பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 181

அதிமுக பிரமுகர்கள் சிறையில் - அரசியல் களம் காத்திருக்கும் புதிய திருப்பங்கள்
பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 181

ஆர்.மார்கபந்து என்னிடம் தந்த காகிதத்தில், ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள அதிமுக பிரமுகர்களின் பட்டியல் இருந்தது. அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள், கைது, ஜாமீன், சிறைச்சாலை விவரங்கள் தரப்பட்டிருந்தன.

அந்தப் பட்டியலில் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த 11 அமைச்சர்கள் இடம் பெற்றிருந்தனர். ஆர். இந்திரகுமாரி, கே.ஏ. செங்கோட்டையன், இ. மதுசூதனன், கு.ப. கிருஷ்ணன், டி.எம். செல்வகணபதி, எஸ். (ராஜ) கண்ணப்பன், சேடப்பட்டி முத்தையா, எஸ். முத்துசாமி, செ.அரங்கநாயகம், பொன்னுசாமி ஆகியோரில் பலர் திமுகவில் ஐக்கியமானது மட்டுமல்ல, அமைச்சர்களாகவும், முக்கியத் தலைவர்களாகவும் இருக்கிறார்கள்.

லாயிட்ஸ் சாலை அதிமுக தலைமையகத்திலிருந்து தி.நகர் உஸ்மான் சாலையில் உள்ள எனது அலுவலகத்துக்கு வந்தபோது, எனக்கு பெங்களூரிலிருந்து ஒரு செய்தி காத்திருந்தது. உடனே நான் பெங்களூர் புறப்பட்டு வரும்படி எனக்குத் தகவல் அனுப்பி இருந்தார் முன்னாள் முதல்வர் எஸ். பங்காரப்பா. அவருடனான நெருக்கம் குறித்து ஏற்கெனவே குறிப்பிட்டிருக்கிறேன்.

நரசிம்ம ராவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, காங்கிரஸிலிருந்து பிரிந்து கர்நாடக காங்கிரஸ் கட்சி என்று தனிக்கட்சி தொடங்கி இருந்தார் அவர். பிரிந்துபோன காங்கிரஸ் தலைவர்களை மீண்டும் காங்கிரஸில் இணைக்கும் இடைக்காலத் தலைவர் சீதாராம் கேசரியின் முனைப்பின் காரணமாக, பங்காரப்பா மீண்டும் காங்கிரஸில் இணையத் தீர்மானித்திருந்தார்.

பெங்களூரில் நடக்க இருக்கும் இணைப்பு விழாவில் கலந்துகொள்ள சென்னையிலிருந்து காரில் பயணிக்க இருந்த ஒரு நண்பரிடம் என்னையும் அழைத்துக் கொண்டு வரும்படி பங்காரப்பா கூறியிருந்தார். அந்த நண்பர் எனது அலுவலகத்துக்கு வந்திருந்தார். அடுத்த நாள் பெங்களூரு கிளம்புவதாகவும், நானும் வருவதாக இருந்தால் அவருடன் இணைந்து கொள்ளலாம் என்றும் தெரிவித்தார். பங்காரப்பாவின் வேண்டுகோளைத் தட்ட மனமில்லாததால் பெங்களூர் கிளம்ப முடிவெடுத்தேன்.

பங்காரப்பா எதையுமே பிரம்மாண்டமாகச் சிந்திப்பவர். அவரது திட்டமிடல் மட்டுமல்ல, அவரது அரசியலும் வித்தியாசமானது. இன்றைய நரேந்திர மோடி அரசியலைப் போல, பங்காரப்பாவின் அரசியலும் கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் என்று அனைவரின் பேராதவையும் ஈர்க்க வல்லது.

பெங்களூர் அரண்மனை மைதானத்தில் நடந்த அந்த இணைப்பு விழாவின் பிரம்மாண்டம் குறித்து இன்று வரை கர்நாடக அரசியல் விமர்சகர்கள் பேசுகிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். பலத்த மழையையும் பொருட்படுத்தாமல் பல்லாயிரக் கணக்கானோர் - அதில் பெரும்பகுதியினர் பங்காரப்பாவின் கர்நாடக காங்கிரஸ் ஆதரவாளர்கள் - அந்த இணைப்பு விழாவில் குவிந்திருந்தனர்.

