ஏறு முகத்தில் மலையாள சினிமா!

ஓடிடி வளர்ச்சியும் வசூல் சாதனையும் - மலையாள சினிமாவின் புதிய யுகம்!
ஏறு முகத்தில் மலையாள சினிமா!

இந்திய திரையுலகம் மொத்தமும் இன்று கவனிக்கும் அளவுக்கு வளர்ந்து வருகிறது மலையாள சினிமா. அதன் கதைக் கருவும், லாப முதலீடுகளும் சமீப ஆண்டுகளில் அடைந்த வளர்ச்சி அபாரமானது. மலையாள திரையுலகில் இயங்கிக் கொண்டிருப்பவர்களைக் கேட்டால், ''நாங்கள் 80, 90 - களில் இருந்தே நல்ல கதை களங்களைக் கொடுத்துக் கொண்டு இருக்கிறோம். ஆனால், அப்போது எங்களின் படத்தை மற்ற ஊர் மக்கள் பார்க்க வசதியில்லை. இன்று ஓடிடி தளங்கள் வந்துவிட்டன. அதன் மூலமாக, மிக எளிதாக எங்களின் படங்களை பல்வேறு பகுதியில் இருக்கும் மக்கள் ரசிக்கிறார்கள். ஓடிடி தளங்களுக்குதான் நன்றி சொல்லணும்'' என்கிறார்கள்.

பெரிய ஹீரோ படங்கள் வெளியாகும் போது, முதல் நாள் கலெக்ஷன் இத்தனை கோடி என்ற போட்டோவை அந்த தயாரிப்பு நிறுவனம் பதிவிடும். அதை தெரிந்து கொள்ள ரசிகர்களும் ஆவலாக இருப்பார்கள். இது தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வழக்கம். மலையாள சினிமாவில் இப்படியான விஷயங்கள் நடப்பது அரிதினும் அரிது. காரணம், அவர்களது பட்ஜெட்டும் குறைவு, கதைக் களங்களும் பிரமாண்டமாக இல்லாமல் யதார்த்தமாக இருப்பதே காரணம். அதுதான் மலையாள சினிமாவின் ஸ்பெஷல் என்றாலும் இந்த பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷன் எல்லாம் அவர்களின் எட்டாக்கனியாகவே இருந்தது.

இப்போது குறிப்பாக கரோனா பொது முடக்கத்துக்குப் பிறகு, - ெல்டா அசோக்லையாள சினிமாவின் மார்கெட் வியக்கும் அளவுக்கு ஏறி வந்திருக்கிறது. ஓடிடி தளங்களில் வெளியாகும் போது, மற்ற மொழிகளில் டப் செய்யப்பட்டும் வெளியாகத் தொடங்கிவிட்டன. அப்படி ஏராளமான படங்களை அவர்களது மொழியிலேயே பார்க்கலாம். தியேட்டரில் வெளியாகும் நல்ல மலையாள படங்களுக்கான வரவேற்பும் அப்படி இருக்கிறது.

'மஞ்சும்மல் பாய்ஸ்' திரைப்படத்தை மட்டும் வைத்துச் சொல்லவில்லை. இதற்கு முன் வெளியான பல படங்கள் அதற்குச் சான்றாக இருக்கின்றன. இப்போது, மலையாள சினிமாவின் மார்கெட் எந்த அளவுக்கு உயர்ந்து, பாக்ஸ் ஆபீஸில் கலக்கிக் கொண்டிருக்கிறது என்பதற்கான உதாரணமாகச் சில படங்களை பார்க்கலாம்.

மலையாள சினிமா வரலாற்றில் அதிக வசூல் செய்த டாப் 10 படங்களில் 8 படங்கள் கரோனா பொது முடக்கத்துக்குப் பிறகு, வெளியானதுதான். அதன் பட்டியலை இங்கே பார்ப்போம்....

