பேல்பூரி

இயற்கையும் நம்ம கூட விளையாட ஆரம்பிச்சிடுச்சு...?
சித்தரிக்கப்பட்டது
சித்தரிக்கப்பட்டது
Published on
Updated on
2 min read

கண்டது

(ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகே ஒரு ஜவுளிக்கடையின் பெயர்)

'சொல்லமாட்டேன்'

-டாக்டர் பி.ஜி.குருசாமிப்பாண்டியன், சத்திரப்பட்டு.

(மதுரையை அடுத்த மேலூரில் உள்ள உணவகத்தின் பெயர்)

'ஒரப்பு உணவகம்'

-சீனிசெந்தில்குமார், தேனி.

(கோவை காந்திபுரத்தில் உள்ள உணவகத்தின் பெயர்)

'சோறு முக்கியம்'

-சங்கரி முத்தரசு, கோவை- 25.

கேட்டது

(திருச்சி பேருந்து நிலையத்தில் மழையின்போது இருவர் பேசியது)

'இயற்கையும் நம்ம கூட விளையாட ஆரம்பிச்சிடுச்சு...?'

'என்ன செய்யறீங்க?'

'இப்ப 'புயல்'.. அப்ப 'புயல்'ன்னு இந்த 'காற்றழுத்த தாழ்வு மண்டலம்' கண்ணாமூச்சு.. ஆடி இருக்கிறதே.. அதை செய்யறேன்...'

-அ.சுஹைல் ரஹ்மான், திருச்சி.

(சென்னை மாநகரப் பேருந்து ஒன்றில் நடத்துநரும், பயணியும்..)

'பஸ் டிக்கெட்டு சரியான சில்லறை இல்லாதவங்கள இறங்குங்க? என்னிடம் சுத்தமா சில்லறை

இல்லை..?'

'வாங்க சேர்ந்தே இறங்கலாம்....'

-நா.நாகராஜன், ஊரப்பாக்கம்.

(செங்கல்பட்டு பூங்கா ஒன்றில் நடைபயிற்சியின்போது இருவர் பேசியது)

'நேத்து ஏன் வாக்கிங் வரலை..?'

'வீட்டிலேயே வேலையப்பா?'

'என்ன வேலை...?'

'சொல்ல முடியாத வேலை..!'

-ஜி.அர்ஜுனன், செங்கல்பட்டு.

யோசிக்கிறாங்கப்பா!

புரிந்துகொள்ளாதவர்களை மறதியில் வையுங்கள்.

புரிந்துகொண்டவர்களை மனதில் வையுங்கள்.

-எஸ்.மாரிமுத்து, சிட்லப்பாக்கம்.

மைக்ரோ கதை

அந்த சிறிய நகரின் ஒதுக்குப்புறத்தில் இருந்த அம்மன் கோயிலுக்கு எப்போதும் பக்தர்கள் கூட்டம் வருகை தரும்.

அன்றிரவு பூஜை முடிந்தவுடன் கோயில் நடை அடைக்கப்பட்டது.

அதற்கு முன்பே சிங்காரம் கோயிலின் ஒரு மூலையில் ஒளிந்திருந்தான்.

வாயில் கதவின் அருகே காவலாளி, குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருந்தார். விடியற்காலை நிசப்தமாக இருந்தது.

காவலாளி தூங்குவதை நோட்டமிட்ட சிங்காரம், கருவறையை நோக்கி உள்ளே சென்று ஐந்து பவுன் நகைகளைத் திருடி வெளியேற முயன்றான்.

அப்போது அங்கு வலம்புரி சங்கு இருந்ததை சிங்காரம் பார்த்தான்.

'வலம்புரி சங்கை வாயில் வைத்து மனமார ஊதினால், நினைத்தது நடக்கும்' என்று ஜோசியர் சொன்னது நினைவுக்கு வர, சிங்காரம் சங்கை எடுத்து ஊதினான்.

காவலாளியும், ஊர் மக்களும் விழிக்க, சிங்காரம் பிடிபட்டான். காவல் நிலையத்தில் அமரவைக்கப்பட்டான்.

-அ.கௌரிசங்கர், வேளச்சேரி.

எஸ்.எம்.எஸ்.

தனியாக இருந்தாலும்

தன்னம்பிக்கையோடு இரு!

-ஏ.மூர்த்தி, திருவள்ளூர்.

அப்படீங்களா!

யூடியூபில் விடியோ பதிவேற்றப்பட்டு விட்டால், பெரும்பான்மையான பார்வையாளர்கள் பெருகிவிட்டால் விடியோ உரிமையாளருக்கு சன்மானமும் கிடைக்கும்.

சில விடியோக்கள் உலகம் முழுவதும் சென்றடைய மொழி தடையாக இருந்தது. விடியோவுக்கு கீழே மொழிபெயர்ப்பு வாக்கியங்கள் இடம்பெற்றாலும் அது காண்போரின் கவனத்தை சிதறடிக்கும் என்பதால் பெரும் வரவேற்பைப் பெறவில்லை.

அதேநேரத்தில் தினசரி அதிக எண்ணிக்கையில் விடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுவதால் அதை மொழி மாற்றம் செய்து வெளியிடவும் யாருக்கும் நேரமில்லை.

இதைப் போக்க ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன்கூடிய 'ஆட்டோ டப்பிங்' சேவையை யூடியூப் அறிமுகம் செய்துள்ளது.

கூகுளின் 'அலவுட்' உருவாக்கியுள்ள இந்தப் புதிய தொழில்நுட்பம் விடியோவை தானாகவே குறிப்பிட்ட மொழிகளுக்கு டப்பிங் செய்து மாற்றிக் கொள்ளும். ஆங்கிலத்தில் உள்ள விடியோக்கள் ஹிந்தி, பிரான்சு, ஜெர்மனி, இந்தோனேசியா, இடாலியன், ஜாப்பனீஸ், போர்ச்சுகல், ஸ்பானீஷ் ஆகிய மொழிகளில் எளிதில் டப்பிங் செய்து வெளியிட்டுவிடலாம்.

இதேபோல், மேற்குறிப்பிடப்பட்டுள்ள இந்த மொழிகளில் உள்ள விடியோக்கள் அப்படியே ஆங்கிலத்தில் டப்பிங் செய்து வெளியிடலாம்.

விடியோக்களை பதிவேற்றம் செய்பவர்கள் தங்கள் விடியோக்களை யூடியூப் ஸ்டூடியோஸில் உள்ள 'லாங்குவேஜஸ்' பிரிவுக்கு சென்று டப்பிங் செய்து விடியோ முன்னோட்டத்தைக் காணலாம்.

விடியோ சரியில்லை என்றால் அப்படியே அழித்துவிடலாம். டப்பிங் செய்யப்பட்ட விடியோவாக இருந்தால், 'ஆட்டோ டப்புடு' என்ற குறிப்போடு வெளியாகும். இது போலி ஏஐ விடியோக்களை கண்டறிய உதவும். கல்வி, பொழுதுபோக்கு, சமையல், கலை, விளையாட்டு எனப் பல் துறை விடியோ பதிவேற்றுபவர்களிடம் இந்த புதிய சேவை பெரும் வரவேற்பைப் பெறும்.

-அ.சர்ப்ராஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை Dinamani APP பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com