'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 193

தேவே கௌடா அரசின் காங்கிரசுக்கு எதிரான நகர்வுகள்
'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 193
Published on
Updated on
4 min read

என்னுடைய ஊகம் தவறவில்லை. புதுவருடம் பிறக்கும் வேளையில், காங்கிரஸ்காரர்களின் வயிற்றில் புளியை கரைக்கும் விதமாக, தேவே கெளடாவின் ஐக்கிய முன்னணி அரசு சில நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தது. காங்கிரஸை பலவீனப்படுத்துவதன் மூலம் தங்களுக்கு தரப்படும் ஆதரவை விலக்கிக்கொள்ள முடியாத சூழலை ஏற்படுத்துவதுதான் பிரதமர் தேவே கெளடாவின் திட்டம் என்று பலரும் சொன்னார்கள்.

ராஜேஷ் பைலட் என்னிடம் தெரிவித்த செய்தி, அடுத்த நாள் எல்லா தினசரிகளிலும் தலைப்புச் செய்தியாகவே வெளிவந்துவிட்டது. புது வருடம் ஆரம்பித்த போது, அதுவரை அடக்கி வாசிக்கப்பட்ட போஃபர்ஸ் பிரச்னை மீண்டும் விஸ்வரூபம் எடுத்தது. பிரதமர், உள்துறை அமைச்சர் இருவரின் அனுமதியோ, ஒப்புதலோ இல்லாமல் அந்தச் செய்தி வெளியிடப்பட்டிருக்காது என்பதில் சந்தேகமே இல்லை.

போஃபர்ஸ் பீரங்கி பேரத்தின் லஞ்சப்பணம் யார் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது என்பது குறித்த ஆவணங்களை வாங்கி வருவதற்கு, சிபிஐ இயக்குநர் ஜோகிந்தர் சிங் சுவிட்சர்லாந்து செல்ல இருக்கிறார் என்பதுதான், பரபரப்பாக வெளிவந்த தகவல். அந்தத் தகவலை அவர் பத்திரிகைகளுக்கு தெரிவித்திருக்க வேண்டிய அவசியமே கிடையாது.

அரசியல் ரீதியாக அந்த நேரத்தில் தேவே கெளடா தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசுக்கு எந்தவிதத் தேர்தல் நெருக்கடியும் இருக்கவில்லை. அதனால் இந்தச் செய்தியை வெளியிட்டு மக்களின் கவனத்தை திசைத் திருப்ப வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. மக்களின் கவனம் முழுவதும் காங்கிரஸ் கட்சியில் நிலவிய தலைமைக்கான போட்டி குறித்தும், நரசிம்ம ராவ் மீதான வழக்குகள் குறித்தும் இருக்கும் போது போஃபர்ஸ் பூதத்தை சிபிஐ இயக்குநர் ஜோகிந்தர் சிங் ஏன் அவசியமில்லாமல் எழுப்பினார் என்பது இன்றுவரை புதிராகவே இருந்துவருகிறது.

மும்பையில், பிடிஐ செய்தி நிறுவனத்தைத் தானே அழைத்து அந்த நிருபருக்கு பேட்டி அளிக்க இருக்கிறார் சிபிஐ இயக்குநர் ஜோகிந்தர் சிங் என்பதுதான், ராஜேஷ் பைலட் என்னிடம் பகிர்ந்து கொண்ட செய்தி. அந்தப் பேட்டியில் சோனியா காந்திக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் போஃபர்ஸ் தொடர்பான பல தகவல்களை அவர் தெரிவிக்க இருப்பதாகவும் பைலட் கூறியிருந்தார்.

'புதுவருடப் பிறப்பையொட்டி அதிகாலையில் சர்ச்சுக்கு (மாதா கோயிலுக்கு) சோனியா போகும்போது, நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கக்கூடாது என்று திட்டமிட்டு இந்தத் தகவலைக் கசிய விடுகிறார்கள். அவரை எரிச்சல்படுத்துவதால் தேவே கெளடாவுக்கும் அவரது கூட்டாளிகளுக்கும் என்ன லாபம் கிடைத்துவிடப் போகிறது என்று எனக்கு புரியவில்லை' என்றும் என்னிடம் சொன்னார் ராஜேஷ் பைலட்.

காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சியின் தலைவராக யார் வந்தாலும், அவர்கள் ஆட்சியைக் கவிழ்த்துவிடாமல் இருக்க, போஃபர்ஸை ஐக்கிய முன்னணி அரசு துருப்புச் சீட்டாக பயன்படுத்துகிறதோ என்கிற சந்தேகம் எனக்குள் எழுந்தது. நான் அதைப் பகிர்ந்து கொள்ளாமல் விடைபெற்றுக் கொண்டேன்.

ஜனவரி 15-ஆம் தேதி, சுவிட்சர்லாந்து செல்ல இருப்பதாகவும், சில முக்கியமான தகவல்கள், ஆவணங்களை அங்கிருந்து பெறப் போவதாகவும் தெரிவித்திருந்தார் ஜோகிந்தர் சிங்.

போஃபர்ஸ் பீரங்கி பேரத்தில் ரூ. 65 கோடி லஞ்சம் வழங்கப்பட்டிருப்பதாக புகார் நிலவுகிறது. இந்தப் பணம் ஐந்து பேர்களின் கணக்குகளில், சுவிஸ் வங்கியில் போடப்பட்டிருக்கிறது. பொதுவாக சுவிஸ் வங்கியில், பணம் வைத்திருப்பவர்கள் குறித்த விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும். அதை யாரிடமும் சொல்ல மாட்டார்கள் என்பதால்தான், உலகளாவிய அளவில் ஊழல் பணமும், கணக்கில் காட்டப்படாத கருப்பு பணமும் சுவிஸ் வங்கியில் வைப்புத் தொகையாக (டெபாசிட்) போடப்படுகின்றன.

சுவிஸ் வங்கிக் கணக்குகளில் போஃபர்ஸ் லஞ்சப் பணம் போட்டிருப்பவர்கள் யார், யார் என்பது தொடர்புடைய விவரங்களும், பணம் செலுத்தப்பட்டவர்கள் தொடர்பான ஆவணங்களும் இந்திய அரசால் கோரப்பட்டிருந்தன. அந்த விவரங்களைத் தர சுவிஸ் வங்கி மறுத்துவிட்டது.

வங்கிகள் மட்டுமல்ல, அந்த ஐந்து பேர்கள் சார்பாக, இத்துடன் தொடர்பில்லாத சிலர், இந்திய அரசிற்கு எந்தத் தகவலும் தரக்கூடாது என்று சுவிட்சர்லாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தனர். இந்திய அரசுக்கு தகவல் தரப்பட்டால், அதை முன்னுதாரணமாக்கி உலகிலுள்ள பல்வேறு நாடுகளில் இருந்தும் இது போன்ற கோரிக்கைகள் எழக்கூடும் என்றும், சுவிஸ் வங்கியின் தனித்தன்மை போய்விடும் என்றும் வங்கிகளின் சார்பில் நீதிமன்றத்தில் வாதம் முன்வைக்கப்பட்டது.

பிறகு, இந்திய அரசுக்கு லஞ்சப் பணம் தொடர்பான தகவல்களை ரகசியமாக பகிர்ந்துகொள்ள சுவிஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. அது தொடர்பான ஆவணங்களையும், பொதுவெளியில் அல்லாமல் இந்திய அரசின் அதிகாரபூர்வ பிரதிநிதியிடம் ரகசிய ஆவணமாக வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

'ஆவணங்கள் எந்தத் தேதியில் கிடைக்கும் என்பது தொடர்பாக சுவிட்சர்லாந்து அதிகாரிகளிடம் இருந்து தகவலை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஆவணங்கள் எப்படியும் ஜனவரி 20-ஆம் தேதிக்குள் கிடைத்துவிடும் என்று நம்புகிறேன். அதற்குத்தான், ஜனவரி 15-ஆம் தேதியே சுவிட்சர்லாந்திற்கு சென்று எப்படியும் அந்த ஆவணங்களைப் பெறுவதற்கு நான் முயற்சிக்க இருக்கிறேன்' என்பதுதான் பிடிஐ நிருபருக்கு சிபிஐ இயக்குநர் ஜோகிந்தர் சிங் தெரிவித்திருந்த செய்தி.

