கோலிவுட் லைன் அப்!

சிவகார்த்திகேயனின் 'அயலான்' படத்துக்குக் கிடைத்து வரும் வரவேற்பில், ஏ.ஆர்.ரஹ்மானும் மகிழ்ந்திருக்கிறார்.
கோலிவுட் லைன் அப்!

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஏ.ஆர். ரஹ்மான் லைப் !

சிவகார்த்திகேயனின் 'அயலான்' படத்துக்குக் கிடைத்து வரும் வரவேற்பில், ஏ.ஆர்.ரஹ்மானும் மகிழ்ந்திருக்கிறார். 'பொன்னியின் செல்வன்', 'மாமன்னன்' மலையாளத்தில் பிரித்விராஜின் 'ஆடு ஜீவிதம்' எனப் படங்களை ரொம்பவே தேர்ந்தெடுத்து இசையமைத்து வருகிறார் ரஹ்மான்.

இந்த நிலையில் 'அயலான்' படத்துக்குப் பின்னர், இப்போது 'லால் சலாம்' படத்துக்கு இசையமைத்து வருகிறார். மேலும் அவர் கைவசம் உள்ள படங்கள் குறித்த அப்டேட் இனி.:

ஏ.ஆர்.ரஹ்மான் சில ஆண்டுகளாகவே தமிழில் கவனம் செலுத்தி வருகிறார். அண்மையில் 'ஆக்ஸ்போர்டு யூனியன் டிபேட் சொசைட்டி' மாணவர்களிடம் நிகழ்ச்சி ஒன்றில் அவரது பேச்சு பலரையும் வியக்க வைத்தது.

'எதிர்காலத்தைப் பற்றி நாம் பெரிதாகக் கணிக்க முடியாது. ஆனால், அற்புதமான ஒன்று உங்களுக்காகக் காத்திருக்கிறது. இதுபோன்ற எண்ணங்களும், நம்பிக்கைகளும்தான் என்னை இயக்கிக் கொண்டிருக்கின்றன' என்று பேசியிருந்தார்.

ஒரே சமயத்தில் பல படங்களுக்கு இசையமைக்காமல் லிமிட்டான எண்ணிக்கையில் மட்டுமே இசையமைத்துதிருக்கிறார். இப்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் 'லால் சலாம்' படத்துக்கு இசையமைத்துள்ளார். படம் பிப். 9-ஆம் தேதி வெளியாவதால், அதன் பின்னணி இசை வேலைகளில் மும்முரமாக இருக்கிறார்.

இதற்கிடையே 'பொன்னியின் செல்வன்' படத்துக்குப் பின்னர் மீண்டும் மணிரத்னத்துடன் 'தக் லைஃப்' படத்தில் இணைந்திருக்கிறார். கமல்ஹாசன், மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான் இணையும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளது. கமலின் 'தெனாலி' படத்துக்குப் பின்னர் கிட்டத்தட்ட ஒரு நீண்ட வருட இடைவெளிக்குப் பின் கமலுடன் இணைந்திருக்கிறார் ரஹ்மான்.

'தக் லைஃப்'பில் கமலையும் ஒரு பாடல் பாட வைக்கவிருக்கிறார் என்கிறார்கள். மலையாளத்தில் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் படங்களை கையில் வைத்திருக்கிறார். இதற்கடுத்து தெலுங்கில் 'உப்பென்னா' இயக்குநர் புச்சிபாபு அடுத்து ராம் சரணை வைத்து இயக்கும் படத்துக்கும் இசை ரஹ்மான்தான் என்கின்றனர். இதற்கான அறிவிப்பு விரைவில் வரலாம்.

அடுத்தடுத்து படங்கள்; பரபரப்பாகும் கமல்!

'விக்ரம்' படத்துக்குப் பின் பிரபாஸின் 'கல்கி 2898 ஏ.டி.' , பிக் பாஸ் சீசன் 7 படப்பிடிப்புகளில் கவனம் செலுத்தினார் கமல். இடையே அ.வினோத், மணிரத்னம் இருவரின் இயக்கத்தில் நடிப்பதாக அறிவித்தார். இப்போது மணிரத்னம் இயக்கத்தில் 'தக் லைஃப்' படப்பிடிப்பில் இருக்கிறார் கமல். இந்நிலையில் கமலின் 237-ஆவது படத்தை இரட்டையர்களான அன்பறிவ் இயக்குகின்றனர் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. அந்த வகையில் ஆச்சரியமூட்டும் கமலின் அடுத்தடுத்த படங்களின் நிலவரங்கள் குறித்த தகவல்கள் இனி:

