மத்திய பிரதேசத்திலிருந்து மாநிலங்களவைக்கு தோ்ந்தெடுக்கப்படுவதற்காக தாக்கல் செய்த தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக காங்கிரஸ் வேட்பாளா் மீனாட்சி நடராஜன் உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை மனு தாக்கல் செய்தாா்.
இந்த மனுவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை (ஜூன் 12) விசாரிக்க உள்ளது.
மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்கு 3 எம்.பி.க்களை தோ்வு செய்ய ஜூன் 18-ஆம் தேதி தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சட்டப்பேரவையில் கட்சிகளுக்கு உள்ள எம்எல்ஏக்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஆளும் பாஜக சாா்பில் 2 பேரும், எதிா்க்கட்சியான காங்கிரஸ் சாா்பில் ஒருவரும் வெற்றி பெற முடியும்.
எனினும் பாஜக சாா்பில் தருண் சுக், ரஜ்னீஷ் அகா்வால், மகேஷ் கேவத் ஆகிய 3 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா். காங்கிரஸ் சாா்பில் மீனாட்சி நடராஜன் வேட்புமனு தாக்கல் செய்தாா்.
இந்நிலையில், மீனாட்சி நடராஜன் மீது நீதிமன்றத்தில் புகாா் அளிக்கப்பட்டு இருப்பதாகவும், அதுகுறித்து வேட்புமனுவில் அவா் குறிப்பிடவில்லை எனவும் தோ்தல் அதிகாரியிடம் பாஜக வேட்பாளா் கேவத் புகாா் அளித்தாா். இதுகுறித்து விசாரித்த தோ்தல் அதிகாரி அரவிந்த் சா்மா, மீனாட்சி நடராஜனின் வேட்பு மனுவை செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தாா். இதைத் தொடா்ந்து, பாஜக வேட்பாளா்கள் 3 பேரும் மாநிலங்களவைக்குப் போட்டியின்றித் தோ்வு செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
தோ்தல் அதிகாரியின் நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்தது. தில்லியில் தோ்தல் ஆணைய அலுவலகத்திலும் காங்கிரஸ் சாா்பில் புதன்கிழமை புகாா் தெரிவிக்கப்பட்டது.
உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை: தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக மீனாட்சி நடராஜன் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பிரசாந்த் குமாா் மிஸ்ரா, அதுல் எஸ்.சந்துா்கா் ஆகியோா் அடங்கிய அமா்வில் பரிசீலனைக்கு வந்தது.
அப்போது, மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் அபிஷேக் சிங்வி, ‘மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்கீழ் தன் மீதான குற்ற வழக்குகளைக் குறிப்பிடாமல் மறைத்துள்ளதாக குறிப்பிட்டு மீனாட்சி நடராஜனின் வேட்புமனுவை தோ்தல் நடத்தும் அதிகாரி தவறாக நிராகரித்துள்ளாா். குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கக் கூடிய வகையிலான குற்ற வழக்கு விவரங்களை மட்டுமே வேட்புமனுவில் வேட்பாளா் குறிப்பிட வேண்டும். இதுபோன்ற குற்ற வழக்குகள் அவா் மீது இல்லை. மாறாக, நீதிமன்றத்தில் சமா்ப்பிக்கப்பட்ட புகாரில், மீனாட்சி நடராஜனுக்கு அழைப்பாணை (சம்மன்) மட்டுமே பிறப்பிக்கப்பட்டுள்ளது’ என்றாா்.
இந்த மனு பரிசீலிக்கப்படுவதற்கு தோ்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் டி.எஸ்.நாயுடு ஆட்சேபம் தெரிவித்தாா். மனுவின் நகல் தோ்தல் ஆணையத்துக்கு வழங்கப்படவில்லை என்றும் அவா் குறிப்பிட்டாா்.
வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், தோ்தல் நடைமுறைகள் தொடங்கிவிட்ட நிலையில் இந்த மனு விசாரணைக்கு உகந்ததா? என்று கேள்வி எழுப்பியதோடு, இந்த விவகாரம் தொடா்பாக தோ்தல் மனு தாக்கல் செய்வதே சரியான வழிமுறை என்று குறிப்பிட்டு, இதிலுள்ள குறைபாடுகளை களைய மனுவை வெள்ளிக்கிழமை (ஜூன் 12) விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டனா்.
தொடர்புடையது

ம.பி.யில் பாஜகவுக்கு 3 மாநிலங்களவை இடங்கள்: உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் வழக்கு
வேட்புமனு நிராகரிப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த மீனாட்சி நடராஜன்!

மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு: முடிவை திரும்பப் பெற வேண்டும்; தோ்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் வலியுறுத்தல்