காலை தினசரிகளில் வெளிவந்திருந்த சிபிஐ இயக்குநர் ஜோகிந்தர் சிங் பேட்டியைப் படித்தபோது சிரிப்புத்தான் வந்தது. ஆவணங்கள் எதுவும் தரப்படுவதற்கான உத்தரவாதங்கள் இல்லாமல் நீதிமன்ற உத்தரவை வலியுறுத்தி, ஆவணங்களுக்காக போராடத்தான் சிபிஐ இயக்குநர் செல்லவிருக்கிறார். ஏதோ ஆவணங்கள் கிடைத்து விட்டதைப் போலவும், போஃபர்ஸ் வழக்கில் குற்றவாளிகள் பிடிப்பட்டது போலவும் ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவதுதான் நோக்கமே தவிர அதற்கு மேல் ஒன்றுமில்லை என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.

வேடிக்கை என்னவென்றால், காங்கிரஸ் தலைவர்கள் யாருமே அந்த பேட்டியை சட்டை செய்யவில்லை. இன்னும் சொல்லப்போனால், ஜோகிந்தர் சிங்கின் முயற்சி வெற்றிபெற்று, போஃபர்ஸ் ஊழல் வழக்கில் ராஜீவ் காந்தியோ, நேரு குடும்பமோ சம்பந்தப்பட்டிருப்பது உறுதியானால் மற்றவர்களைவிட காங்கிரஸ் கட்சியில் உள்ள ஒருசிலர்தான் சந்தோஷப்படுவார்கள்.

மாலையில் பலரும் புத்தாண்டு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். ஷீலா கெளல் வீட்டில் நடைபெறும் புது வருட கொண்டாட்ட விருந்துக்கு எனக்கு அழைப்பு இருந்தது. நேரு குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால், அவரது வீட்டில் நடக்கும் விருந்துக்கு சோனியா குடும்பத்தினர் தவறாமல் வருவது வழக்கம்.

சோனியா காந்தி என்று இல்லை, அதற்கு முன்னால் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோரும் ஷீலா கெளல் வீட்டு புதுவருட கொண்டாட்ட விருந்துக்கு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அவர்கள் வருவார்கள், அவர்களது பார்வையில் படலாம் என்பதற்காகவே காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் பலர் அந்த விருந்தைத் தவறவிட மாட்டார்கள்.

ஜோகிந்தர் சிங்கின் பேட்டி வெளிவந்திருக்கும் நிலையில், ஷீலா கெளல் வீட்டு விருந்துக்கு சோனியா காந்தி வருவாரா, மாட்டாரா என்ற கேள்வி என்னில் எழுந்திருந்தது. நான் சந்திக்க சென்றிருந்தபோது, மாலையில் ஷீலா கெளல் வீட்டு விருந்துக்கு செல்வதாக அஜித் சிங் தெரிவித்தார். நானும் அவருடன் இணைந்துகொள்வதாகத் தெரிவித்தேன். ஆட்டோவில் போய் இறங்காமல் அவருடன் காரில் போய் இறங்கி விருந்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

வழக்கம் போல, கோலாகலமாக வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது ஷீலா கெளலின் பங்களா. பங்களாவையொட்டிய புல் தரையில்தான் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குளிர்காலம் என்பதால் மாலை 5 மணிக்கே தொடங்கி, இரவு 7 மணிக்கெல்லாம் பெரும்பான்மையான பிரமுகர்கள் கிளம்பிவிடுவார்கள் காங்கிரஸ் தலைவர்கள் மட்டுமல்லாமல் முக்கியமான தொழிலதிபர்கள், உயரதிகாரிகள், உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் என்று ஏகப்பட்ட விவிஐபிக்கள் அங்கு கூடியிருந்தனர். பிரணாப் முகர்ஜி, அர்ஜுன் சிங், என்.டி. திவாரி, ராம் நிவாஸ் மிர்தா, உள்ளிட்ட பலர் வந்திருந்தனர்.

ஷீலா தீட்சித், பிரதிபா பாட்டீல், மீரா குமார், நஜ்மா ஹெப்துல்லா, மார்கரெட் ஆல்வா என்று காங்கிரஸின் பெண் ஆளுமைகள் பலரும் வந்திருந்தனர்.

