சாதனை மாணவிகள்..!

மது அருந்தினால் வாகனம் இயங்காத வகையிலான சென்சார் கருவிகளைக் கண்டுபிடித்து ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பித்துள்ளனர்.
சாதனை மாணவிகள்..!
Published on
Updated on
1 min read

திருவாரூர் நியூ பாரத் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவிகள் மு.அ. தமிழருவி, க.ஜனனி ஆகியோர் ஆசிரியர் பா.ராம்பிரபுவின் வழிகாட்டுதலுடன் எஸ்.சி.இ.ஆர்.டி. ஆதரவுடன் நடைபெற்ற ஜவாஹர்லால் நேரு அறிவியல் கண்காட்சியில், 'மது அருந்தினால் வாகனம் இயங்காத வகையிலான சென்சார் கருவிகளைக் கண்டுபிடித்து ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பித்துள்ளனர்.

இதுதொடர்பாக மாணவிகள் தமிழருவி, ஜனனி ஆகியோரிடம் பேசியபோது:

'இந்தியாவில் வாகன விபத்துகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. 2021-ஆம் ஆண்டைவிட 2022-இல் 11.9 சதவீத விபத்துகள் அதிகரித்துள்ளன.

தேசிய அளவில் நடைபெற்ற விபத்துகளில் தமிழகத்தில் 12.5 சதவீத விபத்துகள் நடைபெற்றுள்ளன. உயிரிழப்புகளின் எண்ணிக்கையில் தமிழகத்துக்கு இரண்டாவது இடம். முதலிடம் உத்தரப்பிரதேசத்துக்கு.

2015-ஆம் ஆண்டு முதல் கணக்கெடுத்தால் தேசிய நெடுஞ்சாலைகளில்தான் அதிக விபத்துகள் நடைபெற்றுள்ளன.

தினமும் செய்தித்தாள்களில் சாலை விபத்துகள் தொடர்பான செய்தியைப் பார்க்கும்போது பயமாக இருக்கும். இதில் பெரும்பாலான விபத்துகள் குடிபோதையில் நடப்பதாகத் தெரிந்தது. அதிலும் இருசக்கர வாகனங்களை விட கார் போன்ற வாகனங்களில் அதிகம் பேர் உயிரிழக்கின்றனர்.

இதைத் தவிர்க்க என்ன செய்யலாம் என வழிகாட்டி ஆசிரியர் ராம்பிரபுவுடன் ஆலோசித்தோம். இரு சென்சார்களைப் பொருத்திப் பரிசோதித்தோம். வெற்றிகரமாக இருந்தது.

இதற்கு சுமார் ரூ.7 ஆயிரம் வரை செலவானது. இந்தக் கண்டுபிடிப்பை வணிகரீதியாகத் தயாரிக்கும்போது மேலும் சிறப்பாக உருவாக்க முடியும். கார் வாங்குபவர்களுக்கும் இது பெரிய செலவாக இருக்காது. ஆனால் இதன் உபயோகம் மிகவும் பெரிதாக இருக்கும். இதன் மூலம் உயிரிழப்புகளைப்பெருமளவில் தடுக்க முடியும்.

ஒரு சென்சார் குடிபோதையில் வாகனம் இயக்கினால் என்ஜினை அணைத்துவிடும் தன்மையுடையதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மற்றொரு சென்சார் வாகனம் இயக்குபவரின் கருவிழியின் தன்மையை வைத்து சாலையோரமாக வாகனத்தை நிறுத்திவிடும் தன்மையுடையதாக வடிவமைக்கப்படுள்ளது.

வாகனத்தை இயக்குபவர் இயக்கும்போது குடிக்க முயற்சித்தாலோ அல்லது சுய நினைவை இழந்தாலோ வாகனத்தின் வேகம் குறைக்கப்பட்டு இயக்கம் நிறுத்தப்படும்.

இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணிவதைச் சட்டமாக்கியது போல இந்த சென்சார்களையும் வாகனங்களில் கண்டிப்பாகத் பொருத்த அரசு உத்தரவிட வேண்டும்.

இந்த ஆய்வுக் கட்டுரை மாவட்ட, அளவில் சிறந்ததாகத் தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசு பெற்றது. கடலூரில் நடைபெற்ற மாநில அளவிலான கண்காட்சியில், இதே கண்டுபிடிப்பு 4-ஆவது இடம் பெற்று தென்னிந்திய அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றது. விஜயவாடாவில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான கண்காட்சியில் சிறப்புப் பரிசுக்கு உரியதாகத் தேர்வு செய்யப்பட்டது.

இதுபோன்ற கண்டுபிடிப்புகளுக்கு அரசு ஊக்கம் தந்தாலே பல்வேறு புதிய ஆராய்ச்சிகளுக்கு அது வித்திடும். சாலை விபத்துகள் குறைந்து மனித உயிரிழப்புகள் தடுக்கப்பட்டால் அது நாட்டுக்கே நன்மை பயக்கும்தானே' என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com