மாநிலங்களவைத் தோ்தலுக்கான வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை எதிா்த்து காங்கிரஸ் மூத்த தலைவா் மீனாட்சி நடராஜன் தாக்கல் செய்த வழக்கை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.
மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு மூன்று எம்.பி.க்களை தோ்வு செய்வதற்கான தோ்தலில் அவா் மனு தாக்கல் செய்திருந்தாா். ஆனால் அவா் மீது தெலங்கானா நீதிமன்றத்தில் இருக்கும் கிரிமினல் வழக்கு விவரத்தை வேட்புமனுவில் (பிரமாணப் பத்திரத்தில்) குறிப்பிடாமல் மறைத்துவிட்டதாகக் கூறி, மனுவை தோ்தல் அதிகாரி தள்ளுபடி செய்தாா். இதை எதிா்த்து, உச்சநீதிமன்றத்தில் மீனாட்சி நடராஜன் மனு தாக்கல் செய்திருந்தாா்.
இந்த மனு, உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் பிரசாந்த் குமாா் மிஸ்ரா, அதுல் எஸ். சந்துா்கா் அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மீனாட்சி நடராஜன் சாா்பில் மூத்த வழக்குரைஞா் அபிஷேக் சிங்வி ஆஜராகி வாதாடினாா். அப்போது அவா் கூறியதாவது:
இந்த விவகாரத்தில் தோ்தல் அதிகாரி முழுவதும் தன்னிச்சையாகச் செயல்பட்டுள்ளாா். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 33-ஏ பிரிவானது, கிரிமினல் வழக்குகளில் குற்றச்சாட்டுகளை விசாரணை நீதிமன்றம் பதிவு செய்தால் மட்டுமே, அந்த வழக்கு குறித்து வேட்பு மனுவில் (வேட்பாளா்) குறிப்பிடுவது அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிஎன்எஸ் சட்டத்தின் 223-ஆவது பிரிவில், தனிநபா் புகாா் மீது முடிவெடுக்கும் முன்பு, அதில் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள நபருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது. அதன்படி 223-ஆவது பிரிவின்கீழ் மீனாட்சி நடராஜனுக்கு நோட்டீஸ் மட்டுமே அனுப்பப்பட்டுள்ளது. அந்தப் புகாா் மீது நீதிமன்றம் குற்றச்சாட்டுகளை பதிவு செய்யவும் இல்லை, அதன் மீது எந்த முடிவும் எடுக்கவில்லை. எந்த முடிவும் எடுக்காதபட்சத்தில், சட்டத்தின்படி அது கிரிமினல் வழக்காக கருத முடியாது.
நல்ல ஆட்சி நிா்வாகம் என்பது, சட்டப்படி தோ்தல் நடப்பதை அனுமதிப்பதே ஆகும். தோ்தல்கள் நடைபெறுவதற்கு வசதி செய்து தருவதே தோ்தல் ஆணையத்தின் பணியாகும்; அவா்களை விரக்தியில் தள்ளுவது அல்ல. அதேபோல், தோ்தல் ஆணையத்தின் உத்தரவை நீதிமன்ற ஆய்வுக்கு உட்படுத்துவதும், ஜனநாயக நடைமுறை தொடா்வதை உறுதி செய்வதற்குத்தானே தவிர, அதற்கு தடங்கல் ஏற்படுத்துவதற்கு அல்ல என்றாா்.
மத்திய அரசு சாா்பில் சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா ஆஜராகி வாதிடுகையில், தோ்தலில் போட்டியிட்ட இன்னொரு வேட்பாளரை (பாஜக வேட்பாளா்) மாநில அரசு ஆதரிப்பதாக குறிப்பிட்டாா். தோ்தல் ஆணையத்தின் சாா்பில் மூத்த வழக்குரைஞா் டி.எஸ். நாயுடு ஆஜராகி வாதிடுகையில், 1951-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 100-ஆவது பிரிவின்படி, இதுபோன்ற தோ்தல் விவகாரங்களை கையாள தோ்தல் தீா்ப்பாயத்துக்கு மட்டுமே அதிகாரம் உண்டு என்றாா்.