ராஜேஷ் பைலட்டைச் சுற்றி நான்கைந்து பேர் நின்று கொண்டிருந்தார்கள், பிரணாப் முகர்ஜியுடன் முக்கியமான தலைவர்கள் அளவளாவிக் கொண்டிருந்தனர். உள்ளே நுழைந்ததுமே நானும் அஜித் சிங்கும் பிரிந்துவிட்டோம். ஒரு சில பத்திரிகை நிருபர்கள் வந்திருந்தார்கள் என்றாலும், அவர்கள் ஏனோ வழக்கத்திற்கு மாறாக எல்லோரிடமும் பேசி உறவாடவில்லை. சோனியா காந்தியின் வரவை எதிர்பார்த்து மட்டுமே அவர்கள் வந்திருந்தனர் என்பதை நான் புரிந்து கொண்டேன்.

புல்வெளியின் ஓர் ஓரமாக, பின்னாளில் ராஜஸ்தான் முதல்வரான அசோக் கெலாட்டும் ஆர்.கே. தாவணும் ஏதோ தனியாகப் பேசிகொண்டிருந்தார்கள். அவர்களுடன் இணைந்துகொண்டார் அஜித் சிங். என்ன செய்வது என்று தெரியாமல் ஏனைய பத்திரிகை நிருபர்களுடன் இணைந்து கொண்டேன்.

திடீரென்று சலசலப்பு. திரும்பிப் பார்த்தால் அம்பிகா சோனி நுழைந்து கொண்டிருந்தார். அவருடன் சோனியா காந்தியின் உதவியாளர் ஜார்ஜ் வந்துகொண்டிருந்தார். அவர் கையில் ஒரு பூங்கொத்து இருந்தது. அதைப் பார்த்ததுமே, சோனியா காந்தி வரப்போவதில்லை என்பதை நான் புரிந்துகொண்டேன். நான் மட்டுமல்ல, அங்கிருந்த மற்றவர்களும்.

வந்த வேகத்தில் ஷீலா கெளலை சந்தித்து பூங்கொத்தை அளித்து விட்டுச் சென்றுவிட்டார் ஜார்ஜ்.

அம்பிகா சோனியை சைகை செய்து அழைத்தார் ஆர்.கே. தாவண்.

அவரிடம், தாவனும் கெலாட்டும் 'என்ன நடந்தது' என்று விசாரித்தனர். அவரும் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார்.

பிரணாப் முகர்ஜியும், பல்ராம் ஜாக்கரும், ராம் நிவாஸ் மிர்தாவும் இருந்த இடத்தை நோக்கி அம்பிகா சோனி நகர்ந்தார். அனைவரின் பார்வையும் அவர்மீது பதிந்திருந்தது. அவர்களிடமும் ஏதோ சொன்னார் அவர்.

சோனியா காந்தி வருவார் என்று எதிர்பார்த்து, எதுவும் சாப்பிடாமல் எல்லோரும் காத்திருந்தனர். சோனியா வரப்போவதில்லை என்று தெரிந்ததும், விருந்து தொடங்கியது. சிலர் உணவு வகைகள் வைக்கப்பட்டிருந்த இடத்தை நோக்கி நகர்ந்தனர். பலரும், உணவு உட்கொள்ளாமல் கிளம்பிவிட்டனர். அவர்களில் நானும் அஜித் சிங்கும் அடக்கம்.

''என்ன நடந்ததாம்? ஏன் சோனியா காந்தி வரவில்லை?''

''காலையிலிருந்தே அவர் யாருடனும் பேசவில்லையாம். பூங்கொத்து கொடுத்துவிட்டு வரும்படி ஜார்ஜிடம் சொல்லியிருக்கிறார். புத்தாண்டு வாழ்த்து சொல்ல சென்றிருந்த அம்பிகா சோனியையும் அவர் சந்திக்கவில்லையாம்.''

''ஜோகிந்தர் சிங் பேட்டிதான் காரணமாக இருக்க முடியும்...''

''தேவே கெளடா தனது செளத் பிளாக் (பிரதமர் அலுவலகம்) நாள்களை எண்ணத் தொடங்கலாம்...'' என்று சொல்லி, கலகலவென்று சிரித்தார் அஜித் சிங்.

அந்த சிரிப்பிற்கு நிறைய அர்த்தங்கள் இருந்தன...

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com