ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: அதிக கோபம் நீங்க.. ?

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: அதிக கோபம் நீங்க.. ?

மதுவானது உடம்பில் கபத்தையும், ஒஜஸ் எனும் உயர்ந்த சாரமான சத்தையும் அழித்து வாத- பித்தங்கள் எனும் தோஷங்களை அதிகரிக்கச் செய்யும் ஒரு பொருளாகும்.

என் மகனுக்கு இருபத்து ஆறு வயதாகிறது. மதுவுக்கு அடிமையாகி, வீட்டில் எப்போதும் சண்டையும் சச்சரவும் செய்கிறான். எந்நேரமும் கோபம், சிறிய விஷயங்களுக்குக்கும் எரிச்சல், கூப்பாடு போடுகிறான். அடிக்கடி தலைசுற்றுகிறது என்கிறான். அவனை எப்படி குணப்படுத்துவது?

-ஜோதி, சென்னை.

ஆயுர்வேதத்தில் மதம் என்ற சொல்லுக்கு போதை என்று பொருள். பொதுவாக, மதுவானது உடம்பில் கபத்தையும், ஒஜஸ் எனும் உயர்ந்த சாரமான சத்தையும் அழித்து வாத- பித்தங்கள் எனும் தோஷங்களை அதிகரிக்கச் செய்யும் ஒரு பொருளாகும். இந்த நோய்க்கு சிகிச்சை செய்யும்போது, மருந்தானது வாத-பித்த தோஷங்களைத் தணிப்பதாக இருக்க வேண்டும்.

மேலும், மதுபானக் கேட்டில் அதிகமான சீற்றம் அடைந்துள்ள தோஷத்துக்கு உண்டான சிகிச்சையை முதலில் செய்ய வேண்டும். சம அளவில் சீற்றம் அடைந்த தோஷங்களால் மதுபானக் கேடு நோய் ஏற்பட்டிருப்பின் கபதோஷத்தின் இருப்பிடங்களாகிய உடல் பகுதிகளில் தொடங்கி, வரிசையில் சிகிச்சை செய்ய வேண்டும்.

மதுவகைகளில் எந்த வகை மதுவை முறை மீறி உபயோகித்ததால், நோய் தோன்றியதோ அதே வகை மதுவை முறைப்படி உபயோகித்து அந்த நோயை அகற்றலாம். இதற்கு "ததார்த்தகாரி' சிகிச்சை என்று பெயர். ஆயுர்வேதத்தில் "ஸ்ரீகண்டாசவம்' என்ற பெயரில் விற்கப்படும் மருந்தை மதுபானம் அருந்தும் நபர்களுக்கு சிகிச்சைக்காகப் பயன்படுத்துவதுண்டு.

அதிகப்படியான மதுவினால் கல்லீரல் பாதிக்கப்பட்டிருப்பின் நோயாளியின் உடல்நிலைக்கேற்ப, சோகை, காமாலைக்குரிய சிகிச்சை செய்வதையும் ஆயுர்வேதம் வலியுறுத்துகிறது. உடலின் மற்றபகுதிகளில் எரிச்சலோ, காந்தலோ இருப்பின் அதற்கு "தான்யாம்லம்' எனும் ஆயுர்வேத தயாரிப்பின் மூலமாக, அப்பகுதிகளின் மீது ஊற்றுவது நல்ல பலனைத் தரும். போதையில் இருந்து விடுபட தியானத்தையும், பித்து பிடித்தவர்களுக்கான சிகிச்சை முறைகளையும், கல்லீரலை வலுப்படுத்தும் சிறந்த மூலிகைகளையும் ஆயுர்வேதம் பரிந்துரை செய்கிறது.

மதுபானத்தினால் ஏற்படும் வெறி அடங்கவும், மனம் அமைதி பெறவும், நீர்வேட்கை, மூர்ச்சை அடைதல் போன்ற உபாதைகள் அடங்கவும் கீழ்காணும் மூலிகைகளால் நம் முன்னோர்கள் சிகிச்சை செய்து குணப்படுத்தியுள்ளனர்.

உலர்ந்த திராட்சை, இலுப்பைக் கட்டை, அதிமதுரம், திப்பிலி, பேரீச்சம் பழம் (கொட்டை நீக்கியது), சந்தனம், நன்னாரி, கோரைக்கிழங்கு, வெட்டிவேர், வகைக்கு சம எடை எடுத்துப் பொடித்து, சூரணமாக்கி அந்த மருந்தை நான்கு பங்கு குளிர்ந்த தண்ணீரில் சேர்த்து நன்கு கடைந்து சிறிதுநேரம் வைத்திருந்து, அதன்பிறகு வடிகட்டி காலை, மாலை என இரு வேளை வெறும் வயிற்றில் உபயோகிக்க வேண்டும். இந்த கஷாயத்தில் நெல்பொறியைப் பொடித்துச் சேர்த்துச் சாப்பிட பலன் அதிகம்.

மதுபான நோயாளிகளுக்கு ஏற்படும் தலைச்சுற்று தீர உலர்ந்த திராட்சை, விளாங்காய், மாதுளம்பழம் ஆகியவற்றால் பானகம் தயாரித்து தேனும், கற்கண்டும் சேர்த்துச் சாப்பிட உகந்தது.

மிளகு, சீரகம், கொத்தமல்லி விதை, ஏலக்காய், திப்பிலி ஆகியவற்றை பொடித்து முன்கூறிய விதம் தண்ணீர் விட்டு கடைந்து வடிகட்டி, அதில் கற்கண்டு, விளாம்பழச் சாறு, பச்சைக் கற்பூரம் பொடித்துச் சேர்த்துக் குடிக்க, குடிபோதை, ருசியின்மை குணமாகும். உணவில் ருசி, பசி உண்டாகும்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com