பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 185

முக்கிய தலைவர்கள் குழுமிய மர்ம ஆலோசனை!
பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 185

கிரேட்டர் கைலாஷில் இருந்த பிரணாப்முகர்ஜியின் வீட்டை நான் சென்ற ஆட்டோ ரிக்ஷா நெருங்கியபோதே அங்கேபரபரப்பாக கலந்தா லோசனை நடக்கிறதுஎன்பதுதெரிந்துவிட்டது. தெருவில் எப்போதும் இல்லாத அளவில் கார்கள் வரிசைகட்டி நின்றன. முக்கியமான காங்கிரஸ் தலைவர்கள் பலர் அங்கே குழுமி இருக்கிறார்கள் என்பதால், நான் சற்று கவ மாகத்தான் வீட்டிற்குள் நுழைந்தேன்.

வீட்டின் ஒருபுறமாக அவரது பார்வையாளர் களைச் சந்திக்கும் பகுதி இருந்தது. அதில் அலுவலகஅறை, பார்வையாளர்கள் காத்தி ருக்கும் அறை, பிரணாப்தாவின் அறை என்று அதுவே ஒரு சிறிய அலுவலகம் போலத்தான் இருக்கும்.

வரவேற்பறையில் தலைவர்களுடன் வந்திருக்கும் தொண்டர்கள் பலர் அமர்ந்தி ருந்தனர். உள்ளே பிரணாப் முகர்ஜியின் அறையில் தலைவர்கள் குழுமியிருந்து கலந்தாலோசனையில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று அவரது உதவியாளர்களில் ஒருவர் தெரிவித்தார்.

மாநிலங்களவைக் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைமை கொறடா எஸ்.எஸ்.அலுவாலியா, மாநிலங்களவை, மக்களவைக் காங்கிரஸ் கட்சியின் தலைமைக் கொறடாக்களான பிரணாப் முகர்ஜி, சந்தோஷ் மோகன் தேவ் ஆகியோர் பதவி விலகி இருப்பதை உறுதி செய்தார் அந்த உதவியாளர். மாதவ்சிங் சோலங்கி, பஜன் லால், ஜகந்நாத் மிஸ்ரா, ஜே.பி.பட்நாயக், ஜனார்த்தன பூஜாரி, சியாமசரண் சுக்லா உள்ளிட்ட முக்கியமான பல தலைவர்கள் வந்திருப்பதாகவும், அன்று என்னை பிரணாப்தா சந்திக்க வாய்ப்பே இல்லையென்றும் அந்த உதவியாளர் தீர்மானமாகத் தெரிவித்தார்.

ஏறத்தாழ ஒரு மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருந்து பார்த்துவிட்டு, வேறு வழியில்லாமல் கிளம்பி விட்டேன். இரவு நேரம் என்பதால் ஆட்டோ கிடைப்பது அரிதாக இருந்தது. அப்படியே ஓரிரு ஆட்டோக்கள் அந்த வழியே போனாலும் நிறுத்தத் தயாராக இல்லை. கடுமையான குளிர் வேறு. ஒரே வழி இரவு நேரப் பேருந்துதான். காத்திருந்தேன்.

தில்லியின் நடுங்கும் குளிரில் கம்பளி உடையில் புதைந்து கொண்டு சஞ்சரிப்பது என்பது அலாதியான சுகம். அதை ரசிக்கத் தெரிந்தவர்களுக்கு, தில்லிக் குளிர் பிடிக்கும். நான் அந்த ரகத்தைச் சேர்ந்தவன் என்பதால், இரவு நேர பேருந்துக்காக தன்னந்தனியாக கிரேட்டர் கைலாஷில் காத்துக் கொண்டிருந்தது இப்போதும் சுகானுபவமாகத்தான் இருக்கிறது.

குளிர் காலத்தில் பொதுவாகவே தலைநகரம் தில்லி பத்து மணிக்கு மேல்தான் கண்களைத் திறக்கும். பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளும், அலுவலகம் செல்பவர்களும் குளிரைப் பொருட்படுத்தாமல் காலையிலேயே இயங்கத் தொடங்கி விடுவார்கள் என்றாலும், ஏனைய இயக்கங்கள் சற்று தாமதமாகத்தான் தொடங் கும். மெதுவாக எழுந்து, குளித்துத் தயாராகி நான் அறையிலிருந்து வெளியேறும்போது, நண்பகலை எட்டியிருந்தது கடிகாரம்.

