ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: ஹீமோகுளோபின் குறைவதைத் தடுக்க வழி என்ன?
எனக்கு வயது 72. கடந்த இரண்டு வருடங்களாக, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ரத்த வாந்தி எடுத்து மிகவும் சிரமப்படுகிறேன்.


எனக்கு வயது 72. கடந்த இரண்டு வருடங்களாக, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ரத்த வாந்தி எடுத்து மிகவும் சிரமப்படுகிறேன். காரணம் கல்லீரல், மண்ணீரல் கோளாறு என பாண்டிங் செய்கிறார்கள். ஆனாலும், மூன்று மாதத்தில் திடீரென ரத்த வாந்தி வருகிறது.
பாண்டிங் விட்டுப் போவதால், இப்படி வருகிறது என்கிறார்கள். உடனே ஹீமோகுளோபின் குறைந்துவிடுகிறது. நான் சைவக் குடும்பம். மதுப்பழக்கம் கிடையாது. இதை குணப்படுத்த என்ன செய்யலாம்?
-க.ராஜேந்திரன், மதுரை.
இதற்கு 'ஊர்த்வக ரத்தபித்தம்' என்று ஆயுர்வேதம் பெயரிட்டுள்ளது. இதயத்துக்கு மேல் பகுதி முழுவதும் கபதோஷத்தினுடைய இருப்பிடமாகையால், அதன் துணையோடு பித்தம், ரத்தத்துடன் கலந்து வெளியேறுகிறது.
கசப்பு மற்றும் துவர்ப்புச் சுவையானது கப, பித்த, ரத்தங்களால் ஏற்படும் எந்த உபாதைக்கும் சிறப்பான தீர்வைத் தரும் என்பதால், அவற்றையே உணவாகவும், மருந்தாகவும் நீங்கள் உட்கொள்ளும் நிலையில், ரத்த வாந்தியைக் கட்டுப்படுத்தும். குணப்படுத்தவும் செய்யும்.
கசப்புச் சுவை கொண்ட அகத்திக்கீரை, பொன்னாங்கண்ணீக்கீரை, முருங்கைக் கீரை, சுண்டைக்காய் போன்றவற்றையும் துவர்ப்புச்சுவையை உடைய வாழைப்பூ, வாழைத் தண்டு, அத்திக்காய், விளாக்காய், தாமரைத் தண்டு ஆகியவற்றையும் உணவாகச் சமைத்து உண்பதில் நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
கசப்பான மருந்துகளில் பிரம்மி அல்லது வல்லாரை, வெட்டிவேர், தூய சந்தனம், நிலவேம்பு, வேப்பம், கடுகு ரோஹிணி, தகவிதை, அதில் கட்டை, குடகப்பாலை, புங்கை, கோரைக்கிழங்கு, ஆடோதோடை இலை, சீற்றீந்தில்கொடி, அதிவிடயம், வசம்பு போன்றவையும், துவர்ப்புச் சுவையுடைய மருந்துகளில் கடுக்காய், தான்றிக்காய், கருங்காலிக்கட்டை, முத்து, பவிழம், காவிமண் போன்றவை சிறந்தவை.
ரத்த வாந்தியை நிறுத்த மாசிக்காயை அம்மியில் நீர்விட்டு இழைத்துவரும் பசையை தேன்விட்டுக் குழைத்து காலை, இரவு உணவுக்குப் பின்னர் சாப்பிடவும்.
ஆடோதோடை இலையை நுண்ணியதாக நறுக்கி, தண்ணீரில் கலந்து வேகவைத்து இலையை மட்டும் இடித்துப் பிழிய வரும் சாறை குளிர்ந்தவுடன் சிறிது தேன் கலந்து, காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட உகந்தது.
மாங்கொட்டைப் பருப்பை உலர்த்திப் பொடித்து, சாத்துடன் பிசைந்து சிறிது சாப்பிட்டு வரலாம்.
கோலரக்கு எனும் கொம்பரக்கு இலவம்பிசின் போன்றவை நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். நன்கு கழுவி, உலர்த்திப் பொடியாக்கி, சிறிது தேன் குழைத்து ஒருநாளில் பல தடவை சிறிது, சிறிதாகக் குழைத்து நக்கிச் சாப்பிடுவதால் விரைவில் குணமாகும்.
வெட்டிவேர், சந்தனசிராத்தூள் ஆகியவற்றை பானைத் தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் சாப்பிடுவதால் ரத்தக் கசிவு மட்டுப்படும். மாம்பருப்பைப் போலவே நா3வல் கொட்டைப் பருப்பையும் தூளாக்கி, சூடான சாதத்துடன் பிசைந்து நெய்யுடன் சாப்பிடலாம்.
ரத்த வாந்தியால் ஏற்படும் ஹீமோகுளோபின் குறைபாடு நீங்க, 'தாடிமாதிகிருதம் ‘ எனும் நெய் மருந்தை காலை, இரவு உணவுக்குப் பிறகு அரை மணி நேரம் நக்கிச் சாப்பிடவும். சுமார் ஐந்தூ முதல் பத்து மில்லி வரை போதுமானது. இது செரிப்பதில் சற்றுக் கடினமானது என்பதால், சிறிது வென்னீர் அருந்தவும்.
ஆடோதோடையினால் தயாராகும் 'வ்ருஷக்ருதம்' எனும் நெய் மருந்தை சிறிது தேன்விட்டுக் குழைத்து, ஒரு நாளில் பல தடவை நக்கிச் சாப்பிடவும். நெய் மருந்து பத்து மில்லி, தேன் ஐந்து மில்லி என்ற அளவில் இருப்பது நலம்.
(தொடரும்)
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...