'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 191

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 191

தான் புகைத்துக் கொண்டிருந்த சிகரெட்டின் சாம்பலைத் தட்டியபடி, தாவன்ஜி தீர்க்கமான குரலில் பேசத் தொடங்கினார்.

'சஞ்சய் காந்தியின் மரணம் வரையில் ராஜீவ் காந்திக்கோ, சோனியாவுக்கோ அரசியலில் சற்றும் ஆர்வம் இருக்கவில்லை என்பது உண்மை. ஆனால், சஞ்சயின் எதிர்பாராத விமான விபத்தும், அதைத் தொடர்ந்து இந்திராஜி அடைந்த மன உளைச்சலும், ராஜீவ் காந்தி கட்டாயம் அரசியலுக்கு வரவேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்தின. ராஜீவ்தான் அடுத்த அரசியல் வாரிசு என்று உறுதியான பிறகு, சோனியாவின் நடவடிக்கைகளில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது.''

'அரசியல் வேண்டாம் என்று ராஜீவ் காந்தியை சோனியாஜி வற்புறுத்திய தாகத்தான் பரவலான தகவல்...''

'ஆரம்பத்தில் அது உண்மை. பிறகு நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. தலைமைப் பொறுப்புக்கு இந்திராஜிக்குப் பிறகு ராஜீவ் வருவதற்கு, சஞ்சய் காந்தியின் மனைவி

மேனகா காந்தி தடையாகவோ, போட்டி யாகவோ இருந்துவிடக் கூடாது என்று திட்டமிட்டு அவரை வீட்டிலிருந்து வெளியேற்றி யவர் சோனியாதான். இந்திராவுக்குப் பிறகு பிரதமராக வேண்டும் என்கிற ஆசை மேனகா காந்திக்கு இருப்பதாக ஒரு கற்பனைக் கதையை உருவாக்கியதில் சோனியாவுக்குப் பங்கு உண்டு என்பதை நான் அறிவேன்.''

'உங்களுக்கே தெரிந்திருந்தது என்றால், அது இந்திராஜிக்குத் தெரியாமல் இருக்குமா?''

'சஞ்சயின் மரணத்துக்குப் பிறகு, தனக்கு இருக்கும் ஒரே ஆறுதல், மகன் ராஜீவ் காந்தியும், சோனியாவும், குழந்தைகளும்தான் என்று இந்திராஜி கருதினார். குழந்தைகள் இருவர் மீது மட்டுமல்லாமல், சஞ்சய் காந்தியின் மூன்று

மாதக் குழந்தை வாருண் காந்தி மீதும் அளவில்லாத பாசம் அவருக்கு இருந்தது. தந்தையை சிறு வயதிலேயே இழந்த குழந்தை என்பதால், இந்திராஜி வாருண் காந்தியிடம் கூடுதல் நெருக்கமும், அன்பும் காட்டுவது சோனியாவுக்கு உள்மனதில் எரிச்சலை ஏற்படுத்தியது. மேனகா மீது இந்திராஜிக்கு வெறுப்பை ஏற்படுத்தி, அவரையும் குழந்தையையும் வீட்டை விட்டே வெளியேற்றும் அளவுக்கு நிலைமையை உருவாக்கியது சோனியாதான்.''

'இவ்வளவு ஆணித்தரமாக நீங்கள் கூறும் குற்றச்சாட்டை, ராஜீவ் காந்தி இருக்கும் வரையிலும், அவர் மறைந்து ஐந்து ஆண்டுகள் கடந்தபோதும் ஏன் சொல்லவில்லை?''

'இப்போதும் நான் இது குறித்துப் பேசத் தயாராக இல்லை. அதற்கான காலம் கடந்து விட்டது. வி.பி.சிங் அமைச்சரவையில் மேனகா இடம் பெற்றார். அவரே மௌனமாக இருக்கும்போது, நான் ஏன் இது குறித்துப்பேச வேண்டும்? உங்களிடம் தனிப்பட்ட முறையில் தெரிவித்தேனே தவிர, பத்திரிகைகளில் செய்தியாக்க விரும்பவில்லை.''

'அது சரி, அதற்கும் சோனியா காந்தி அரசியலுக்கு வருவதற்கும் என்ன தொடர்பு?''

