அருள்செல்வன்
கடலூர் மாவட்டத்துக்கு உள்பட்ட குறிஞ்சிப்பாடி அருகேயுள்ள மீனாட்சிப்பேட்டை எனும் குக்கிராமத்தில் வசிக்கும் குறிஞ்சிவேலனின் இயற்பெயர் செல்வராசு. 1994-ஆம் ஆண்டில் மொழிபெயர்ப்புக்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றவர். மொழிபெயர்ப்புக்கென 'திசை எட்டும்' இதழ் தொடங்கி, அதன் ஆசிரியராகவும் பதிப்பாளராகவும் தொடர்கிறார். அவருடன் ஒரு சந்திப்பு:
மொழிபெயர்ப்புக்குள் வந்தது எப்படி?
மலையாள எழுத்தாளர் தகழி சிவசங்கர பிள்ளையின் 'செம்மீன்' எனும் நாவலை சுந்தரராமசாமி தமிழில் மொழியாக்கம் செய்திருந்தார். அதைப் படித்தபோது, அதுநாள் வரை படித்தவை மறைந்தன.
மலையாளச் சிறுகதைகளுக்குச் சமமாக எந்தக் கதையும் தமிழில் இல்லை என்பதுபோல், வெளிவந்த ஒரு விமர்சனக் கட்டுரை எனக்குக் கோபத்தைத் தூண்டியது. அதை அப்படியே மொழியாக்கம் செய்து, 'தீபம்' இதழுக்கு அனுப்ப, மறுமாதமே அக்கட்டுரையின் ஒரு பகுதி பிரசுரமானது. அதுவே என்னுடைய மொழியாக்கத்தில் பிரசுரமான முதல் படைப்பு.
தொடர்ந்து மொழியாக்கத்திற்கு உங்களைத் தூண்டியது எது?
தீபம் இதழில் 1960-களில் எனது 'முழுமையைத் தேடும் முழுமையற்ற புள்ளிகள்' என்ற ஒரு புதிய வகையிலான நேர்காணல் தொடர் சில ஆண்டுகள் வெளிவந்தது. என்னை ஒரு மொழிபெயர்ப்பாளராக அடையாளம் காட்டிய படைப்பு அது என்பதோடு, மூன்று தலைமுறை மலையாளப் படைப்பாளிகளைத் தமிழுலகுக்கு அறிமுகம் செய்த தொடர். அதற்கு அடுத்து மலையாற்றூர் ராமகிருஷ்ணனின் 'ஐந்து சென்ட் நிலம்' , 'சல்லி வேர்கள்' நாவல்கள் அடுத்தடுத்து தொடராக வெளிவந்தன.
1969-இல் 'கண்ணதாசன்' இதழில் என் முதல் மலையாள மொழிபெயர்ப்பு சிறுகதையான பி.சி.கோபாலன் என்ற நந்தனாரின் 'பலியாடுகள்' செப்டம்பரில் வெளிவந்தது.
மலையாளம் கற்றது எப்படி ?
கால்நடை ஆய்வாளர் பயிற்சியை முடித்து நத்தத்தில் 1964-இல் பணியில் சேர்ந்தேன். மாவட்ட அலுவலருக்கும் எனக்கும் மனத்தாங்கல். இதனால் அவர் என்னை கேரள எல்லையோரம் அனுப்பிவிட்டார். அங்கு சுங்கச் சாவடியில் காவலர், உதவியாளர், நான் என மூவர் மட்டும்தான் அமர்ந்திருப்போம். எப்போதாவது மாடுகள் வந்தால் தடுப்பூசி போட்டு அனுப்ப வேண்டும். ஓய்வு நேரத்தை நான் மலையாளம் கற்பதற்காகப் பயன்படுத்திக் கொண்டேன். அருகிலிருந்த கேரளப் பகுதி கிராமத்தில் மாணவர்களின் பாட நூல்களை வாங்கி மலையாளம் கற்றேன்.
உங்கள் மொழிபெயர்ப்பில் மனதுக்கு அணுக்கமாகிச் சந்தித்த மூலக்கதாசிரியர்கள் யார்?
தகழி சிவசங்கர பிள்ளை, மலையாற்றூர் ராமகிருஷ்ணன், ஐயப்ப பணிக்கர், எம்.டி. வாசுதேவன் நாயர், வி.பி.சி. நாயர், ட்டி. டி. ராமகிருஷ்ணன், கே. பி.ராமனுண்ணி, சேது, கே. வேணுகோபால் உள்ளிட்டோர். இவர்களில் அணுக்கமான பலரையும் நேரில் சந்தித்துப் பேசியுள்ளேன்.
மொழிபெயர்க்கும் நூல்களைத் தேர்வு செய்வது எப்படி?
இதுவரையில் மொழிபெயர்த்துள்ள 54 நூல்களில் நானே விரும்பி மொழியாக்கம் செய்தவை 30 நூல்கள். மற்ற 24 நூல்களும் மூல ஆசிரியர்கள், பதிப்பாளர்களின் விருப்பத்தின் பேரிலும்தான் செய்துள்ளேன். நான் விருப்பப்பட்டும், மூல ஆசிரியர்கள், பதிப்பாளர்கள் விருப்பப்பட்டும் மொழியாக்கங்களைத் தேர்வு செய்கிறேன்.
