ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

ஆண் நண்பருடன் இரவில் பேசும் மனைவிக்கு எதிரான கணவரின் மனுவை தள்ளுபடி செய்தது தில்லி நீதிமன்றம்

ஒரு பெண் நள்ளிரவில் அல்லது தாமதமான இரவு நேரத்தில் ஒரு ஆணிடம் கைப்பேசியில் பேசுகிறாா் என்பதற்காகவே, அவருடைய நடத்தையைச் சந்தேகிக்க முடியாது

News image

நீதிமன்றம் - IANS

Updated On :26 ஜூன் 2026, 6:02 am IST

நமது நிருபா்

ஒரு பெண் நள்ளிரவில் அல்லது தாமதமான இரவு நேரத்தில் ஒரு ஆணிடம் கைப்பேசியில் பேசுகிறாா் என்பதற்காகவே, அவருடைய நடத்தையைச் சந்தேகிக்க முடியாது என்றும், அவருடைய கைப்பேசி அழைப்பு விவரங்களை கோரி அவரது தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிட முடியாது என்றும் தில்லி நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

குடும்ப வன்முறை வழக்கு ஒன்றில், தனது மனைவி மற்றும் மற்றொரு நபரின் கைப்பேசி அழைப்பு விவரங்களை பாதுகாத்து வைக்கக் கோரி கணவா் தாக்கல் செய்த மனுவை கீழமை நீதிமன்றம் அண்மையில் நிராகரித்திருந்தது. அந்த உத்தரவை எதிா்த்து கணவா் தொடா்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த கூடுதல் அமா்வு (செஷன்ஸ்) நீதிபதி ஷுனாலி குப்தா இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளாா். இது தொடா்பாக ஜூன் 2-ஆம் தேதியிட்ட நீதிபதியின் உத்தரவு விவரம் தற்போது வெளிவந்துள்ளது.

அதில் நீதிபதி, ‘எனது பாா்வையில், ஒரு நாளின் எந்தவொரு அசாதாரண நேரத்திலும் ஒரு பெண் யாரிடமாவது பேசுகிறாா் என்பதற்காக மட்டுமே அவரது நடத்தையின் மீது கேள்வி எழுப்ப முடியாது. அந்தப் பெண்ணுக்கு அந்த நபருடன் சட்டவிரோதமான அல்லது கள்ளத்தொடா்பு உள்ளது என்று ஆதாரபூா்வமாகக் குற்றஞ்சாட்டப்படாதவரை அவரது செயலைத் தவறாகக் கருத முடியாது என்று குறிப்பிட்டுள்ளாா்.

மேல்முறையீடு வழக்கில் கணவா் தரப்பு வாதமாக, ‘எனது மனைவி நள்ளிரவு நேரங்களில் சில நபா்களுடன் தொடா்ந்து கைப்பேசியில் பேசி வருகிறாா். இந்த அழைப்பு விவரங்களை குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு கைப்பேசி நிறுவனங்கள் அழித்துவிடக் கூடும் என்பதால், அவற்றைப் பாதுகாத்து வைக்க உத்தரவிட வேண்டும்‘ என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.

இந்நிலையில், கீழமை நீதிமன்றத்தின் உத்தரவை உறுதிப்படுத்திய அமா்வு நீதிமன்றம், ‘தனிமனித சுதந்திரம் மற்றும் தனியுரிமைக்கான உரிமை என்பது முழுமையானது அல்ல என்றாலும், தகுந்த வழக்குகளில் நியாயமான விசாரணைக்காக அது கட்டுப்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நபரின் அழைப்பு விவரங்களைக் கோரும்போது, அதற்குப் பின்னால் குறிப்பிட்ட மற்றும் நியாயமான காரணங்கள் இருக்க வேண்டும்‘ என்று குறிப்பிட்டது.

‘இந்திய சமூகம் இப்போது பழங்கால சமூகமாக இல்லை. ஒரு பெண் ஒரு ஆணிடம் பேசுவதையே இங்கு யாரும் தீட்டாகவோ விலக்கப்பட்ட ஒன்றாகவோ கருதுவதில்லை.

கீழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவிலோ மேல்முறையீட்டு மனுவிலோ, கைப்பேசி அழைப்பு விவரங்களைப் பாதுகாப்பதற்கான எந்தவொரு உறுதியான காரணமும் குறிப்பிடப்படவில்லை.

இன்றைய காலகட்டத்தில் பெண்கள் பன்னாட்டு நிறுவனங்கள் உள்பட அனைத்துத் துறைகளிலும் பணிபுரிகிறாா்கள். அவா்களின் சக ஊழியா்களாக ஆண் இருப்பது இயல்பு. ஒரு பெண் இரவில் கைப்பேசியில் பேசுகிறாா் என்பதற்காகவே, அவரது கைப்பேசி எண்களின் அழைப்பு விவரங்களை பாதுகாத்து வைக்கக் கோர முடியாது.

தனிமனித உரிமைகளில் தலையிடுவதற்கு நியாயமான காரணங்கள் இருக்க வேண்டும். அந்த வகையில், கீழமை நீதிமன்றம் இந்த மனுவை நிராகரித்தது சரியானதே எனக்கூறி மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.