'ஒருவேளை, மேனகா காந்தி அரசியலுக்கு வராமல் இருந்திருந்தால், சோனியாவும் அரசியலுக்கு வரமாட்டார் என்று நான் நிச்சயமாகச் சொல்லி இருப்பேன். மேனகா அரசியலுக்கு வந்திருப்பதும், அவரது மகன் வளர்ந்து கொண்டிருப்பதும் நேரு குடும்பத்தின் அரசியல் வாரிசுரிமை கை நழுவிவிடும் என்கிற அச்சத்தை சோனியாவுக்கு நிச்சயம் கொடுத்திருக்கும். அதற்கு அவர் இடம் கொடுக்க மாட்டார்.''

'அதனால்தான் சோனியாஜி அரசியலுக்கு வருவார் என்று நீங்கள் உறுதியாகக் கூறுகிறீர்கள், அப்படித்தானே?''

'காங்கிரஸ் கட்சியைத் தங்களது குடும்ப ஆதிக்கத்திலிருந்து வேறு யாருக்கும் விட்டுக் கொடுக்க சோனியா முன்வர மாட்டார். அவரது குழந்தைகளில் ஒருவர், அதிலும் குறிப்பாக ராகுல் காந்தியிடம் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஒப்படைப்பது வரையிலாவது, அவர் நிச்சயமாக அரசியலில் ஈடுபாடு காட்டுவார்.''

ஆர்.கே.தாவன் சொன்னபோது, நான் அதிகம் ஆர்வம் காட்டவில்லை என்பது மட்டுமல்ல, சோனியா காந்தி குறித்து அவர் தெரிவித்த கருத்துகளை நான் ஏற்றுக் கொள்ளவும் இல்லை. அன்றைய சூழ்நிலையில் சோனியா காந்தி அரசியலுக்கு வருவதற்கான எந்தவித அறிகுறியோ, முகாந்திரமோ இருக்கவில்லை.

ஆனால் அடுத்த சில ஆண்டுகளில் நடந்த திடீர் திருப்பங்களும், சோனியாகாந்தி எடுத்த முடிவுகளும் மேனகா காந்தியை மையமாக வைத்து எடுக்கப்பட்டவை என்பதை உறுதிப்படுத்துகிறது. தனது சிறு வயது முதலே, நேரு குடும்பத்துடன் தொடர்பில் இருந்தவர் என்பதால், ஆர்.கே.தாவனால் பின்னால் நடக்கப் போவதை முன்கூட்டியே உணர முடிந்திருக்கிறது என்பதை இப்போது நினைத்து வியக்கிறேன்.

சோனியா காந்தியின் அரசியல் பிரவேசம் குறித்தும், அப்போது நிகழ்ந்த சம்பவங்கள் குறித்தும் பிறகு விரிவாக எழுதுகிறேன். இப்போதைக்கு, நரசிம்ம ராவுக்கு பதிலாக நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவராக யார் வருவார் என்பது குறித்த கேள்விதான் எனக்கு. தாவன்ஜியிடம் நான் வெளிப்படையாகவே கேட்டுவிட்டேன்.

'நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? சீதாராம் கேசரியை சோனியாஜி ஆதரிப்பாரா இல்லை, இந்தப் பிரச்னையில் தலையிடாமல் ஒதுங்கி இருப்பாரா?''

'அவரால் எப்படி ஒதுங்கி இருந்துவிட முடியும்? நரசிம்ம ராவ் கட்சியைத் தன் வசப்படுத்தாமல் விட்டிருக்கும் நிலையில், இனி இன்னொரு வலிமையான அரசியல் தலைவரிடம் கட்சி போய்விடக் கூடாது என்பதில் சோனியா நிச்சயமாக கவனம் செலுத்துவார். சரத் பவார், ராஜேஷ் பைலட் போன்றவர்கள் நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர்களாக வந்துவிட்டால், விரைவிலேயே தொண்டர்களின் செல்வாக்குப் பெற்ற தலைவர்களாகத் தங்களை நிலைநிறுத்திக் கொண்டு விடுவார்கள்.''

'அப்படியானால் சோனியாஜி சீதாராம் கேசரியை ஆதரிப்பார் என்று நீங்கள் கருதுகிறீர்கள், அப்படித்தானே?''

