வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

பதட்டமும் பதற்றமும், ஆறும் ஆர்-ம்! பிழையற்ற தமிழ் அறிவோம்! - 4

பதட்டமா, பதற்றமா? ஆறு இருக்க ஏன் ஆர்? - பிழையற்ற தமிழ் அறியும் முயற்சியாக ஒரு தொடர்...

News image

தமிழ் அறிவோம்

Updated On :8 அக்டோபர் 2024, 12:04 pm IST

13. பண்டகசாலை / பண்டசாலை

பண்டங்கள் உடைய இடம் பண்டகம் அல்லது பண்டசாலை எனல் போதுமானது. ஆனால் கூட்டுறவுப் பண்டக சாலை என்னும் வழக்கு தமிழகத்தில் நிலைபெற்றுள்ளது. அகம் எனின் மனம், வீடு, இடம் எனப் பலபொருள் உண்டெனினும் ஈண்டு இடம் எனப் பொருள் கொள்க. நூல்கள் உடைய இடம் நூலகம்; பண்டங்கள் உடைய இடம் பண்டகம். பின் ஏன் சாலை என்று ஒரு சொல். உணவுச்சாலை என்பது போல் பண்ட சாலை எனலும் சரியாம்.

14. பதட்டம் / பதற்றம்

நம் மக்களின் பேச்சு வழக்கிலும் எழுத்திலும் பதட்டம் எனும் சொல் நிரம்பப் பயன்பாட்டில் உள்ளது. இச்சொல்லுக்குப் பொருள் இல்லை. இது பதற்றம் என்று இருத்தல் வேண்டும். பதறு, பதற்றம் எனும் சொற்கள் சரியானவை; பொருளுடையவை. இனி, பதட்டம் விட்டு பதற்றம் கொள்ளுவோம்.

15. கண்றாவி / கண்ணராவி

இப்படி ஒரு சொல் எந்த அகர முதலியிலாவது (அகராதி) பார்த்ததுண்டா? இப்படி ஒரு சொல் இல்லவே இல்லை. ஆனால் பத்திரிகை, தொலைக்காட்சிச் செய்திகளில் பார்க்கிறோம். கேட்கிறோம். மிகக் கொடிய, காண்பதற்குக் கூடாத காட்சியை இப்படிச் சொல்லி வருகிறோம். இது கண் அராவும் காட்சி. ஆதலின் இச்சொல் கண்ணராவி என்றிருத்தல் வேண்டும். (அராவுதல்- இரும்பால் தேய்த்தல், அறுத்தல்)

ஊர்ப் பெயர்த் திரிபுகள்

பயன்பாட்டில் உள்ள பல சொற்கள் எப்படிப் பிழையானவை என்பது பற்றி எடுத்துக் காட்டுகள் வழியாகப் படித்தீர்கள். இவ்வாறே பல  ஊர்களின் பெயர்கள் சிதைந்து பொருள் திரிந்து வழங்கப்பட்டு வருகின்றன. ஆறுகளால் பெயரமைந்த ஊர்கள் உண்டு. எடுத்துக்காட்டாக, அடையாறு, செய்யாறு, திருவையாறு எனும் பெயர்கள் காண்க.

அடையாறு என்பதை அடையார் என்று எழுதுகிறார்கள். பேருந்துகளிலும், பெயர்ப் பலகைகளிலும் காண்கிறோம். அடையார் என்றால் அடையமாட்டார் என்று பொருள். இனிப்பகம் ஒன்று அடையார் எனும் சொல்லோடு பயன்பாட்டில் உள்ளது. அந்த இனிப்பகத்தை யாரும் சென்றடையமாட்டார்களா? எவ்வளவு பெரிய தவறு இது?

செய்ய நீர் (சிவந்தநீர்-புதுவெள்ளம்) ஓடிய ஆறு செய்யாறு. அந்த ஆற்றின் பெயரமைந்த ஊரைச் செய்யார் என்று எழுதியுள்ளார்கள். செய்யமாட்டார் என்ற பொருள் இதற்குண்டு. என்ன செய்யமாட்டார்? ஏன் செய்யமாட்டார்? இப்படிச் சிதைக்கலாமா?

தஞ்சை அருகே திருவையாறு எனும் திருத்தலம் ஒன்றுள்ளது. ஐந்து ஆறுகள் அருகருகே ஓடிச் செழித்த மண் இது. இந்தத் திருவையாற்றைத் திருவையார் என்றெழுதுகிறார்கள். திருவையுடையவர் இவர் என்று பொருள் சொல்லலாமா? அல்லது திரிகை (மாவு அரைக்கும் சிறு கருவி) எனும் சொல்லை "திருவை' என்று பாமரர் சொல்லுவர். இவர் திருவையார் என்பதா? என்ன கொடுமை இது?

ஆறுகளின் பெயர்களும் இப்படி ஆர் விகுதியோடு வழங்கப்பட்டு வருகின்றன. காட்டாறு என்பதைக் காட்டார் (காட்டமாட்டார்) என்றும், புது ஆறு - புத்தாறு என்பதைப் புதார் என்றும் குடமுருட்டியாறு என்பதைக் குடமுருட்டியார் (குடத்தை உருட்டியவர்) என்றும் ஓடம்போக்கியாறு என்பதை ஓடம் போக்கியார் (ஓடத்தைப் போக்கியவர்) என்றும் வழங்குதல் பிழையன்றோ?

வேறு சில ஊர்ப் பெயர்கள் வெவ்வேறு வகையில் சிதைந்து பிழையுறப் பயன்பாட்டில் உள்ளன. (பழைய) சோழநாட்டின் கோடியில் (கடைசியில்) இருந்த கடற்கரை ஊரைக் கோடிக் கரை என்றனர். இப்போதும் தமிழ்நாட்டின் வரைபடத்தைப் பார்த்தால் கிழக்குக் கோடியில் ஒரு புள்ளியாக அவ்வூர் அமைந்துள்ள இடத்தைக் காணலாம். அதனை இன்று கோடியக்கரை என்று எழுதுகிறார்கள்; பேசுகிறார்கள். ஒருகால் வளைந்த கரை என்னும் பொருளுடையது என்றால் கோடிய கரை என்று "க்' போடாமல் எழுத வேண்டும். (கோடுதல்-வளைதல்; கோட்டம்-வளைவு)

ஆனால் இந்த ஊர்க் கடற்கரையில் கோட்டம் (வளைவு) எதுவும் இல்லை. ட எனும் எழுத்தை இடம் வலமாக மாற்றிப் போட்டதுபோல் இரண்டு நேர்க்கோடுகளின் சந்திப்பாக அவ்விடம் இருப்பதைப் படத்தில் காணலாம். ஆதலின் கோடிக்கரை என்றே குறித்தல் பிழையற்றது.

(தமிழ் வளரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.