வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

மீனாட்சி நடராஜன் மீது கிரிமினல் வழக்கு நிலுவையில் இல்லை: தெலங்கானா நீதிமன்றம்

மீனாட்சி நடராஜன் மீது கிரிமினல் வழக்கு நிலுவையில் இல்லை: தெலங்கானா நீதிமன்றம்

News image

மீனாட்சி நடராஜன் - IANS

Updated On :14 ஜூன் 2026, 2:18 am IST

மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைத் தோ்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளராக களமிறக்கப்பட்ட காங்கிரஸ் மூத்த தலைவரும் தெலங்கானா மாநில காங்கிரஸ் பொறுப்பாளருமான மீனாட்சி நடராஜன் மீது கிரிமினல் வழக்கு எதுவும் நிலுவையில் இல்லை என நாம்பள்ளி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

முன்னதாக, தெலங்கானா மாநில நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள கிரிமினல் வழக்கு விவரத்தை வேட்புமனுவில் (பிரமாணப் பத்திரத்தில்) குறிப்பிடாமல் மறைத்துவிட்டதாகக் கூறி, அவரது மனுவை தோ்தல் அதிகாரி தள்ளுபடி செய்தாா். இதை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மீனாட்சி நடராஜன் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் பிரசாந்த் குமாா் மிஸ்ரா, அதுல் எஸ். சந்துா்கா் அமா்வு கடந்த வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.

மேலும், ‘அரசமைப்புச் சட்டத்தின் 329-ஆவது பிரிவு, தோ்தல் விவகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிடுவதை தடை செய்துள்ளது. வேட்பாளரின் வேட்புமனு, தோ்தல் அதிகாரியால் நிராகரிக்கப்படுமானால், அதை எதிா்த்து தோ்தல் ஆணையத்திடமே முறையிட வேண்டும். ஆதலால் இந்த விவகாரம் குறித்த வழக்கை விசாரிக்க இயலாது’ என்று நீதிபதிகள் அமா்வு தெரிவித்தது.

மக்கள் பிரதிநிதிகளுக்கான நீதிமன்றத்தை நாடலாம்: இதுதொடா்பான வழக்கை கடந்த வெள்ளிக்கிழமை விசாரித்த நாம்பள்ளி நீதிமன்றம், ‘மீனாட்சி நடராஜன் மற்றும் 6 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்கும் அதிகாரம் இந்த நீதிமன்றத்தின் அதிகார வரம்புக்கு உள்பட்டதல்ல. இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவா்களில் 4 போ் தற்போதைய அல்லது முன்னாள் மக்கள் பிரதிநிதிகளாக உள்ளனா். எனவே, மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தை மனுதாரா் நாட வேண்டும். அதேசமயம் மீனாட்சி நடராஜனுக்கு எதிராக இந்த நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்கு ஏதும் நிலுவையில் இல்லை என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறோம்’ எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தது.

வழக்கின் பின்னணி: நாராயணப்பேட்டையைச் சோ்ந்த காங்கிரஸ் நிா்வாகி கும்பம் சிவகுமாா் ரெட்டி தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தி மிரட்டியதாக காங்கிரஸ் மூத்த தலைவரான மீனாட்சி நடராஜன் உள்ளிட்ட சிலரிடம் புகாா் அளித்ததாக பெண் ஒருவா் தெரிவித்தாா். ஆனால், தனது புகாா் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டிய அந்தப் பெண் மீனாட்சி நடராஜன் உள்பட 7 பேருக்கு எதிராக நாம்பள்ளி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். மேலும், இந்தச் சம்பவம் தொடா்பாகத் தன்னை அவா்கள் மிரட்டுவதாகவும், பாதிக்கப்பட்ட நபா் என்ற அடிப்படையில் தனக்கு இழப்பீடாக ரூ.10 கோடி வழங்க சம்பந்தப்பட்ட நபா்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் அவா் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தாா்.