உங்களுடைய மொழியாக்கப் படைப்புகளில் குறிப்பிடத்தக்கவை எவை?
'மாத்ருபூமி' இதழில் 1966-67-இல் மலையாற்றூர் ராமகிருஷ்ணன் தொடராக நனவோடை உத்தியில் எழுதிய 'சல்லி வேர்கள்' நாவலை தமிழாக்கம் செய்ய, அது 'தீபம்' மாத இதழில் தொடராக வந்தது. 'பாண்டவபுரம்' மலையாள எழுத்தாளர் சேது எழுதிய நாவல் வடிவம் மாய யதார்த்தவாத உத்தியால் எழுதப்பட்டிருந்தது. 'தகழி' எனும் வித்தியாசமான தொகுப்பு நூல் தகழி சிவசங்கரப் பிள்ளையின் நாவல்களின் சுருக்கம், தேர்ந்தெடுத்த சிறுகதைகள், குறுநாவல் (முழுமையாக), தகழியைப் பற்றிப் பலரும் கூறிய தகவல்கள் போன்றவையாகும்.
எஸ். கே. பொற்றேக்காடின் 'பாரதப் புழையின் மக்கள்' இந்திய சமகால இலக்கியங்களில் இல்லாத ஒரு புதிய வடிவமாக இருந்தது. நாவலும் நாடகமும் இணைந்து 'நாவடகம்' என்னும் புதிய உத்தியில் அதை எழுதியிருந்தார். இவரின் 'விஷக்கன்யகா' வை இந்திய தேசிய புத்தக நிறுவனத்துக்காக நான் மொழியாக்கம் செய்ததுடன், அந்த நூலுக்கு மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாதெமி விருதும் பெற்றேன்.

மலையாற்றூர் ராமகிருஷ்ணனுடன்
மொழிபெயர்க்கும்போது சார்ந்த நூலை வாசிக்கும் இன்பம் கிடைக்குமா?
ஒரு மொழிபெயர்ப்பாளர் மூல நூலைப் படிக்கும்போது, 'இதை நாம் ஏன் நம் மொழிக்குக் கொண்டு செல்லவேண்டும். நம் மொழி படைப்புகளில் இல்லாதவை இந்த நூலில் மட்டும் என்ன தனித்துவம் இருக்கிறது' போன்ற நுணுக்கங்களைப் படிக்கும்போதே ஆழ்ந்து உள்வாங்க வேண்டும். இவ்வாறு செய்துவிட்டால், மொழிபெயர்க்கும்போது மூல நூலின் உட்கரு முதல் மொழி நடை வரை மொழியாக்க நூலிலும் இடம்பெற்றுவிடும்.
நாவல்களைச் சரியாகப் படித்து புரிந்துகொண்டு, மூல வாசிப்பின் மொழிநடையிலேயே மொழியாக்கம் செய்யப்படும் மொழிபெயர்ப்புகளை வாசிக்கும்போது மூல நூலின் வாசிப்புச் சுவை மொழிபெயர்ப்பிலும் இருக்கும். மூல ஆசிரியரின் மொழி நடையையும் அவர்கள் பயன்படுத்திய மொழி அமைப்பையும் உள்வாங்கினால் மொழியாக்கத்தைச் சரளமாக வெளிப்படுத்தலாம். ஒரு படைப்பாளி தனது படைப்பில் படரவிட்டுள்ள ரகசிய மொழியை அறியமுடியும்.
'திசை எட்டும்' இதழ் தொடங்கிய அனுபவம், இதுவரை சாதித்தது என்ன?
தேசிய ஒருமைப்பாட்டைப் பேண, இளம் மொழியாக்கப் படைப்பாளிகளை உருவாக்க, பயனுள்ள இலக்கியங்களை தமிழில் கொணர, தமிழின் சிறந்த படைப்புகளைப் பிற மொழிகளுக்குக் கொண்டு செல்ல 2003 ஜூலை மாதத்தில் தோன்றியதுதான் 'திசை எட்டும்' மொழியாக்கக் காலாண்டிதழ். 88 இதழ்கள் வெளிவந்துள்ளன. ஒவ்வொரு இதழும் ஒரு புத்தகம் எனலாம்.
திசை எட்டும் இதழின் தனிச்சிறப்பு என்ன?
நோபல், புக்கர் விருதுபெற்ற படைப்புகளும், ஜப்பான், ஸ்பானிஷ், ஸ்கேண்டி நேவியன், அறிவியல், கொரிய மொழி, அரபி, குழந்தைகள், சுற்றுச்சூழல், ஹைக்கூ உள்ளிட்ட உலகளாவிய இலக்கியச் சிறப்பிதழ்களும், மைதிலி, தெலுங்கு, வடகிழக்கிந்திய மொழிகள், கன்னடம், இந்தோ-ஆங்கில இலக்கியம், கொங்கணி, குஜராத்தி, பஞ்சாபி உள்ளிட்ட இந்திய மொழிகளின் சிறப்பிதழ்களும் நண்பர்களின் தன்னலமற்ற மொழியாக்க உதவியுடன் கொணரப்பட்டுள்ளன.
