

தனக்கு பெண் பிறந்தால் "சரஸ்வதி' என்றும் ஆண் பிறந்தால் "முரளி கிருஷ்ணா' என்றும் பெயர் வைக்க விரும்பினார் அந்தத் தாய். பின்னர், ஆண் குழந்தை பிறந்ததால் "முரளி கிருஷ்ணா' என்றே அழைத்தார். சிறுவயதிலேயே அந்தக் குழந்தை மிக இனிமையாகப் பாடியதால், அவருடைய குரு மிகவும் நெகிழ்ந்து, "பாலமுரளி கிருஷ்ணா' என்று அழைத்தார். அந்தப் பெயரே அவருக்குப் பின்னாளில் நிலைத்தது. அவர்தான் பத்மவிபூஷண் டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா.
த.சீ.பாலு, அத்திப்பட்டு.
சுதந்திரத்துக்கு முன்னர் நெல்லையப்பர் தேரின் மீது தேசியக் கொடியை இரவோடு இரவாக, கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யுடன் இருந்த மாடசாமி பிள்ளையால் ஏற்றப்பட்டது. தேசியக் கொடியை இறக்க, ஆங்கிலேயர்கள் எவ்வளவோ முயற்சித்தும் முடியவில்லை. சுதந்திரம் அடைந்தவுடன் 1948இல் தேரோட்டம் நடைபெற்றபோது, திருநெல்வேலி மக்களின் விருப்பத்தின்பேரில் தேரின் உச்சியில் ரிஷப்ப கொடியோடு தேசியக் கொடியும் பட்டொளி வீசிப் பறந்தது. இந்தியாவில் வேறு எங்கும் இதுபோல் நடைபெறவில்லை.
பத்மா சாரதி, தஞ்சாவூர்.
"ஜூலி' படம் வெற்றி பெற்றபோது, , திரையுலகினர் பலர் நடிகை லட்சுமி ஹிந்தி படத்துக்குச் சென்றுவிடுவார் என்று நம்பினர். ஆனால் அது நடக்கவில்லை. இதற்கான காரணத்தை அப்போது அவர் கூறுகையில், 'பாலிவுட் என்னை விரும்பவில்லை. ஜூலி பட வெற்றிக்குப் பின்னர் ஹிந்தி படத் தயாரிப்பாளர் மன்மோகன் தேசாய் இரு படங்களுக்கு உடனடியாக கால்ஷீட் கேட்டார். கல்யாணம் செய்துகொள்ளக் கூடாது என்றும் குழந்தைகள் பெற்றுக் கொள்ள கூடாது என்றும் இரு நிபந்தனைகளை விதித்தார். நான் ஏற்கெனவே விவகாரத்து பெற்றவள். இரண்டு வயதில் எனக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது'' என்றார்.
ராஜி ராதா, பெங்களூரு.
1977ஆம் ஆண்டில், தமிழக சட்டப் பேரவைத் தலைவராக முனு ஆதி தேர்வு செய்யப்பட்டார். சபை மரபுப்படி, முதல்வருக்கே முதலில் பேச வாய்ப்பு அளிக்கப்படும். முதல்வர் எம்.ஜி.ஆர். எழுந்து, 'அவையின் நீண்ட நாள் அனுபவம் வாய்ந்த எதிர்க்கட்சித் தலைவர் கருணாநிதி முதலில் பேச்சைத் தொடங்கட்டும்'' என்று கூறிவிட்டு அமர்ந்தார். உடனே கருணாநிதி, 'சட்டப் பேரவைத் தலைவர் என்பவர் பிடிலைப் போல இருக்க வேண்டும். பிடிலில் எப்படி இரண்டு பக்கம் இழுத்தாலும் இசை வருகிறதோ, அதுபோல் ஆளும்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் பேச சம வாய்ப்பு வழங்க வேண்டும்'' என்று சொல்லி அமர்ந்தார். உடனே எம்.ஜி.ஆர். 'சட்டப் பேரவைத் தலைவர் என்பவர் பிடில் என்றும் அதில் நல்ல நாதம் வர வேண்டும் என்றும் கருணாநிதி கூறியதை ஆமோதிக்கிறேன். சட்டப் பேரவைத் தலைவர் பிடில் என்றால், உறுப்பினர்கள் அதிலுள்ள தந்திக் கம்பிகள் போன்றவர்கள். உறுப்பினர்கள் ஆதரித்தால்தான் இனிய நாதம் வரும். ஒரு கம்பி அறுந்தாலும் "டொய்ங்' என்ற அபஸ்வரம்தான் வரும்'' என்றார். இதை வி.ஐ.டி. வேந்தரும் முன்னாள் அமைச்சருமான ஜி.விசுவநாதன் ஒருமுறை தெரிவித்திருந்தார்.
