கோலிவுட் ஸ்டூடியோ!

'மால்யதா' என்கிற ஆண்டாள் திருப்பாவையை விவரிக்கும் ஆங்கில நூல் சென்னையில் வெளியிடப்பட்டது.
கோலிவுட் ஸ்டூடியோ!

எனக்கு கர்வம் கிடையாது 

'மால்யதா' என்கிற ஆண்டாள் திருப்பாவையை விவரிக்கும் ஆங்கில நூல் சென்னையில் வெளியிடப்பட்டது.   இந்த நிகழ்வில்,  மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

விழாவில் பேசிய இளையராஜா, 'நான் சிவ பக்தன். இருப்பினும் திருவாசகத்தை ஒலிப்பதிவு செய்ததைப்போல, திவ்யப் பிரபந்தத்தையும் ஒலிப்பதிவு செய்தேன். சரியான நேரம் வரும்போது அதை வெளியிடுவேன். முன்பெல்லாம்  மாதம் முப்பது நாளும் எனக்கு வேலை இருக்கும். தினமும் காலையில் ஒரு பாடல், மதியம் ஒரு பாடல் என நாள் முழுவதும் வேலை பார்த்துக் கொண்டே இருப்பேன். காலை 7 மணி  முதல் பிற்பகல் 1 மணி வரையும் ஒரு கால்ஷீட், பிறகு மதியம் ஒரு கால்ஷீட் என வேலை பார்ப்பேன். இப்போது எல்லாம் அது கிடையாது. இரவு முழுவதும் வேலை பார்க்கிறார்கள், ஒரு பாடல் பதிவுக்கே 6 மாதம், ஏன் ஒரு வருடம்கூட எடுத்துக் கொள்கிற இசையமைப்பாளர் எல்லாம் இருக்கிறார்கள். அவர்களை நான் குறை சொல்லவில்லை. அவர்களுக்கு அது வரவில்லை. வந்தால் தானே பண்ண முடியும். 

நான் ஒன்றும் கர்நாடக சங்கீதத்தில் எல்லாம் கரை கண்டு வந்தவன் அல்ல. 'இசைஞானி' என்ற பெயருக்கு நான் தகுதியானவனா என்று என்னைக் கேட்டால் அது கேள்விக்குறிதான் என்பேன். எனக்கு எந்த கர்வமும் கிடையாது. அதையெல்லாம் நான் சிறு வயதிலேயே தூக்கி எறிந்துவிட்டேன். சிறுவயதில் நான் நன்றாக 'ஹார்மோனியம் வாசிக்கிறேன்'  என்று பிறர் சொல்லும்போது எனக்கு கொஞ்சம் கர்வம் வந்தது. மக்கள் கை தட்டி பாராட்டினர். ஆனால், மக்கள் மெட்டுக்குத்தான் கை தட்டுகிறார்கள், அதை வாசிக்கும் என் திறமைக்கு இல்லை என்று புரிந்துகொண்டேன். மக்கள் தங்கள் பாட்டுக்குக் கை தட்டி அதை ரசிக்கின்றனர். அவ்வளவுதான் என்பதை நன்றாகப் புரிந்துகொண்டேன். அதனால் கர்வத்தில் இருந்து எப்போதோ நான் விடுபட்டுவிட்டேன். எந்த புகழ் மொழியும், பாராட்டுகளும் எனக்கு ஒட்டாது' என்று பேசியுள்ளார்


மதுரையில் சூர்யா

சூர்யாவின் அடுத்தடுத்த 'லைன் அப்'  வியக்க வைக்கிறது. 'கங்குவா' படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கிறது.

அடுத்து சுதா கொங்கராவின் 'புறநானூறு' அதனை அடுத்து ஹிந்திப் படம் என பிஸியாக இருக்கிறார் சூர்யா. 'கங்குவா' ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தில் நடந்த கதை இது. பத்து மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் படம் தயாராகி வருகிறது.  ஏற்கெனவே சொன்னபடி, 'கங்குவா' படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன்னரே நிறைவடைந்து விட்டாலும், , அதன் பேட்ச் ஒர்க் வேலைகள் இப்போது நடந்து வருகின்றன. அதில், சூர்யாவின் போர்ஷன் இன்னும் அரை நாள் எடுக்க வேண்டியிருக்கிறது என்பதால், வரும் வாரத்தில் அதில் பங்கேற்கிறார் சூர்யா. 

'கங்குவா' படப்பிடிப்பு நிறைவடைந்தாலும், அதன் பேட்ச் ஒர்க் வேலைகள் சென்னையில் நடைபெற்று வருகிறது. கடந்த நவம்பர் மாதமே, சூர்யாவின் போர்ஷன் முழுவதும் எடுத்து முடிக்கப்பட்டது. அதன் நிறைவு நாள் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில், சூர்யாவுக்கும் லேசாக காயமானது நினை
விருக்கலாம். 