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்தது. பெரும்பாலான எம்.பி.க்கள் அதற்குக் கிளம்பியிருப்பார்கள். நண்பர் ஸ்ரீகாந்த் ஜிச்கர் இருந்தால் அவருடைய பரிந்துரைக் கடிதம் மூலம் அனுமதி பெற்று, அவருடன் கூட்டத்தொடரைப் பார்க்கப் போகலாம் என்று நினைத்தேன்.

Sondeep Shankar

என்னுடைய அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். நான் அவரது வீட்டு வாசலில் போய் இறங்கும்போதுதான் அவர் நாடாளுமன்றத்துக்கு கிளம்பிக் கொண்டிருந்தார். அவருடன் இணைந்து கொண்டேன். முதலில் மோதிலால் நேரு மார்க்கில் நரசிம்மராவைப் பார்த்த பிறகுதான், நாடாளுமன்றத்துக்குப் போக இருப்பதாக அவர் சொன்னபோது, எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.

வெளியே புல்தரையில் நரசிம்மராவின் உதவியாளர் ராம் கண்டேகரும், முன்னாள் அமைச்சர் புவனேஷ் சதுர்வேதியும் குளிர்கால வெயிலை அனுபவித்தபடி பேசிக் கொண்டிருந்தனர். எந்தவித ஆரவாரமோ, பரபரப்போ இல்லாமல் அந்த மோதிலால் நேரு மார்க் பங்களா அமைதியில் ஆழ்ந்திருந்தது.

காரிலிருந்து இறங்கிய ஸ்ரீகாந்த் ஜிச்கர் அவர்கள் இருவருக்கும் 'நமஸ்கார்' சொன்னார்.

அவர்கள் பேச்சுக்கு இடையூறாக இருக்க விரும்பாமல் சற்று தயங்கி நின்ற ஜிச்கரைப் பார்த்து, உள்ளே போகும்படி சைகை செய்தார் ராம் கண்டேகர்.

'நரசிம்மராவ் வரவேற்பறையில் அமர்ந்திருக்கிறார், சந்திக்கலாம்' என்று அதற்கு அர்த்தம் என்பது எனக்குப் புரிந்தது.

என்ன செய்யவது என்று தெரியாமல் திகைத்தபடி இருந்த எனது கையைப் பிடித்தபடி, பங்களாவை நோக்கி நகர்ந்தார் ஜிச்கர். நான் அதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. அதுவரையில் நான், நரசிம்மராவை சற்று தொலைவிலிருந்து பார்த்திருக்கிறேனே தவிர, இப்படி நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியதே இல்லை.

பிரதமர்களாக இருந்த இந்திரா காந்தி, மொரார்ஜி தேசாய், சரண் சிங், ராஜீவ் காந்தி, வி.பி.சிங், சந்திரசேகர் என்று எல்லோரையும் சந்திக்கவும் பேசவும், ஒரு சிலரைப் பேட்டி எடுக்கவும், சந்திரசேகருடன் நெருங்கிப் பழகவும் வாய்ப்பு கிடைத்த எனக்கு, நரசிம்மராவை சந்திக்கும் வாய்ப்பு அதுவரை கிடைக்கவேயில்லை. அவரை அறிமுகப்படுத்துகிறேன் என்று பிரணாப் முகர்ஜி சொல்லியிருந்தார். ஆனால் அதற்கும் வாய்ப்பு அமையவில்லை.

ஐந்தாண்டு காலம் காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும், இந்தியப் பிரதமராகவும் இருந்த போதெல்லாம் சந்திக்க முடியாமல்போன நரசிம்மராவை, இப்போது அவர் எல்லா பதவிகளையும் இழந்து, பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கி இருக்கும் நிலையில்தான் எனக்கு சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. நாங்கள் உள்ளே நுழையும்போது, சோபாவில் அமர்ந்தபடி அவர் எதையோ படித்துக் கொண்டிருந்தார்.