'நிச்சயமாக பலவீனமான சீதாராம் கேசரியைப் போன்ற ஒருவர் கட்சித் தலைவராகவும், நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவராகவும் இருப்பதைத்தான் சோனியா காந்தி விரும்புவார். அப்படி இருந்தால்தான், எப்போது வேண்டுமானாலும் அவர்கள் கையிலிருந்து லகானைப் பிடுங்கிக் கொள்ள முடியும்.''

அதற்குப் பிறகு இந்தப் பிரச்னை குறித்தும், தேவே கௌடா ஆட்சி குறித்தும், தமிழக அரசியல் குறித்தும் சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்துவிட்டு அங்கிருந்து கிளம்பினேன்.

கன்னாட் ப்ளேசில் உள்ள எனது 'நியூஸ் கிரைப்' அலுவலகத்துக்கு வந்தபோது, என்னை சந்திக்க ஹிமாண்ஷூ பாண்டே வந்திருந்ததாகச் சொன்னார்கள். சந்திரசேகர்ஜியின் சமாஜ்வாதி ஜனதா கட்சியின் தில்லி கிளையில் முக்கியமான பொறுப்பு வகித்தவர் ஹிமாண்ஷூ பாண்டே. அரசியல் விவகாரங்களில் நடக்கும் திரைமறைவு நாடகங்கள் குறித்தும், அக்கப்போர்கள் குறித்தும் எனக்குத் தகவல் தெரிவிக்கும் சிலரில் அவரும் ஒருவர்.

பாபா கரக்சிங் மார்க்கிலுள்ள ஹனுமான் கோயிலுக்கு அருகில் இருந்தது அவரது வீடு. ஆட்டோவில் போய் இறங்கும்போது, அவர் அப்போதுதான் எங்கேயோ கிளம்பிக் கொண்டிருந்தார். சந்திரசேகர்ஜியைப் பார்க்கப் போவதாக அவர் சொன்னவுடன் நானும் இணைந்து கொண்டேன்.

3, சௌத் அவென்யூவுக்குச் சென்றபோது, அங்கே காங்கிரஸ் தலைவர்கள் சிலர் சந்திரசேகர்ஜியை சந்திக்க வந்திருந்தனர். காங்கிரஸ்காரர்கள் ஏன் அவரை சந்திக்க வர வேண்டும் என்கிற சந்தேகம் எனக்கு எழுந்தது.

யார், யார் வந்திருக்கிறார்கள் என்று விசாரித்தபோது, பிகார் முன்னாள் முதல்வர் ஜகந்நாத் மிஸ்ரா, முன்னாள் சட்ட அமைச்சர் சிவ் சங்கர், பிரியரஞ்சன்தாஸ் முன்ஷி, ஜனார்தன பூஜாரி உள்ளிட்ட முக்கியமான சில தலைவர்கள், சந்திரசேகர்ஜியுடன் கலந்தாலோசனையில் ஈடுபட்டிருப்பதாகச் சொன்னார்கள்.

'என்ன விஷயமாக அவர்கள் வந்திருக்கிறார்கள்?'' என்று வெளியே புல்தரையில் அமர்ந்திருந்த சத்யபிரகாஷ் மாளவியாவிடம் விசாரித்தேன். அவர் சொன்ன தகவல் என்னை நிமிர்ந்து உட்கார வைத்தது.

'முன்னாள் காங்கிரஸ்காரரான சந்திரசேகர்ஜியை, அவர்கள் காங்கிரஸில் சேரும்படி வற்புறுத்துகிறார்கள். சந்திரசேகர்ஜி நாடாளுமன்றக் கட்சியின் தலைவராகவும், சீதாராம் கேசரி கட்சித் தலைவராகவும் இருந்தால், காங்கிரஸ் மீண்டும் உயிர்த்தெழும் என்றும் அவர்கள் கருதுகிறார்கள்.'' என்று தெரிவித்தார் மாளவியா.