வெளிநாட்டில் ஓய்வில் இருந்து விட்டு அவர் வந்திருப்பதால், சூர்யாவின் பேட்ச் ஒர்க்கை வரும் வாரத்தில் எடுக்கத் திட்டமிட்டுள்ளனர்.இதில்,  பட வில்லனான பாபி தியோல் மோதும் காட்சிகளின் பேட்ச் ஒர்க் வேலைகள் நடக்கின்றன. அடுத்த வாரத்தோடு 'கங்குவா'வின் மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிடுகின்றன.

அதனையடுத்து, முழுக்க,  முழுக்க கிராபிக்ஸ் வேலைகள் தொடங்குகின்றன. எனவே படத்தை கோடை விடுமுறையில் கொண்டு வரத் திட்டமிட்டு வருகிறார்கள். 'கங்குவா'வை முடித்துக் கொடுத்துவிட்டதால், சூர்யா அடுத்து நடிக்கும் 'புறநானூறு' படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

'சூரரைப் போற்று'விற்குப் பிறகு சுதா கொங்கராவின் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் 'புறநானூறு'. இந்தப் படத்தில் துல்கர் சல்மான், நஸ்ரியா, விஜய்வர்மா எனப் பலரும் நடிக்கிறார்கள். 

1950-ஆம் ஆண்டிலிருந்து 1965 வரையிலான காலகட்டத்தில் நடக்கும் கதையாக உருவாகி வருகிறது. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் நூறாவது படம் என்பதால், இசையில் சிறப்புக் கவனம் செலுத்தி வருகிறார்.  மதுரை ஏரியா தான் படத்தின் கதைக்களம் என்பதால், மதுரை மக்கள் பலரும் படத்தில் நடிக்கின்றனர். இதற்கான ஆடிஷன்கள் நடந்து முடிந்துவிட்டது.  


மீண்டும் இணையும் வெற்றி கூட்டணி

தனுஷின் 'கேப்டன் மில்லர்' பட விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. விழாவில் தனுஷ், அவரின் இரு மகன்கள், பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், குமரவேல், காளி வெங்கட் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். 

தனுஷின் 'கர்ணன்' படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் பேசுகையில்,  'தனுஷ் சாரோட 'கேப்டன் மில்லர்' லுக் பார்த்ததும் பயமாக இருந்துச்சு. கர்ணன்னுக்குப் பிறகு தனுஷ் சார்கிட்ட படம் பண்றதுக்கு சைன் பண்ணினேன்.ஆனா, நான் சில படங்களில் கமிட்டானதுல அது தள்ளிப் போயிருச்சு. அடுத்து தனுஷ் சார் கூட நான் பண்ணப் போற படம், 'கர்ணன்' படத்தைவிட பெருசா இருக்கணும்னு அதுக்கான வேலையைத் தீவிரமா பார்த்துக்கிட்டு இருக்கேன். நான் அதைப் பண்ணுவேன்னு தனுஷ் சாரும் என்னை பயங்கரமாக நம்புறாரு?  என் கரியர்ல முக்கியமான படமா இருக்க மாதிரி பண்ணணும். எல்லாத்தையும் தாண்ட கூடிய படமா அதை பண்ணணும். தனுஷ் சார் நம்புற சினிமாவை, அவரை திருப்திபடுத்துற மாதிரியான கதையைச் சொன்னாலே போதும்' என்று நெகிழ்ந்தார் மாரி செல்வராஜ்.


வில்லனாக நடிப்பது ஏன்?

தமிழில் அறிமுகமாகி முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி, தெலுங்கு, ஹிந்தி போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில், கத்ரீனா கைஃப் உடன்  இணைந்து 'மெரி கிறிஸ்துமஸ்' என்ற படத்தில் நடித்திருக்கிறார். 

இந்தத் திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது.   மும்பையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் விஜய் சேதுபதியிடம் தொடர்ச்சியாக வில்லன் கதாபாத்திரங்களில் நடிப்பது ஏன் என்று கேட்கப்பட்டிருக்கிறது. 

அதற்குப் பதிலளித்த அவர், 'வில்லனாக நடிப்பது எனக்குப் பிடித்திருக்கிறது. நிஜ வாழ்க்கையில் யாரையும் டார்ச்சர் செய்யவோ அல்லது கொலை செய்யவோ முடியாது. இதே வில்லன் கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கும்போது அதற்கான வாய்ப்புகள் கிடைக்கின்றன. நிஜத்தில் கோபமோ அல்லது ஈகோவோ இருந்தால் அதை வெளிப்படுத்தாமல் பணிவாகத்தான் இருக்க முடியும்.  ஆனால் திரைப்படங்களில் உணர்ச்சிகளோடு விளையாட முடியும். இதற்காகத் தயவு செய்து என்னைத் தவறாக நினைக்க வேண்டாம். உணர்ச்சி வெளிப்பாடுகள் என்பது, உணவு மற்றும் சுவையைப் போன்றது. நான் அனைத்து சுவைகளையும் கொண்டிருக்க விரும்புகிறேன்' என்று கூறியிருக்கிறார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com