ஸ்ரீகாந்த் ஜிச்கரும், அவரைத் தொடர்ந்து நானும் உள்ளே நுழைந்தபோது அதிலிருந்து தனது பார்வையைத் திருப்பி எங்களை நிமிர்ந்து பார்த்தார்.

'வாருங்கள்' என்பது போல தலையசைத்து வரவேற்றார்.

'யார் இவர் உன்னுடன்?' என்பதுபோல அவரது பார்வை என்மீது பதிந்தது.

என்னை அறிமுகப்படுத்தினார் ஜிச்கர். அவர் அப்போது இருந்த நிலையில், பத்திரிகையாளர் ஒருவரைச் சந்திப்பதில் தயக்கம் காட்டியிருக்க வேண்டும்.

'எதற்காக இவரையெல்லாம் அழைத்து வருகிறாய்?' என்று கேட்காவிட்டாலும், தனது அதிருப்தியையாவது முக பாவத்தில் வெளிப்படுத்தியிருக்க வேண்டும். மெலிதான புன் சிரிப்பைத் தவிர, அவரிடமிருந்து வேறு எந்தவித உணர்ச்சியையும் நான் பார்க்க வில்லை.

'பிரணாப் முகர்ஜிக்கு ரொம்ப வேண்டியவர்;

சந்திர சேகர்ஜிக்கும் நெருக்கம்' என்று ஸ்ரீகாந்த் ஜிச்கர் என்னைப் பற்றியதான அறிமுகத்தை விரிவுபடுத்தினார். அதற்கும் நரசிம்மாராவிடம் இருந்து மெல்லிய புன்னகைதான் பதிலாக வந்தது.

நான் மெல்ல தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, ஜனதா ஆட்சிக் காலத்தில் 'சூர்யா' இதழில் பணியாற்றியது குறித்து சொன்னேன். தலையாட்டினார்.

மெல்லிய குரலில் ஜிச்கரிடம் மராத்தியில் 'ஏன் நின்று கொண்டிருக்கிறீர்கள்?... உட்காருங்கள்' என்று சொன்னார். ஜிச்கர் தானும் அமர்ந்து, என்னையும் அமரச் சொன்னபோது நரசிம்மராவ் மராத்தியில் சொன்னதன் அர்த்தம் புரிந்தது.

எல்லோரிடமும் அவரவர் மொழியில் பேசுவது என்பது நரசிம்மராவின் தனித்திறமை என்பதை நாங்கள் நாடாளுமன்றத்துக்கு காரில் பயணிக்கும்போது ஸ்ரீகாந்த் ஜிச்கர் சொல்லி தெரிந்து கொண்டேன். நரசிம்மராவுக்கு 18 மொழிகள் தெரியும். 10 மொழிகளில் சரளமாகப் பேசவும் முடியும்.

அடுத்த பத்து நிமிடங்கள் அவர்களிருவரும் மராத்தியில் பேசிக்கொண்டனர். நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தல் குறித்துத்தான் பேசிக்கொண்டனர் என்பதை அவர்கள் பேச்சில் அடிபட்ட சில தலைவர்களின் பெயர்களிலிருந்து என்னால் யூகிக்க முடிந்தது. நான் இருப்பதை நரசிம்மாராவ் பொருட்படுத்தாது என்னை ஆச்சரியப்படுத்தியது.

அந்த முதல் சந்திப்பில் அதற்குமேல் நான் எதுவும் பேசவில்லை. அவரும்தான். ஆனால் என்மீது அவருக்கு ஒருவித நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது என்பது மட்டும் எனக்குத் தெரிந்தது. அதற்கு பிரணாப் முகர்ஜிக்கு நெருக்கமானவன் என்கிற அறிமுகம்தான் காரணமாக இருக்கக்கூடும்.

'நரசிம்மராவை சாதாரணமாக எடைபோட்டு விடாதே, உன்னைப் பற்றி தீர விசாரிக்காமல் அவர் மோதிலால் நேரு மார்க் வீட்டுக்குள் நுழைய அனுமதித்திருக்க மாட்டார்' என்று முன்பு ஒருமுறை பிரணாப் முகர்ஜி சொன்னது நினைவுக்கு வந்தது. எனக்குள் சிரித்துக் கொண்டேன்.