கமலின் திரைப்பயணத்தில் 'விக்ரம்' படத்துக்குப் பிறகு இயக்குநர்கள் அ.வினோத், மணிரத்னம் ஆகியோரின் படங்களில் நடிப்பதாகத் தகவல்கள் வெளியாகின. அதன் முன்னோட்ட விடியோக்களும் வெளிவந்தன. கமலின் பிறந்த நாள் ஸ்பெஷலாக 'தக் லைஃப்' அறிவிப்பும் வெளியானது. ஷங்கரின் இயக்கத்தில் கமல் நடித்துவரும் 'இந்தியன் 2' கமலின் 231-ஆவது படமாகும். இந்தப் படத்தை ஏப்ரலுக்குக் கொண்டுவரத் திட்டமிடுகின்றனர். 232-ஆவது படம்தான் ஏற்கெனவே வெளியான 'விக்ரம்.' 233--ஆவது படத்தைத்தான் முதலில் அ.வினோத் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. அந்த லாஜிக்படி, 234-ஆவது படமாக 'தக் லைஃப்' உருவாகிவருகிறது.

தொடர்ந்து பிரபாஸூடன் கமல் நடித்துவரும் 'கல்கி 2898 ஏ.டி' அவரின் 235-ஆவது படமாகும். இதற்கிடையே 'இந்தியன் 3' பாகமும் ரெடியாகி வருவதால் அதுவே கமலின் 236-ஆவது படமாகக் கருதப்படுகிறது.

இதற்கடுத்த படமே அன்பறிவ் இயக்கும் இந்தப் படமாகும். 'தக் லைஃப்' மல்டி ஸ்டார் படம் என்பதால் த்ரிஷா, துல்கர் சல்மான், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா லட்சுமி எனப் பலரும் நடிக்கின்றனர். பிக் பாஸ் நிறைவடைந்துவிட்டதால் கமல் இப்போது 'தக் லைஃப்' படப்பிடிப்புக்கு வருகிறார். இது 'நாயகன்' படத்தின் தொடர்ச்சி என்றும், 'பீரியட் பிலிம்' அல்ல என்றும் சொல்லப்பட்டது. ஆனால், படக்குழுவினர் இரண்டையுமே இப்போது மறுத்து வருகின்றனர். படப்பிடிப்பு இப்போது தொடங்கியுள்ளது.

20 வருடத்தில் 80 படங்கள் !

சினிமாவில் 20-ஆவது ஆண்டைக் கொண்டாடுகிறார் நயன்தாரா. 80 படங்களுக்கு மேல் நாயகியாக நடித்து வருகிறார். 'மாயா', 'அறம்', 'கனெக்ட்' உட்பட பல ஹீரோயின் சென்ட்ரிக் படங்களில் ஸ்கோர் செய்த நயன்தாரா, இப்போது கதாநாயகிக்கான கதைகளில் மீண்டும் கவனம் செலுத்துகிறார். திருமணத்துக்குப் பிறகு, படங்கள் தேர்வில் மிகக் கவனமாக இருக்கிறார். அவரது 20 வருடத் திரைப்பயணத்தில் இப்போது 75 படங்களைத் தாண்டிவிட்டார். அவரது 75-ஆவது படமாக 'அன்னபூரணி' வெளிவந்துள்ளது.

இதற்கிடையே மாதவன், சித்தார்த் நடிக்கும் ஷிகாந்தின் 'டெஸ்ட்' படத்திலும் நடித்து வருகிறார். அடுத்து பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் 'மண்ணாங்கட்டி சின்ஸ் 1960' என்ற படத்தில் நடித்து வருகிறார். யோகி பாபுவுடன் இதில் நடிக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்தை யூடியூப்பரான டியூட் விக்கி இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடந்து வருகிறது. இதே நிறுவனத்துக்கு மீண்டும் ஒரு படம் நடிக்கிறார் நயன்.

'நெஞ்சுக்கு நீதி', 'கனா' படங்களை இயக்கிய அருண்ராஜா காமராஜ் அதை இயக்குகிறார். இதனை அடுத்து 'கொடி', 'பட்டாஸ்' படத்தை இயக்கிய துரை செந்தில் குமாரின் இயக்கத்திலும் நடிக்கிறார். நயனின் கணவர் விக்னேஷ் சிவன் தயாரிக்கும் இதன் படப்பிடிப்பு மார்ச் மாதத்தில் நடக்கிறது. பாலிவுட் படமான 'ஜவான்' வெற்றியினால் ஹிந்தியிலிருந்தும் நயன்தாராவுக்கு வாய்ப்புகள் வருகின்றன. பாலிவுட் விஷயத்தில் பொறுமையாகப் படங்களைத் தேர்வு செய்யுங்கள் என அட்லி அறிவுறுத்தியிருப்பதால், தற்போது அங்கே கதைகள் மட்டும் கேட்டு வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com