தில்லியிலிருந்து சீதாராம் கேசரியும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் குலாம்நபி ஆசாதும் வந்திருந்தனர். அப்போது கர்நாடக சட்டப் பேரவைக் காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த (இப்போதைய அகில இந்திய காங்கிரஸ் தலைவர்) மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த தரம்சிங் மட்டுமல்லாமல், முன்னாள் முதல்வர் வீரப்ப மொய்லி, பின்னாளில் முதல்வரான எஸ்.எம். கிருஷ்ணா, மத்திய அமைச்சர்களாக இருந்த ஜாபர் ஷெரீஃப், சங்கரானந்த் போன்றவர்கள் மேடையில் இருந்தனர்.

என்னை ஆச்சரியப்படுத்தியது என்னவென்றால், நமது தமிழ்நாட்டில் இருந்தும்கூட மாநில காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன், கே.வீ. தங்கபாலு உள்ளிட்ட சில தலைவர்கள் அந்த இணைப்பு மாநாட்டுக்கு வந்திருந்ததுதான். கர்நாடக காங்கிரஸ் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த குமார் பங்காரப்பா உள்ளிட்ட ஐந்து சட்டப் பேரவை உறுப்பினர்களும், பங்காரப்பாவுடன் காங்கிரஸில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

அன்றைய பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தைத் தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் சீதாராம் கேசரிக்குத் தனது வீட்டில் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார் பங்காரப்பா. அதில் முக்கியமான காங்கிரஸ் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர். அந்த விருந்தில் என்னையும் கலந்துகொள்ளச் சொல்லி இருந்தார் அவர். அரசியல்வாதிகளின் விருந்து என்பதால் நான் சற்று ஒதுங்கியே ஓரமாக இருந்தேன்.

ஜாபர் ஷெரீஃப், மல்லிகார்ஜுன கார்கே இருவருடனும் பேசிக் கொண்டிருந்த சீதாராம் கேசரியின் பார்வை அந்தப் புல்வெளி பஃபே விருந்தில், தூரத்தில் உணவருந்திக் கொண்டிருந்த என்மீது பட்டதை நான் கவனிக்கவில்லை. அருகிலிருந்த நண்பர் ஒருவர், சீதாராம் கேசரி என்னைக் கூர்ந்து கவனிப்பதாகக் குறிப்பிட்டபோது, நான் அவரை நோக்கி நகர்ந்தேன்.

பங்காரப்பா அளிக்கும் அரசியல் தொடர்பான விருந்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த பத்திரிகையாளனான நான் கலந்துகொண்டதை அவர் சற்றும் எதிர்பார்க்காததில் வியப்பில்லை.

''நீ எப்படி இங்கே வந்திருக்கிறாய்? பங்காரப்பா உனது நண்பரா? சரி... சரி... உனக்கு நண்பராக இல்லாதவர்கள் யார்?'' என்றபடி என்னை அருகில் அமரச் செய்தார் அவர். சீதாராம் கேசரி என்னிடம் காட்டிய நெருக்கம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. எல்லோருடைய பார்வையும் என்மீது குவிந்திருப்பதை நான் உணர முடிந்தது.

என்னை அருகில் வரச்சொல்லி அவர் கேட்ட கேள்வி என்ன தெரியுமா? நானே ஒரு நிமிடம் திகைத்து விட்டேன்.

''ஜெயலலிதாஜியை நீ ஜெயிலில் சென்று பார்த்தாயா? அவரை எப்படி நடத்துகிறார்கள்? ஊழல் செய்யாத அரசியல்வாதி யார் இருக்கிறார்கள்? ஜெயலலிதா மீது வழக்குத் தொடரலாம். அதற்காக அவரை ஜெயிலில் அடைத்து சித்திரவதை செய்வது எல்லாம் மிகவும் தவறு...''

''சித்திரவதை எல்லாம் செய்யவில்லை. அவருக்குப் போதிய வசதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன.''

''உனக்கு எப்படி தெரியும்? நீ போய் பார்த்தாயா? ஜெயலலிதாஜியை சந்திக்க உனக்கு வாய்ப்புக் கிடைத்தால், நான் அவரைப் பற்றி உன்னிடம் விசாரித்ததாகச் சொல்...''

