சில்லரையா? சில்லறையா?, கருப்பா? கறுப்பா? - பிழையற்ற தமிழ் அறிவோம்! - 3

சில்லரையா? சில்லறையா?, கருப்பா? கறுப்பா?, இயக்குநரா? இயக்குனரா? - பிழையற்ற தமிழ் அறியும் முயற்சியாக ஒரு தொடர்...
சில்லறை...
சில்லறை...Center-Center-Chennai
Published on
Updated on
2 min read

6. சில்லரை / சில்லறை:

ஒரு ரூபாயில் சிறிய பகுதிகளோ, நூறு, ஆயிரம், பல்லாயிரம் எனும் எந்தத் தொகையிலும் வரும் சிறிய பகுதிகளோ அவை சிலவாக அறுக்கப்பட்டவை (பிரிக்கப்பட்டவை) ஆதலின் சில்லறை என்றே எழுதுதல் வேண்டும். சில அரை எனில் அரை அரையாகத்தான் அளவிடல் முடியுமன்றி, கால், அரைக்கால் என்னும் சிறியவற்றை அது குறிப்பிடல் இயலாது. 10 காசு, 50 காசு முதலியவை ஒரு ரூபாயில் சில்லறை; 50 ரூபா, 100 ரூபா ஆயிரத்துள் சில்லறை. இப்படியே அடுக்கிச் செல்லலாம். ஆதலின் சில்லறையே சரியான பொருள் கொண்ட சொல்.

7. கருப்பு / கறுப்பு: கருப்பினத் தலைவர், கருப்புப் பணம் என்றெல்லாம் செய்தித் தாள்களில் பார்க்கிறோம். கறுப்பினத் தலைவர், கறுப்புப் பணம் என்று வல்லினம் இட்டு எழுத வேண்டும். கருப்பு என இடையினம் போட்டால் பஞ்சம் என்று பொருள். கரிய, கருமை என்னும் போது இடையின 'ர' வரினும் கறுப்பு என்று எழுதும்போது மட்டும் வல்லின 'று'தான் போட வேண்டும். தமிழ்ப் பேரகராதி, சிற்றகராதி எதிலும் சரிபார்த்துக் கொள்க. கருப்புப் பட்டியல் எனில் பஞ்சப் பட்டியல் என்றே பொருளாம்.

8. மேனாள் / முன்னாள்: இப்போதெல்லாம் முன்னாள் அமைச்சர், முன்னாள் தலைவர் என்று குறிப்பிட்டு வந்த இடங்களில் மேனாள் அமைச்சர், மேனாள் தலைவர் என்று எழுதுகிறார்கள். புறநானூற்றில் வந்துள்ள மேனாள் என்னும் சொல்லுக்கு நேற்றைக்கு முந்தைய நாள் (மேல்+நாள்) எனும் பொருளே காண்கிறோம். 'நெருநல் உற்ற செருவிற்கு..' என்ற வரியின் முன் மேனாள் உற்ற செருவிற்கு.. எனும் வரி இடம்பெற்றுள்ளது. முன்னாள் எனில் அது நேற்றாகவும், பலநாள் முன்னாகவும், பல திங்கள், பல ஆண்டு முன்னதாகவும் பொதுத் தன்மை கொண்டுள்ளது. இந்தப் பொருள் மேனாளில் இல்லை. இதனை எழுதத் தெரியாதவர் மே நாள் என்று எழுதிவிட்டால் அது மே தினத்தைக் (மே-1) குறிக்கும். பழைய நாளில் பதவியில் இருந்தோரை முன்னாள் என்றே குறிப்போமாக.

9. இயக்குனர் / இயக்குநர்: இயக்குநர், நடத்துநர், ஓட்டுநர் போன்ற சொற்களை இப்போதும் இயக்குனர், நடத்துனர், ஓட்டுனர் என்று பிழையாக எழுதுகிறார்கள். இச்சொற்களைப் பிரித்து (இயக்கு+அன்+அர்) பின் சேர்த்தால் இயக்குனர், நடத்துனர் என்றுதான் வரும் ('கு'வில் உள்ள உகரம் கெட்டு, க ஆகிவிடும்). மாறாக இயக்கு, நடத்து, ஓட்டு எனும் சொற்களோடு 'நர்' எனும் சிறப்பு விகுதியைச் சேர்த்தால் எந்த மாற்றமும் வராது. 'கேட்குந போலவும், கிளத்துந போலவும்' என்று தொல்காப்பியம் தொடங்கி, உப்பு விலை பகருநர், மீன்விலை பகருநர், நெருந்தேர் ஊருநர், செம்பு செய்நர், மணி குயிற்றுநர் என்று சிலப்பதிகாரத்திலும் கண்டுகொள்க.

10. உளமாற / உளமார: 'நீடூழிவாழ உளமாற வாழ்த்துகிறேன்' என்று சிலர் எழுதுகிறார்கள். உள்ளம் மாறிவிட வாழ்த்துகிறேன் என்பது இதன் பொருளாகும் (உளம்+மாற). ஆனால், நினைத்த பொருள் இதுவா? மனம் நிரம்ப வாழ்த்துகிறேன் என்பதுதானே நம் கருத்து. ஆதலின் மனம் + ஆர-நிரம்ப, பொருந்த) எனும் பொருளில் மனமார வாழ்த்துகிறேன் என எழுதுதல் வேண்டும்.

11. அளப்பறியன / அளப்பரிய: "அவர் ஆற்றிய பணிகள் அளப்பறியனவாகும்" என்றும் எழுதியிருப்பதைப் பார்த்திருக்கிறோம். அவர் ஆற்றிய பணிகள் அளப்பதற்கு முடியாத (நிறைந்த) பணிகள் என்பதுதானே நம் கருத்தும் பொருள். அப்படியாயின் அளப்பரியன என்றுதானே எழுதிட வேண்டும். இதைவிட்டு அளப்பறியன என்றால், ஒரு பொருளும் இன்றிக் குழப்பம் தோன்றும். எதை அறிய..? எதை அளக்க..? அளப்ப+அரிய = அளப்பரிய என்பதுதான் சரியான சொல்.

12. அன்னாளைய / அந்நாளைய தலைவர்:

முன் ஒரு நேரம் தலைவராய் இருந்தவரைக் குறிக்க ஒரு சிலர் அன்னாளைய தலைவர் என்று ஏடுகளில் எழுதி வருகிறார்கள். அ+நாள் = அந்நாள் என்பது சரியான சொல். அந்த நாள் தலைவர் என்னும் பொருளை மனத்தில் எண்ணி, அன்னாள் என்று எழுதுவது பிழையன்றோ? இது ஏதோ ஒரு பெண்ணின் பெயரைப் போல் தோன்றுகிறதே. இவ்வாறே இப்போது தலைவராய் இருப்பவர் இந்நாள் தலைவர் ஆவார். இவரை இன்னாள் ஆக்கிவிட்டால், இல்லாதநாள் தலைவர் ஆகிவிடுவார். கவனம் வேண்டும்.

(தமிழ் வளரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com