மலையாள சினிமா வரலாற்றில் அதிக கலெக்ஷன் பெற்ற படம், தற்போது எல்லோராலும் கொண்டாடப்பட்டுக்கொண்டிருக்கிற 'மஞ்சும்மல் பாய்ஸ்'. 176 கோடியைத் தாண்டி சென்று கொண்டிருக்கிறது அதன் வசூல். இப்படியான சாதனையை மைல் கல் என்று சொல்வார்கள். அப்படியான அந்தஸ்தைப் பெற்றிருக்கிறார்கள், இந்த 'மஞ்சும்மல் பாய்ஸ்'.

இரண்டாவது இடத்தில் இருப்பது கடந்த வருடம் வெளியான '2018'. ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் டொவினோ தாமஸ், குஞ்சாக்கோ போபன், ஆசிஃப் அலி நடித்த இந்தப் படம் 175 கோடியை வசூல் செய்திருந்தது. இந்த இரண்டு படங்கள் வருவதற்கு முன், மலையாள சினிமாவின் முதல் 100 கோடி வசூலைப் பெற்ற படம், மோகன்லால் நடிப்பில் 2016-ஆம் ஆண்டு வெளியான 'புலிமுருகன்'.

இதன் வசூல் 152 கோடி. இந்த 100 கோடி கிளப்பில் நான்காவது இருப்பது 'லூசிஃபர்'. பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்து வெளியான பக்கா மாஸ் கமர்ஷியல் பொலிட்டிக்கல் என்டர்டெயினர். இதன் வசூல் 127 கோடி.

ஐந்தாவது இடத்தில் இருப்பது, 'பிரேமலு'.மலையாளத்தில் வெளியாகி ப்ளாக் பஸ்டரான இந்தப் படம், தமிழ் மற்றும் தெலுங்கில் டப் செய்யப்பட்டு அங்கேயும் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதுவரை அந்தப் படம் வசூல் செய்திருப்பது 106 கோடி. அடுத்த இடத்தில் இருப்பது, 'நெரு'. ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடித்து வெளியான கோர்ட் ரூம் டிராமா. இந்தப் படத்தின் வசூல் 86 கோடி.

ஏழாவது இடத்தில் இருப்பது மம்மூட்டியின் 'பீஷ்ம பர்வம்'. கேங்ஸ்டர் டிராமாவான இந்தப் படம் வசூல் செய்தது 85 கோடி. எட்டாவது இடத்தில் 'ஆர் டி எக்ஸ். ஷேன் நிகாம், ஆண்டனி வர்கீஸ், நீரஜ் மாதவ் நடிப்பில் சாம் சிஎஸ் இசை, அன்பறிவ் ஸ்டன்ட் என நம்ம ஊர் டெக்னீஷியன்கள் பணியாற்றிய இப்படம் 84 கோடி வசூல் செய்திருக்கிறது.

ஒன்பதாவது இடத்தில் மம்மூட்டியின் 'கன்னூர் ஸ்குவாட்', 82 கோடி.

பத்தாவது இடத்தில் துல்கர் சல்மான் தயாரித்து நடித்த 'குரூப்'. சுகுமார குரூப் என்பவரின் பயோபிக்கான இது வசூல் செய்தது 81 கோடி. மலையாள சினிமா வரலாற்றில் அதிக வசூல் செய்த பத்து படங்களில் மூன்று படங்கள் மோகன்லாலுடையது, இரண்டு படங்கள் மம்மூட்டியுடையது என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் விடுபட்டுப்போனது 'மின்னல் முரளி'. ஹாலிவுட் படங்களில் மட்டும் சூப்பர் ஹீரோ சப்ஜெக்டுகளை பார்த்து, ரசித்து, கொண்டாடி வந்த நமக்கு மலையாளத்தில் இருந்து அட்டகாசமான சூப்பர் ஹீரோ படம் வந்தது. ஒட்டுமொத்த இந்திய சினிமாவும் ஆச்சர்யப்பட்டு பேசிய 'மின்னல் முரளி' நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது. இல்லையென்றால், அந்தப் படமும் இந்த பட்டியலில் நிச்சயம் இடம் பெற்றிருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com