2017 மே மாதத்தில் இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவினர் ஓர் அங்கீகரிக்கப்பட்ட தமிழ் இதழாக, 'திசை எட்டும்' இதழை அறிவித்துள்ளனர்.
மொழிபெயர்ப்புக்கு எந்த அளவுக்கு வரவேற்பும் ஆதரவும் கிடைத்தது?
தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையும் ஆண்டுதோறும் 10 மொழிபெயர்ப்பாளர்களுக்கு தலா ரூ. 2 லட்சம் வீதம் பரிசு வழங்குகிறது. தற்போதைய சூழலில் சிற்றிதழ்கள் மொழியாக்கப் படைப்புகளை வெளியிட்டு மொழிபெயர்ப்பாளர்களை இலக்கியவாதிகளாக ஏற்றுக்கொண்டுள்ளன.
மொழிபெயர்ப்பாளர்கள் படைப்பிலக்கியவாதிகளாக அங்கீகரிக்கப்படுவதில்லை என்பதை உணர்கிறீர்களா?
நான் மொழியாக்கம் செய்ய வந்த தருணத்தில், ஓரளவு தமிழ் வாசகர்களுக்கிடையே அறிமுகமான பின்பும்கூட தமிழ் இலக்கிய வாசகப் பரப்பில் மொழிபெயர்ப்பாளராக உதாசீனப்படுத்தப்பட்டிருக்கிறேன். மொழிபெயர்ப்பாளர்களுக்கென சாகித்திய அகாதெமி விருது வழங்கத் தொடங்கிய பின்னர்தான் அவர்களுக்கு சிறிய அளவில் மரியாதை கிடைக்கத் தொடங்கியது.

எம்.டி. வாசுதேவன் நாயருடன்
ஆரம்பகாலத்தில் அங்கீகாரம் கிடைக்காதது மனச்சோர்வை ஏற்படுத்தவில்லையா?
மொழியாக்கத்தில் சிறந்து விளங்கிய அ.கி.ஜெயராமன், த.நா.சேனாதிபதி, த.நா.குமாரசாமி, செளரி, ரா. வீழிநாதன், கிருஷ்ணையா, ந. தர்மராஜன் போன்ற மொழிபெயர்ப்பு ஜாம்பவான்களுக்கே தமிழ் இலக்கிய உலகில் சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை. கா.ஸ்ரீ.ஸ்ரீ.க்கு மட்டும்தான் கொஞ்சம் மரியாதை இருந்தது. அந்தக் காலத்தில் ஒரு நூலை மொழிபெயர்த்த மொழிபெயர்ப்பாளரின் பெயரையும்கூட உள்ளே முதல் பக்கத்தில்தான் போடுவார்கள்.
மொழிபெயர்ப்பாளர்கள் இலக்கியவாதிகளா?
மொழிபெயர்ப்பாளர்கள் இல்லை என்றால், உலக இலக்கியங்கள் எவ்வாறு தமிழுக்கு வந்திருக்க முடியும்? இப்படிப்பட்ட மொழிபெயர்ப்பாளர்களை இலக்கியவாதிகள் என்று சொல்லாமல் எப்படி அழைப்பது?
நல்லி - திசை எட்டும் விருதுகள் அனுபவங்கள்?
மொழியாக்கப் படைப்பாளிகளையும் முதல்நிலைப் படைப்பாளிகள்தான் என்று உணரவேண்டும் என்னும் உயரிய குறிக்கோளோடு தொடங்கப்பட்டதுதான் 'நல்லி- திசை எட்டும்' மொழியாக்க இலக்கிய விருதுகள். நல்லி குப்புசாமி செட்டியாரின் உதவியுடன் 2004-ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகின்றன.
ஒரு விருதுக்கு ரூ.10 ஆயிரம் பரிசு எனத் தொடங்கி, தற்போது ரூ.20 ஆயிரம் என உயர்த்தியுள்ளோம். 2025-ஆம் ஆண்டு வரையில் 177 மொழியாக்கப் படைப்பாளிகள் விருதுகளைப் பெற்றுள்ளனர். 2011-ஆம் ஆண்டு முதல் மாணவர்களை மொழியாக்கத் துறையில் ஊக்கமளிக்கும் விதமாக ரூ.50 ஆயிரத்தை ஒதுக்கி, பரிசுகளை அளித்து வருகிறோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புள்ளிகள்
திரைப்படத் திறனாய்வுக்கு அறந்தை!

தமிழில் உயர்கல்வி: சிக்கலும் தீர்வும்? தொழில்நுட்ப மேம்பாடு அவசியம்
சிங்கப்பூரில் தமிழ் மொழி விழா
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