நான் தலையை ஆட்டினேன். நான் சந்திக்க வாய்ப்பில்லை என்று அவரிடம் எப்படித் தெரிவிப்பது? அவருக்கு ஜெயலலிதா மீது இருந்த அக்கறை எனக்குப் புரிந்தது. அதற்கு மேலும் அவருடன் நான் இருந்தால், மற்றவர்கள் எரிச்சலடைவார்கள் என்கிற இங்கிதம் தெரிந்து விலகிக் கொண்டேன்.

அடுத்த நாள் பங்காரப்பாவின் சதாசிவ நகர் வீட்டில் அவருடன் காலை சிற்றுண்டி அருந்திவிட்டு சென்னை திரும்புவது என்று நானும் அவரது நண்பரும் முடிவெடுத்திருந்தோம். நடைபயிற்சியை முடித்துக்கொண்டு எங்களுக்காகக் காத்திருந்தார் பங்காரப்பா.

சிற்றுண்டியின்போது அவரிடம் சீதாராம் கேசரி என்னிடம் பேசியதைத் தெரிவித்தேன். சிரித்தார்.

''நானும் அது தொடர்பாகத்தான் உங்களிடம் பேசுவதற்கு பெங்களூருக்கு வரச்சொன்னேன்.''

நான் அவரை வியப்புடன் பார்த்தேன்.

''என்.டி.ஆரின் மனைவி லெட்சுமி சிவபார்வதி ஜெயலலிதாவை சிறையில் சென்று சந்தித்து அவருக்கு ஆறுதல் தெரிவிக்க விரும்புகிறார். சந்திப்புக்கு அனுமதி கேட்டு அவர் கடிதம் அனுப்பியும் எந்த பதிலும் இல்லை என்று கூறுகிறார். அந்தக் கடிதத்தின் நகல் இது. அனுமதி கேட்டு இன்னொரு கடிதம் தந்திருக்கிறார். அவர் சிறையில் ஜெயலலிதாவை சந்திக்க நீங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்.''

''அதிமுக தொண்டர்களேகூடஅவரை சிறையில் சந்திக்கிறார்கள். முக்கியமான தலைவர்கள் சந்தித்து ஆலோசனை கேட்கிறார்கள். ஜெயலலிதாவின் வழக்குரைஞர்கள் அவரை சந்திக்க அனுமதிக்கப்படுகின்றனர். எனக்குத் தெரிந்து அரசுத் தரப்பிலிருந்தோ, சிறைச்சாலைத் தரப்பிலிருந்தோ சந்திப்பதற்கு எந்தத் தடையும் இருப்பதாகத் தெரியவில்லை.''

''பிறகு ஏன் கடிதம் கொடுத்து மூன்று நாள்களாகியும் லெட்சுமி சிவபார்வதிக்கு ஜெயலலிதாவை சந்திக்க அனுமதி தரப்படவில்லை?''

''விசாரிக்கிறேன். எனக்குத் தெரிந்து பிரச்னை எதுவும் இருக்க வழியில்லை.''

நாங்கள் அவரிடம் விடைபெற்று சென்னை நோக்கிக் காரில் பயணமானோம். சென்னை திரும்பியதும் காவல் துறைத் தலைவர் ராஜ்மோகனை சந்திப்பதா, தலைமைச் செயலர் கே.ஏ. நம்பியாரை சந்திப்பதா, இல்லை முதல்வரையே நேரில் சந்தித்து லெட்சுமி சிவபார்வதி ஜெயலலிதாவை சந்திக்க விரும்புவதைத் தெரிவிப்பதா என்கிற யோசனையுடன் சென்னை வந்து சேர்ந்தேன்.

1996-இல் கருணாநிதி தலைமையில் அமைந்திருந்த திமுக அரசு, ஜெயலலிதாவுக்கும் அவரது அமைச்சரவை சகாக்களுக்கும் எதிராகத் தொடுத்திருந்த ஊழல்கள் குறித்த விசாரணையிலும், வழக்குகளிலும் அரசியல் இல்லை என்று சொல்லிவிட முடியாது. அதே நேரத்தில், தொடரப்பட்ட வழக்குகள் ஜோடிக்கப்பட்டவை என்றோ, ஆதாரமற்றவை என்றோ சொல்லிவிடவும் முடியாது. இன்னொன்றையும் இங்கே குறிப்பிட வேண்டும்.

