விவசாயிகள் விளைநிலத்தை உழவு செய்வதற்கு இயந்திரங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, மர ஏர் கலப்பையில் காளைகளைப் பூட்டியே, மரபு மாறாமல் இன்றளவும் பாரம்பரிய முறையில் உழவு செய்து வருகின்றனர் என்றால் ஆச்சரியம்தானே!
வளர்ந்து வரும் அறிவியல் முன்னேற்றம், புதிய கண்டுபிடிப்புகள், நவீன கருவிகளின் பயன்பாடு போன்றவை வேளாண்மைத் துறையையும் விட்டுவைக்கவில்லை.
ஏர் உழுதலில் தொடங்கி, விளைபொருள்களை ஏற்றிச் செல்லுதல், கிணற்றில் இருந்து தண்ணீர் இறைத்தல், கதிரடித்து துாற்றி தானியங்களைப் பிரித்தெடுத்தல், மதிப்புக் கூட்டுதல் உள்ளிட்ட பெரும்பாலான பணிகளுக்கு, காளைகளைப் பயன்படுத்துவது குறைந்துவிட்டது.
குக்கிராமங்களிலும்கூட டிராக்டர்கள், அறுவடை இயந்திரங்கள் உள்ளிட்ட நவீன கருவிகள் என இயந்திரங்களுமே அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த நிலையில், சேலம் மாவட்டத்துக்கு உள்பட்ட பெத்தநாயக்கன்பாளையம் அருகேயுள்ள இடையப்பட்டி ஊராட்சியில் பழங்குடியின மக்கள் வசித்து வரும் நெய்யமலை, அக்கரைப்பட்டி, ஆலாங்கடை ஆகிய கிராமங்களில், பெரும்பாலான விவசாயிகள் இன்றளவும், மரத்தினால் செய்யப்பட்ட ஏர் கலப்பைகளில் காளைகளைப் பூட்டியே விளைநிலத்தை உழவு செய்து வருகின்றனர். நவீன இயந்திரங்கள், கருவிகளை இவர்கள் பயன்படுத்துவதில்லை.
வரகு, தினை, சாமை, உள்ளிட்ட சிறுதானியக் கதிர்களை கதிர் அரிவாள் எனும் கத்தியைக் கொண்டு அறுவடை செய்து, வெய்யிலில் உலர வைத்து, உரலில் கொட்டி உலக்கையில் இடித்து பெண்கள் அரிசியை பிரித்தெடுத்து சமைக்கப் பயன்படுத்துகின்றனர்.
இதுகுறித்து நெய்யமலை விவசாயி மோளையன் கூறியதாவது:
'சிறுவயதில் இருந்தே பெற்றோர் வழியில் விவசாயம் செய்து வருகிறேன். நிலத்தை உழவு செய்வதற்கு பெரும்பாலும் இயந்திரங்களைப் பயன்படுத்துவதில்லை. காளைக் கன்றுகளை வாங்கி, ஏர் உழுவதற்கு பழக்கப்படுத்தி, எனது நிலத்தை உழுது பயிர் செய்து வருகிறேன். இதனால், பயிரிடும் செலவு குறைவதோடு, உடலுக்கும் உறுதியும் கிடைக்கிறது. எத்தனை நவீன கருவிகள் இயந்திரங்கள் பயன்பாட்டுக்கு வந்தாலும், மரபு மாறாமல் முன்னோர்கள் வழியில் பாரம்பரிய முறையில் மர ஏர் கலப்பையில் காளைகளைப் பூட்டி நிலத்தை உழுது பயிரிடுவது பெருமிதம்தான்.
காளைகள், அரிவாள், உலக்கை, குந்தாணி, திருக்கை உள்ளிட்ட பாரம்பரிய வேளாண் கருவிகளை பயன்படுத்துவது பெருமிதம் அளிக்கிறது' என்றனர்.
- பெ.பெரியார்மன்னன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.