நாங்கள் நாடாளுமன்றத்துக்கு வந்ததும், தானே என்னுடன் வரவேற்பு அலுவலகத்துக்கு வந்து, எனக்கு நுழைவு அனுமதியைப் பெற்றுத் தந்து உள்ளே அழைத்துச் சென்றார் ஸ்ரீகாந்த் ஜிச்கர். அவர் மாநிலங்களவைக்குச் சென்றபோது, நான் பார்வையாளர் மாடத்தை நோக்கி நடந்தேன்.

அன்று மாநிலங்களவையில் ஒரே அமளி. சென்னை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவுக்கு போதிய பாதுகாப்புத் தர வேண்டும் என்று காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சியினர் அதிமுக உறுப்பினர்களுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பிக் கொண்டிருந்தனர். மிகவும் ஆவேசமாகப் பேசியவர் மார்கரெட் ஆல்வா.

ஜெயலலிதாவும், மார்கரெட் ஆல்வாவும் மிகவும் நெருக்கமாகப் பழகியவர்கள். ஜெயலலிதா மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும்போது அவர்களுக்கு இடையே ஏற்பட்ட நட்பு ஜெயலலிதாவின் இறுதிக்காலம் வரை தொடர்ந்தது. காங்கிரஸூக்கும் அதிமுகவுக்கும் பிரச்னைகள் எழும்போதெல்லாம் இணைப்புப் பாலமாக மார்கரெட் ஆல்வா பலமுறை இருந்திருக்கிறார்.

'ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு அரசியலுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும்' என்று மார்கரெட் ஆல்வா கூறியபோது அதை அதிமுகவினர் உற்சாகத்துடன் மேஜையை தட்டி வரவேற்றனர்.

'பாதுகாப்பு காரணங்களுக்காக ஜெயலலிதா சிறையிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும். வேண்டுமானால் வீட்டுச் சிறையில் வைக்கட்டும்' என்றார் அதிமுக உறுப்பினர் மார்க்கபந்து.

மார்க்கபந்துவின் குற்றச்சாட்டுகளை மறுத்து, ஜெயலலிதாவுக்குச் சிறையில் போதிய பாதுகாப்பு தரப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார் திமுக உறுப்பினர் வி.பி.துரைசாமி.

'ஜெயலலிதாவுக்கு எவ்வளவு பாதுகாப்பு தேவை என்பதை நீங்களோ, இந்த அவையோ முடிவு செய்ய முடியாது. அவரை விடுவிப்பது குறித்து முடிவெடுக்க வேண்டியது நீதிமன்றம்தான். அதேநேரத்தில், அவரது உயிருக்கு இருக்கும் அச்சுறுத்தல்களை கருத்தில்கொண்டு போதிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்' என்று கூறி அந்த விவாதத்தை முடித்து வைத்தார் மாநிலங்களவைத் துணைத் தலைவர் நஜ்மா ஹெப்துல்லா.

அதற்கு மேலும் அமர்ந்திருக்கப் பிடிக்காமல் பார்வையாளர் மாடத்திலிருந்து வெளியேறி நாடாளுமன்ற மைய மண்டபத்துக்கு வந்தேன். சொல்லி வைத்தாற்போல ஸ்ரீகாந்த் ஜிச்கரும் வந்துவிட்டார். அங்கே நான் எதிர்பார்த்தது போலவே, முக்கியமான காங்கிரஸ் தலைவர்கள் சிலர் குழுக்களாகப் பிரிந்து நின்றபடி பேசிக்கொண்டிருந்தனர். ஸ்ரீகாந்த் ஜிச்கரைப் பார்த்ததும் சட்டென்று அங்கே அமைதி நிலவியது.

அந்த அமைதியைக் கலைத்தபடி, 'இங்கே என்ன நடக்கிறது?' என்று ஹிந்தியில் கேட்டபடி ஜி.வெங்கடசாமியும், தாரிக் அன்வரும் பின்தொடர, சென்ட்ரல் ஹாலில் நுழைந்தார் அந்த மூத்த தலைவர்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com