ஒருமுறை கண்ணதாசன் தனது உயர்வுக்குக் காரணமானவர்கள் குறித்து கூறும்போது, 'என் இன்றைய உயர்வுக்கும் வாழ்வுக்கும் அந்த முதல் சந்தர்ப்பமே காரணமாகும். நான் எழுதிய முதல் பாடலை இப்போது படித்துப் பார்த்தால், இது என் மிகச் சாதாரணமாகும். அதை ஒப்புக் கொண்டதின் மூலம் அதற்குப் பெருமை தேடி தந்தார் ராம்நாத். அதில் ஒரு தெம்பு இருந்ததால் அடுத்தடுத்து பாடல்களை உற்சாகமாக எழுத முடிந்தது. இரண்டு நிலைகளில் மனிதன் முன்னுக்கு வருகிறான். ஒன்று திறமை. மற்றொன்று வாய்ப்பு. திறமை இருந்து வாய்ப்பு இல்லாவிட்டாலும், வாய்ப்பு இருந்து திறமை இல்லாவிட்டாலும் மனிதன் பிரகாசிப்பது முயற்கொம்பே! அந்த முதல் வாய்ப்பை யாருக்கு ஏற்படுத்தித் தருகிறார்களே கண் கண்ட தெய்வங்கள். அந்த வகையில் நான் வணங்க வேண்டிய கண் கண்ட தெய்வம் இயக்குநர் ராம்நாத்'' என்றார் கண்ணதாசன்.
தங்க.சங்கரபாண்டியன், பொழிச்சலூர்.
ஹிந்தி எழுத்தாளர் பிரேம்சந்த் மிகவும் உடல்நலம் குன்றிய நிலையிலும் எழுதிக் கொண்டிருந்தார். இதைக் கவனித்த அவருடைய மனைவி, 'இந்த நிலையிலும் ஏன் எழுதறீங்க? நன்றாக ஓய்வு எடுத்துகொண்டு, உடல் தேறியவுடன் எழுத வேண்டியதுதானே?'' என்றார். அதற்கு பிரேம்சந்த், 'ஒரு விளக்கின் கவனம் வெளிச்சம் கொடுப்பதுதான். எண்ணெயும் திரியும் எவ்வளவு காலம் இருக்கிறதோ? அவ்வளவு காலம் அது ஒளி வீசி எரிந்துகொண்டே இருக்கும். எண்ணெய் தீர்ந்தவுடன் அது தானாகவே அணைந்துவிடும்'' என்றார். மனைவியால் பதில் சொல்ல முடியவில்லை.
"உரிமைக் குரல்' படத்தின் கதை ஸ்ரீதரால் முதன் முதலில் சிவாஜி கணேசனுக்குச் சொல்லப்பட்டது. கதையைக் கேட்ட சிவாஜி, 'இந்தக் கதை அண்ணன் எம்.ஜி.ஆருக்குப் பொருத்தமாக இருக்கும்'' என்றார். பின்னர், கதையைக் கேட்ட எம்.ஜி.ஆரும் நடிக்கச் சம்மதித்தார். படத்தில் இடம்பெற்ற "விழியே கதை எழுது..' என்ற பாடல் எம்.எஸ்.வி.யின் மெட்டுக்கு கண்ணதாசனால் எழுதப்பட்டு, கே.ஜே.யேசுதாஸ், சுசீலாவால் பாடப்பட்டு சிவாஜிக்காகப் பதிவு செய்யப்பட்டிருந்தது. பாடலைக் கேட்டுவிட்டு வரிகளை மாற்றுமாறு எம்.ஜி.ஆர். கூறினார். முடிவில் அந்த மெட்டுக்கு பல கவிஞர்களை வைத்து பாடல்கள் எழுதப்பட்டும், ஒன்றும் பிடிக்கவில்லை. முடிவில், 'இந்தப் பாடலையே வைப்போம். கண்ணதாசன் எனக்கு முரண். ஆனால், அவர் (பாடல்கள்), தமிழ் எனக்கு நன்றாகவே பிடிக்கும்'' என்று எம்.ஜி.ஆர். கூறினார்.
ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுப்பு... கண்ணீர் விட்டு கதறி அழுத பாஜக நிர்வாகி!
அதிரடி காட்டும் மமதா.. திரிணமூல் காங்கிரஸில் 74 எம்.எல்.ஏ-க்களுக்கு ‘சீட்’ இல்லை!

18.3.1976: பாடநூல்கள் தணிக்கைக்கு குழு - கட்சி சார்பு பகுதிகள் நீக்கப்படும்
புள்ளிகள்
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

