குழந்தைகளை விஞ்ஞானிகளாக்க..!
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் மனப்பான்மையை விதைக்கும் நோக்கில், 'ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி' என்ற பெயரில் பயிற்சித் திட்டத்தை நடத்தி வருகிறது எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம். புதுக்கோட்டையிலுள்ள இந்த நிறுவனத்தின் பயிற்சி மையத்தில், இதுவரை 240 மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
பயிற்சி குறித்து நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி ஆர். ராஜ்குமாரிடம் பேசியபோது:
'பேராசிரியர் எம்.எஸ். சுவாமிநாதனுக்கு 'இந்திரா காந்தி தேசிய விருது' வழங்கப்பட்டபோது, அந்த விருதின் தொகையில் இருந்து மாணவர்களுக்கு அறிவியல் மனப்பான்மையை உருவாக்கும் பயிற்சியை நடத்த முடிவு செய்தார்.
அதன்படி, சென்னை மற்றும் பூம்புகாரில் ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி' என்ற பெயரிலான பயிற்சித் திட்டம் தொடங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, புதுக்கோட்டையில் 2023 டிசம்பர் 11இல் இத்திட்டப் பயிற்சியை மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடக்கி வைத்தார்.
முழுக்க அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே இந்தப் பயிற்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு குழுவில் 30 மாணவர்கள் இடம்பெறுவார்கள். 6 ,7, 8 வகுப்புகள் படிக்கும் 30 மாணவர்களைத் தேர்வு செய்து எங்கள் பயிற்சி மையத்துக்கு அழைத்து வருகிறோம்.
காலையில் பள்ளியில் வணக்க நேரம் முடிந்ததும் வாகனத்தில் அழைத்து வந்து, பள்ளி முடியும் நேரத்துக்குள்ளாக மீண்டும் பள்ளிக்கு கொண்டு சென்றுவிடுகிறோம்.
இதுவரை 8 குழுக்களில் 240 மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளித்திருக்கிறோம். இதைத் தவிர, கோடைக்கால வகுப்பையும் இடையில் நடத்தியிருக்கிறோம். அதில், மாநிலம் முழுவதும் தேர்வு செய்து 30 மாணவர்களைப் பங்குபெற வைத்திருக்கிறோம்.
பள்ளி மாணவர்களுக்கு, குறிப்பாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் மனப்பான்மையை உருவாக்குவதுதான் இத்திட்டத்தின் நோக்கம். அறிவியல் இயக்கத்தின் பயிற்சியாளர்கள் உள்பட பலரையும் இணையவழியிலும் கூட பயன்படுத்திக் கொள்கிறோம். கொல்லி
மலையில் மிக விரைவில் இந்தப் பயிற்சி தொடங்கப்படவுள்ளது' என்கிறார் ராஜ்குமார்.
பயிற்சியின் பாடத் திட்டம் குறித்து ஆசிரியை பி.மீனாவிடம் பேசியபோது:
'15 வேலைநாள்களில் நடத்தப்படும் இந்தப் பயிற்சியில், வானியல், கடல்சார் அறிவியல், வேளாண் அறிவியல், உணவு அறிவியல் உள்ளிட்ட பயிற்சிகளைத் தருகிறோம். தொலைநோக்கிகளை வானியல் தொடர்பான பயிற்சியை அந்தப் பள்ளிக்கே எடுத்துச் சென்று வழங்குகிறோம்.
எந்தெந்த உணவுப் பொருள்களில் என்ன விதமான ஊட்டச்சத்துகள் நிரம்பியுள்ளன என்பலவற்றை மாணவர்களுக்குச் சொல்லித் தருவதன் மூலம் அவர்கள் தங்களுக்குத் தேவையான ஊட்டச்சத்தை தாங்களே போதுமான அளவுக்கு எடுத்துக் கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கும்.
தாவரங்களில் உள்ள நுண்ணுயிரிகளை பிரத்யேக கருவி மூலம் பார்க்கும்போது, ஒரு தாவர மருத்துவரைப் போன்ற அறிவைப் பெற்றுக் கொள்வதன் அவசியம் மாணவர்களுக்கு உருவாக்கப்படுகிறது.
உள்ளீடு பரவல், சவ்வூடு பரவல், நீராவி மாற்றம், காற்றுக்கும் எடை இருக்கிறது, மின் காந்த அலைகள், தண்ணீரின் ஆழம், அழுத்தம், மனித மூளையின் செயல்பாடுகள், சூரியக் குடும்பத்தின் இயக்கம், தண்ணீரிலுள்ள அமில, காரத் தன்மைகள் குறித்த ஆய்வுகள் போன்ற ஏராளமான விஷயங்களைக் கற்றுத் தருகிறோம்.
பள்ளியில் கூட இந்தளவுக்கு அறிவியல் அறிவைப் பெற முடியவில்லை என மாணவர்கள் பயிற்சியை முடித்த பிறகு சொல்லிச் செல்லும்போது பெருமிதம் ஏற்படுகிறது.
பதினைந்து நாள் பயிற்சி முடிந்த பிறகு, ஒவ்வொரு மாணவரும் ஏதாவதொரு அறிவியல் மாதிரியை செய்துக் காட்ட விளக்க வேண்டும். அதன்பிறகு அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது' என்கிறார் மீனா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.