இம்மண்ணுலகில், ஒருவர் சிறப்புறக் கல்வியைப் போல் உயர்ந்ததும் குற்றமற்றதும் ஏழு பிறவிக்கும் பயன் நல்குவதுமான பொருள் வேறொன்றில்லை (குறள் 398, 400). கல்வி (40), கல்லாமை (41), கேள்வி (42), அறிவுடைமை (43) ஆகிய அதிகாரங்களில் கல்வியின் சிறப்பை வள்ளுவப் பேராசான் நன்கு விளக்கியுள்ளார். குறளுக்குப் பிந்தைய நூல்களும் கல்வியின் மேன்மையை எடுத்துரைத்துள்ளன. சான்றுக்கு விவேகசிந்தாமணிப் பாடலொன்று,
வெள்ளத்தால் அழியாது வெந்தழலால்
வேகாது வேந்த ராலும்
........................
உள்ளத்தே பொருளிருக்க உலகெங்கும்
பொருள்தேடி உழல்வ தென்னே!
என்று அமைந்துள்ளது. இதற்குக் "கல்வியை வெள்ளத்தால் அழிக்கமுடியாது; நெருப்புச் சூழ்ந்தாலும் அது வேகாது; வேந்தன் நினைத்தாலும் அதைப் பறிக்க முடியாது; அடுத்தவர்க்குக் கொடுத்தாலும் நிறையுமே தவிரக் குறைவடையாது; திருடர்களாலும் அதைத் திருடிச் செல்ல இயலாது; (ஆகவே, மக்கள்) கல்வி என்னும் பொருள் உள்ளத்திலே இருக்க உலகெல்லாம் பொருள்தேடி உழல்வதென்னே!' என்று பொருள்.
இக்கருத்துகளையே வழிமொழிவ
தாகச் சேலம் கயிலாசநாதர் சதகத்தில் பாடலொன்று (பா.17) இடம்பெற்றுள்ளது. அப்பாடல் வருமாறு:
கடலுலகில் உற்றபொருளுக் குளேநன்மைதரு
கல்விநிலை பெற்ற பொருளாம்
கனலினால் உருகாது புனலினால் கரையாது
கள்ளரால் திருடொனாது
திடமான ராசாதி ராசரா லும்அதைத்
தீண்டிச் சிதைக்கொணாது
என அப்பாடல் மேலும் நீள்கிறது. இதற்குக் கடல் சூழ்ந்த இவ்வுலகில் பற்பல பொருள்களை ஈட்டினாலும், அவற்றுக்குள் (அழிவில்லாத) நிலையான பொருள் கல்வியொன்றே ஆகும். அது நெருப்பினில் உருகாது; நீரினால் கரையாது; அதைக் கள்ளரால் திருடவியலாது; பெருவேந்தர்களாலும் அழிக்க முடியாது என்று பொருள். இப்பாடலில், விவேகசிந்தாமணிப் பாடலில் காணப்படும் "கொடுத்தாலும் நிறைவொழியக் குறைபடாது' என்ற கருத்தைத் தவிர ஏனைய செய்திகள் அப்படியே உள்ளன. ஆனால், நிரல்மாறிக் காணப்படுகின்றன அவ்வளவே.
நாயக்க மன்னர்கள் 1529 முதல் 1736 வரையிலான காலத்தில் தமிழகத்தை ஆட்சி செய்தனர். விவேக சிந்தாமணி இக்காலத்தைச் சேர்ந்த நூல். இதன் ஆசிரியர் யாரென்று தெரியவில்லை. இது, ஒரு தொகுப்பு நூலாகும். வெளியான சில பதிப்புகளில் மேலே காட்டப்பட்டுள்ள புகழ்பெற்ற பாடல் காணப்படவில்லை. சேலம் சிதம்பரப்பிள்ளை என்பவரால் இயற்றப்பட்ட சேலம் கயிலாசநாதர் சதகம் 17 அல்லது 18-ஆம் நூற்றாண்டில் இயற்றப் பெற்றதாகலாம்.
இந்நூல் ஸ்ரீ ருக்மணி விலாச அச்சுக் கூடத்தில் புரசை நித்தியானந்த சுவாமிகளால் 1891-இல் அச்சிடப்பட்டுள்ளது. இதுதான் முதற்பதிப்பா இதற்கு முந்தைய பதிப்புகள் உள்ளனவா என்பது அறிய இயலவில்லை. இதேநூல் சிதம்பரம் குருநாத சுவாமிகளால் பார்வையிடப்பட்டு நுங்கம்பாக்கம்
அம்பாள் அச்சியந்திர சாலையில்
1895-இல் அச்சிடப்பட்டுள்ளது. மேலும், 1913-இல் மதராஸ் ரிப்பன் அச்சியந்திர சாலையில் பதிப்பிக்கப்பட்டு ஒரு பதிப்பு வெளிவந்துள்ளது. இம்மூன்று பதிப்புகளிலும் நூலைப் பற்றிய குறிப்புகள் காணப்படவில்லை. காலம் எதுவாயினும் கல்வியின் பெருமையை இரண்டு நூல்களும் ஒருமித்த குரலில் பேசியுள்ளன என்பதே சிறப்பாகும்.
மேற்காட்டிய பாடல்களுக்கு முன்னோடிப் பாடலாய் நாலடியாரில் ஒரு பாடலுண்டு (134).
வைப்புழிக் கோட்படா; வாய்த்தீயிற்
கேடில்லை;
மிக்க சிறப்பின் அரசர் செறின்வவ்வார்
எச்சம் எனஒருவன் மக்கட்குச் செய்வன
விச்சைமற் றல்ல பிற
இதற்கு, வைத்த இடத்திலிருந்து (உள்ளத்தே வைத்துள்ள) கல்வியை யாராலும் கொள்ளப்பட (களவாட) முடியாது. தீயின் வாயில் (வாய்+தீ=வாய்த்தீ) பட்டாலும் கேடில்லை. மிகச் சிறப்புடைய மன்னர்கள் சினத்தால் கவர்ந்துகொள்ள முடியாது.
ஒருவன் தனக்குப் பிறகு தன் பிள்ளைகளுக்கு எச்சமாக விட்டுச்செல்லும் வித்தை (சொத்து அல்லது அறிவு) கல்வியைத் தவிர வேறில்லை என்பது பொருளாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








