலக்கியச் சுடர்' வழக்குரைஞர் த.இராமலிங்கம் எழுதிய 'கம்பனின் தமிழமுதம்' இப்போது 'கம்பன் தமிழமுதம்' என்கிற பெயரில் புத்தக வடிவம் பெற்றிருக்கிறது. மேலும் 35 கட்டுரைகளையும் சேர்த்து 100 கட்டுரைகளாகப் பெரு வடிவம் பெற்றிருக்கிறது.

'இந்த நூல் உருவாவதற்கு முழு முதல் காரணம் 'தினமணி' ஆசிரியர் கி.வைத்தியநாதன் என்கிற அவரது தோரணவாயில் பதிவு முற்றிலுமாக உண்மையல்ல. வழக்குரைஞர் இராமலிங்கத்தைக் கம்பன் குறித்து எழுதச் சொல்லலாம் என்று எனக்கு ஆலோசனை சொன்னவர் அப்போது உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்து இப்போது தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவராக இருக்கும் நீதிபதி வெ. இராமசுப்பிரமணியன். நீதியரசரின் கருத்தை வழிமொழிந்து ஆமோதித்தவர் மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் துணைத் தலைவர் டாக்டர் சுதா சேஷய்யன். நாங்கள் மூன்று பேருமே வழக்குரைஞர் இராமலிங்கம் கம்ப காதை குறித்து எழுத வேண்டும் என்று விழைந்தோம்.

இந்த வாரத்துக்கான 'கம்பனின் தமிழமுதம்' இன்னும் வரவில்லையே என்று ஒரு முறைக்கூடக் கேட்க வைக்காமல், முன்கூட்டியே கட்டுரை அனுப்பித் தந்த அவரது ஒழுக்கமும், கடமை உணர்வும் எங்கள் ஆசிரியர் குழுவின் பாராட்டைப் பெற்றதையும் இங்கே நான் பதிவு செய்ய வேண்டும். 'கம்பனின் தமிழமுதம்' தொடரின் முதல் வாசகனும் நான்தான், ரசிகனும் நான்தான். இந்த வாரம் எந்தப் பாடலை அவர் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்று ஆர்வத்துடன் காத்திருப்பேன். அந்தப் பாடலுடன் இன்றைய நிகழ்வுகளை, வரலாற்று எடுத்துக்காட்டுகளை அவர் லாவகமாக இணைத்து, கம்பனின் கவிதையை ரசிக்க வைக்கும் உத்தி, இதுவரையில் வேறு யாரும் முயற்சி செய்யாதது.

வாராவாரம் தொடராகப் படித்தபோது கிடைக்காத இன்பம், புத்தக வடிவில் படிக்கும்போது கிடைப்பதை உணர முடிகிறது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு (பிப்.4) காலமான சென்னை பல்கலைக்கழகத் தமிழ்மொழித் துறையின் மேனாள் தலைவரும், தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் துணைத் தலைவருமான பேராசிரியர்

வ.ஜெயதேவனை, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் ம.இராசேந்திரன் ஒரு முறை எனக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார். நெருங்கிப் பழக வாய்ப்புக் கிடைக்கவில்லை.

வத்தலகுண்டிலிருந்து வெளிவரும் 'மகாகவி' காலாண்டிதழில், அக்.-டிசம்பர் 2025 இதழில் வெளிவந்திருக்கிறது வ.ஜெயதேவன் தமிழில் மொழிபெயர்த்திருக்கும்

ஃபைஸ் அகமது ஃபைஸ் எழுதிய 'இலையுதிர் காலம் வந்தபோது...' என்கிற கவிதை. அதிலிருந்து சில வரிகள்.

மரங்களுக்கு இலையுதிர்

காலம் வந்தது

கனவுகளை அறிவிக்கும் பறவைகள்

அவற்றின் பாடலில் இருந்து

நாடு கடத்தப்பட்டன

ஓ! கடவுளே கருணை காட்டுங்கள்

சில மரங்களுக்கு மீண்டும்

பச்சை நிறத்தைப்

பரிசாகக் கொடுங்கள்

ஒரு பறவை பாடட்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com