''திருக்குறளை மதிப்பெண்களுக்காகப் படித்தால் போதாது. வாழ்க்கை மதிப்பு பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் படிக்க வேண்டும். எப்போதும் கையில் திருக்குறளை வைத்திருந்து, எங்குச் சென்றாலும் படித்தவாறே பயணிக்கலாம். வள்ளுவர் கூறாதது இல்லை. நட்பு, மருந்து, மழை என்று சகலத்தையும் கூறும் திருக்
குறளை வாழ்க்கை வழிகாட்டி நூலாக எடுத்துக் கொள்ள வேண்டும்'' என்கிறார் திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த சோம வீரப்பன்.
வங்கியாளர், சொற்பொழிவாளர், எழுத்தாளர், தமிழ் ஆர்வலர் என்று பன்முகத் தன்மைகளைக் கொண்ட இவர் எழுதிய 'குறள் இனிது' எனும் நூல் ஜப்பானிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு சென்னையில் அண்மையில் வெளியிடப்பட்டது.
அவரிடம் பேசியபோது:
''தேவகோட்டை சோமையா செட்டியார்- சிவகாமி எனது பெற்றோர். சென்னை மயிலை விவேகானந்தர் கல்லூரியில் கணிதம் பயின்றேன். பின்னர் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டமும், இங்கிலாந்து மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் பட்டயப் படிப்பும் பயின்றேன். 1977-ஆம் ஆண்டில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் அலுவலராகச் சேர்ந்து, 2012-இல் பொது மேலாளராகப் பணி நிறைவு செய்தேன்.
SWAMINATHAN
திருக்குறளைப் படிக்கும்போது, அறத்துப்பால் சார்ந்து படிக்கிறோம். காமத்துப்பால், பொருள்பால் அதிகமாகப் பேசப்படுவதில்லை. திருவள்ளுவர் கூறியதில் 38 அதிகாரங்கள் அறத்துப்பால், 25அதிகாரங்கள் காமத்துப்பால், பொருள்பால் மட்டும் 70 அதிகாரங்கள். பொருள்பாலில் மேலாண்மை, வணிகம், பொருளியல் போன்றவை பேசப்பட்டுள்ளன. அவற்றையே நான் கல்லூரிகளில் பேசுகிறேன். திருக்குறளின் பலனை முழுவதுமாகப் பெறவேண்டும் என்றால் பொருள்பாலை நன்றாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
வள்ளுவர் எந்த மதத்தைப் பற்றியோ, அரசனைப் பற்றியோ தனது நூலில் குறிப்பிடவில்லை. தமிழ் எனும் சொல்கூட இல்லை. வள்ளுவத்தைப் பின்னோக்கி ஆராயாமல் முன்னோக்கி எப்படி நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றே சிந்திக்க வேண்டும்.
பொருளியல், வர்த்தகம், மேலாண்மை சார்ந்தோருக்கு திருக்குறள் மிகவும் பொருத்தமானவை. 'செய்க பொருளை..' என அறிவுறுத்தும் திருவள்ளுவர் கூறும் காரணம் மிகவும் முக்கியமானது. செல்வம்தான் எதிராளியின் திமிரை அழிக்கக் கூடிய ஆயுதம். எங்குச் சென்றாலும், செல்வந்தர்களுக்கே மதிப்பு. வள்ளுவர் மிகவும் எதார்த்தவாதி. வேறு யாரால், 'பொய்மையும், வாய்மையிடத்து' எனக் கூற முடியும். அதாவது நன்மை பயக்குமானால், பொய் கூட சொல்லலாம் என்று வள்ளுவர் கூறுகிறார்.
தமிழ் நாளிதழ் ஒன்றில், 125 வாரங்களாகத் தொடர்ந்து 'குறள் இனிது' எனும் கட்டுரைகளையும், குறள் சார்ந்து 'சபாஷ் சாணக்யா' எனும் தொடரை 101வாரங்களும் எழுதியிருக்கிறேன். 'குரல் இனிது' எனும் தொடரை நூலாக்கினேன். இதில், மேலாண்மையில் 60 கட்டுரைகளை நானே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, 'தி ஆர்ட் ஆஃப் ஜாகிங் வித் யுவர் பாஸ்' எனும் தலைப்பில் வெளியிட்டேன். மும்பை நிதி நிறுவனத்தில் பணிபுரிந்த ரோகித் சர்மா என்பவர் இந்த நூலை ஹிந்தியில் மொழிபெயர்த்தார்.
வங்கியில், வெவ்வேறு மாநிலங்களில் நான் பணிபுரிந்ததால், அங்குள்ள நண்பர்கள் வாயிலாக பஞ்சாபி, ஒடியா, மலையாளம் போன்ற மொழிகளில் மொழிபெயர்த்தேன். பிரெஞ்சு மொழியில் முனைவர் ராஜேந்திரன் மொழிபெயர்த்தார். ஜப்பானிய முன்னணி பயிற்சி நிறுவனம் வாயிலாக 8-ஆவது மொழிபெயர்ப்பாக நூல் வெளியிடப்பட்டுள்ளது.
குஜராத்தி, கன்னடம், தெலுங்கு, ஜெர்மன் மொழிகளிலும் மொழிபெயர்ப்பு நடைபெறுகிறது.
25-க்கும் மேற்பட்ட கல்வி நிலையங்களில் 'வள்ளுவர் காட்டும் மேலாண்மை' எனும் தலைப்பில் பாடங்களை நடத்தியிருக்கிறேன். தமிழ்ப் பேராசிரியர் ஜெகநாதாச்சாரியார், 'வள்ளுவர் குரல் குடும்பம்' என்ற கட்செவி அஞ்சல் குழுவின் பொறுப்பாளர் சி.ராஜேந்திரன் உள்ளிட்டோர் எனக்கு ஊக்கம் அளித்தவர்களில் முக்கியமானவர்கள்.
நெய்வேலி புத்தகக் கண்காட்சி, ஐபிசிஎன் 2025 மாநாடு உள்ளிட்டவற்றில் சிறந்த எழுத்தாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். பல விருதுகளையும், பாராட்டுகளையும் பெற்றுள்ளேன்'' என்கிறார் சோம வீரப்பன்.
-பொ.ஜெயச்சந்திரன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பண்டைய இலக்கியங்களை அச்சுக்கு கொண்டுவர அரசு நடவடிக்கை தேவை: உயா்நீதிமன்ற நீதிபதி ஆா்.சுரேஷ்குமாா்

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு ஆளுநர் மதிப்பளிக்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட்

மொழிபெயர்ப்பாளர்களும் இலக்கியவாதிகள்தான்...
விடியோக்கள்

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK

திருக்கணிதப்படி குருபெயர்ச்சி பலன்கள்! June 1 நள்ளிரவு 2 மணி முதல் | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?