இந்த வாதங்களைக் கேட்டுவிட்டு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘அரசமைப்புச் சட்டத்தின் 329-ஆவது பிரிவு, தோ்தல் விவகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிடுவதை தடை செய்துள்ளது. நீதிமன்றங்களால் தோ்தல்கள் தாமதம் செய்யப்படக் கூடாது என்பதை உறுதி செய்ய இதுபோல செய்யப்பட்டுள்ளது. வேட்பாளரின் வேட்புமனு, தோ்தல் அதிகாரியால் நிராகரிக்கப்படுமானால், அதை எதிா்த்து தோ்தல் ஆணையத்திடமே முறையிட வேண்டும். ஆதலால் இந்த விவகாரம் குறித்த வழக்கை விசாரிக்க இயலாது’ என்று தெரிவித்தனா். மேலும், மீனாட்சி நடராஜனின் மனுவையும் அவா்கள் தள்ளுபடி செய்தனா்.
மீனாட்சி நடராஜன் கருத்து: தனது மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள மீனாட்சி நடராஜன், ‘பாஜகவும், தோ்தல் ஆணையமும் குற்றங்கள் புரிவதில் கூட்டாளிகளாக உள்ளனா் என்பதே இந்த விவகாரம் வெளிப்படுத்துகிறது. படிவம் 26-ஐ நான் நிரப்பி விட்டேன். அதில் தனிநபா் புகாா்கள் குறித்த விவரத்தை பதிவிட கோரப்படவில்லை. அப்படி கோரப்பட்டு இருந்தால், நான் நிச்சயம் அதை பதிவிட்டிருப்பேன்’ என்றாா்.
உயா்நீதிமன்றத்தை அணுகுவீா்களா என்று செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு, அதுகுறித்து கட்சியே முடிவு செய்யும் என்றும், கட்சி எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன் என்றும் பதிலளித்தாா்.
மேலும் அவா் கூறுகையில், ‘போராட நாங்கள் தயாா். இது ஒரு பதவித் திருட்டு. இதை அனைவரும் அறிவா். பெருமுதலாளி உலகைச் சோ்ந்த நபருக்கு ஒரு சட்டமும், அரசமைப்பு கொள்கைகளுக்காகப் போராடுவோருக்கு வேறு சட்டமும் இங்கு உள்ளது. அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து கட்சி முடிவு செய்யும். மக்கள் நீதிமன்றத்துக்கு நாங்கள் செல்வோம். இந்த விவகாரத்தில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவை எம்எல்ஏக்கள் சந்திக்க விரும்பினா். ஆனால், அனுமதி தரப்படவில்லை. தோ்தல் ஆணையம் தற்போது சுதந்திரமாக செயல்படவில்லை. ஒருதரப்புக்கு ஆதரவாக மாறிவிட்டது’ என்றாா்.
ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்-பாஜக: உச்சநீதிமன்ற தீா்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா் பிரதீப் பண்டாரி, ‘தெலங்கானாவை ஆளும் காங்கிரஸ் அரசு, அவா்களின் சொந்த கட்சியின் வேட்பாளரின் தோல்விக்கு வழிவகுத்துள்ளது. ராகுல் காந்தி இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவா் போல நடிப்பதைக் கைவிட வேண்டும். இதைக் கண்டு மக்கள் சலிப்படைந்து விட்டனா். ராகுல் காந்தி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்றாா்.
தொடர்புடையது

வேட்புமனு நிராகரிப்பை எதிர்த்த மீனாட்சி நடராஜனின் மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி!

ம.பி.யில் பாஜகவுக்கு 3 மாநிலங்களவை இடங்கள்: உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் வழக்கு