அப்பழுக்கற்ற நிர்வாகப் பின்னணியுள்ள அதிகாரிகளைத் தேர்ந்தெடுத்துப் பொறுப்புள்ள பதவிகளில் முதல்வர் கருணாநிதி நியமித்திருந்தார். நிர்வாக ரீதியாக எந்தவித பாரபட்சமோ, அரசியல் தலையீடோ இருந்துவிடக் கூடாது என்பதிலும் அவர் கவனமாக இருந்தார் என்றுதான் கூற வேண்டும்.

பெரிய இடத்து அழுத்தங்களுக்கு முன்னால், நேராக மத்திய சிறைச்சாலையில் சிறைத் துறை அதிகாரியை சந்தித்துப் பேசுவது என்று தீர்மானித்து அவரைத் தொடர்பு கொண்டேன். உடனடியாக வரச்சொன்னார். சென்று விவரம் சொன்னபோது, அவருக்கே வியப்பாக இருந்தது. என்னுடன் தெலுங்கு தேசம் (என்.டி.ஆர்.) கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. ஒருவரும் வந்திருந்தார்.

அதற்கு முன்னால் தரப்பட்டதாகக் கூறப்படும் கடிதம் தனது கவனத்துக்கே வரவில்லை என்றும், இன்னொரு கடிதம் தரும்படியும் கேட்டார் அந்த அதிகாரி. லெட்சுமி சிவபார்வதியுடன் எத்தனை பேர் ஜெயலலிதாவை சந்திக்க விரும்புகின்றனர், அவர்கள் பெயர், விவரம் உள்ளிட்டவற்றையும் தரும்படி கேட்டார்.

''சந்திக்க விரும்புகிறாரா இல்லையா என்பது ஜெயலலிதா மேடத்தின் விருப்பம். எங்கள் தரப்பில் இதில் எந்தப் பிரச்னையும் கிடையாது'' என்று தெரிவித்த அந்த அதிகாரியிடம் நான் கேட்டேன் -

''மேலிடத்தில் இதற்கு அனுமதி பெற வேண்டியதில்லையா?'' சிரித்தபடியே, 'இல்லை' என்று தலையாட்டினார் அவர்.

நாங்கள் இருவரும் வெளியே வந்து விட்டோம். அடுத்த நாளே சந்திக்க வரும்படி அந்த அதிகாரி எனக்குத் தகவல் அனுப்பினார். லெட்சுமி சிவபார்வதி ஏற்கெனவே சென்னை வந்துவிட்டதாகவும், அவருடன் அவரது கட்சியைச் சேர்ந்த ஏழு எம்.எல்.ஏக்களும் வந்திருப்பதாகவும் என்னுடன் வந்த எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

போயஸ் கார்டனில் உள்ள ஒரு பங்களாவில் தங்கி இருந்தார் லெட்சுமி சிவபார்வதி. திருப்பதியில் என்.டி.ராமா ராவ் குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மாவைப் பார்க்க வந்திருந்தபோது இருந்த லெட்சுமி சிவபார்வதிக்கும், இப்போதைய லெட்சுமி சிவபார்வதிக்கும் மிகப் பெரிய மாற்றம் தெரிந்தது. அவர் என்னை அடையாளம் தெரிந்து கொண்டார். பழைய நினைவுகள் வந்ததால் கண்கள் கலங்கின.

ஜெயலலிதாவுடனான அவரது சந்திப்புக்கு பங்காரப்பா ஏற்பாடு செய்யச் சொன்னதைத் தெரிவித்தபோது, அவர் தலையாட்டி நன்றி தெரிவித்தார். பங்காரப்பாவை 'அண்ணைய காரு' என்று குறிப்பிட்டார். அடுத்த நாள் காலையில் சுமார் 10.30 மணிக்கெல்லாம் சிறைச்சாலை முகப்புக்கு எம்.எல்.ஏக்களுடன் வந்துவிடும்படி சொல்லிவிட்டு நான் கிளம்பினேன்.

ஒரு நிமிடம் நிற்கச் சொல்லிவிட்டு, என்னருகில் வந்து எனது கைகளைப் பற்றிக்கொண்டார்.

''நீங்களும் எங்களுடன் அந்த சந்திப்பின்போது இருக்க வேண்டும்'' என்கிற கோரிக்கையை வைத்தபோது, எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.