பாலிவுட் ஹீரோயின்ஸ்

பாலிவுட் கதாநாயகிகள் சிலர் தங்களது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவுகளை இங்கே காணலாம்.
பாலிவுட் ஹீரோயின்ஸ்

பாலிவுட் கதாநாயகிகள் சிலர் தங்களது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவுகளை இங்கே காணலாம்.


ராமர் சிலை குறித்து கங்கனாவின் பதிவு

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றுள்ள அயோத்தி ராமர் கோயிலில் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை விழாவில்,   முக்கிய அரசியல் தலைவர்களும், பிரபலங்களும்  பங்கேற்றனர்.  ஒவ்வொரு நாளும் பல்வேறு ஆன்மிக நிகழ்வுகள் அயோத்தியில் நடத்தப்பட்டு வருகின்றன.

ராமர் சிலையை மைசூரைச் சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் என்பவர்தான் வடிவமைத்திருக்கிறார். இந்தச் சிலை 300 கோடி ஆண்டுகள் பழைமையான கல்லிலிருந்து செதுக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சிலையை வடிவமைத்த சிற்பி அருண் யோகிராஜை பாராட்டி நடிகை கங்கனா தனது இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். 'சிறு வயதில் ராமர் இப்படித்தான் இருந்திருப்பார் என்று நான் ஒரு உருவத்தை நினைத்திருந்தேன். இன்று என் கற்பனைகள் உயிர் பெற்றுள்ளன.  மனதைக் கவரும் விதமாக இந்தச் சிலை இருக்கிறது. இந்த சிலையை வடிவமைத்த அருண் யோகிராஜ் மீது நிறைய அழுத்தங்கள் இருந்திருக்கும்.  அதைக் கடந்து அவர் இதைச் சாதித்திருக்கிறார்! கடவுளே உங்கள் முன் தோன்றி இருக்கிறார். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்!' என்று  கங்கனா  பதிவில் கூறியிருக்கிறார்.

வாட்ஸ் ஆஃப் மூலம் மோசடி- வித்யா பாலன் குற்றச்சாட்டு 

ஆன்லைன் மோசடிகள் பாலிவுட்டையும் விட்டு வைக்கவில்லை.  ஏற்கனவே பல நடிகர், நடிகைகள் ஆன்லைன் மோசடியில் தங்களது பணத்தை பறிகொடுத்துள்ள நிலையில்,  புதிதாக வித்யாபாலன் சிக்கி இருக்கிறார். 

இந்த நிலையில், அவர் தனது இன்ஸ்டாகிராமில் புதிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'தனது பெயரில் மர்ம நபர் வாட்ஸ் ஆஃப் மூலம் செயல்பட்டு மோசடியில் ஈடுபட்டுள்ளார். இந்த நம்பர்,  வாட்ஸ் ஆஃப்பில் எனது புகைப்படத்தை டி.பி.யில் வைத்துக்கொண்டு தான் வித்யாபாலன் என்று கூறி மோசடி வேலையில் ஈடுபட்டு வருவதாக எனக்கு தெரிய வந்துள்ளது. எனவே அது போன்ற நபர்களிடமிருந்து அழைப்பு அல்லது மெசேஜ் வந்தால் அதற்கு பதிலளிக்க வேண்டாம்'  என்று பதிவிட்டுள்ளார்.

இந்தப் பதிவுக்கு அவரது ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துகளைப் பின்னூட்டமாகப் பதிவிட்டு வருகின்றனர். 

இதற்கு முன்பு பாலிவுட் நடிகர் சோனு சூட் போன்று நடித்து மோசடி செய்த நபர் மும்பையில் கைது செய்யப்பட்டார். அதோடு சி.பி.ஐ.அதிகாரிகள் மற்றும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகளாக நடித்து திடீரென தொழிலதிபர்கள் வீடுகளில் ரெய்டு நடத்தி பணத்தை பறித்து செல்லும் சம்பவங்களும் நடந்திருக்கின்றன.  

வித்யாபாலன், பிரதிக் காந்தி இணைந்து புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கான அறிவிப்பு  குறித்தும் இருவரும் சோஷியல் மீடியா பக்கத்திலும் பதிவிட்டுள்ளனர். இப்படம் 2021-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டதாகும்.