எனக்கும்கூட அது சரியாகப் பட்டது. தொண்டர்கள் பலம் கொண்ட காங்கிரஸ் கட்சிக்கு வலிமையான தலைவர் ஒருவர் இல்லாத குறையை சந்திரசேகர்ஜியால் நிரப்ப முடியும். பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு, சிறுபான்மையினர் மத்தியில் காங்கிரஸ் மீது ஏற்பட்டிருக்கும் அவநம்பிக்கை இதனால் அகலக்கூடும். ஒருவேளை, ஐக்கிய முன்னணியில் இருக்கும் முலாயம் சிங், லாலு பிரசாத் யாதவ் போன்றவர்கள் சந்திரசேகர் தலைமையில் இயங்க முன்வரலாம்.

இப்படியெல்லாம் நான் யோசித்தபடி இருந்தபோது, வந்திருந்த தலைவர்கள் விடைபெற்றுக் கிளம்பினார்கள். சில நிமிடக் காத்திருப்புக்குப் பிறகு, சந்திரசேகர்ஜியை சந்திக்க எனது முறை வந்தது. உள்ளே சென்றேன்.

'காங்கிரஸ் கட்சியில் இணைவது என்று முடிவெடுக்கப் போகிறீர்களா? அது நல்ல முடிவாக இருக்கும் என்று நானும் நினைக்கிறேன்...'' என்று நான் சொல்லி முடிப்பதற்குள் சந்திரசேகர்ஜி சிரிக்கத் தொடங்கினார்.

'இவர்கள் ஆசைப்படுகிறார்கள் என்பது உண்மை.

ஆனால், காங்கிரஸ் கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள் அதை எப்படி ஏற்றுக் கொள்வார்கள்? பிரணாப் முகர்ஜி, சரத் பவார், கருணாகரன், ஏன் சீதாராம் கேசரியேகூட எனது நண்பர்கள்தான். அதற்காக, 20 ஆண்டுகளுக்கு முன்னால் கட்சியிலிருந்து வெளியேறி, தொடர்ந்து இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, நரசிம்ம ராவ் ஆகியோரின் கொள்கைகளையும், செயல்பாடுகளையும் எதிர்த்து வந்த ஒருவரை கட்சியில் சேர்த்துக்கொண்டு, நாடாளுமன்றக் கட்சியின் தலைவராக்க அவர்களுக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது?... அதெல்லாம் நடக்கப் போவதில்லை.'' - தனது கருத்தைத் தெளிவாகத் தெரிவித்தார் சந்திரசேகர்ஜி.

அதற்குள் அவருக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. இங்கிதம் அறிந்து நான் விடைபெற்றுக் கொண்டேன்.

உச்சகட்டத்தை எட்டியிருந்தது, காங்கிரஸின் கோஷ்டிப் பூசல். நரசிம்ம ராவின் ஆதரவாளர்களும், சீதாராம் கேசரியின் ஆதரவாளர்களும் ஒருவர் மாற்றி இன்னொருவர் அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டிருந்தனர்.

சரத் பவாரும், ராஜேஷ் பைலட்டும் போட்டியில் இருப்பதாகச் சொன்னார்களே தவிர, அறிக்கைப் போரில் கலந்து கொள்ளவில்லை. 11, டாக்டர் பிஷம்பர்தாஸ் மார்க்கில் இருந்த சுரேஷ் கல்மாதியின் வீட்டில் கூடிய நரசிம்ம ராவின் ஆதரவாளர்கள், ரகசிய ஓட்டெடுப்பின் மூலம்தான் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர்.

தேர்தல் வேண்டுமா, வேண்டாமா என்பதை முடிவுசெய்ய காரிய கமிட்டியை கூட்ட வேண்டும் என்று பிரியரஞ்சன்தாஸ் முன்ஷியும்; நரசிம்ம ராவுக்கும், சீதாராம் கேசரிக்கும் இடையே சமரசத்தை உருவாக்கும் முயற்சியில் முன்னாள் உள்துறை அமைச்சர் எஸ்.பி.சவாணும்; தேர்தல் மூலம்தான் தேர்வு என்பதில் ராஜேஷ் பைலட்டும்; சீதாராம் கேசரி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று அவரது ஆதரவாளர்களும் களமிறங்கி இருந்த நிலையில் ஓர் அதிரடித் திருப்பம் ஏற்பட்டது.

அந்தத் திருப்பத்தை மேலே குறிப்பிட்ட யாருமே எதிர்பார்க்கவில்லை...

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.