இஷாவின் திருமண வாழ்க்கை கசந்தது

தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்தவர் நடிகை இஷா கோபிகர். தமிழில் 'என் சுவாசக் காற்றே', 'நெஞ்சினேலே', 'நரசிம்மா' உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். தற்போது கம்பேக்காக சிவகார்த்திகேயனின் 'அயலான்' படத்திலும் நடித்திருக்கிறார். 

2009-ஆம் ஆண்டு தொழிலதிபர் திம்மி நரங்க் என்பவரை இஷா  திருமணம் செய்து கொண்டார். 1995-ஆம் ஆண்டு 'மிஸ் இந்தியா'  பட்டம் வென்ற இஷா கோபிகர் - நரங்க் தம்பதிக்குப் பெண் குழந்தை ஒன்று இருக்கிறது. 'டான்', 'கம்பெனி' உட்பட ஏராளமான வெற்றி படங்களில் நடித்துள்ள இஷா கோபிகருக்கும் அவரது கணவருக்கும் இடையே சமீபகாலமாகக் கருத்து வேறுபாடு இருந்து வந்தது.  இருவரும் முறைப்படி விவாகரத்து பெற்றுவிட்டனர். 

இஷா கோபிகர் தனது மகளுடன் தனியாகச் சென்றுவிட்டார்.முதலில் இருவரும் ஜிம் ஒன்றில் சந்தித்துத்தான் நண்பர்களாகி பின்னர் காதலித்தனர். அதனைத் தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். மிஸ் இந்தியாவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் தெலுங்கு படங்களில் நடித்துள்ள போதிலும் அப்படங்கள் பெரிய அளவில் ஹிட்டாகவில்லை. இதையடுத்து 2000--ஆம் ஆண்டு பாலிவுட்டில் நுழைந்தார். ஹ்ரித்திக் ரோஷனுடன் முதல் ஹிந்தி படத்தில் நடித்தார். அதன் பிறகு ஏராளமான படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருக்கிறார். சினிமா மட்டுமல்லாது அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். ' எத்தனை முயற்சிகள் எடுத்த போதிலும் சேர்ந்து வாழ முடியவில்லை. இனி நல்லதே நடக்கும்' என விவகாரத்து குறித்து பதிவிட்டுள்ளார் இஷா. 

10 வருடங்களை கடந்த கியாரா அத்வானி

சினிமாவில் 10 வருடங்களைக் கடந்த கியாரா அத்வானி தன்னுடைய கதை தேர்வு குறித்து பகிர்ந்திருக்கிறார். எம்.எஸ்.தோனியின் பயோபிக்கில் சாக்ஷியாக நடித்து தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தவர் கியாரா அத்வானி. தொடர்ந்து 'கபீர் சிங்', 'ஷேர்ஷா' போன்ற படங்கள் மூலமாகத் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார். 'ஷேர்ஷா' படத்தில் சித்தார்த் மல்ஹோத்ராவுடன் இணைந்து நடித்த அவர் காதலித்து அவரைத் திருமணம் செய்துகொண்டார். 

தற்போது ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் 'கேம் சேஞ்சர்' படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.  

இந்நிலையில் சினிமாவில் 10 வருடங்களைக் கடந்த  கியாரா அத்வானி தன்னுடைய கதை தேர்வு குறித்து பகிர்ந்திருக்கிறார். இதுகுறித்து பேசிய அவர், 'நான் எப்போதும் கதையைத் தேர்வு செய்வதில் மிகவும் கவனமாகதான் இருப்பேன். எனக்குப் பிடிக்காத கேரக்டரில் இதுவரை நடித்ததில்லை. 'கபீர் சிங்'கில் நடித்தபோது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதால்தான் சிலவற்றைக் கற்றுக்கொள்ள முடிந்தது. அதுதான் மிகப்பெரிய விஷயம். தங்களுக்கு ஒரு கதாபாத்திரம் பிடிக்கவில்லை என்றால் ,அந்த  படத்தில் நடிக்காமல் இருப்பது நல்லது. ஏனென்றால் பலரின் முதலீடும், உழைப்பும், முயற்சியும் அதில் இருக்கும். எனவே எல்லாவற்றையும் கருதிதான் முடிவெடுக்க வேண்டும்' என்று தெரிவித்திருக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com